அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
14
                     

அன்றைய கூட்டத்திலே நடந்த அமளியால், இளைய பூபதிக்கு எலக்ஷன் விஷயமாகவும், கட்சிப் பிரதி கட்சியாகப் பிரிந்து இருப்பது பற்றியும் வெறுப்பே உண்டாயிற்று. கதர்க்கடை ஐயர், மிகக் கஷ்டப்பட்டு, அந்த வெறுப்பை மாற்றினார். அவருடைய சாமர்த்தியத்தினால், அந்த வெறுப்பே, ரோஷ உணர்ச்சியாக மாறிற்று. இந்தச் சில்லறைக் தகராறுகளைக் கவனிக்கவே கூடாது. ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துக் குதிரை வாங்குகிறோம். வண்டியில் பூட்டும்போது, குதிரை கொஞ்சம் முரட்டுத்தனம் செய்தால், அதனால் வெறுப்படைந்து குதிரையே வேண்டாம் என்று கூறி விடுவதா! அரசியலில் இதுபோன்ற சங்கடம் சாதாரணம் - சமாளித்துத்தான் ஆகவேண்டும். நமக்காவது, எவ்வளவு தொல்லைகளும் சஞ்சலங்களும் ஏற்பட்டாலும் கடைசியிலே, ஜெயம் நிச்சயம் - ஏனென்றால், ஜமீன்தாரர் எவ்வளு பாடுபட்டாலும், நம்மைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்து வைத்தாலும் நாம் சார்ந்திருக்கிற காங்கிரஸ் கட்சி மீது ஒரு குறையும் கூறத் துணிய மாட்டார்!” என்றார் கதர்க்கடை ஐயர். “காங்கிரஸ் கட்சி மீது குறை கூறவே முடியாதோ! போமய்யா போம்! நாம் அந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, அந்தக் கட்சி அப்பழுக்கற்றது என்று கூறி விடுவதா!” என்ற இளையபூபதி, கேட்டார். “நான் சொன்ன வார்த்தைகளைத் தாங்கள் சரியாகக் கவனிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலே குறையே கிடையாது என்று நான் கூறவில்லை. குறைகூறத் துணியமாட்டார் என்றுதான் சொன்னேன்.! சூட்சமமாகக் கவனிக்க வேண்டும் என் பேச்சை! குறைகள் உண்டு. ஆனால் கூறத் துணிவு கிடையாது! ஏனெனில் அந்தக் கட்சியின் கீர்த்தியை அவ்வளவு தூரம் பரப்பிவிட்டார்கள். குறை கூறினால் ஜனங்கள் நம்பமாட்டார்கள் என்ற அச்சம் எவருக்கும் ஏற்படும். ஆகவேதான் காங்கிரசை குறை கூற அவருக்குத் துணிவு கிடையாது என்று சொன்னேன். தங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் நன்றாகத் தெரியும். காங்கிரசிலே, பல குறைகள் உள்ளன. நேற்றுப் பேசினானே ஒரு சூனாமானா அவனைப் போன்றவாளுக்குக் காங்கிரஸ் இடம் தரலாமோ! தந்துதானே இருக்கிறது! அப்படிப் பட்டவர்கள், மனதிலே எண்ணிக் கொண்டிருக்கிற ராஜ்யம் இருக்கே அது நம் போன்றவாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவே பிடிக்காது. ஜாதிகளே இருக்கப்படாது என்பது அவர்கள் திட்டம். இது நடைபெறக்கூடிய காரியமா, தேவையா? சாரதா சட்டம் என்று அனாவசியமாக, அக்ரமமாக ஒரு சட்டம் கொண்டு வந்து அதைப் பிரமாதப்படுத்துகிறது காங்கிரஸ் கட்சி. நமது தேசத்தின் கௌரவம் என்ன, எப்படிப்பட்ட சத்புருஷர்கள், ஆழ்வாராகி நாயன்மார்கள், அவதரித்த தேசம், அப்படிப்பட்டவர்கள் காலத்திலிருந்து நடை பெறுகிற, கலியாண காரியமாக, இவர்கள் ஒரு கட்டுத்திட்டம் செய்ய லாமோ - செய்கிறார்கள்! இப்படி ஆயிரம் இருக்கு, அவர்கள் செய்கிற தவறுகள். இந்தத் தவறுகள் எல்லாம் எனக்கா தெரியாது? இந்தத் தவறுகள் எல்லாம் ஜனங்களின் காதிலே இப்போது ஏறாது. அவ்வளவு அதிகமாக, அதன் கீர்த்தி பரவி இருக்கிறது” - என்று ஐயர் விளக்கமாகச் சொன்னார். இளைய பூபதிக்குத் திருப்தி ஏற்பட்டது. “அப்படிச் சொல்லுங்கள். “பதினாலாம் தேதி கூட்டத்தில், ஒரு பயல் பேசினானே, கவனித்தீரா?” என்று, வேறொர் விஷயத்தைக் கிளறினார் இளையபூபதி. “பதினாலாம் தேதியா! ஓ! ஆமாம் - ஆமாம் - ஜமீன்தாரர் எனும் தசகண்ட ராவணனுடைய குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டுக் கொண்டால்தான் பாரதமாதாவுக்குப் பரிபூரணத் திருப்தி ஏற்படும் என்று பேசினானே - அதைத்
தானே...” என்று ஆர்வத்துடன் பேசிய ஐயரை, இளையபூபதி தடுத்து, “அது அல்லய்யா! சுயராஜ்யம் என்றால் எப்படி இருக்கும் என்று வர்ணித்தானே ஒரு பய!” என்று நினைவைக் கிளறினார். ஐயர் புரிந்து கொள்ள வில்லை. “பாட்டுக்கூடப் பாடினானே, ஒருவனுக்குச் சோறு இல்லைன்னா உலகத்தையே அழிச்சி விடுவோம்னு” என்றார் இளையபூபதி. அப்போதும் புரியவில்லை. “பார்ப்பானை ஐயன்னுகூடச் சொல்ல மாட்டோம் என்று பாடினானே” என்று இளையபூபதி சொன்னார் - ஐயருக்குப் புரிந்தது - “ஓ! அவனைச் சொல்கிறீர்களா? ஆமாம் - பய மண்டைக் கர்வி!” என்றார். “அவன், சுயராஜ்யத்திலே பணக்காரர்களின் கொட்டமே அடக்கப்பட்டு
விடும். எல்லோரும் ராஜா ஆகிவிடுவார்கள் என்று ஏதேதோ உளறினான்! அப்படிப் பட்ட ராஜ்யம் ஏற்படுவது நல்லதா?” என்று கேட்டார். “ஏற்படவா போகிறது! சில பித்துக்குளிகளின் பேச்சு அது. ஆனால் ஒன்று; காங்கிரஸ் மகாசபை இப்படிப்பட்டவர்களுக்கு இடம் தரக்கூடாது. தவறுதான், குறைதான்” என்றார் ஐயர். எனக்கு அவர்கள் பேச்சு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்தக் கட்சியினால் நாட்டுக்குச் சிலர் சில நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டுமென்று எண்ணினால் கோபிக் கிறார், வெறுப்படைகிறார், கேவலமாகப் பேசுகிறார். பணக்காரரின் ஆட்சியாக இராது சுயராஜ்யம் என்றால் இளையபூபதி பதைக்கிறார். பழைய ஜாதிமத பேதங்கள் ஒழிந்து எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் வளர்ந்து புதிய முறை ஏற்படும் என்று சொன்னால் கதர்க்கடை ஐயர் கோபிக்கிறார் - ஆனால் எங்கள் ஊரிலே காங்கிரசுக்கு முக்கிய புருஷர்களே அந்த இருவர்தான்! காங்கிரசிடம் அன்பு கொண்ட மக்கள் எங்கே இந்தச் சூட்ச மத்தைத் தெரிந்து கொள்கிறார்களோ என்று கூட நான் பயப்பட்டேன். ஆனால் ஜனங்களால் இளையபூபதியை அறிந்து கொள்ள முடியவில்லை. எலக்ஷனில் அவர் பிரமாதமான வெற்றி பெற்றார்! ஊரெங்கும் திருவிழா போலக் கொண்டாடினார்கள். தெருக்களிலே தோரணங்கள்! கோயில்களிலே அபிஷேகம் ஒரு பெரிய பொதுக் கூட்டம். அதிலே பல பேர் இளையபூபதியைப் பாராட்டிப் பேசினார்கள். வீட்டிலே சிறந்த முறையில் விருந்து! கதர்க்கடை ஐயருக்குச் சன்மானம். ரங்கன் எலக்ஷனில் ஜெயித்தால் தனக்குத் தங்கத் தோடா செய்து போட வேண்டும் என்று சொல்லியிருந்தான். தங்கத்தோடா செய்தார்கள். ஆனால் அதைப் போட்டுக் கொள்ள முடியவில்லை. எலக்ஷனன்று நடந்த அடிதடியில் அவன் கையில் பலத்த காயம், கட்டு கட்டிக் கொண்டிருந்தான். தோடா பிறகு, இப்போது இரண்டு நாட்களுக்குத் தென்னந்தோப்பிலேயே வாசம் செய்ய வேண்டும் என்று ரங்கன் சொன்னான். இளையபூபதி அதற்கான ஏற்பாடு செய்தார். தோற்ற ஜமீன்தாரர் ஊரில் இருந்தால் கேவலம் என்று எண்ணிப் பழனிக்குப் போய்விட்டார்! எங்கள் குடும்பத்தைக் கெடுத்தார் பணத்தின் பலத்தால்! அவருடைய பணபலத்தை எதிர்த்து அடிக்கக் கூடிய பணபலம் என்னிடம் இருந்தது. அவர் பழனி சென்றார். ரங்கா! அவர் பழனிக்குப் போய் பஞ்சாமிர்தம் சாப்பிடுவார், அதுவும் அவருக்குக் கசப்பாகத்தான் இருக்கும். நமக்கோ, பழனிக்குப் போகாமலேயே பஞ்சாமிர்தம் கிடைத்து விட்டது! என்று கூறி மகிழ்ந்தேன். எங்கள் மகிழ்ச்சி வேகத்தில் நான் அக்காவைப் பற்றியோ அவளைத் தேடிக் கொண்டு வெளியேறிய அம்மாவைப் பற்றியோ எண்ணிப் பார்க்கவுமில்லை. ஒரு சந்தோஷ ஆரவாரம். பல தலைவர்களிடமிருந்து வாழ்த்துத் தந்திகள் வந்த வண்ணம் இருந்தன! பத்திரிகைகளிலே இளையபூபதியின் போட்டோ வெளிவந்தது. இளையபூபதியின் இணையில்லா வெற்றி என்று ஒரு காலணாப் பாட்டுப் புத்தகம் வெளிவந்தது.

சில தினங்களுக்குப் பிறகு, ஐயர், கெம்பீரமான குரலிலே, “இந்த எலக்ஷனில் ஜெயித்தது ஒரு பிரமாதமானதல்ல. உங்களுடைய கௌரவத்துக்கும் செல்வாக்குக்கும் குணத்துக்கும், இது ஒரு அல்பகாரியம். நீங்கள், மந்திரியாக வேண்டும் - அது உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும்” என்று கூறினார். “உனக்கு இருக்கும் ஆசையிலே நீ என்னை, மந்திரியாகமட்டுமா, ராஜாவாகக் கூடச் செய்துவிடுவாய்! ஆனால் உன்னிடமா இருக்கிறது அதற்கான மந்திரசக்தி!” என்று இளையபூபதி கேலி செய்தார். ஐயர் சிரிக்கவில்லை. “உம்முடைய ஜாதகப் பலனை பாரதப் பிரசங்கி பார்த்தசாரதி ஐயங்காரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் வாக்கு எப்போதும் பழுதாவதில்லை. அவர்தான் எனக்குச் சொன்னார். உமக்கு நிச்சயமாக ஒரு மந்திரி வேலை கிடைக்கும் என்று; அதனாலேதான் நான் அதற்கான காரியத்தைத் தொடங்கிவிட்டேன்” என்று கூறினார். “காரியமா? என்ன காரியம்?” என்று கேட்டார், இளையபூபதி. ஐயர், “இந்த எலக்ஷனிலே உமக்குக் கிடைத்த ஜெயத்தாலே ஜில்லா முழுவதும் உமது பெயர் பிரபல்யமாகிவிட்டது. மாகாணக் காங்கிரசிலே உமக்குச் செல்வாக்கு இனி ஏற்பட வேண்டும்; அப்போதுதான் மந்திரி வேலை நிச்சயம்; அதற்காக நாம் வடக்கே போய் வரவேண்டும்” என்றார். இளையபூபதி சிரித்துக்கொண்டே “என்ன ஐயர்! எலக்ஷனிலே பட்ட சிரமத்தாலே மூளை குழம்பி விட்டதோ! மாகாணத்திலே செல்வாக்குப் பெற மாகாணத்தை விட்டுவிட்டு வடக்கே போக வேண்டும் என்று கூறுகிறீரே, இது என்னய்யா விந்தை” என்று கேட்டார். விந்தையுமல்ல வேடிக்கையுமல்ல; உமக்குத் தெரியாது சூட்சமம். காங்கிரசின் ஜீவநாடி சூத்திரக் கயிறு எங்கே இருக்கிறது தெரியுமோ?” என்று கேட்டார். அன்று ஒருநாள் ஒரு பிரசங்கி காங்கிரசின் ஜீவநாடி கைராட்டையிலே இருக்கிறது என்று சொன்னானே என்று கூறினார், இளையபூபதி. “அது ஜனங்களுக்காகச் செய்யப்பட்ட பிரசங்கமல்லவா? அதைத் தள்ளுங்கள். காங்கிரசின் சூத்திரக் கயிறு வடக்கேதான் இருக்கிறது – பம்பாய் – வார்தா – சபர்மதி – கல்கத்தா – டில்லி – இப்படிப்பட்ட இடங்களிலேயே நாம் அங்குச் சென்று செல்வாக்கைத் தேடிக் கொண்டால் போதும். இங்குள்ள மாகாண காங்கிரஸ் நமது மடிமீது தவழும் குழந்தையாகிவிடும்” என்றார்.