அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
6
                     

எப்படியாவது அம்மாவிடமே அக்காவின் விஷயமாகக் கூறிவிடுவது என்று தீர்மானிதேன். ஐயோ, அக்காவை அம்மா கோபிப்பார்களே என்று எண்ணி, அடக்கிக் கொண்டே வந்தேன். கடைசியில் அன்று அக்காவிடமே விஷயத்தைக் கூறி அடக்கிவிட வேண்டும் என்று எண்ணி, அக்காவின் அறைக்குச் சென்றேன். அப்போதுதான் அக்கா மிக உருக்கமாக “குகன் வாராத காரணம் என்னடி” எனப் பாடிக் கொண்டிருந்தாள். நான் “அக்கா! நீ செய்வது எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை” என்று ஆரம்பித்தேன். திடுக்கிட்டு எழுந்து அக்கா, “என்னடி உளறுகிறாய்” என்று கேட்டாள். “எல்லாம் எனக்குத் தெரியும்” என்றேன்.

“என்னடி தெரியும்” என்று கேட்டுக்கொண்டே, அக்கா என் ஜடையைப் பிடித்து இழுத்து தலையில் குட்டினாள். எனக்குக் கோபம் அதிகரித்து விட்டது.

“வெட்கமில்லையே, மானமில்லையே, பாட்டு வாத்தியார் மகனோடே உனக்கென்ன பேச்சு. ஆகட்டும் அம்மாவிடம் சொல்லிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்” என்று கூறினேன்.

“அப்படி, காரி முகத்திலே உமிழடி, விமலா. கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா? அவள் கெட்டுப் போறதுக்குக் காலம் வந்துதான் இந்த வேலையிலே இறங்கி விட்டாள். நாலுபேருக்குத் தெரிந்தால் காரித் துப்புவார்கள். இது என் வயிறு செய்த பாக்கியம்” என்று அதே நேரத்தில் என் தாயர் ஆக்ரோஷத் துடன் கூறிக்கொண்டே உள்ளே வந்தார்கள். அப்போதுதான் எனக்குத் தெரியும், அக்காவின் சமாச்சாரத்தை அம்மா முன்பே தெரிந்து கொண்டார்கள் என்பது. அதுமட்டுமல்ல. பாட்டு வாத்தியாரையே அன்று முதல் வரவேண்டாம் என்றும் சொல்லி விட்டார்களாம். அம்மா திட்டின திட்டுக்கெல்லாம், அக்கா ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை. கட்டிலின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டு, விம்மி விம்மி அழுதாள். அம்மா போய்விட்ட பிறகு, நான்தான் சமாதானம் கூறினேன். அக்காவுக்கு இவ்வளு கஷ்டம் வந்ததே என்று வருத்தம். இருந்தாலும் முருகனிடம் இனி அக்கா சேர முடியாது அல்லவா? மருங்கனூர் ஜமீன்தாரோ, வேறு எந்தச் சீமானோ அக்காவின் நாயகனாக வருவார். அக்காவுக்குப் பங்களா வாங்கித் தருவார். பணமாகக் குவிப்பார் என்ற ஆசை. பாபம்! அவள் ஆசைக்கு மண்போட்டு பிறகு, அவளுக்குச் சொர்ணாபிஷேகம் செய்தாலும் அவளுக்குத் திருப்தி ஏற்படுமா என்று எனக்கு அப்போது தோன்றவில்லை.

அம்மா அக்காவைத் திட்டியதோடு நிற்கவில்லை. வாத்தியாரிடமும் முருகனைப் பற்றிக் கூறிவிட்டாள், பாட்டுக்கும் வரவேண்டாமெனக் கூறிவிட்டாள். முருகனைப் பிடித்து அவன் தகப்பனார் வாட்டினார். அவருக்கு பிள்ளை பிறந்து பிழைப்பிலே மண் போட்டதென்றால் வருத்தமாகத்தானே இருக்கும். சண்டை முற்றிக் கடைசியில் முருகன் வீட்டை விட்டே போய்விட்டான். ஊரைவிட்டே போய்விட்டான். ஐந்தாறு வருஷங்களுக்குப் பிறகு எங்களூரில் முருக பாகவதராக வந்து நாடகம் நடத்தினான். இடையிலே எங்கெங்கோ சுற்றினான். பிறகு சொன்னான் தன் கதையை. அக்கா ரொம்பக் கஷ்டப்பட்டாள். அம்மா ஒவ்வொரு நாளும் புத்திமதி கூறுவாள். ஒவ்வொன்றுக்கும் என்னைத்தான் உதாரணம் காட்டுவார்கள்.

“அதோ பாரடி உன் தங்கை விமலாவை. அதைப் பார்த்துக் கூட உனக்கு புத்தி வரவில்லையே. அவன் என்னடி செய்ய முடியும்? அவன் பிழைக்கிறதே பிரம்மப் பிரயத்தனம். அவன் ஓடிவிட்டான். நீ அகப்பட்டிருந்தால் உன்னையும் இழுத்துக் கொண்டு ஓடி, அலையவைத்து நடுவீதியிலே விட்டிருப்பான். நல்ல வழி நேரே இருக்க கோணல் வழி குறுக்கே போயிற்றே?” என்று இதோபதேசம் செய்வாள். அக்கா அம்மா எதிரிலே ஒன்றும் பேசமாட்டாள். என்னிடம் மட்டும் கூறுவாள், “பணம்! பணம்! இதுதான் அம்மாவுக்குத் தெரியும். அவர் என்ன, ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற மாட்டாரா? கூழோ தண்ணியோ குடித்தாலும் மானத்தோடு வாழலாமே. என்றைக்குத்தான் இந்தப் புத்தி வருமோ நம்ம ஜாதிக்கு” என்று.

“அப்படி என்றால் நீ கலியாணம் செய்து கொள்ளப் போகிறாயா” என்று நான் கேட்டேன் கிண்டலாக.

“ஏன் செய்து கொள்ளக் கூடாது” என்று கோபத்துடன் அக்கா கேட்பாள்.

“யாரைக் கலியாணம் செய்து கொள்வது” என்பேன் நான்.

“இஷ்டப்பட்டர்களை” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுவாள் கமலா.

“சுத்த பைத்தியம். நம்மை யாரக்கா கலியாணம் செய்து கொள்வார்கள்” என்று நான் ஆச்சரியத்துடன் கேட்பேன்.

“யாரக்கா கலியாணம் செய்து கொள்வார்கள்” என்று நையாண்டி செய்வாள் கமலா..

அக்காவின் பிடிவாத குணம், அம்மாவின் உபதேசத்தால் போகவில்லை. கோயில் குருக்கள் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று சொன்னேனே. அவர்தான், “அவாளவாளின் குல தர்மானுஷ்டப்படி நடக்க வேண்டாமோ” என்று ஆரம்பிப்பார். உள்ளூர் வெளியூர் தாசிகள் எதை எல்லாம் கூறுவார். ஒவ்வொரு சீமானுக்கும் உள்ள குணாதிசயங்களை வர்ணிப்பார். பக்கத்து வீட்டுப் பார்வதி வைரத்தோடு வாங்கிய கதை, வளையல் புதிதாகச் செய்த கதைகளைக் கூறுவார். ஆண்டவன் தாசியாகப் பிறப்பித்தான் அவன் கட்டளையை மீறலாமா என்று சாஸ்திரம் ஓதுவார்! தாசி என்றால் என்ன கேவலம், தேவர் அடியாள் என்று அர்த்தம். பகவானுக்குத் தொண்டு செய்வது! இது மகா சிரேஷ்டமல்லவா என்பார். தெரியாமலா நமது முன்னோர்கள், இப்படி தாசிகளை கோயில்களில் ஏற்பாடு செய்தார்கள் என்று கேட்பார். ஏதோ குலதர்மத்துக்கு ஏற்றபடி கோயிலிலே தொண்டு செய்ய வேண்டும். குடும்ப சடரட்சணார்த்தம், யாரோ ஒருவனோடு வாழ வேண்டும். இதுதானே முறை என்று கூறுவார். தேவலோகத்திலேகூட உண்டே, மேனகை, திலோத்தமை, ரம்பை, ஊர்வசி, இவர்கள் எல்லாம் யார்? என்று கேட்பார். குருக்களின் பேச்சுக் கேட்டுக் கேட்டு, அக்கா திருந்தினாள் - திருந்தினாள் என்று அப்போது எண்ணினேன். கெட்டாள் என்று இப்போது கூற வேண்டும்.

அக்காவின் உறுதி, முருகன் மீதிருந்த ஆசை எல்லாம் பறந்தது! மாயனூர் ஜமீன்தாரின் நேசம் கிடைத்தது. விதவிதமான நகைகள்! பெட்டி பெட்டியாகப் புடவைகள். வண்டிகுதிரை! ஆட்கள்! ஜமீன்தார் வாரி இறைத்தார் பணத்தை அக்காவுக்கு. பிறகு, புதுமோஸ்தர் புடவை, புதுதினுசு வளையல், மேல்ஆசை போயிற்று. முருகனாவது கந்தனாவது! ஜமீன்தார் அக்கா போட்ட கோட்டை மீறுவதில்லை. அக்காவைக் கண்டு கண்டு அம்மா பூரித்தார்கள். எனக்கும் கொண்டாட்டந்தான். ஜமீன்தாரிடம் நான் பேச கூச்சப்பட்டாலும், அம்மா தாராளமாக இருக்கச் சொல்வார்கள் அவரும், குட்டி, தண்ணீர் கொண்டு வா, விசிறி எடு, வெற்றிலைப் பெட்டி எடு என்று எனக்கு வேலை கொடுத்தபடி இருப்பார். அக்காவுக்கு நகை செய்தால் எனக்கும் செய்வார். இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நாட்களிலே ஒரு நாள் நான் புஷ்பவதியானேன். தடபுடல் சொல்ல வேண்டியதில்லை. கச்சேரிகளும் விருந்தும் பலம். ஆனந்தமாக வாழ்ந்து வந்தோம். இப்படியிருக்கும்போது ஒரு நாள் நான் மாடியில் உலாவிக் கொண்டிருந்தேன். எதிர் வீட்டு மாடியிலே புதிதாக ஒரு வாலிபர் உலவினார். யார் இது புதிதாக இருக்கிறாரே என்று எண்ணி, உற்று நோக்கினேன். இளைஞரும் பார்த்தார். அதுதான் முத்து! புன்சிரிப்பாக என்னைப் பார்த்தார். நான் கூச்சமடைந்து தலை குனிந்தேன். அவர் கனைத்தார். நான் மறுபடியும் அவரைப் பார்த்தேன், சிரித்தார். நான் உள்ளே ஓடிவிட்டேன். வியர்வை பொழிந்து விட்டது. எனக்கு மார்பு படபடவென அடித்துக் கொண்டது. முகமே மாறி விட்டது. அன்றுதான் ‘ஆசை’ என்பது எனக்குத் தெரிந்தது.

என் ஆசை வளர்ந்தது. அவர்தான் அதனை வளர்த்தார். மாலையிலே அவரது சீட்டைச் சத்தம் கேட்கும், நான் மாடிக்குச் செல்வேன். இருவரும் அலங்காரத்துடன்தான் இருப்போம். அவர் கையிலே ஏதாவது புத்தகம் இருக்கும். என்னிடம் பின்னல் குட்டை இருக்கும். கண்கள் ஒன்றை ஒன்று பார்க்கும். கலகலவெனச் சிரிக்க மாட்டோம். வளர்த்துவானேன். அக்காவுக்கு முருகன்மீது இருந்த ‘பித்து’ எனக்கு, முத்துமீது ஏற்பட்டு விட்டது. அவர் சேதி பூராவும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். அவர் சீமைக்குப் போகிறார் படிக்க, இது அவர் அத்தைவீடு, என்பது தெரிந்தது. இடையே கடிதங்கள் பறந்தன எங்களுக்குள். எப்படியோ எனக்கொரு தைரியம். எங்கள் வீட்டு புதிய வேலைக்காரியும் எனக்கு உதவியாக இருந்தாள். காதற்கனிரசமே, கண்மணியே, கட்டிக்கரும்பே, இன்பமே என்ற அடுக்கு வார்த்தைகள் அம்புகள் போல் பாய்ந்தன. நான் சபலித்து விட்டேன். முருகனை மணந்து வாழ்வதையே, மேலானது என்று என் அக்கா முன்பு சொன்னாளல்லவா, அதெல்லாம் என் கவனத்திற்கு வந்தது. முத்து பி.ஏ., பிரபல குடும்பம். இவர் என்னை மணம் புரிந்து கொண்டால், எவ்வளவு சந்தோஷமாக வாழலாம் என்ற ஆசை பிறந்தது. தன் உயிரையே தத்தம் செய்வதாகவும் அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் நம்பினேன். ஒரு நாள் துணிந்து ‘என்னைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதமா?’ என்று எழுதிக் கேட்டேன். டாக்டரே! என் வாழ்க்கையே அந்தக் கடிதத்திற்கு வரும் பதிலை பொறுத்திருந்தது. என்ன பதில் வந்தது தெரியுமா முத்துவிடமிருந்து.”

“முடியாது என்று வந்திருக்கும்” என்று சுந்தரேசன் கூறினான்.

“இல்லை! ஆகட்டும் என்ற பதில் கிடைத்தது. என்மனம் துள்ளிற்று, அக்கா தோற்றாள், நாம் ஜெயித்தோம், அக்கா ஒரு பாட்டுக்காரனைக் கலியாணம் செய்து கொள்ள முயன்று முடியாது போய்விட்டது. நமக்கோ ஒரு பி.ஏ. வருகிறார் என்று நான் கொண்ட சந்தோஷம் இவ்வளவு அவ்வளவல்ல!

உடனே நான் அக்காவிடம் விஷயத்தைக் கூறினேன். கமலா அன்று விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இருக்கிறதே அது இன்னமும் என் காதிலே கேட்கிறது.

“பலேடி விமலா! பலே! சரியான ‘கை’ தான் பிடித்து விட்டாய்” என்றாள். எனக்குக் கோபந்தான். இருந்தாலும் என்ன செய்வது? முன்னே நான் அவளைக் கேலி செய்ய வில்லையா?

“அக்கா கேலி செய்ய வேண்டாம், அவரும் சம்மதிக்கிறார்; அம்மாவிடம் சொல்லி...” என்று இழுத்தேன்.

“ஆஹா! நல்ல முகூர்த்தம் பார்த்து வைக்கிறேன்” என்றாள் கமலா.

“உன் தங்கை, உனக்கு வேண்டுமானால் செய். இல்லை யானால் உனக்கொரு தங்கை இல்லை என்று முடிவு செய்து

கொள்” என்ற முடுக்காகச் சொன்னேன்.

“அவ்வளவு ஏறிவிட்டதா தலைக்கு! ஏது, ஆசாமி ரொம்ப கெட்டிக்காரன் போலிருக்கு. சரிதான், பொம்மை போல சிங்காரித்துக் கொண்டு உலாவி சிரித்து, உன்னை மயக்கி
விட்டானா, சரி” என்றாள் கமலா.

பிறகு சில நாட்கள், நான் முன்பு கமலாவுக்குப் படித்த பாடத்தை அவள் எனக்குத் திருப்பிப் படித்தாள்.

“அக்கா! அந்தக் காலத்திலே நீ சொன்னதை நான் சிறு பெண்ணாக இருந்தாலும், தவறு என்று எண்ணினேன். என்னை மன்னித்துவிடு. இப்போது அதற்காக என்மீது பழிவாங்காதே” என்று கெஞ்சினேன். கமலாவுக்கு மனம் இளகி, என் தலையைத் தடவிக் கொடுத்து “விமலா! விஷயம் தெரியாமல் வீணாக வேதனைப்படுகிறாய். தாசிகளை அனுபவிக்கத்தான் அவர்களெல்லாம் விரும்புவார்களேயொழய, கலியாணம் செய்து கொள்ள மாட்டார்கள். சும்மா சொல்லுவார்கள். பிறகு கலியாணம் செய்து கொண்டால்தானா, தாலி ஒன்று கட்ட வில்லை, மற்றபடி, உன்னை என் சொந்த மனைவி போலவே நடத்துகிறேன் என்று கொஞ்சுவார்கள். பைத்யமே, அதிலே மயங்காதே. நானுந்தான் இன்று சொல்லுகிறேன் உண்மையை. முருகன்மீது எவ்வளவோ ஆசையாக இருந்தேன். அவன் எனக்காக உயிரைக் கொடுப்பேன் என்றான். பிறகு ஏன் நான் அவனை மறந்து விட்டேன்...” என்று முடிப்பதற்குள் நான், “ஆமாம்! குருக்கள் ஏதேதோ சொல்லி உன் மனதைக் கலைத்து விட்டார்” என்று படபடப்புடன் கூறினேன். “முட்டாளே, நீயும் அப்படித்தான் எண்ணுகிறாய். அம்மாவும் அப்படித்தான் நினைக்கிறார்கள், குருக்களும் தன் சாமர்த்தியத்தினாலேயே என்னை ‘மசிய’ வைத்தாகச் சொல்கிறார். ஆனால் நான் இணங்கியதற்குக் காரணம் வேறு.”