அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
12
                     

இன்னும் கொஞ்சம் பெரியதாகட்டும். இது போதாது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று ஊதி ஊதிப் பெலூனைப் பெரிதாக்குகிறார்களே சிறு பிள்ளைகள், கடைசியில் அது டபீர் என வெடித்துப் போகிறதல்லவா? அது போலாயிற்று என் மகிழ்ச்சி. நான் குற்றாலத்திலே வேடிக்கையாக வாழ்ந்து கொண்டு, ஜமீன்தாரின் கொட்டத்தை அடக்கியதாக எண்ணிக் கொண்டு இறுமாந்து இருந்தேன். என் வேலைத்திறன் முதலிலே அந்த ஜமீன்தாருக்கு வேதனையாகத்தான் இருந்தது. சில நாள் படுத்த படுக்கையாகவே இருந்தார் என்று அக்காவிடமிருந்து கடிதம் வந்தது. ஆனால் பிறகு அவர் பழையபடி தமது ‘கொடுக்கை’ காட்ட ஆரம்பித்தாராம். அம்மாவும், அக்காவும் முதலிலே இதுபற்றி எனக்குக் கடிதம் எழுதவில்லை. கொஞ்சநாள் கழித்து ஜாடைமாடையாக எழுதினார்கள். பிறகு விஷயம் பூராவும் தெரிவித்தார்கள். நாங்கள் வாங்கிய நிலத்தைப் பற்றி ஜமீன்தார் கட்டிவிட்ட வழக்கில் எங்களுக்குப் பிரதிகூலமாகத் தீர்ப்புக் கிடைத்ததாம். அக்காவுடைய விலையுயர்ந்த நகைகளை ஜமீன்தாரர் வீட்டுப் பந்துக்கள் இரவல் வாங்கிக் கொண்டு போனார்களாம், திருப்பித் தரவில்லையாம். கோர்ட்டிலே கற்பூரத்தை ஏற்றி அணைத்துச் சத்தியம் செய்தார்களாம், நகை இரவல் வாங்கவே இல்லை என்று. காலிகளின் தொல்லை அதிகரித்து விட்டதாம். குற்றாலமே வந்து விடலாமா? என்று கேட்டிருந்தார்கள். நான் இளைய பூபதியைச் சரிப்படுத்தி, அவரை அழைத்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தேன். இது ஜமீன்தாரரின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. தன் மகளுக்கு மணாளனாக வரவேண்டியவன் தன் கண்ணெதிரிலேயே எங்கள் வீட்டில் வாழ்வதைப் பார்த்தால் அவருக்கு ஆத்திரமாகத் தானே இருக்கும். அவருடைய ஆத்திரத்தைக் கிளப்புவது ஒரு விதத்தில் எங்களுக்கு ஆபத்து என்ற போதிலும், ஒரு விதத்திலே எனக்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. மறைமுகமாக எதிர்ப்பதை விட நேருக்கு நேர் நின்று போர் புரிவது ஆண்மையல்லவா! அதுபோல் இருந்தது என் நிலை. ஒரு ஜமீன்தாரரின் கோபத்தை நாங்கள் சமாளிக்க முடியாது. ஆனால் எங்களுக்கும் அந்த ஜமீன்தாரின் கோபத்துக்கும் இடையே இளையபூபதி இருந்தார். கோபம் என்ன செய்யும் கேடயம் இருக்கும்போது கத்திக்குப் பயப்படுவானேன். அதிலும் இளைய பூபதிக்கு நான் ஊட்டி வந்த ரோஷ உணர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. இருதரப்பிலும் செலவுதான். இருதரப்புக்கும் அம்புகள் ஏராளமாகச் சேர்ந்தன. எங்கள் ஊரே இரண்டு கட்சியாக மாறிவிட்டது. இந்தச் சமயத்தில்தான் ரௌடி ரங்கன் எங்களுக்குப் பழக்கமானது. இளையபூபதிக்கு அவன்தான் கைத்தடி. அவனிடம் எங்கள் ஊர் போக்கிரிகளுக்குச் சற்றுப் பயந்தான். அவன் அவர்களுக்கு “அண்ணாச்சி. “ஏண்டா பயல்களே! உங்கள் குரு நமது சிஷ்யன் தெரியுமல்லோ உஷாரா பிழையுங்கோ” என்பான். அவர்கள் தலையைச் சொறிந்து கொண்டே, “என்ன அண்ணாச்சி, அந்த ஜமீன்தாரன் கொடுக்கிற காசுக்காக ஏதோ கொஞ்சம் ஜால்சாப்புக் காட்டுகிறோம். வேறென்ன இருக்கு’ என்று சமாதானம் சொல்வார்கள். ரங்கனுக்கு அந்தப் போக்கிரி உலகத்திலே இருந்த மதிப்புக்குக் காரணம் அவன் இரண்டு மூன்று தடவை அடிதடி கொலை குத்துக் கேசில் சிக்கி ஜெயில் போய்த்திரும் பியதுதான். ஒவ்வொரு நாளைக்கு ரங்கனே சொல்வான். “படவாப் பயல்கள் எவனாவது வாலை நீட்டினா, ஆறு அங்குல பிச்சுவா இருக்குது, ஆறு மாசம் ஜயிலு இருக்குது ராணியம்மா சத்திரத்
திலே மயிர் வளர்ந்தா மொட்டை, மணி அடிச்சா சோறு” என்று.

இளைய பூபதிக்குப் பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டதும் அவர் எங்கள் ஊரிலேயே வீடுகளும் நிலங்களும் வாங்கிக் கொண்டார். எங்கள் ஊர்வாசியாகி விட்டார். எங்கள் குடும்பம் மறுபடியும் பிரகாசிக்க ஆரம்பித்தது. ஆனால் ஜமீந்தாரர்களின் சண்டை ஓயவில்லை. இதனால் பூபதியின் செல்வம் கரைந்து கொண்டே வந்தது. இரண்டு பேருக்கும் எதிலும் போட்டி ஏற்பட்டு விட்டது. கோயிலில் அவர் ஒரு நாள் ஆயிரம் ரூபாய் செலவில் செய்வார். மறுதினம் இளைய பூபதியின் கைங்கரியம் ஆயிரத்து ஐந்நூற்றில் நடக்கும். அவர் சங்கீத கச்சேரி வைத்தால் இவர் கச்சேரி வைப்பார். அவர் ஒரு வீட்டை விலைக்கு வாங்கப் பேரம் பேசினால் இவர் அதற்கு அதிக விலை கொடுப்பதாகப் போட்டி போடுவார். அவருடைய மோட்டார் 6000த்தில் என்றால் இவருக்கும் 8000. இப்படிப் போட்டி நடந்ததில் பூபதியின் பணம் மிக விரைவிலே குறைய ஆரம்பித்தது. பூபதிக்கு இந்த ரோஷத்தை நான் தான் ஊட்டினேன். ஆனால் எனக்கே அதன் வேகமும் விளைவும் பிடிக்கவில்லை. தீபம் அதிகமாக எரிகிறதே, எண்ணெயே தீர்ந்துவிட்டால் பிறகு இருள்தானே சூழும் என்ற பயம் ஏற்பட்டது. நான் அவரது ரோஷ உணர்ச்சியை மட்டுப்படுத்திச் சொன்னேன். அது அவரது ரோஷத்தை அதிகரிக்கவே செய்தது. துள்ளுகிற காளையைப் பிடிக்கப் போனால் கைக்குக் சிக்குகிறதா? அது போலாகிவிட்டார், இளைய பூபதி. “அவன் கிடக்கிறான் பஞ்சைப்பயல்!” என்பார். நான் இருக்கும்வரை அவன் தலைநீட்ட முடியுமா என்பார். சதா சர்வகாலமும் இந்தப் பேச்சுத்தான் இருக்கும். அவரிடம் பணம் பிடுங்கவரும் ஒவ்வொருவரும் இந்த உணர்ச்சியைக் கிளப்பியே பணம் பறிப்பார்கள். இளைய பூபதிக்கு இவ்விதமான செலவுகள் பெருகிவிடவே, எங்கள் வீட்டுக்குச் செய்த செலவு தானாகச் சுருங்க ஆரம்பித்து விட்டது. அதிகமாக ஓடுகிறதே குடை கவிழ்ந்தால் என்ன செய்வது என்ற பயந்தான் எனக்கு. இளையபூபதி செய்துவந்த காரியங்கள் எவ்வளவு துவேஷத்தைக் கிளப்பிற்று என்பதற்கு ஒரு உதாரணம் கேளுங்கள். இவருக்கு எனப் பேசிய பெண்ணுக்கும் வேறோரு கடன்கார ஜமீன்தாரருக்கும் கலியாணம். கலியாணம் பெண் வீட்டில். இளைய பூபதியின் எதிரில் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் நடத்தினால்தான் பெருமை என்று பெண்ணின் கலியாணத்துக்கு ஏராளமாகச் செலவு செய்தார் அந்த ஜமீன்தார். கும்பகோணம் பாடகராம் ஒருவர், 500 ரூபாய் செலவில் அவரது கச்சேரி ஏற்பாடாகி இருந்தது.

அன்று கல்யாணப் பந்தலிலே எள் போட்டால் எள் எடுக்க முடியாது; அவ்வளவு கூட்டம், மோட்டார் மேல் மோட்டார் பறந்து கொண்டிருந்தன. ஊரெங்கும் கச்சேரியின் பெருமை பற்றித்தான் பேச்சு. இளைய பூபதி மட்டும் “கச்சேரியின் இலட்சணம் தெரியத்தானே போகிறது, பார்க்கத்தானே போகிறார்கள். காறி உமிழத்தானே போகிறார்கள்” என்று கூறிக் கொண்டிருந்தார். மாலை 6 மணிக்கு கச்சேரி ஆரம்பமாக வேண்டியது 7 மணி ஆயிற்று, 8 ஆயிற்று பாடகர் வரவில்லை என்ற சேதியைத் தான் சொன்னான். ஜமீன்தார் அண்டம் வரை எகிறினாராம் ஆத்திரத்துடன். கைகளைப் பிசைந்து கொண்டா ராம். “மோசம் போனேன். முகத்தில் அந்தப் பார்ப்பான் கரியைப் பூசிவிட்டானே. எல்லாம் இந்தப் போக்கிரி பூபதியின் வேலை” என்று கர்ஜித்தாராம். வந்த ஜனங்களுக்குச் சமாதானங் கூறிவிட்டு, உள்ளூர் வித்வானைப் பாடச் சொன்னாராம். தான் இருக்கும்போது வெளியூர் பாடகர்களை வரவழைக்கலாமா என்ற துக்கத்தைக் காட்ட, அவர் அழுது தீர்த்தாராம் கொஞ்ச நேரம், சங்கீதச் கச்சேரியின் அழகு அப்படி இருந்ததாம். ஜனங்கள் கேலி செய்து விட்டார்கள். ஜமீன்தாரர் அவமானம் தாங்க மாட்டாது தலையைத் தொங்க விட்டுக் கொண்டாராம். எங்கள் வீட்டிலே இளைய பூபதி இடிஇடி எனச் சிரித்துக் கொண்டே, “எப்படி பூபதியின் வேடிக்கை! இவன் பாடுவதற்கு அந்தப் பார்ப்பானுக்கு 500 ரூபாய் தருவதாகப் பேசி அட்வான்ஸ் கொடுத்தான். நான் அந்தப் பாடகன் இங்கே வந்து பாடாதிருக்க 1000 ரூபாய் முழுவதுமே நேற்றுக் கொடுத்து ரங்கனை அனுப்பினேன். இங்கே கச்சேரி கிச்சேரி ஆகிவிட்டது என்று கூறிச் சிரித்தார். இப்படியே ஒவ்வொரு காரியத்திலும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து வந்தனர். இரண்டு சிங்கங்கள் சண்டை இடுவதைப் பார்க்கலாம். ஆனால் இடையிலே நாங்கள் சிக்கிக் கொண்டோமே. எங்கள் சிங்கம் சாய்ந்துவிட்டால் மறுகணம் பழைய சிங்கம் எங்களைப் பட்சணம் செய்து விடுமே என்ற பயந்தான். பணம் தீர்ந்து விட்டால் இந்தப் பாண வேடிக்கை ஏது?

எப்போதும் கிளாஸ்கோ மல்லும் சில்க்கு ஜிப்பாவும் போட்டுக் கொள்ளும் இளைய பூபதி, ஒரு நாள் திடீரென்று, கதர் சட்டையும் துணியும் அணிந்து கொண்டு, கையிலே காந்திக் குல்லாய் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவர் பின்னால் ரங்கன் ஒரு கைராட்டினமும் தூக்கிக் கொண்டு வந்தான். இது என்ன அதிசயம்? ஏன் இந்த வேடம்? என்றேன் நான். “அதிசயமுமில்லை, வேடமுமில்லை. இது புதிய போர்” என்றார் இளைய பூபதி.

“கேள் கண்ணே விமலா, நமது தேசம் வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனால் நாம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிப் படுக்கப் பாயின்றிப் பரிதவிக்கிறோம். பாரத மாதா தலைவிரி கோலமாக நின்று அழுகிறாள். கையிலேயும் காலிலேயும் விலங்குகள் உள்ளன. அதை உடைத்து எறிந்து வெள்ளைக்காரனை மூட்டை முடிச்சுடன் ஓட்டி விட்டு சுயராஜ்யம் பெற வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்கிறார். ஆகையினால் காங்கிரசில் சேருங்கள் என்று கதர்க்கடை கைலாச அய்யர் சொன்னார். நான் காங்கிரசில் சேர்ந்து விட்டேன்.” என்று இளையபூபதி சொன்னார்.

“இது என்ன கோலம் துரையே. இது உங்களுக்கு ஏற்றதா? ராஜா போல் நீர் இருப்பதை விட்டுவிட்டு இந்தத் தொழில் எதற்கு? காங்கிரஸ் காங்கிரஸ் என்று சும்மா. கத்தினார்கள், என்ன பலன் கிடைத்தது? ஏழை எளியவர்கள் முதுகில் போலீஸ் தடியடி விழுந்ததும், ஜெயிலுக்குப் பலர் போனதும்தானே மிச்சம். நீங்களாவது காங்கிரசில் சேருவதாவது. தடியடியும் ஜெயிலும் உங்களுக்கு ஏன்?” என்று நான் சொல்லித் தடுத்தேன்.

“அதற்குள்ளே, எங்கே என்னை அடித்து விடுகிறார்களோ, ஜெயிலுக்குப் பிடித்துக் கொண்டு போய் விடுகிறார்களோ என்ற பயமா? சுத்த பைத்தியம் நீ, தடியடி படவேண்டியவர்கள் பட்டாகி விட்டது. ஜெயிலுக்குப் போக வேண்டியவர்களும் போயாகி விட்டது. இனிமேல் அது கிடையா. இருந்தாலும் எங்களைப் போன்றவர்கள் இனி அதிலே சேர்ந்துவிட்டு, அது மாதிரி காரியம் வேண்டாம் என்று தடுத்து விடுவோம். இப்போ நடக்க வேண்டியது எலக்ஷன். அதிலே காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் சண்டை. ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து ஆயிரம் அடி ஆழத்திலே புதைக்க வேண்டும். அதற்காகத்தான் காந்தி குல்லாய்க்காரனாகி விட்டேன்” என்றார் பூபதி.

“ஜஸ்டிஸ் கட்சியைத் தொலைக்கிறதும் குழியிலே போடறதும் எதுக்கு? அதை நீங்கள் செய்வானேன்? இதுதானா உங்கள் வேலை?” என்று நான் கேட்டேன்.

“உனக்கு என்னடி தெரியும்? அந்த ஜமீன்தார் ஜஸ்டிஸ் கட்சியாம். “ஆகவே அவனிருக்கிற கட்சிக்கு விரோதமான கட்சியிலே நான் சேர்ந்து விட்டேன். அவன் இருக்கிற கட்சியை ஒழிக்க வேண்டும். அப்பத்தானே அவனும் ஒழிவான். அதற்காகத்தான் நான் காங்கிரஸ். நாளைக் காலையிலேயே நமது வீட்டின் முன்புறம் கொடி ஏற்றப் போகிறேன். நீ ஒரு காந்திப் பாட்டு பாடவேண்டும். தெரிகிறதா” என்றார் பூபதி.

பைத்யம் இதிலே திரும்பிற்றா? என்று நான் எண்ணினேன்.

இளையபூபதியின் அரசியல் பிரவேசம். வேகமான பல மாறுதல்களை உண்டாக்கி விட்டது. ரவிவர்மா படங்கள் இருந்த இடத்திலே, தேசியத் தலைவர்களின் படங்கள்! தம்பூரா ஸ்ருதிச் சத்தம் நின்றுவிட்டு, ராட்டைச் சத்தம் கேட்கலாயிற்று! ரங்கன் கைராட்டை சுற்றுவான், இளையபூபதி, ஆடுராட்டே! ஆடுராட்டே! என்று வேடிக்கையாகப் பாடுவார். நான் எங்கே அவரைக் கேலி செய்கிறேனோ என்று, அவராகவே, “ஏன்! என் போக்கு உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? பைத்யமே! ஆடு ராட்டே! ஆடுராட்டே! என்றால், ராட்டினம் ஆடுவது என்றல்ல! அர்த்தம், போடு ஓட்டே! போடு ஓட்டே! என்று அர்த்தம். பெரிய பெரிய தலைவர்கள், பேசி, கஷ்டப்பட்டு, சிறைப்பட்டு, ஜனங்களிடம் காங்கிரஸ் பக்தியை ஊட்டி வைத்திருக்கிறார்கள். நமக்கு அது இப்போது பயன் படுகிறது. ஓட்டு நமக்குத்தானே” என்று கூறினார்.

“ஓட்டு வாங்கும் வேலையிலே, ஈடுபட்டால்கூடத் தான் என்ன, நீங்கள் வேறோர் பக்கம் எலக்ஷனுக்கு நிற்கக் கூடாதோ? எதற்காக, அந்தச் சனியனுடன் மோதிக் கொள்ளவேண்டும்?” என்று நான் கவலையுடன் கேட்டேன். இளையபூபதி சிரித்து விட்டு, “அசட்டுப் பெண்ணே!அவன் தைரியம் சொன்னானாம், என்னை எதிர்க்கும் தைரியம் எந்தப் பயலுக்கு உண்டு? தலையிலே கொம்பு முளைத்தவன் எவன் வருகிறான் பார்ப்போம் என்று முடுக்காகப் பேசினானாம். கதர்க்கடை ஐயர் சொன்னார். இவ்வளவு கர்வம் பிடித்தவனைத் தொலைத்துக் கட்டாமல் விடுவதில்லை. இதனாலே எதுபோனாலும் சரி எது வந்தாலும் சரிஎன்று தீர்மானித்துவிட்டேன். மேலும் நானோ காங்கிரஸ் கட்சி. என்னடி என்னைச் செய்ய முடியும்? பார், வேடிக்கையை,” என்று மிகவும் உற்சாகத்தோடு கூறினார். அன்றிரவு, போதைப்பானம் உட்கொள்ளும்போது, ரங்கனிடம் சொன்னார். “ரங்கா! இந்தக் காங்கிரஸ் சொல்கிற சகலவிஷயமும் எனக்குப் பிடித்தமாகத்தான் இருக்கிறது. ஆனா, இந்தத் தேவாமிருதத்தைச் சாப்பிடக் கூடாது என்று பேசுகிறார்களே, அது, எனக்குத் துளியும் பிடிக்கவில்லை!” என்றார். ரங்கன், “அதுகளுக்கு, இதன் சுவை தெரியாது” என்று கூறிக் கேலி செய்தான்.

அதுகள், இதுகள் என்று எந்தக் காங்கிரஸ்காரர்களை ரங்கன் கேலி செய்தானோ, அவர்களிலே சிலர், மறுநாள் மாலை, என் வீட்டுக்கு வந்தனர், கொடி ஏற்று விழா நடத்த. நான், “தாயின் மணிக்கொடி” பாடினேன். பலரும் புகழ்ந்தார்கள். கதர்க்கடை ஐயர் எழுதிக் கொடுத்திருந்தார் கொடியின் பெருமையைப் பற்றி. அதை இளையபூபதி கெம்பீரமாகப் படித்தார் - கொடியும் அழகாகப் பறந்தது. பலர் வீராவேசமாகப் பேசினார்கள். என்னையுமறியாமல் எனக்கே ஓர் வகை மகிழ்ச்சி பிறந்தது. நானே ரங்கனை அனுப்பி, கதர்ப்புடவை வாங்கி வரச் சொன்னேன் - கொஞ்சம் முரட்டு நூல்தான் - என்றாலும் அதையே நான் அணிந்து கொண்டேன் இளையபூபதிக்கு கதர்ச் சில்க்கில் ஜிப்பாவும் உயர்தரமான கதர்வேட்டியும் இருந்தன. சில நாட்களிலே, எங்கள் வீடுதான் காங்கிரஸ் ஆபீஸ்.

எலக்ஷன் நாள் நெருங்க, நெருங்க, எங்கள் வீடு, திருவிழாக் கோலமாகி விட்டது. ஒவ்வொருநாளும் பிரசங்கம், ஏதாவதோர் இடத்தில் - நான்தான் தேசியப் பாட்டுப் பாடுவது. சில ஊர்களிலே, இளைய பூபதியைக் கேலி செய்ய வேண்டு மென்பதற்காக உம்முடன் வருகிறபாட்டுப் பாடும் பேர்வழி யார்? என்றுகூடக் கேள்வி கேட்டார்கள். இளைய பூபதியோ, தைரியமாகச் சொன்னார். “தாசி விமலா - எனக்குச் சினேகிதை” என்று.அவர் அவ்வளவுதான் சொன்னார். மற்றப் பிரசங்கிகளோ, கேள்வி கேட்டவரின் சின்னபுத்தி, எனக்குள்ள சிறப்புகளை அவர்கள் அறியாது போனது என்பனவற்றைப் பற்றிச் சரமாரியாகப் பேசுவர்.

மாலை வேலைகளிலே பிரசங்கம் என்றால் காலையிலே ‘ஓட்’ போய் கேட்டுவிட்டு வந்த விஷயமாக விவாதம் நடைபெறும். எதிர்க்கட்சியின் போக்குகள் பற்றிய சர்ச்சைகள் அதிகமாக நடைபெறும். இளையபூபதியிடம் பணம் பெறுவதற்காகப் பலர் பலவிதமாகப் பேசுவார்கள்.

“கேட்டிங்களா, கந்தப்பன் சொல்றதை” என்று ஆரம்பிப்பார் கதர்க்கடை ஐயர்; இளையபூபதி, கந்தப்பனை நோக்கி, “என்னடா கந்தா?” என்று இரண்டு மூன்று தடவைகள் கேட்டு, அவன் “ஒன்றுமில்லிங்க - சும்மாவுங்க - பிரமாதமாக ஒன்றுமில்லிங்க - என்று இழுத்திழுத்தும் பேசியான பிறகு சொல்லுவான், “இறுப்பூர் பக்கத்து மணியக்காரு, மீனாட்சி சுந்தரம் இருக்கிறாரே, அவரைச் சரிப்படுத்தி விட்டேனுங்க. இனி அவர் நம்ம கட்சி” என்பான். அவன் கூறுவது போதாதது என்று கதர்க்கடை ஐயர், அதே விஷயத்தை, வர்ண வேலைப் பாடுகளுடன் விவரிப்பார்.

“அந்த மணியக்காரனைத்தான், உம்ம எதிரி, மலை போல நம்பிக் கொண்டிருந்தான். உள்ளபடியே, மணியக்காரனுக்கு அந்தப் பக்கத்திலே, நல்ல செல்வாக்கு. பய, இரண்டு மூன்று கொலை செய்து கூட இருக்கான் - ஒரு சாட்சிகூடக் கிடைக்கலே, அவன் செல்வாக்காலே ஒரு ஆறாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளாவது, அந்தப் பக்கம் போயிருக்கும். நம்ம கந்தப்பன், பார்த்தா இப்படி பித்துக்குளி மாதிரி இருக்கான். ஆனா, எப்படியோ மணியக்காரனை, மடக்கிச் சரிப்படுத்தி விட்டிருக்கான். அவன் இப்போ, கிராமம் கிராமமாகப் போய், மஞ்சப்பெட்டி, மஞ்சப்பெட்டின்னு பேசுகிறானாம்” என்று ஐயர் சொல்லிவிட்டு, “கந்தா! என்னதான் செய்தே? சொல்லு!” என்று கேட்பார். அப்போதுதான் சூட்சமம் வெளிவரும், “ஒண்ணுமில்லைங்க. மணியக்காரரு, ஜமீன்தாரரிடம் ஒரு ஆயிரத்து ஐந்நூறு கடன் வாங்கியிருக்கான். எனக்கு இது தெரியும். அதனாலே ஒரு நாள், மணியக்காரரிடம் போயி, ஆழம் பார்த்தேன். மணியக்காரன் ரொம்ப ரோஷக்காரனுங்க, பார்த்தேன். ஒரு போடு போட்டேன். “மணியக்காரரே! நீங்க என்னமோ, ஜமீன்தாரரு, பழைய சினேகிதமாச்சே, பரம்பரைப் பணக்காரராச்சே, நாலு நல்லது செய்தவராச்சேன்னு அவருக்காகப் பாடு படுறிங்க, ஆனா அந்த ஆள், உங்களைக் குறித்து என்ன பேசறான்னு தெரியுமா? மணியக்காரன், என் பக்கம் வேலை செய்யாமலிருக்க முடியுமா? கடன்பட்ட கழுதை, காலைக் கையைப் பிடித்துக் கொண்டு கிடடான்னா கூடச் செய்ய வேண்டியதுதானே என்று சொல்கிறாரு” - என்று தூபம் போட்டேன். மணியக்காரனுக்குப் பிரமாதமான கோபம் வந்து விட்டது. “அடபாதகா! இப்படியா சொன்னான். ஆகட்டும் அவனை ஒழிச்சுவிட்டு மறு வேலை பார்க்கிறேன். இந்தப் பக்கம் வரட்டும், ஓட்டுக் கேட்க!” என்று கொக்கரித்தான். பிறகு, நான் சமாதானம் சொல்லி, “ஆத்திரப்பட்டு வெளியே ஏன் மணியக்காரரே கூவிடணும்! பொட்டியிலே, காட்டுங்களேன் உங்க வேலையை” என்று சொல்லி நம்ம கட்சிக்குத் திருப்பினேன். ஒப்புக் கொண்டாரு - குழந்தை மேலே கூடச் சாட்சி வைத்தாரு - நானும், அந்த ஆயிரத்து ஐந்நூறை வாங்கித் தந்துவிடுகிறேன், ஒரு பத்து நாள் போகட்டும்னு சொல்லிவிட்டு வந்தேன்” என்று விரிவாகக் கூறுவான். பிறகு, இளையபூபதி யிடமிருந்து ஆயிரத்து ஐந்நூறு வெளியேறும்.

அவனைச் சரிப்படுத்தி விட்டேன். இவனுக்கு இன்னது தருவதாகச் சொன்னேன் என்ற செய்திகள் வந்த வண்ணமிருக்கும். இடையிடையே, ரங்கன் இன்ன ஆசாமியுடைய மண்டையைப் பிளந்து விட்டான் என்று சேதி வந்தபடி இருக்கும். இளைய பூபதிக்கு இந்தச் செலவு வேறு!

இந்நிலையில் எலக்ஷனுக்கு ஒரு வாரம் இருக்கும் போது, கதர்க்கடை ஐயர், ஒரு குண்டு வீசினார் - எங்கள் குடும்பம் மீண்டும் கலகலத்துப் போனதற்குக் காரணம் அதுதான். ‘ஜமீன் தார்வாள் ஒழித்துவிட்டேன் உம்ம எதிரியை! தொலைஞ்சான்! இனி வெளியே தலை நீட்ட முடியாது” என்று உற்சாகமாகக் கூறிக்கொண்டே, ஒரு காகிதத்தை இளையபூபதியிடம் கொடுத் தார். நான் பக்கத்திலே இருந்தேன். இருவரும் ஆவலுடன், அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தோம்.

மோசக்காரன் நம்பாதீர்.

ஜமீன்தார், ஊருக்குப் பெரியவர், உத்தமர், தருமப் பிரபு என்றெல்லாம் பசப்பித் திரியும் பேர்வழி எலக்ஷனுக்கு நிற்கிறார். இவருடைய சுயரூபம், மகா ஜனங்களுக்குத் தெரியாது. ஆகவே நான் தெரியப்படுத்துகிறேன். இந்த ஆசாமி, என்னுடன் பத்து வருஷ காலமாக சினேகமாக இருந்து வந்தார்.

பிறகு அனாவசியமாக என்னைக் கண்டபடி ஏசி, வெளியே சென்றதுடன், என்னை மிரட்டியும், என் குடும்பத்தை மிரட்டியும், பொய்க் கேஸ்கள் ஜோடித்தும், எங்களைப் பல வழிகளில் நாசமாக்கியதுடன் என் நகைகளை இரவல் கேட்டு வாங்கிக் கொண்டு போய், திருப்பித் தராமல் ‘வாயில் போட்டுக் கொண்டான்.” இப்படிப்பட்ட மோசக்காரனுக்கு, ஓட்டுப் போடுவது, மஹா பாபம். கோஹத்தி, சிசுஹத்தி போன்ற பாதகமாகும்.

மகா ஜனங்களே! என்மீது இவ்வளவு ஆத்திரப்பட்டு, இவ்வளவு கொடுமையும் ஜமீன்தார் செய்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள். எனக்கு எப்போதுமே காந்தி மகாத்மாவிடம் பக்தி உண்டு. ஒரு நாள், நான் ஒரு பெரிய, அழகான மகாத்மா காந்தி படம் வாங்கிவந்து, மாலையிட்டு, நடுக் கூடத்தில் தொங்கவிட்டிருந்தேன். ஜமீன் தாரர், அந்தப் படத்தைக் கண்டதும், கடும்கோபம் கொண்டு, மகாத்மாவை ஏதேதோ இழிவாக, சொல்லத் தகாத வார்த்தை களைச் சொல்லி ஏசி, படத்தை எடுத்துவிடு என்று கட்டளை யிட்டார். நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். முரட்டுப் பிடிவாதம் செய்தார். எனக்குக் கோபம் வந்து விட்டது. நான், என் உயிர் போனாலும், மகாத்மாவின் படத்தை மட்டும் எடுக்க விடமாட்டேன் என்று சொன்னேன்.

மகா ஜனங்களே! பாவி, உடனே என்னைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, மகாத்மாவின் படத்தை எடுத்துக் கீழேபோட்டு, தூள்தூளாக உடைத்தான். இதுதான் எங்களுக்குள் விரோதம் உண்டான காரணம். மகாத்மாவின் படத்தை உடைத்த மகா பாவிக்கு மகாஜனங்கள் மறந்தும் ஒரு ‘ஓட்டு’கூடத் தரக்கூடாது.

இப்படிக்கு
தாசி கமலா

கதர்க்கடை ஐயரின் இந்தக் காகிதத்குண்டு கண்டு, இளையபூபதி சந்தோஷத்தால் ஒரு துள்ளுத் துள்ளினார். இளைய பூபதி இதை உரத்தகுரலில் படித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த, என் அக்கா சரேலென வெளியே வந்து, இளையபூபதியைக் கும்பிட்டு விட்டு, “இந்த நோட்டீஸ் போடப் போகிறீர்களா?” - என்று கேட்டாள். ஐயர், “ஆமாம்! கமலா! உன் கையெழுத்தையும் போட்டோ எடுத்து இந்த நோட்டீஸ் ஒரு இருபதினாயிரம் போட்டு ஊரெங்கும் வீசப் போகிறோம் - ஒழிந்தான் இதோடு” என்று கூறினார். என் அக்கா சாந்தமாக, ஆனால் உறுதியுடன், “இதை நான் அனுமதிக்க முடியாது. இதற்குச் சம்மதிக்க முடியாது” என்று கூறினாள். அப்போ இளையபூபதி எங்களைப் பார்த்த பார்வை, அப்பப்பா, இப்போது எண்ணிக் கொண்டாலும் நடுக்கம் பிறக்கிறது; அவ்விதம் இருந்தது அந்தப்பார்வை. எங்கள் குடும்பத்தைக் கெடுக்கும் நெருப்பைக் கக்கிற்று.