அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
9
                     

எங்கள் குடும்பத்துக்குப் புது மெருகு கிடைத்தது. முலாம் பூசியவர் ஜமீன்தார். மேலும் மேலும் முலாம் பூசிக் கொண்டிருந்தால்தானே, பளபளப்பு இருக்கும்; பலரும் கண்டு போற்றுவர். முலாம் வெளுத்து விட்டால் என்னாகும். பித்தனையும் செம்பும், பேரீச்சம் பழத்துக்குத் தானே விற்கிறார்கள். அந்தக் கதியேதான் எங்களுக்கும் வரும். அதிகலும் எங்கள் நிலை, வெறும் ஏழைகள் நிலை மட்டுமா? இழித்துப் பேசும் உலகின் இம்சைக்கு இனி ஆளாகவேண்டுமே என்று எண்ணினேன்.

ஜமீன்தார் இனி எங்களை மேற்கொண்டு வாட்டாது விடுவதானாலும், உலகம் சும்மா இராதே.

“சரியான ஆளப்பா ஜமீன்தார், இந்தக் கமலா, அவரைக் குல்லா’ போட ஏதேதோ செய்து பார்த்தாள் முடியவில்லை” என்று கேலி செய்பவர்கள் எத்தனை பேரோ.

“பம்பரம் ஆடிக் கீழே விழுந்துவிட்டது” என்று பழிப்பவர் யாராரோ.

“கமலா - ஆரஞ்சு விலை இப்போது மலிவுதாண்டா! ஜமீன்தார் இல்லையே இப்போது கிராக்கி ஏது?” என்று எவ்வளவு பேர் ஏளனம் செய்வார்களோ என்றெல்லாம் எண்ண வேண்டி இருந்தது. உலகிலே இது போல நடக்கிறதல்லவா?

டாக்டரே! க்ஷயரோகக்காரரின் உடல் தானாகக் கரைவது போல் எங்கள் குடும்பச் செல்வமும் செல்வாக்கும் கரையலாயிற்று.

சம்பவம் நடந்த மறுதினம் எங்கள் வீட்டு மாட்டுத் தொழு வத்தில் கன்றுகள் மட்டுமே இருந்தன. இரண்டு பசுமாடுகளும் இல்லை. கன்றின் குரல் கேட்டுப் பசு, ஜெமீன்தார் வீட்டுத் தொழுவத்திலிருந்து எப்படி வரும்? மாடு மேய்ப்பவனுக்கு ஜாடையாக விஷயம் கூறப்பட்டதும், அவன் மாடுகளைப் பண்ணைக்கு ஓட்டிக் கொண்டு போய்விட்டான். கன்றுகளைப் பிறகு நாங்களே அவிழ்த்து ஆள்வசம் அனுப்பி விட்டோம்.

பக்தரிடம் கொடுத்த பதக்கம் பூச்சுவேலை முடிந்ததாகச் சேதி வந்தது. ஆனால் பக்தர் பதக்கத்தை ‘ஐயா’விடம் அனுப்பி விட்டதாகக் கூறிவிட்டார்.

மளிகைக் கடைக்குச் சென்ற ஆளிடம், 600 சொச்ச ரூபாய் பழைய பாக்கி இருக்கிறது, அது பைசலான பிறகுதான் சாமான் தரமுடியும் என்று செட்டியார் சேதி சொல்லி அனுப்பினார்.

ஜவுளிக் கடையிலிருந்து பழைய பாக்கிக்கு நோட்டீஸ் வந்துவிட்டது.

கிராமத்துக்குச் சென்றிருந்த எங்கள் தாயார் அறுத்துக் குவித்த நெல்லை அளந்து மூட்டைகள் கட்டி வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். நெல் மூட்டைகளை ஜமீன்தாரரின் வீட்டுக்கு வண்டிக்காரர் கொண்டு போய்ச் சேர்த்தார்.

எங்கள் வீட்டின்மீது வாரிசு இருப்பதாக வக்கீல் ஒரு நோட்டீஸ் பிறப்பித்து விட்டார்.

ஒரு தினமும் முடிவதற்குள் ஜமீன்தாரின் கோபம் எங்களைச் சூழ்ந்து கொண்டு விட்டது. தேள் கொட்டியது கால்விரலில் என்றாலும், உடல் முழுவதும் வலி எடுப்பது போல,ஜமீன்தார் கமலாமீது கோபித்துக் கொண்டது எங்கள் குடும்பத்தையே வாட்ட ஆரம்பித்தது.

அம்மா, பூரா சேதியையும் கேள்விப்பட்டு, வாடினார்கள். வரலட்சுமியை வேண்டினார்கள். நவக்கிரக பூஜை செய்தார்கள். கோயில்களுக்கு விளக்கேற்றினார்கள். அக்காவின் ஜாதகத்தைப் பார்த்தார்கள். ஏழு மாதம் போதாது என்றாராம் ஜோதிடர். அதற்கு 70 ரூபாய்க்கு ஜாபிதா அனுப்பிவிட்டார். ஏழு மாதங் களுக்குப் பிறகு, கமலா ஒரு குழந்தைக்குத் தாயாவாள். அக்கா கர்ப்பம். ஆரம்பமே கலகத்தில் இருந்தது. அம்மா வேண்டிய தெய்வங்களுக்கு அக்காவின் கவலையைப் போக்க வேண்டிய வேலையா முக்கியம்!

அம்மா அனுப்பிய தூது பலிக்கவில்லை. ஜமீன்தாரரின் கோபம் தீரவுமில்லை, குறையவுமில்லை, வளர்ந்தது. அதிலும் யாரோ ஒரு வக்கீல் ஐயர் அக்கா கர்ப்பமாக இருப்பதையும், குழந்தை பிறந்தால் கேஸ் போடுவார்கள் என்று கூறிவிட்டாராம். ஜமீன்தாரருக்கு இது அதிக கோபத்தை மூட்டிவிட்டது. கேசாடா போடப் போகிறார்கள்? கோர்ட் வாசலிலேயே கொலை நடக்கும் என்று கூறினாராம்.

இவ்வளவு அவதிகளைச் சகித்துக் கொண்டு இருந்தோம். இரவு படுக்கும்போது, விடிந்தால், உயிருடன் எழுந்திருப்போமா என்ற சந்தேகத்துடனேயே நாங்கள் படுப்பது வழக்கமாகி விட்டது.

இரவில் திடீரென்று கற்கள் விழும். வீட்டு வாயிலிலே, காலிகள் கூடிக் கொண்டு கத்துவார்கள். “ஏ! கமலா, கதவைத் திறடி, நேற்றுத்தானே இருபது ரூபாய் கொடுத்தேன்” என்று வெறியன் எவனாவது கேட்பான்.

ஜமீன்தாரர் படுத்தியபாடு இவ்வளவு அவ்வளவல்ல. ஒவ்வொரு திருவிளையாடலும் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. எங்கள் வேதனையே அவருக்கு விருந்து. எங்கள் அழுகுரலே அவருக்குச் சங்கீதம் நாங்கள் பயந்து பதறியதே அவருக்குப் பரதநாட்டியம். சிறுத்தை, மானின் கண்கள் எவ்வளவு மனோஹரமாக இருக்கின்றன என்று எண்ணி, விட்டு விடுகிறதா? பஞ்சவர்ணக்கிளியுடன் பூனை கொஞ்சுகிறதா? அதுபோல, எங்கள் குடும்பம் கெடுவது பற்றி ஜமீன்தாரருக்கு கவலை ஏது? அவர்தான் எங்களுக்கு வைரியாகிவிட்டாரே. உயிர்வாழ உபயோகமாகும் தண்ணீர் உயிரையே குடித்துவிடுகிறது குளத்தில் விழுந்து இறக்கையில். வாழ அவசியமாக இருக்கிற நெருப்பே நமது உடலைப் பிறகு சாம்பலாக்குகிறது. அதுபோல எங்கள் குடும்பத்தை வளர்த்து, மெருகிட்டு வந்த ஜமீன்தாரரே, அதனைக் குலைக்க, கெடுக்க, அழிக்க முனைந்து விட்டார். யார் அவரைத் தடுக்க முடியும்?

நளச்சக்கரவர்த்தி பட்ட கஷ்டத்தை விடவா? அரிச்சந்திரனுக்கு வந்த ஆபத்தைவிடவா? என்று புராணக் கதைகள் கூறி, எங்களுக்குச் சிலர் ஆறுதல் கூற வந்தார்கள். ஆறுதலோ மாறுதலோ கிடைக்கவில்லை. வெந்த புண்ணிலே வேல் நுழை வதுபோல் வேதனையாகவே இருந்தது.

என்னென்ன புராணங்கள் கூறினார்கள்? எதற்கு எடுத்தாலும் ஒரு கட்டுக்கதை! எதற்கும் ஓர் ‘விதிவசம்’ என்ற பேச்சு. ஆண்டவன்மீது பாரத்தைப் போட்டு விடுவோம், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற தத்துவம். இவைகளை எங்கள் அம்மா நம்பினார்கள். அக்காவுக்கு நாளாக நாளாக நம்பிக்கை தேய்ந்தது. எனக்கோ ஆரம்பத்திலேயே நம்பிக்கை கிடையாது.

ஆண்டவனுக்குத் தெரியுமோ தெரியாதோ அக்காவின் துயரம்; நான் கண்ணால் பார்க்கிறேன். காரணமின்றி அவள் இக்கதிக்கு ஆளானாள். அவள் சார்பாகப் பேச உலகமே மறுத்து விட்டது. ஆண்டவன் என்ன செய்கிறார்? ஏன் விஷயத்தை ஜமீன்தாருக்கு விளக்கவில்லை என்று அவர் என் எதிரில் வந்தால் கேட்பேன். ஆனால் அவர்தான் எதிரில் வரமாட்டாரே. வந்தால் அல்லவா தெரியும்? எத்தனை எத்தனை கேள்விகளுக்கு அவர் பதில் கூற வேண்டும் தெரியுமோ? திக்கு முக்காடி திணறிப் போய் விடுவார்.

உலகிலே இவ்வளவு சூது சூழ்ச்சி, வஞ்சனை, வதைத்தல் நடக்கிறதே, பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். ஏன்?

ஊரிலே இரண்டு மூன்று களவு நடந்து கண்டுபிடிக்கா விட்டால், போலீசாரைத் திட்டுகிறார்களே, எவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன உலகிலே. அணுவை அசைப்பதை யும் தமது அருளின் சக்தியினால்தான் என்று அனைவரும் கூறும் ஆடம்பரப் பெருமையை அணிந்து கொண்டுள்ள ஆண்டவன், ஏன் இக்கொடுமைகள் நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜமீன்தாரரின் மனதை ஆண்டவன்தான் இளக வைக்கவேண்டும் என்று அம்மா சதா சொல்லுகிறார்கள். அதற்காக, அகப்பட்டதைச் சுருட்டும் பேர்வழிகளுக்கு, அரையும் காலுமாக பணத்தையும் தருகிறார்கள். அக்காவின் அழகோ, இளமையோ அவளுடைய சல்லாபமோ ஜமீன்தாரரின் மனதை இளக வைக்க முடியவில்லையே. வேறு எது ஜமீன்தாரின் மனதை இளக வைக்கும்?

இவ்வளவு தொல்லைகளுக்கும் காரணமான முத்து ஒன்று மறியாத உத்தமனாக, ஊரில் உலவுகிறான். கேட்கக் கூடாதா ஆண்டவன். நான் இப்படி ஏதாவது கூறினால், எங்கள் அம்மாவுக்குக் கோபம் மூண்டுவிடுகிறது. “வேண்டாமடி விமலா, வேளைக்கேற்ற மூளையாக இருக்கிறதே” என்று வேதனையுடன் கூறுகிறார்கள். ஏற்கெனவே நொந்து கிடக்கும் அம்மாவின் மனதை மேலும் நோகவைக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டு, நான் என் மனதில் தோன்றியவைகளைக் கூறாமல் அடக்கிக் கொண்டேன்.

ஒரு தினம், அம்மாவே கூறினார்கள். எங்கள் ஊரிலே இஷ்டசித்தி விநாயகர் கோயில் பிரபலமானது. பலர், தங்கள் தங்களுக்குத் தேவையான வரம்பெற, அங்கு விளக்கேற்றுவார்கள். அர்ச்சனைகள் நடக்கும். பூஜை விசேஷம். இஷ்டசித்தி விநாயகர் யாராருக்குத் தந்த வரங்கள் என்னென்ன என்பது யாருக்குத் தெரியும்? இஷ்டசித்தி விநாயகர் கோயில் குருக்களுக்கு மட்டும் நல்ல வரும்படி! அது அனைவருக்கும் தெரியும். இஷ்டசித்தி விநாயகரின் அருள் மற்றவர்களுக்குக் தெரியும். இஷ்டசித்தி விநாயகரின் அருள் மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும்மென வக்கீலாக இருந்து வாதாடிய அந்த வயோதிகர் எனக்குத் தூது விடுத்தார் - 500 ரூபாய் தருவதாகச் சொன்னார். அவர் பெற்ற வரம் அது! அதே கோயிலுக்கு அம்மா, எங்கள் குடும்பக் கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக விளக்கேற்றி வந்தார்கள். ஒவ்வொரு நாள் விளக்கேற்றும் போதும் “இஷ்டசித்தி விநாயகரே எங்கள் ஜமீன்தாரின் மனது இளகி, மறுபடியும் அவர் எனக்கு மருமகப் பிள்ளையாக வர வேண்டும். இந்த விஷயம் கைகூடினால் உமக்கு இருநூறு இளநீர் அபிஷேகம் செய்கிறேன்” என்று அம்மா வேண்டிக் கொள்வார்களாம். மற்றவர்களும் நடத்துவதைவிட அம்மா செய்யச் சொல்லும் அர்ச்சனையை, குருக்கள், சற்று அதிக அக்கறையுடன் செய்தாராம். ஆறு ஏழு இராகங்கள் கூட ஆலாபனம் செய்வாரா அர்ச்சனையின்போது. கடைசியில் விபூதிப் பிரசாதம் கொடுக்கும்போது தனியாகப் பரிமளம் கலந்த விபூதிப் பொட்டலம் எனக்குக் கொடுத்தனுப்புவார். நான் குட்டுக்கூரா பவுடர் பூசுபவள். எனவே பொட்டலங்கள் அம்மா விடமேதான் இருக்கும்! எந்த ஜமீன்தார், மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து சேர வரம் தரவேண்டுமென அம்மா, இஷ்டசித்தி விநாயகரை வேண்டிக் கொண்டு வந்தார்களோ, அதே ஜமீன்தாரர், தாசி வீட்டுக்குப் போகும் கெட்ட வழக்கத்தை விட்டு நல்வழிப்பட்டதற்காக, ஜமீன்தாரரின் மனைவி, வேலைக்காரியை, பிரதி தினமும் அனுப்பி, விநாயகர் கோயிலுக்கு விளக்கேற்றி வந்தார்கள். அம்மா அரையணாவுக்குத்தான் எண்ணெய் வாங்கிக் கொண்டு போவார்கள். ஜமீன்தாரிணி ஒரு அணா எண்ணெயை விளக்கேற்ற அனுப்புவது வழக்கமாம். வேலைக்காரி கோயிலுக்குக் கால்பாகமும் தன் குடும்பத்துக்கு முக்கால் பாகமுமாகப் பங்கிட்டு விநியோகித்து வந்தாள். இதே கோயிலுக்கு மண்டபத்தெரு மீனலோசனியும் விளக்கேற்றிக் கொண்டு வந்தாள். அவள் வேண்டிய வரம், ஜெமீன்தாரர், தன் வீடு வரவேண்டும் என்பதுதான். பூஜை நேரத்திலும் மற்ற நேரத்திலும் விநாயகர் கோயில் குருக்களுக்கோ, வயது முதிர்ந்து விடுகிறதே, விமலாவின் நேசம் இன்னமும் கிட்ட வில்லையே, இஷ்டசத்தி விநாயகரே இன்னமுமா சோதனை என்பதுதான் எண்ணம். இஷ்டசித்தி விநாயகர் எவ்வளவு தவித்திருப்பார்! பக்தர்களின் பூஜைகள் அவரை எவ்வளவு பரிதவிக்கச் செய்திருக்கும். பாவம்! இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அம்மாவுக்குக் கோபம். அந்தக் குருக்கள் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரிடமே இதனைக் கூறினேன். அம்மாவும் இருந்தார்கள். அவர், வயிறு குலுங்க நகைத்துவிட்டு, “பலே! குட்டி கேட்கிற கேள்வி சரியான கேள்விதான்” என்று கூறிவிட்டு, “அவாளவாள் கர்மானுசாரம் கார்யாதிகள் சம்பவிக்கும். பூஜையும் புனஸ்காரமும், மனச்சாந்திக்குத்தான். முற்றுமுணர்ந்த ஞானிகளுக்கு, மனந்தான் கோயில், மூச்சுத்தான் மணியோசை” என்று கூறினார். “அது நிஜமானால் நீர் குருக்கள் வேலை செய்வது வீண்தானே” என்று நான் மடக்கினேன். “வீண் என்று சொல்ல முடியுமா? இதெல்லாம், பெரியவாள் செய்து வைத்த ஏற்பாடுதானே” என்று மறுபடி பழைய கதை பேசினார். அவரது பேச்சை விடப், பார்வை அவரது பித்தத்தை அதிகமாகக் காட்டிற்று. அவரது பார்வையில் அமோகமான பசி இருந்ததைக் கண்டு, நான் முதலில் பயந்தேன். பிறகு நம்பிக்கை கொண்டேன். என்னை இரையாகக் கொள்ள வந்த இவனைக் கொண்டே இஷ்டசித்தி விநாயகர் செய்ய வேண்டுமென அம்மா எதிர்பார்த்த காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமெனத் தீரமானித்தேன். அந்த குருக்களின் பெயர் கணபதி சாஸ்திரிகள்!

அந்த வயோதிகனை நான் ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தேன். இது எங்கள் குலத்திலே ஆச்சரியமான சம்பவமல்ல, ஏன்? பெண்கள் உலகத்திலேயே இது ஆச்சரியமானதல்ல. சர்வ சாதாரணம். மூன்றாம் தாரம் நான்காம் தாரமாகப் பச்சைக் பசுங்கிளி போன்ற பெண்களை, படுகிழவருக்கு மணம் செய்வித்ததை நான் பார்த்து இருக்கிறேன். நாடு ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தேளையும் பாம்பையும் உலகம் ஒழித்தா விட்டது? அதுபோல் கொடிய வழக்கங்களையும் ஒழித்து விடத்தான் இல்லை. துஷ்ட ஜந்துக்களைக் கண்டால் கொல்வார்கள். துஷ்ட வழக்கங்களையோ இந்த நாட்டிலே துதிக்கிறார்கள். தத்துவம் கூறவோ தயார், தயார் என்று பலர் இருக்கின்றனர். மணப்பெண்ணின் கூந்தல் சுருண்டு வளைந்து இருக்கும் வசீகரம், அந்த வளைவுகள் வழியாக வெளிவந்து வீசும், மணமகளின் தேகம் சுருங்கிக் கிடக்கும். முகம் வீங்கிக் கிடக்கும். வயோதிகமும் விகாரமும் வாடை போல் வீசும். இருந்தாலும் அக்னி சாட்சியாக, அந்தணர் ஆசிகூற, அகலிகை அருந்ததி சாட்சியாகத் தாலிகட்டத் தயங்குபவர் யார்? நடக்கிறதோ உலகத்தில். நானாவிதமான விஷயங்கள் பற்றி நாள் தவறாது பேசும் நாக்குகள் வளைந்துபோய் விடுகின்றனவே. இதுபற்றி கண்டிக்கச் சொன்னால். பெண்கள் சமூகமே, ஆண் களின் விளையாட்டுச் சாலையாக இருக்கும்போது, காசுகொண்டு ஆசையை அளிக்கக் கடவுளால் உண்டாக்கப்பட்ட தாசிகள் கூட்டம், பெண்கள் பொதுவாக படும் பாட்டைவிட சற்று அதிகமாகப் படுவதிலே ஆச்சரியமில்லை. அதிலும், செல்வத்தை இழந்து ஜமீன்தாரின் சீற்றத்தால் சிதைந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நான், ஒரு வயோதிகனுக்கு விளையாட்டுக் கருவியாகச் சம்மதித்தது ஆச்சரியமாகுமா?

கணபதி சாஸ்திரிகள், விநாயகரைக்கூட அவ்வளவு வாத் சல்யத்துடன் அர்ச்சித்திருக்க மாட்டார். என்னை அப்படி அர்ச்சிப்பார்! அவருக்கு என் இளமையும் அழகும் சோகத்தால் ஏற்பட்ட பிரத்தியேகமான சோபிதமும் அவ்வளவு மயக்கத்தை ஊட்டி விட்டது.

இரண்டு மூன்று ஆண்களின் நடவடிக்கைகளை நான் கண்டுவிட்டேன் அல்லவா? முத்துவின் மோசடி, ஜமீன்தாரரின் சேட்டைகள், பாட்டு வாத்தியார் மகனின் பகல்வேடம் முதலிய வற்றை கண்ட நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். இப்போதுள்ள முறைக்கு, அதைத் தவிர வேறு தீர்மானத்துக்கு அநேகமாக எந்தப் பெண்ணும் வரமாட்டாள் என்றே நான் இன்னமும் நினைக்கிறேன்.

ஆடவன் பெண்ணின் அழகில் சொக்கி விடுகிறான். அழகு என்பதற்கு ஒவ்வோர் ஆடவன் ஒவ்வொரு விதமான பொருள் கொள்கிறான். அதுமட்டுமல்ல, ஒரே ஆடவனுக்கு ஒரு சமயம் ஒன்று அழகாகத் தோன்றும், மறு சமயம் மற்றொன்று தோன்றும். அவனது மனம், பெண்ணின் அழகில் மயங்கிக் கிடக்கும்போது அவன் தங்கக் கம்பிதான். ஆனால் பெண்ணினால் அவன் அடைய வேண்டிய பலன்களை அடைந்து சலித் தாலோ அல்லது அவனது கண்களும் கருத்தும், வேறு மாதை நாடி விட்டாலோ, அவன் அந்த மாதின் இருதயத்துக்கோ ஈட்டி யாகத் தயங்குவதில்லை. நமது தங்கக்கம்பி இன்று ஏன் நமது மனதைத் துளைக்கும் ஈட்டியாகிவிட்டான் என்று அவள் எண்ணிப் பயனில்லை. ரோஜாவில் உள்ள தேனை உண்டு, மல்லிகைக்குச் செல்கிறது வண்டு. அதற்குத் தேவை ரோஜாவா, மல்லியா என்பதல்ல. மது, மது, அது எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் வண்டு சென்றேதீரும். மாதர்கள் கூட்டத்தை ஆண் வண்டுகள் மலர்ச்சோலையாகவே மதிக்கின்றன. சில சோலையிலே காவலாளி இருப்பதுபோல் பெண்கள் கூட்டத்திலே ஒரு பகுதிக்குக் கட்டும், காவலும், ஆளும் அம்பும் இருக்கிறது. எங்கள் கூட்டமோ கட்டுக் காவல், வேலியற்ற தோட்டம்! இந்தச் சோலையிலே நானோர் புஷ்பம். கணபதி சாஸ்திரிகளைப் போன்ற வண்டுகள் வரட்டும். வண்டு தேன் மொண்டு உண்டு போவதை நான் அறிவேன். ஆனால் மதுவில் மயங்கிடச் செய்வேன். கணபதி சாஸ்திரியானாலென்ன, சுப்பிரமணியபிள்ளையானாலென்ன? யாரானாலும், எனக்கு உபயோகமாக வேண்டும்? இல்லையேல், விரட்டுவேன். என் இளமை இதழ், கண்டுவரும் வண்டை குற்றேவல் புரியச் செய்வேன். செய்தால் மது கிடைக்கும் என்பேன். செய்தானதும் அதனைச் செயலற்றதாக்குவேன். மற்றும் ஓர் வண்டு வரட்டும்! மாறிமாறி, மேலும் மேலும் விதவிதமான வண்டுகள் வரட்டும். வண்டுகளுக்கு வதையாவதற்குள், வண்டுகளை, மலர் வதைக்கட்டும். எந்த ஆடவனையும், என் காரியத்தை நடத்திக் கொள்ளக் கருவியாக்கியே தீருவேன். என் அழகுக்கு அவன் அடிமை! அவனை அடிமையாகவே நடத்துவேன். ஆம்! ஆண்கள் பெண்களின் பெருமையை மதித்து நடக்கும் காலம் வரும். நான் அக்காலத்தில் இருக்க மாட்டேன். நான் வாழும் இது இடைக்காலம் என்று நான் தீர்மானித்தேன் சஞ்சலம் வளர வளர இந்த என் உறுதியும் வளர்ந்தது. இந்த உறுதி வளர்ந்ததும், நான் ஆடவர்கள் தாமாக மயங்கி என்னை அணுகுவதற்கு முன்னமேயே, அவர்களை மயக்கவைக்க வேண்டிய முறைகளைக் கையாள வேண்டும் என்றும் தீர்மானித்தேன். அக்கா சோகத்தில் ஆழ்ந்தாள். உலகை வெறுத்தாள். என் சோகம் எனக்கோர் புதியசக்தியாக மாறிற்று. நான் சாகசக்காரியானேன். டாக்டரே! அந்தக் காலத்தில் நீர் என்னைக் கண்டதில்லை. கண்டிருந்தால், என் கண் ஒளி உமது இருதயத்தைப் பிளந்து விட்டிருக்கும். என் கழுத்தின் அசைவு உமது வீணையாக வந்திருக்கும். மேனியை மினுக்க நான் விதவிதமான முறைகளைச் செய்து கொண்டேன். வறுமை எங்களைத் தொடலாயிற்று. ஜமீன்தாரரின் கோபம் எங்களை சூழ்ந்து கொண்டு கொக்கரித்தது. அக்காவின் பெருமூச்சு அதிகரித்தது. அம்மாவின் ‘பக்தி’ பண கஷ்டத்தையும் வீண் சிரமத்தையும் வளர்த்தது. ஆனால் நானோ! உலகை நோக்கிச் சிரித்தேன்! உன்னை ஒரு கை பார்க்கிறேன் என்று கூறினேன்.

ஜமீன்தாரரின் சீற்றத்தைப் பற்றி அலட்சியமாகப் பேசினேன். விறைத்து நோக்கும் வாலிபர்களை நேருக்கு நேர் பார்க்க ஆரம்பித்தேன். தடுமாற்றமடையும் பேர்வழிகளைக் கண்டு கேலி செய்தேன். நான் ஓர் புதுப் பெண்ணானேன். வலைவீசும் வனிதையானேன். வலைவீசும் முன்பே வந்தவர் கணபதி சாஸ்திரிகள். அந்த வயோதிகருக்கு வலை ஏன்?

இந்நிலையில் எங்கள் கதி என்ன? என்று எண்ண எண்ண பயமே மேலிட்டது.