அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
3
                     

விமலாவின் ஜோதிடம் பலிக்கவில்லை. வந்தவள் மரகதமல்ல, வேலைக்காரி. கையில் பலகாரத் தட்டும் காப்பிச் செம்பும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். “அகிலாண்டமா, எங்கேடி மரகதக்கா?” என்று கேட்டாள் விமலா. அகிலாண்டம் பதிலைத் தன் கண்ணாலேயே தெரிவித்து விட்டாள். “ஏது! இவ்வளவு பொழுதோடே வந்துவிட்டாரா. சரி இன்று மரகதத்தின் கதையை நீங்கள் கேட்க முடியாது. மரகதத்தின் செட்டியார் வந்து விட்டாராம். அவர் போகும் முன்பு மரகதம் அப்படி இப்படி அசைய மாட்டாள். நாளைக்குப் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இந்தக் காப்பி பலகாரத்தைச் சாப்பிடுஙகள்” என்று விமலா கூறினாள். டாக்டர் சாப்பிட ஆரம்பித்தார். “மிளகாயை எடுத்துவிடுங்கள். அதோ கருவேப் பிலை, இஞ்சியை எடுக்காமலே தின்னகிறீரே, என்ன அவசரம்?” என்று விமலா உபசரித்தாள். டாக்டருக்குக்கூட ஆச்சரியமாயிருந்தது விமலாவின் உபசரணை, பழகவேயில்லை. நேற்றுச் சந்தித்து, இன்று இவ்வளவு லலிதமாகப் பேசுகிறாளே. ஒருவேளை தாசிகளின் ஜாலம் என்கிறார்களே, அதுதானோ இது என்று கூட எண்ணினார். காப்பி சாப்பிட்டானதும் வெற்றிலைத் தட்டு வந்தது. டாக்டர் “போடும் வழக்கமில்லை” என்று கூறினார். “நான்கூட கண்டவர்களைக் கூப்பிட்டு வெற்றிலை போடச் சொல்லும் வழக்கமில்லை” என்று கிண்டல் செய்தாள் விமலா. கிண்டல் கணையா, காமன் கணையா என்று தெரியாது சுந்தரேசன் திகைத்தான். அவனது திகைப்பே விமலாவுக்கு திவ்யமான விருந்தாக இருந்தது. “சரி, மரகதம் கதைதான் இன்று கூறுவதற்கில்லை. அதோ எங்க அகிலாண்டத்தின் சேதி தெரியுமோ உமக்கு. அது, என் சேதி, மரகதத்தின் சேதி எல்லா வற்றையும்விட வேடிக்கையானது” என்று விமலா கூறினாள். அகிலாண்டம், “எப்போதும் உங்களுக்கு விளையாட்டுத் தானம்மா!” என்றாள். “ஏண்டி அதுகூட வேண்டாமென்கிறாயா!” என்று கூறி அவள் தாடையை இடித்து விட்டு, “டாக்டர் சார். இந்த அகிலாண்டத்தின் புருஷன் இப்போது எங்கேயோ பல்லாரி சிறையிலே இருக்கிறானாம். இவள் கதையை கேளுங்க” என்று ஆரம்பிக்கப் போகும் சமயம், காலடி சப்தம் கேட்டது; ஒரு ஆசாமி நுழைந்தான். அகிலாண்டம் மெல்லக் கீழே போய்விட்டாள். “பார்த்தீர்களா ஆசாமியை, எதிரிலுள்ள வெற்றிலை பாக்குக் கடைக்காரன். அகிலாண்டத்துக்கு ஆசைநாயகன் அவன்தான்” என்றாள் விமலா. “புருஷன் இருப்பதாகக் கூறினாயே” என்று சுந்தரேசன் கேட்டான். “இருக்கிறான் ஜெயிலில்; இங்கே இவன் இருக்கிறான்” என்று விமலா குறும்பாகக் கூறிவிட்டு, இதுதான் டாக்டர் எங்கள் உலகம்.”

“எங்கள் உலகமே அலாதியானது. அதைப் பற்றிய கவலை மற்ற உலகத்துக்குக் கிடையாது. கோழி மனிதனுக்குப் பண்டம் பலகாரமாகிறது. ஆனால் அது பிழைத்து வளருவது குப்பை மேட்டைக் கிளறி, புழு பூச்சி தின்றுதான்.” என்றாள் விமலா.

“விமலா, இப்போது கோழிப்பண்ணை வைத்து, கோழி களை வளர்ப்பது ஒரு படிப்பாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது, உனக்குத் தெரியாது” என்று டாக்டர் நவயுக உலகச் சேதியைக் கூறினார்.

“ஆமாம்! கோழி வளர்ப்பார்கள், குரங்கை வளர்ப்பார்கள், இன்னமும் ஏதேதோ செய்வார்கள். ஆனால் உலகத்தில் பிறந்தவர்களை எப்படி வளர்ப்பது என்ற கவலை கிடையாது. மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கிறான் என்று கூறிவிடுவார்கள்” என்றாள் விமலா.

“விமலா, உனக்கு வறுமையின் காரணமாக வேதாந்தம் நிரம்ப வந்து விட்டது” என்றான் சுந்தரேசன்.

“ஆமாம்! இரண்டும் நான் கேட்காமலேயே என்னிடம் வந்து விட்டன” என்று கூறிவிட்டு, “நீங்களுந்தான், நான் வேண்டாமென்று கூறியுங்கூட, தானாக வந்தீர்கள்” என்று கூறிச் சிரித்தாள்.
“அப்போது நான், வறுமை போலத்தான் உனக்கு வாட்டம் கொடுக்கிறேனா?” என்று டாக்டர் கேட்க, “அது எப்படி இப்போது தெரியும். போகப் போகத் தெரியும் புடவையின் சாயம் என்பார்கள். அது கிடக்கட்டும் டாக்டர், எனக்கு...”

“நேரமாகிவிட்டது, நான் ஜடை சீவி, முகம் கழுவி, பொட்டிட்டு, அலங்காரம் செய்துகொள்ள வேண்டும். அவர் வரும்போதே சிவந்த கண்களோடு வருவார். சிங்காரித்துக் கொண்டிராவிட்டால், “ஏண்டி, மூதேவி போலே இருக்கிறே” என்று ஆரம்பித்தால், பிறகு, அர்ச்சனை பலமாக நடக்கும். ஆகையால் நாளைக்க இந்த நேரத்துக்கும் சற்று முன்னதாகவே வந்து விடுங்கள். அகிலாண்டத்தின் கதை, மரகதத்தின் சேதி, என் விஷயம் எல்லாம் பேசலாம். நேரே வீடு போய்ச் சேருங்கள், தெரிகிறதா, நான் கூப்பிட்டது போல, வேறு எவளாவது கூப்பிட்டால், போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டாம், ஜாக்கிரதை” என்று டாக்ருக்கு எச்சரிக்கை செய்தாள் விமலா.

“அது என்ன விமலா, நான் கூப்பிட்டவள் பின்னாலெல் லாம் போகிறவன் என்று எண்ணி விட்டாயா!” என்று சுந்தரேசன் கேட்டான்.

“வண்டுகூட அப்படித்தான் சொல்லும், நான் பார்க்கிற பூ மீது எல்லாம் உட்காருகிறேனா என்று. டாக்டரே நீர் குழந்தை தான். இருந்தாலும் குழந்தைகள் தானே பிறகு பெரிய ஆளாகி விடுகின்றனர். என்னைக்கூட குழந்தையாக இருக்கும்போதும் அம்மா கேட்டார்கள். “நீ கலியாணம் பண்ணிக்க மாட்டாயா” என்று. நான் பயந்து கொண்டு சொல்வேன், ‘ஐயயோ, நான் மாட்டவே மாட்டேம்மா. எனக்குப் பயமா இருக்கும்’ என்று. அது ஒரு காலம் இது ஒரு காலம்.

“எல்லோரையும் போலத்தான் என்னையும் எண்ணிக் கொண்டாய்” என்ற டாக்டர் கூறிக் கொண்டே எழுந்திருக்கப் போகும் சமயம்,

“எல்லோரையும் போலவே”

“என்னை எண்ணலாகு மோடி, போடி” என்று விமலா கீதத்தைத் துவக்கினாள்.

இனிய குரல்! அந்தப் பாட்டின் பொருள் நயத்தை, விமலாவின் குரல் அதிகப்படுத்திற்று. இரண்டொரு அடிகள் பாடிவிட்டு நிறுத்திக் கொண்டாள். பாட்டு முழுவதும் பாடும்படி சுந்தரேசன் கேட்டார். தனக்கு பாட்டுத் தெரியாதென்று, கிராமபோன் பிளேட் கேட்டுக் கேட்டு இரண்டொரு பாட்டுக் கற்றுக் கொண்டதாகவும் கூறித் தப்பித்துக் கொண்டாள். ஆனால் டாக்டருக்கு, விமலா பாட்டை எடுத்த எடுப்பும், குரலின் பண்பும், அவள் நல்ல பாடகிதான் என்பதைக் காட்டிற்று. பிறகொரு சமயம் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டு, ‘நாளை வருகிறேன்’ என்று கூறி, விடை பெற்றுக் கொண்டு டாக்டர் தன் வீடு போய்ச் சேர்ந்தார்.

“இந்த மாதிரி பெரிய இடத்துச் சிநேகிதம் கிடைப்பது ரொம்பக் கஷ்டண்டி அம்மா. இந்தக் காலத்தில் தானாக வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளாதே. ரங்கனுக்கு பக்குவமாகக் கூறி விடு, எப்போதோ, சமயா சந்தர்ப்பத்திலே வந்து போ, பழைய சிநேகிதத்தை நான் மறந்து விடுவேனா என்று சொல்லேன். ரங்கன் எகிறிக் குதித்து விடுவானா? அவன் ஏதாவது மிரட்டினால் நான் செட்டியாரிடம் சொல்லிச் சரிபடுத்தி விடுகிறேன்.”

“அக்கா, நீங்கள் என்ன சொன்னாலுஞ் சரி, நான் அந்த டாக்டரை மட்டும் கெடுக்கமாட்டேன்.”

“இதிலே கெடுப்பது என்னடி இருக்கிறது. ஊரிலே உலகத்திலே நடக்காத விஷயம் போலே பேசுகிறாயே”

“ஊரிலே உலகத்திலே இருக்கிற எல்லோரையும் போன்றவரல்ல டாக்டர்.”

“ஆமாம் அதுக்குத்தான் சொல்லுகிறேன், நல்ல இடம், தங்கமான மனுஷன், உன்னிடம் ரொம்ப லயித்துப் போயிருக் கிறார்” என்று

“நானும்தான் அவரிடம் லயித்து விட்டேன்.”

“ரொம்ப நல்லதாச்சி, பழம் நழுவிப் பாலிலே விழுந்து விட்டது. இன்னும் ஏன் யோசனை?”

“அக்கா, உனக்கு நான் சொல்வது புரியக்கூடப் புரியாது. எனக்கு டாக்டர்மீது அளவு கடந்த ஆசை இருக்கிறதால்தான், நீ சொல்கிறபடி, அவரைக் கெட்ட நடத்தைக்கு இழுக்க எனக்கு இஷ்டமில்லை.”

“இது என்னடி அம்மா வேதாந்தம்; எனக்குப் புரியவில்லை, ஏதோ “ராதா, கிருஷ்ணா, கோவிந்தா” என்று காலந்தள்ள, எவனோ ஒருவனைப் பிடித்துக் கொண்டு, நாலு பேர் கண் முன்னாலே நாகரிகமாக வாழ வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு எனக்கு அவர் மீது ஆசையோ சொல்ல முடியாதபடி இருக்கிறது. ஆனால் அவரை நான் கெடுக்க மாட்டேன் என்று கூறுகிறாயே, கெடுப்பது என்ன இருக்கிறது இதிலே.”

“அக்கா, நான் ஒன்று கேட்கிறேன். யோசித்துப் பதில் சொல்லு. கண்ணுக்கு அழகாக ரோஜா இருக்கிறது. அதன் மீது நமக்கு பிரியம் இருக்கிறது. அதற்காக வேண்டி, அதனை எடுத்து வைத்துக் கொண்டு அழகு பார்க்கலாம், அதன் வாசனையை அனுபவிக்கலாம். ஆனால் ஆசை காரணமாக அதைக் கசச்சிப் பிழிந்து விட்டால், எந்த ரோஜா மீது நமக்கு ஆசை பிறந்ததோ, அது ரோஜாவாக இராதே. கூழாகித்தானே போய் விடும்.”

“நல்ல கதை சொன்னாயடி விமலா! ரொம்ப நல்ல கதை. அப்ப ரோஜாவை எடுத்து இனிமேலே யாரும் ஜடைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள் போலே இருக்கிறது. நீ இந்த ஊருக்கு ராணியாக இருந்தால், இப்படி ஒரு ஆர்டர் போட்டு விடுவாய். உம்! ஏதேதோ புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாயே, அதனுடைய பலன் இது. புஷ்பம் இருப்பது ஜடை அலங்காரத்துக்கு. பொழுது போனதும் வைக்கிறோம்; காலையிலே கசங்கியதை வீசி எறிகிறோம். இது சகஜம்.”

“அப்படிச் சொல்லு. இப்போ நீ என் வழிக்கு வந்தாச்சி. ரோஜாவை மாலையிலேயே ஆசையாக ஜடையிலே வைத்துப் படுக்கையிலே புரண்டு அதனைப் பாழாக்கி, பிறகு குப்பை மேட்டுக்குப் போட்டு விடுவது; அதைப் போலத்தானே நடக்கும் டாக்டருக்கும். ஆகையாலே அவரை இங்கே, அழைத்துக் கூத்திக் கள்ளனாக்கி, கண்டவர் கேட்கவும், பார்க் கிறவர்கள் தூற்றவுமாக்கி, அவருக்கு இருக்கிற பேரைக் கெடுக்க வேண்டும். இதுதானே நடக்கும் உன் யோசனைப்படி நடந்தால். என் யோசனை அப்படியில்லை. தோட்டத்திலே பஞ்சவர்ணக் கிளியைப் பார்த்து மகிழ்வதைப் போல், புஷ்பத்தின் மணம் காற்றோடு கலந்து வருவதை அனுபவிதது ஆனந்திப்பதைப் போல, அவர் மாசு மருவில்லாது நல்லவரெனப் பெயரெடுத்து, இருப்பதைக் கண்ணாலே கண்டு, கருத்திலே களிப்புக் கொள்ள வேண்டும். அதுதான் என் ஆசை உனக்கு அது ஆச்சரியமாக இருக்கும். எனக்கு இதற்கு முன்பு எப்போதும் இப்படிப்பட்ட எண்ணம் இருந்ததில்லை. இப்போதுதான் அவர்மீது ஆசை கொள்கிறேன். அது பூரணமான ஆசை. ஆகவேதான் அவரைப் பூஜிக்கிறேன்.”

“சுத்தப் பைத்தியண்டி நீ, சுத்த மக்கு” என்று மரகதம் கடைசியாகக் கூறிவிட்டாள்.

சம்பாஷணை, மரகதத்துக்கும் விமலாவுக்கும் டாக்டர் வந்துபோன மறுதினமே காலையில் நடந்தது. சுந்தரேசனை நாயகனாக அடையும்படி மரகதம் விமலாவுக்கு யோசனை கூறினாள். வலையை வீசு என்றாள். விமலா மறுத்தாள். அதற்காக அவள் வறிய காரணம், மரகதம் அதுவரை எங்கும் கேட்டு அறியாதது. டாக்டரும், விமலாவும் பேசுவதைக் கேட்டு, ‘சரசமாடுகிறார்கள்”, “சரியான கிராக்கியை விமலா பிடித்து விட்டாள்” “அவளைப் பிடித்த பீடை போய்விட்டது” என்று மரகதம் எண்ணினாள். ஆனால் விமலாவின் வியாக்யானம், விபரீதமாக இருந்தது. ஏன் இவள் இப்படிப் பேசுகிறாள் என்று மரகதம் எண்ணினாள்.

“மகா கைகாரி இவள்; நமக்குக் கூடச் சொல்லாமல், தெரியாமல், டாக்டரைச் சரிப்படுத்தப் பார்க்கிறாள்; எந்த உத்தம பத்தினியும் பேசாத பேச்செல்லாம் பேசுகிறாளே; இவ்வளவும் ஜாலம்; டாக்டர் எப்படியும் தன் வலையில் விழுவான். பிகுவாக இருந்தால், ‘ரேட்’ உயரும் என்று சிறுக்கி, தளுக்குச் செய்கிறாள். தளுக்கை என்னிடமே காட்டுகிறாளே. ஆமாம்! என்ன இருந்தாலும் அவள் தாசியல்லவா! அந்தத் தளுக்கு கூடப்பிறந்த தாயிற்றே. அதை ஆண்களிடமும் காட்டுகிறாள், பெண்களிடமும் காட்டுகிறாள். நானும் பலபேரைப் பார்த்தேன். இவளைப் போலக் கண்டதில்லை” என்று மரகதம் தனக்குள் கூறிக் கொண்டாள். மரகதத்துக்குக் கோபமும் துவேஷமும் வந்து விட்டது. அத்துடன் பொறாமையும் வந்துவிடட்து. “இவ்வளவு பேசுகிற இவளை, ஒரு கை பார்த்தே விடுகிறேன். இவள் பிளான் எனக்குத் தெரிந்து விட்டது. அந்த டாக்டர் தன்னைத் தவிர வேறு பெண்ணைத் தேட மாட்டான் என்று நினைக்கிறாள். நான் காட்டுகிறேன் என் சமர்த்தை. டாக்டரை, நான் என் வலையில் போடுகிறேன்” எனச் சபதம் செய்து கொண்டாள்.

அன்று மாலை, சொன்னவண்ணம் சுந்தரேசன் வந்து சேர்ந்தான்.