அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
5
                     

“கொலை! கொலை! ஐயோ! யாரும் இல்லையா! போலீஸ்!” என்று கூச்சல் கேட்டுச் சிந்தனையுடன் கடற்கரையில் உலவிக் கொண்டிருந்த சுந்தரேசன் கூச்சல் கிளம்பிய பக்கமாக ஓடினான்.

கொலை! கொலை!! என்ற சத்தம் வந்த திக்கு நோக்கி ஓடிய சுந்தரேசன், இருவர், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதையும், கீழே ஒரு கத்தி வீழ்ந்து கிடந்ததையும் கண்டான். கத்தியை எடுத்து மடியிற் செருகிக் கொண்டான். இருவரிலே யார், தன்னை அழைத்தது? யாருக்கு உதவி செய்வது என்பது தெரியாது, சண்டையைத் தடுக்க இருவர் இடையே புகுந்தான். உடனே இருவரிலே ஒருவன் ஓடிவிட்டான். மற்றவன் களைத்து மண் மீது சாய்ந்தான். ஓடிவிட்டானே கள்ளன், கொலைக்காரன் என்று எண்ணி, இருவருக்குள் என்ன காரணத்தால் சண்டை வந்தது என்று விசரிக்கத் தொடங்கினான். இதற்குள் போலீஸ்காரன் ஊதுகுழல் சத்தம் கேட்டது. சுந்தரேசன் எழுந்து இப்பக்கமும் அப்பக்கமும் நோக்கினான். மூன்று போலீசார், ஓடிப்போனவனும் அங்கு வந்தனர். “அதோ! அந்த ஆள்தான்! அதே ஆள்! பிடியுங்கள்” என்று அவன் கூவினான். சுந்தரேசனுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. போலீசார், டாக்டரைப் பிடித்துக் கொண்டனர். அதே நேரத்தில் ஓடிப்போய்ப் போலீசை அழைத்துக் கொண்டு வந்தவன் மண்ணில் படுத்திருந்தவனைத் தூக்கி மார்பில் சாய்த்துக் கொண்டு, “கந்தா! பயப்படாதே! போலீசார் வந்து அந்தப் பாவிப் பயலைப் பிடித்துக் கொண்டனர்” என்று கூற மயங்கிக் கிடந்தவன், கண்ணை விழித்துக் கொண்டு, “புண்யவான்களே! நல்ல சமயத்திலே இங்கு வந்தீர்கள். நாங்கள் இரண்டு பேரும், இங்கே உலாவிக் கொண்டே இருந்தோம். இந்தப் பாவி கத்தியால் குத்த வந்தான். கத்திகூட மடியிலே இருக்கிறது” என்று திணறித் திணறிக் கூறினான்.

சுந்தரேசன் திடுக்கிட்டுப் போனான். “ஆஹா! என்ன சதி நாடகம். அடே மோசக்காரப் பயல்களா! நீங்கள் சண்டை போடுவது போல் போட்டு, கொலை கொலை என்று கூவி, நான் வந்ததும் வஞ்சனையாக என் மீதா அபாண்டம் சுமத்துகிறீர்கள்” என்று சுந்தரேசன் கதறினான். போலீசார், இதற்குள் டாக்டர் மடியிலே கத்தியைக் கண்டுபிடித்து எடுத்தனர். “ஏனப்பா, பார்த்தால் பெரிய மனிதன் போல காண்கிறது. இந்த ‘ரௌடி’த்தனம் ஏன்? வெறியா? பித்தமா?” என்று டாக்டரைத் திட்டினர். ஒரு பாபமும் அறியாத தன்மீது பழி சுமத்திய பாதகர்கள் பேச்சுத்தானே போலீஸ்காரர் செவிக்கு ஏறியது என்பதை எண்ணித் துடித்தான். கோபமிகுதியால் “முட்டாள்களே! தடியன்களே நான் வெறியனல்ல! இந்தப் பயல்கள் பொறுக்கித் தின்னும் பேர்வழிகள்; இவர்கள் பேச்சைக் கேட்கும் நீங்கள் முட்டாள்களே” எ“னறு பேசினான். போலீசார் “சரி! அதெல்லாம் கோர்ட்டிலே சொல்லு, நட” என்று அதிகார தோரணையிலே பேசி, சுந்தரேசனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ‘லாக்கப்பில்’ தள்ளி விட்டனர். இரவில் குடித்து விட்டு, வெறியின் காரணமாக! கடற்கரையிலே கலகம் செய்து, கத்தியால் இருவரைக் குத்த முயற்சித்ததாக, சுந்தரேசன் மீது கேஸ். லாக்கப்பிலே போனபிறகுதான் தெரிந்தது. சுந்தரேசனுக்குத் தன் சொக்காயிலிருந்து சாராய நாற்றமடிப்பது. சண்டை சந்தடியிலே, சாராயத்தையும் எப்படியோ, தன் சொக்காயிலே ஊற்றியும் விட்டார்கள், தான் குடித்து விட்டுக் கலகம் செய்ததை ருஜுப்படுத்த.

இவர்கள் யார்? ஏன் தன் மீது இத்தகைய பழி சுமத்த வேண்டும்? எதற்காக இந்தச் சதி? என்பது சுந்தரேசனுக்குத் தெரியவில்லை. திகைத்துப் போனான் யோசிக்கக்கூட அவனால் முடியவில்லை. அவ்வளவு எதிர்பாராத சம்பவம் அல்லவா அவனுக்கு நடந்தது.

காலையில் ஜாமீனில் விடப்பட்டான் சுந்தரேசன். வழக்கு நடந்தது. வக்கீல் வாதாடினார். ஆனால் கடைசியில் குடிவெறி காரணமாகக் கலகம் செய்ததாகவே சுந்தரேசன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தனக்கு இத்தகைய வீண் பழியையும் அவமானத்தையும் உண்டாக்கியவர்கள் கண்ணுசாமியின் ஆட்கள் என்பது சுந்தரேசனுக்குப் பிறகே தெரிய வந்தது. டாக்டர், தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் வக்கீலே நம்பவில்லை. சுந்தரேசனின் தாயோ தன் மகன் வேசி வீடு போனதோடு நிற்கவில்லை. குடித்து விட்டு ஆடியும் அவமானப்பட்டான் என்று எண்ணி ஏங்கினாள். இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு கெட்டு விடுவானா? ஆண்டவனே! ஏனோ இப்படி அவனுக்குப் புத்தி கெட்டு விட்டது? என்று எண்ணி வாடினாள். உலகத்திலே இப்படியும் மோசம் நடக்கிறதே என்று எண்ணி சுந்தரேசனின் மனம் புண்ணாகி விட்டது. யாரிடம் தன் சேதியைக் சொன்னாலும் நம்பாது, கோர்ட்டின் முடிவையே நம்பி, “இருக்கும்; இருக்கும்” என்றே கூறுவதைக் கேட்ட சுந்தரேசனுக்கு வெந்த புண்ணில் வேல் நுழைவது போன்று இருந்தது. “என்ன உலகம்! எவ்வளவு மோசம்” என்று நினைத்து உலகத்தை வெறுத்தான். இவ்வளவு சூதும் வஞ்சனையும் சூழ்ந் திருக்கும் உலகத்தில்தானே மனிதன் வாழவேண்டி இருக்கிறது. இதிலிருந்து தப்புவது எப்படி எனப் பயம்தான். ஒரு தவறு செய்யாத நான், குடிகாரன், வெறியன், கலகம் செய்த பேர்வழி எனக் கோர்டிலே தீர்ப்பாகி விட்டது. இது என்ன உலகம் என்று மனங் கசிந்தான். நானே, சூழ்ச்சிச் சுழலில் சிக்கித் தப்ப முடியாமற் போய்விட்டதே, என் படிப்பு, உயர் குடும்பம், புத்தி, நிலைமை, எதுவும், வஞ்சகத்தின் முன்பு நிற்கவில்லையே! அபலையாகிய விமலா வாழ்க்கையிலே எவ்வளவு வஞ்சனையைக் கண்டாளோ, எந்த வஞ்சகன் அவளைக் கெடுத்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தானோ என்று நினைத்தான். விமலாவைக் கண்டுபிடித்து, அவளிடமிருந்து சேதியைக் கேட்டால்தான், தன் மனமே சாந்தமடையும் எனத் தோன்றியது. மரகதத்தின் வீட்டுக்குச் சென்று விசாரித்தான். அவளோ தனக்குத் தெரியாது என்று கூறி விட்டாள். கடைசியில் வேலைக்காரியைப் பிடித்து, விலாசம் தெரிந்து கொண்டான். விமலாவின் வீட்டுக்குச் சென்றான்.

விமலா பாடிக்கொண்டிருந்தாள். உருக்கமான பாடல். பல பெரிய மனிதர்கள் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சுந்தரேசனைக் கண்டதும், விமலா, “உட்காருங்கள்” என்று ஜாடை காட்டினாள். விமலா, இவ்வளவு நன்றாகப் பாடுவாள் என்று சுந்தரேசனுக்குத் தெரியாது. பாட்டுக் கேட்பவர்களும் “சபாஷ்” சோகரசமும் இருக்கிறது. பேச்சு சுவாரஸ்யமும் இருக்கிறது, மேக்கப் செய்து விட்டால் உருவமும் நன்றாகத்தான் இருக்கும் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர். அவர்கள் சினிமாப் படம் எடுப்பவர்களென்றும், விமலாவை ஒரு படத்திலே நடிக்க அழைக்கவே வந்திருப்பதாகவும் சுந்தரேசனுக்கு, விமலா கூறினாள். “இவர் டாக்டர் சுந்தரேசன், என் நண்பர். என் விஷயத்திலே ரொம்ப அக்கறை. நீங்கள் மேற்கொண்டு பேச வேண்டியதை அவரிடமே பேசி முடிவு செய்து கொள்ளலாம்” என்று விமலா கூறிவிட்டாள்.

3000 ரூபாய் கொடுப்பதென்றும் விமலா படத்தில் கதாநாயகியாக நடிப்பதென்றும் படம் ஏழு மாதத்திலே முடியுமென்றும் சினிமாக்காரர்கள் கூறினர். சுந்தரேசனுக்கு அளவற்ற ஆனந்தம். வறுமையிலே வாடிக் கிடந்த விமலாவுக்கு இனி நல்ல காலந்தான் என்று எண்ணி மகிழ்ந்தான். ஒப்பந்தப் பத்திரத்திலே தானே ஒரு சாட்சிக் கையெழுத்திட்டான். அட்வான்சாகத் தந்த 500 ரூபாயை சினிமாக்காரரிடமிருந்து வாங்கி, அகமெலாம் மகிழ விமலாவிடம் தந்தான்.

சினிமாக்காரர்கள் விடை பெற்றுக் கொண்டு போகுமுன்னம் சுந்தரேசனுக்கு, ஒரு யோசனை பிறந்தது. “ஏன் சார்! என்ன கதை!” என்று கேட்டான்.

“கதையா? என் கதையே பெரிய கதையாக இருக்குமே” என்றாள் விமலா.

“ஆமாம்! நான் விமலாவின் உண்மைக் கதையை சினிமாவுக்குத் தகுந்தபடி எழுதித் தருகிறேன்” என்றான் சுந்தரேசன்.

“சபாஷ்! ரொம்ப சரி சார்! கதையை ஒரு மாதத்துக்குள் கொடுத்து விடவேண்டும்” என்று சினிமாக்காரர் கூறினர். சுந்தரேசன் பரமானந்தமடைந்தான். “இந்தக் கதையிலே உலகத்தின் மோசத்தை விளக்கி விடுகிறேன். விமலாக்களை உற்பத்தி செய்யும் சமூகத்திற்குச் சரியான சவுக்கடி தந்துவிடு
கிறேன்” என்று விமலாவிடம் கூறினான். சந்தோஷ மிகுதியால் விமலாவைப் பிடித்துக் குலுக்கினான். அவள் தவடையைப் பிடித்துக் கிள்ளினான். விமலாவுக்கும் ஆனந்தமே! அவளும் “ஏது டாக்டரே மகா ஷோக் பேர்வழியாகி விட்டீரே” என்று கேட்டாள்.

“சந்தேகமா உனக்கு! மகா ஷோக் பேர்வழிதான் என்பதற்குக் கோர்ட்டிலேயே தீர்ப்புக் கிடைத்திருக்கிறது” என்று ஆரம்பித்து, சுந்தரேசன், தனக்கு நேரிட்ட விபத்தைக் கூறினான். விமலா, விழுந்து விழுந்து சிரித்து விட்டு, “இதுதான் டாக்டர் உலகம்; உலகம் இதுதான். சூது, வஞ்சனை, சூழ்ச்சி, மோசம், நிரம்பிய உலகம். ஒருவரை ஒருவர் வஞ்சகத்தாலேயே வீழ்த்த வேண்டுமென்ற எண்ணமே பெரிதும் குடிகொண்ட உலகம், ஆண்டு அனுபவிக்க வேண்டும், ஆனால் அதனால் தங்களுக்கு ஒரு தொல்லையோ, கஷ்டமோ, வெறுப்போ இருக்கக் கூடாது என்று எண்ணும் உலகம். ரோஜா புஷ்பம் வேண்டும், ஆனால் அதிலே முள் இருந்தால் பயம்! தேன் குடிக்க வேண்டுமென்று ஆசை, ஆனால் வண்டு கொட்டுமே öஎன்ற பயம். இவ்விதமாகப் போகத்தில் மட்டும் ஆசையும், அதை அடைந்தால், அதற்காக வரும் கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமும் மனிதர்களிடத்திலே இருப்பதால்தான் டாக்டர், தாசிகள் என்ற வகுப்பே தோன்றிற்று. ஆமாம்! நீங்கள் நம்பத்தான் மாட்டீர்கள். நான் நேசித்த ஒருவன் என்னை மணம் செய்து கொண்டிருந்தால் நான் வீங்கிய உதட்டுடன் உங்களிடம் வந்திருக்கவே மாட்டேன்” என்று விமலா கூறினாள்.

“காதல் கூடக் கொண்டிருந்தாயா விமலா” என்று சுந்தரேசன் கேட்டான்.


“நல்ல கேள்வி கேட்டீர் டாக்டரே! ஏன், எனக்குப் பசி தாகம் உண்டா என்று கேட்பதுதானே” என்றாள் விமலா! “தாசிகளுக்குக் காதல் ஏது விமலா! நீ கோபிக்கக் கூடாது” என்று சுந்தரேசன் கேட்டான். “கோபம் என்ன இருக்கிறது. உலகத்திலே எத்தனையோ பேர் இதைத்தான் கேட்பார்கள். சகஜமான கேள்விதான். ஆனால், காதல் என்பதன் கருத்துத் தெரியாமல் பேசும் பேச்சு இது” என்றாள் விமலா! சிறிது நேரத்திற்குப் பிறகு, “டாக்டரே காதல் என்பது இருவர் மனது லயிப்பது அல்லவா! கருதியில் சேர்ந்த சங்கீதம் போன்றது. மலரில் மணம் இருப்பது போன்றது. மதியில் குளிர்ச்சி இருப்பது போன்றது. எனவே இருவர் வேண்டுமே காதலுக்கு, தாசிகளிடம் சேரும் புருஷர்களிலே யார், தங்கள் முழு மனதையும், தங்கள் வாழ்வையும் ஒப்படைப்பார்கள்? தாசி வீடு வருவதே கேவலம், ஆம்! பச்சைச் சிரிப்புச் சிரிக்க வேண்டாம். உமக்கு மட்டும் என்ன, இப்போது நல்ல பெயர் என்றா நினைக்கிறீர். கூத்தி குடி எல்லாம் டாக்டருக்கு உண்டு என்றுதான் ஊரிலே பேச்சு” என்று விமலா கூறி முடிப்பதற்குள், டாக்டர் “இரண்டும் எனக்குக் கிடையாது” என்று கூறினார். “அது சரி! அது உம் மனதுக்குத் தெரியும். ஊராருக்கு என்ன தெரியும்” என்று விமலா கேட்டாள், “முட்டாள்தனமாகப் பலர் பலவிதமாகப் பேசினால் அதுபற்றி எனக்குக் கவலையில்லை” என்றான் சுந்தரேசன். “பேஷ்! நீங்கள் எண்ணுவது போல, முத்து எண்ணியிருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு வந்தே இருக்க மாட்டேன்” என்றாள்.
“யார் அந்த முத்து?” என்று சுந்தரேசன் கேட்டான்.

“இன்று பேசுகிறீர்களே, உலகத்திலே உள்ள கேடுகளைப் போக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு உழைக்கிறாராமே; அவர்தான்.”

“யார், பாரிஸ்டர் முத்துவா? போன வாரம்கூட அருமை யான பிரசங்கம் செய்தார்.”

பெண்களிடம் அதைவிட அருமையாகப் பேசுவார். அதிலும் என்னைப் போன்ற பேதைகளிடம் அவருடைய வித்தை பூராவும் காட்டி விடுவார்.”

“விமலா! அவர் எப்படி உனக்குத் தெரியும்?”

என் வாலிபப் பருவ சேஷ்டையின் மூலம் நான் அவரைத் தெரிந்து கொண்டேன்” என்று கூறிவிட்டு விமலா, தன் வரலாற்றைக் கூற ஆரம்பித்தாள்.

ஒரு நாள் மாலை, கமலா என் அக்கா கட்டிலின் மீது படுத்துக் கொண்டே,

“என்னடி என்னை மருவிச்சுகீத்த
குகன் வாராத காரணம்”

என்ற பாட்டை இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள். என்னை விடக் கமலா, ஒரு அடி உயரம், நல்ல அழகு, -ராகம் பல்லவிக் கூடப் பாடத் தெரியும். ஆனால் அவள் பாடிக் கொண்டிருந்த பாட்டு, வாத்தியார் சொல்லிக் கொடுத்தது அல்ல. வாத்தியார் அப்போது ‘நகுமோமு’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அக்கா பாடிய பாட்டு, வாத்தியாரின் மகன், முருகன் - இப்போது முருக பாகவதர் என்று நாடகமாடுகிறாரே அவர்தான் எழுதிக் கொடுத்தது. தெரிந்ததா விஷயம். வாத்தியாரிடம் கீர்த்தனையும், முருகனிடம் சல்லாபமும் கற்றுக் கொண்டாள் என் அக்கா. இது மிக இரகசியம். எனக்கு ஜாடை மாடையாகக் கொஞ்சம் தெரியும். எங்கள் அம்மா, ரொம்பக் கண்டிப்பான பேர்வழி. குடும்பம் பிரபல்யமானது. எங்களுக்கு ஆட்டுப்பாட்டு சொல்லி வைத்து, பெரிய மனிதர் சகவாசம் கிடைக்கும்படி செய்து மதிப்பாக இருக்கும்படி செய்ய வேண்டு மென்பது அம்மாவின் ஆசை. அதிலே என்ன தப்பு? மாடு வைத்துக் கொண்டிருப்பவனுக்கு, அதற்கு போடும் மூக்கணாங்கயிறு அழகாக இருக்க வேண்டும், சதங்கை கட்ட வேண்டும். கொம்புக்கு வர்ணம் பூசிக் கெஜ்ஜை கட்ட வேண்டும். என்று தோன்றுகிறது போல, யாராருக்கு எது எது வாழ்க்கை என்று தோன்றுகிறதோ, அதிலேதானே ‘மேன்மை’ அடைய வேண்டு மெனத் தோன்றும்! பணமும் இருந்தது. எனவே பாட்டும் ஆட்டமும் நடந்தது. அக்காவுக்கு நலல பருவம். நான் தாவணி போட்டுக் கொண்டு உலவுவேன். அக்காவுக்கு என்மீது பிரியம். எனக்கும் அப்படித்தான். இருந்தாலும் முருகனிடம் அக்கா பேசும்போது கவனித்தேன். ஏதோ விஷயம் நடக்கிறது என்று தெரிந்தது. எனக்குக் கோபந்தான். நாங்கள் கொடுக்கிற 10 ரூபாய் போல, வேறு இரண்டு இடத்திலே பணம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு பாட்டு வாத்தியார் காலட்சேபம் செய்பவர். அவருடைய மகன், அக்கா மீது சொக்கு பொடி போட்டு விடுகிறானே என்று கோபந்தான். அம்மாவிடம், பல சீமான் களிடமிருந்து ஆட்கள் வருவார்கள். கமலாவைப் பற்றி விசாரிக்க எங்கள் கோயில் குருக்களே, குங்குமம் மஞ்சள் பூ எடுத்துக் கொண்டு வாரத்துக்கொரு முறை வருவார். வரும்போதெல்லாம் ஏதாவதொரு சேதி கொண்டு வருவார். “என்னமோ, ஆண்டவன் விட்ட வழியாகிறது, ஸ்வாமி குழந்தைக்கு ‘முத்திரை’ முடியட்டுமே பார்ப்போம். நேற்றுகூட நெடுங்காடியூர் ஜமீன்தாராம், கேட்டு அனுப்பினார்கள்” என்று என் தாயார் சொல்லி அனுப்புவதுண்டு. நான் கேட்டு இருக்கிறேன். எனவே இவ்வளவு பெரிய மனிதர்கள் தேடி அலையும் அக்கா, பாட்டுப் பாடிப் பிழைக்கும் முருகனிடம் ஒரு மாதிரியாக நடப்பது கண்டு எனக்குக் கோபந்தான். நான் சொன்னேனே நான் சின்னப் பெண், அக்காவின் மனம் அந்தக் காலத்திலே என்ன பாடுபடும் என்பது பிறகு நான் முத்து மீது ஆசை கொண்ட பின்னர்தான் எனக்குத் தெரியும்.”