அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
4
                     

முதல் நாள் வரவேற்றதைவிட, மரகதம், டாக்டரைச் சற்று அதிகமான முகமலர்ச்சியுடன் வரவேற்றாள். மரகதத்தின் அலங்கார விதிகளே சற்று அலாதியானது. அழகாக விளங்க வேண்டும், அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலே தனக்கு அக்கறை கிடையாதென்றும், அந்தத் தளுக்குத்தனம் தனக்குத் தேவையில்லை என்றும் பிறர் கருதும் விதத்தில் அலங்காரம் செய்து கொள்வதே மரகதத்தின் வாடிக்கை. நெற்றியிலே குங்குமப் பொட்டு இருக்கும். ஒரு பக்கமாகச் சிறிதளவு சிதைந்து போயிருக்கும்! பொட்டுச் சரியாக இருக் கிறதா என்று மரகதம் கவலை கொள்ளவில்லை என்பதல்ல பொருள். கண்ணாடி முன் நின்று, வேண்டுமென்றே பொட்டை ஒருபுறம் கலைத்து விட்டால், அது ஒரு தனி ரகமாக இருக்கும் என்பது மரகதத்தின் எண்ணம். சற்றுத் தளர்ந்த ஜடை போட்டுக் கொண்டு, நெகிழும் ஆடை உடுத்திக் கொண்டு, பவுடரைக் கொஞ்சமாகப் பூசிக் கொண்டு, மரகதம் விளங்கினாள். முன்னாள் பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் டாக்டர் சுந்தரேசனும் தெரிந்து கொள்ளக்கூடிய வித்தியாசம் இருந்தது. முதல் நாள், ஒரு பெரிய மனிதனை, மதிப்போடு வரவேற்று மனமகிழ உபசரிக்கும் விதமாக நடந்து கொண்டாள் மரகதம். ஆனால் விமலாவுடன் பேசிய பிறகு, மரகதம் மனதிலே சூதான எண்ணங்கொள்ளவே, சோபிதமாக விளங்கப் பிரயத்தனப் பட்டாள். பார்வையைப் பாணமாக்கினாள்! சிரிப்பை சந்தமாக் கினாள்! அவள், டாக்டரை முதல் நாள் வரவேற்றாள், மறுதினம், அவர் மீது படை எடுத்தாள். டாக்டர் உள்ளே நுழைந்ததும், குலுக்கி நின்றாள். களுக்கெனச் சிரித்தாள். இதற்குள் மேலாடைக்கும் மரகதத்துக்கும் இடைவிடாத போர் நடந்து விட்டது. வாயிலிருந்து வார்த்தைகள், வளைந்தும் குழைந்தும் வந்தன. நேரே, தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள்.

கட்டிலின் மீது டாக்டர் உட்கார்ந்த பிறகு, “இதோ நான் போய் விமலாவை அழைத்துக் கொண்டு வரட்டுமா! உடனே போகட்டுமா, சற்று, பொறுத்துக் கொள்ள முடியுமா” என்று குறும்பாகக் கேட்டாள். பதில் கூற இயலாது, பல்லைக் காட்டினான் சுந்தரேசன், அங்கிருந்த படியே மரகதம், விமலாவைக் கூப்பிட்டாள். விமலாவும் வந்தாள். மரகதத்தின் மினுக்கைக் கண்டாள். விஷயம் விளங்கி விட்டது. விசாரம் கொண்டவளாய்க் கீழே உட்கார்ந்தாள். வாய் திறக்கவில்லை. டாக்டர், தானாகவே சம்பாஷணை துவக்கினார். அவருடைய கேள்விகளுக்கு, தலை அசைத்தும், உதட்டைப் பிரித்தும், ஒன்றிரு பதங்கள் கூறியும் விமலா பதில் அளித்தாள். மரகதம், விமலாவின் போக்கைக் கண்டு, ஏது சிறுக்கி விஷயத்தை ஜாடையாகத் தெரிந்து கொண்டாள் போலிருக்கிறதே என்று எண்ணினாள். தெரிந்து கொள்ளட்டுமே, நமக்கென்ன என்று எண்ணிக் கொண்டு, தன் காரியத்தைக் கவனிக்கத் தொடங்கினாள்.

“டாக்டரே இன்று நீங்கள் எப்போது வருவீர்கள். எப்போது வருவீர்கள் என நான் எதிர்பார்த்தபடி இருந்தேன்” என்றாள் மரகதம்.

“என்னையா?” என்று சுந்தரேசன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆமாம்! உங்களைத்தான்! ஏன், எதிர்பார்க்கக் கூடாதோ? ஆனால் நான் நம்ம விமலாவைப் போல வேறே எண்ணத்திலே உம்மை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க வில்லை. இங்கே நாம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தால் கூட, எங்கள் செட்டியார் இரண்டு நாளைக்குச் சாப்பிட மாட்டார்” என்று மரகதம் கூறிவிட்டுச் சிரித்தாள்.

டாக்டர் : “விமலா மட்டும் என்ன? விமலாவுக்கும் வேறு எண்ணம் கிடையாது. ஏன் இன்று ஒரு மாதிரியாக இருக்கிறாய் விமலா!” என்று விமலாவைக் கேட்டான்.
மரகதம் அதற்கு “விசாரந்தான்! இருக்காதா, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கவலைதான்” என்று பதில் கூறிக் கொண்டே, விமலாவின் தவடையைப் பிடித்துக் கிள்ளினாள். விமலா அதற்கும் நகைக்கவில்லை.

“ஆமாம் விசாரந்தான்! டாக்டர் என் வலையிலே விழவில்லையே என கவலைதான்! விழுந்தால் தீர்த்துக் கட்டிவிடலாம் என்ற ஆசைதான்! ஏன், ஆசை கொண்டால் தப்பா? அவரும் சாமியார் அல்ல, நானும் பத்தினி அல்ல!” என்றாள் விமலா.

“அப்பாடா! இப்போதுõன் அந்தப் பழைய விமலாவைக் கண்டேன். ஆனால் விமலா, உனக்கு உள்ளபடி அந்த மாதிரி ஏதாவது எண்ணமுண்டா சொல்லி விடம்மா” என்று பயந்தவன் போல் பாசாங்கு செய்து கொண்டு சுந்தரேசன் கேட்டான்.

“ஏன் இருக்கக் கூடாது. நரைத்த நாரிகளுக்கு இருக்கும்போது எனக்கு ஏன் இருக்க கூடாது. பழுத்த பழம் பசப்பிக் கொண்டிருக்கும்போது, எனக்கு மட்டும் என்ன? என்றாள்.

“விமலா என்னடி அம்மா! ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறாள் என்று பார்த்தேன். நீ பேசுவதைக் க÷ட்டால், சாக்கிட்டுப் பேசுவது போல் தோன்றுகிறது” என்று கடுகடுத்துக் கேட்டாள் மரகதம்.

விமலா ஒரு கேலிச் சிரிப்பு சிரித்துவிட்டு, “உனக் கேனம்மா கோபம் வருகிறது. நீ என்ன செய்தால் எனக்கென்ன! டாக்டரை, உன் கட்டிலின்மீது உட்கார வைத்துக் கொண்டால் எனக்கென்ன? கை பிடித்து இழுத்தால்தான் எனக்கென்ன? அவர் என்னிடம் பத்து வருடம் வந்தாரா? ஐந்து வருடம் வந்தாரா! எனக்கேன் விசாரம் வரப்போகிறது” என்று படபடத்துக் கேட்டாள். சுந்தரேசனுக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் தன் பொருட்டுப் பாய்வார்கள் போல் இருந்தது. காட்சியே அவனுக்குப் புதிது. “அடக்கிப் பேசு, நாக்கை அடக்கு. ரௌடியுடன் வாழ்கிறவள்தானே. வாய் இருக்கும் ஆனால் என்னிடம் காட்டாதே” என்று மரகதம் எச்சரித்தாள். விமலா எழுந்து விட்டாள்.

“ஆமாண்டி, எனக்கு வாய் துடுக்கு! உனக்கு! நீ பத்தினி! தாலி கட்டியவனைத் தவிக்கவிட்டு வந்தவள் தானே, புத்திவேறு எப்படி இருக்கும்” என்று கூறினாள்.

“போதும் நிறுத்து. நாளைக் காலையிலே வீட்டைக் காலி செய்துவிட்டு மறுவேலைபார்” என்று மரகதம் நிபந்தனை போட்டாள்.

“ஆஹா! தடையில்லாமல்! நான் காலி செய்து விடுகிறேன், நீ டாக்டரை காலி செய்துவிடு” என்று கோபமாகக் கூறிக் கொண்டே, விமலா, சரேலென வெளியே போய் விட்டாள். விமலாவின் கண்களினின்றும், நீர் பெருகியதை டாக்டர் சுந்தரேசன் கண்டான்!

“தொந்தரவு சகிக்க முடியவில்லை. எத்தனை நேரம் இந்த வேதனைப் படுவது. அலுத்துப் படுக்கத்தான் நேர முண்டா? அலைச்சல், அலைச்சல்!”

“என்னடி ரொம்ப ‘டால்’ காட்டுகிறாய். இப்போ உன்னை என்ன தொந்தரவு செய்து விட்டேன். ஏன் முகத்தை மூணு கோணலாக்கிக் கொண்டு முணுமுணுக்கிறே என்று கேட்டேன். என்னமோ தொந்தரவு செய்யாதே துரப்படு என்று அளக்கிறாயே, என்ன கதை”

“எரிகிற நெருப்பிலே எண்ணெயை ஊற்ற வேண்டாம். உங்களுக்குக் கோடி நமஸ்காரம், சற்று வாயை மூடிக் கொண்டு படுங்கள்.”

“அடடா, என்ன விரக்தி! என்ன வந்து விட்டது உனக்கு? போன மாதம் போரிட்டுப் போரிட்டு, புது மோஸ்தர் வளையலுக்கு வழி செய்து கொண்டாய், இப்ப எதுக்கு இந்த விசார நாடகம். மரகம் என் மனதை நீ ரொம்ப வேதனை செய்து விடுகிறாய். இது நல்லதல்ல; ஆமாம் நான் மனம் விட்டு சொல்கிறேன்.”

“நான் எப்படியோ போகிறேன். நீங்கள் சுகமாக இருங்கோ. இனி செப்பாலடிச்ச காசு தரவேண்டாம்.”

“நிஜந்தானா!”

“ஆமாம். உங்கள் சம்பந்தம் கூடத்தான் வேண்டாம். போதும் உம்மாலே நான் கண்ட சுகம். நாலு பேர் போற்றின குடும்பத்திலே பிறந்து, நல்லவனுக்கு வாழ்க்கைப் பட்டேன். கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டேன். இப்போது நாய் படாத பாடுபடுகிறேன்.”

“ரொம்பப் பாடுதான்படுகிறேடி, ரொம்பப் பாடு. குத்தி, புடைச்சி, எடுக்கிறாய் அல்லவா?”

“நான் ஏன் குத்தி புடைக்கணும்? ஆண்டவன் எங்களுக்குக் கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழி வைத்திருக்கிறான்.”

“ரோஷம் வந்துவிட்டதா, சரி! மரகதம், என்னதான் உனக்கு விசாரம்? சொல்லேன்! உள்ளபடி சொல்கிறேன். நீ ஒரு மாதிரியாக இருந்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. என்ன கோபம்?”

“கோபமுமில்லை, தாபமுமில்லை.”

“நீ பேசற தினுசே காட்டுதே கோபத்தை. வெள்ளிக் கூஜா கேட்டாயே, அதற்குத்தானே விசாரம். சொல்லு.”

“ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன். ஏன்? இருக்காதா கோபம், மூணு மாசமாத்தானே சொல்லிண்டே வந்திங்க. வந்துதா கூஜா.”

“அப்பா! வந்ததா விஷயம் வெளியிலே. சரி, அடுத்த வாரத்திலே, நிச்சயம் கூஜா வாங்கிக் கொடுத்து விடுகிறேன். இதோ பார்! மரகதம்! பார்த்தாயா இப்போ சிரிப்புப் பொங்குது. அடடே! இதுக்குள்ளே சிரிப்பை அடக்கி விட்டாயே. சிங்காரி, ஒய்யாரி, என் சிந்தையை மயக்க வந்த, சிங்காரி, ஒய்யாரி.”

“அடட! பாட்டு ஆரம்பமா?”

“மரகதம் இப்போ...”

“காலை முதற்கொண்டு வயிற்று வலி. தயவுசெய்து தூங்குங்கள்.”

“சரி இதனை முதலிலே சொல்லிவிடுவதுதானே. வயிற்று வலியும் தலைவலியும் கால்வலியும் கண் வலியும் வந்தபடிதான் இருக்கிறது. டாக்டர்கள் ஊரிலே தெருவுக்குப் பத்துபேர் இருக்கிறார்கள். கர்மம், இதெல்லாம் பூர்வ கர்மம். என்ன மரகதம், சோடா சாப்பிட்டாயோ?”

“சோடா சாப்பிட்டேன். சூரணம் சாப்பிட்டேன் போனாத் தானே என்னைப் பிடிச்ச பீடை.”

“கிடக்குது தூங்கு. ஆமாம்! அப்படியே ஒரு புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்கிவிடு. நாளைக்கு யாராவது லேடி டாக்டரிடம் காட்டி, நல்ல மருந்து சாப்பிடு. இந்த வயிற்று வலியை வளரவிடக் கூடாது. ரொம்பக் கஷ்டம்.”

“ரொம்ப கஷ்டமா? ரொம்ப நஷ்டமா?”

“சீச்சீ, நான் என்னடி காவாலிப் பயலா? எனக்குத் தெரியாதா சுக துக்கம்”

“சரி பேச்சை நிறுத்திட்டு, இப்படித் தவடையைக் கிள்ளுவது தர்மமா. இல்லை நான் கேட்கிறேன் இதை என்ன தவடை என்று எண்ணிக் கொண்டீர்களா இல்லை ரப்பர் பந்து என்று எண்ணமா. காலம் கலிகாலமல்லவா!”

“கிண்டல் காரியாச்சே நீ. கண்ணாச்சே!”

“ஆமாம், கண்ணே, மூக்கே, எல்லாம். இப்ப கொஞ்சிட வேண்டியதுதான், கூஜா கேட்டா யோசனை வந்துவிடும்.”

“அடுத்தவாரம் நிச்சயம் வாங்கித் தருகிறேன். உடம்பை அலட்டிக் கொள்ள வேண்டாம் தூங்கு.”

இந்தப் படுக்கையறைப் பசப்பு, மரகதத்தின் வீட்டிலே, நடந்தது. மரகதத்தின் விசாரத்துக்குக் காரணம், வெள்ளிக் கூஜா வாங்கிக் கொடாததுதான் என அவள் மையலில் சொக்கிய செட்டி எண்ணிக் கொண்டான். கூஜா வாங்கிக் கொடுப்பதாகச் சத்தியமும் செய்தான்.

மரகதமும் தன் விசாரத்துக்குக் காரணம் அதுதான் என்று பசப்பினாள், வெள்ளிக் கூஜாவுக்கு வழி தேடிக் கொண்டாள். ஆனால் விசாரத்துக்குக் காரணம், விமலாவுடன் மாலை நடந்த சண்டைதான். விமலாவை வீட்டை விட்டுக் காலி செய்து விடும்படி கூறி விட்டாள். டாக்டரும் கோபமாக வெளியே போய்விட்டார். போட்ட பிளான் நிறைவேறாததே வருத்தம். விமலா, டாக்டர் எதிரிலே தன்னைப் பற்றி இழிவாகப் பேசியதால் கோபம். அந்த விசாரமே வயிற்று வலி ரூபமாகவும் காட்சி அளித்தது. அதற்குக் காணிக்கைதான் வெள்ளிக் கூஜா!

“என் எண்ணத்திலே மண் விழுந்து விட்டது. இவன் இப்படி ஆவான் என்று நான் நினைக்கவேயில்லை. அவன் என்ன படிக்காதவனா? விஷயம் தெரியாதவனா? நமது குடும்பப் பெருமையும், குலப் பெருமையும், அவனுக்குத் தெரியாதா? பெயரைக் கெடுத்துக் கொண்டால், பைசாவுக்கு யாரும் தன்னை நம்ப மாட்டார்கள் என்பதுதான் தெரியாதா? எல்லாம் தெரிந்துதான் இப்படி ஆனான். எல்லாம் சொல்லுமாம் பல்லி, காடிப்பானையில் விழுமாம் துள்ளி என்பதுபோல் ஆச்சு. என் பேச்சைத் தட்டாதவன், இப்போது அந்தச் சிறுக்கிப் போட்ட சொக்குப் பொடியிலே மயங்கி விட்டானே! அவள் யாரோ வந்து சேர்ந்தாளே என் குடியைக் கெடுக்க, அவளை ஏன் திட்ட வேண்டும். தாசிதானே அவள். என் பிழைப்புக்காக அப்படித்தான் நடப்பாள். இவனுக்கு, எங்கே போயிற்று புத்தி என்று கேட்கிறேன். டாக்டராக இருந்தால் ஏதெதுவோ, கெட்டதும் அலைஞ்சதுமாக வரத்தான் வரும். எதுவோ, நாமுண்டு நம்வேலையுண்டு என்று இருந்தால்தானே பிழைக்க முடியும். வருகிறவள் முந்தாணியைப் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என்ன நடக்கும்? கண்டவளை கூடி எவ்வளவு பேர் எத்தனை ரோகத்தை அனுபவிக்கிறார்கள். இவனே அப்படிப்பட்ட உங்களுக்கு மருந்து கொடுக்கிறான் இவனே கடைசியில் இப்படி அலைகிறான். யார் சொல்ல முடியும். அவன் என்ன சின்னக் குழந்தையா அடித்து மிரட்ட, ஆண்டவன் தான் புத்தி புகட்டணும்” என்று டாக்டர் சுந்தரேசனின் தாயார் கம்பவுண்டர் கண்ணுசாமியிடம் கூறி, விசனப்பட்டார்கள். கண்ணுசாமி, டாக்டருக்கும் விமலாவுக்கும் சினேகிதம் ஏற்பட்ட சேதியைக் கூறிவிட்டு, தானும் வேலையை விட்டு விலகி விட்டதாகக் கூறினார். தாயாருக்கு வியாகூலம். சுந்தரேசனுக்கு நல்ல இடமாகப் பார்த்துப் பெண் பேசி முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஜாதகங்களை வரவழைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இந்த சேதி, இடிபோல் வீழ்ந்தது. மகனைத் தூற்றவோ மனம் வரவில்லை. ஏனெனில், அவன் சுபாவத்திலேயே கூத்திக்கள்ளனல்லன். அவன் மீது இவ்விதமான கெட்டப் பெயர் வந்ததே கிடையாது. கண்ணுசாமி கூறுவதற்கு முன்பு சுந்தரேசன் இப்படி நடப்பான் என்று எண்ண துளியும் இடம் ஏற்பட்டதேயில்லை. இதனாலேயே சுந்தரேசனின் அன்னைக்கு விசாரம்; அதிகமாகி விட்டது. கண்ணுசாமியிடம், தன் மனக்குறையைக் கொட்டி சற்று ஆறுதல் அடைந்தாள். கண்ணுசாமியும், இடையிடையே தனது கருத்தையும் உலகானுபவத்தையும் எடுத்துக் கூறிக் கூறி, சம்பாஷணையை வளர்த்துக் கொண்டே போனான். ஒரு விஷயம் மட்டும் கண்ணுசாமி சொல்லவில்லை. எப்படிச் சொல்ல முடியும்? மரகதத்தின் சேதியைத்தான் அவன் மறைத்தான். அது இயற்கைதானே. தன் கூடப் பிறந்தவளின் விபசாரத்தை எப்படிச் சொல்ல முடியும்? சுந்தரேசனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நேரமெல்லாம், கண்ணுசாமிக்கு மரகதத்தின் விஷயமாகவே மனவேதனை மேலும் மேலும் வளர்ந்தது.

வெறிக்கக் குடித்து விட்டு உறக்கத்திலே, குறட்டை விட்டுக் கொண்டும், இடையிலே உளறிக் கொண்டும், ரௌடி ரங்கன் படுத்திருக்க, அந்தக் கோர சத்தம் காதைக் குடையவும் மனதிலே சுந்தரேசனைப் பற்றி நடந்த சம்பவத்திலே ஏற்பட்ட வேதனை மனதைத் துளைக்கவும், கண்ணிலிருந்து பெருகிய நீர் தவடையில் புரண்டு உதட்டை நனைக்கவும், தலையணையில் தர்பார் நடத்திக் கொண்டு வந்த ‘மூட்டைப் பூச்சிகள்’ கழுத்தைப் பிடுங்கவும், படுத்துக் கொண்டிருந்த விமலா ‘தொலி ஜென்ம, முன்சேயு அசடு’ என்ற கீர்த்தனையைப் பற்றி எண்ணி மனதுக்குள் பாடிக் கொண்டிருந்த கிரிதிக்கு, காலைக் கடித்துத் தொல்லை கொடுக்க கொசுவைத் தட்டுவதன் மூலம் ‘தாள்’ மிட்டுக் கொண்டிருந்தாள். வீதியில் உலவிய நாய் ஒன்று கச்சேரியில் அமர்ந்து கானத்தின் கருத்து அறியாது கண்ட கண்ட நேரத்தில் சபாஷ்! சபாஷ்! என்று கூறும் போலி ரசிகன் போல் வள் - வள் - என்று குரைத்துக் கொண்டிருந்தது.