அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
15
                     

“இது எனக்குத் துளியும் பிடிக்கவில்லை. நமது பக்கத்திலே இருக்கும் காங்கிரசை வடக்கே இருக்கிறவர்கள் ஆட்டிவைப்பது என்றால், அது என்ன நியாயம்” என்று கேட்டார் இளையபூபதி. ஐயர் புன்சிரிப்புடன் “நான் சொன்னேனா நியாயம் என்று. நிலைமை அவ்விதம் இருக்கிறது. அது சரியா, தவறா என்பதைப் பற்றிச் சர்ச்சை செய்து கொண்டிருப்பதா நம் வேலை. காரியமல்லவா முக்கியம்! காங்கிரசிலே சேர்ந்தோம் காசும் கொஞ்சம் செலவிட்டு, கேவலம் ஒரு ஜில்லா போர்டுக்குப் போய் உட்காருவதுதானா நமது நோக்கமாக முடிந்து விடுவது! வண்டிப் பட்டறை வரதராஜுலுவும் வாணக்கடை கோவிந்தனும் கூட ஜெயித்திருக்கிறார்கள், இந்த ஜில்லா போர்டு தேர்தலில் - காங்கிரசின் தயவினாலே! அப்படி ஜெயித்தவர்களுடன் ஒருவராக - பத்தோடு பதினொன்றாக - இருந்து விடுவதா! செச்சே! உமது அந்தஸ்துக்கு இது போதாது. வடக்கே சென்று பெரிய காங்கிரஸ் தலைவர்களைக் கண்டு பேசி அவர்களுடைய சினேகிதத்தைப் பெற்றுக் கொண்டு வந்து விட்டால் மாகாணக் காங்கிரசிலே உமது மதிப்பு உயர்ந்துவிடும். மந்திரி வேலையும் நிச்சயமாகக் கிடைத்துவிடும். பாஷை தெரியாத ஊரிலே போய் நாம் யாரைப் பிடித்து இந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்வது என்று யோசிக்கிறீரு. தெரிகிறது உமது முகத்திலிருந்து! அதற்குக் தக்க ஏற்பாடு செய்து விட்டேன். என் உறவினன் ஒருவன் டில்லி
யிலே வேலையில் இருக்கிறான் - சர்க்கார் உத்யோகம் - அவனுக்குப் பெரிய பெரிய தலைவர்களெல்லாம் பழக்கம். அவன் நமக்குச் சகல உதவியும் செய்வான்.” என்றார் “பலே ஆசாமி ஐயா நீர்!” என்று இளையபூபதி பாராட்டினார். காங்கிரஸ் தலைவர்களைக் கண்டு பேசி நமது காரியத்துக்குச் சாதகமான நிலைமையையும் உண்டாக்கிக் கொள்ளலாம்; அதோடு காசி கயா பிரயாகை அயோத்தி பண்டரிபுரம் முதலிய திவ்ய ஷேத்திரங்களையும் தரிசித்துக் கொண்டு, போகிற கதிக்கு நல்லதும் தேடிக் கொள்ளலாம் - பல வகையிலும் பலன் உண்டாகும்” என்று ஐயர் கூறினார். “யாத்ரை போகிற மாதிரியாகக் கிளம்ப வேண்டியதா?” என்று கேட்டார் இளையபூபதி “அடடா! முக்கியமான விஷயத்தைக் கூறாமல் மற்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்து விட்டேனே. அடுத்த மாதக் கடைசியில் அகில இந்தியக் காங்கிரஸ் அரிபுராவிலே நடைபெறுகிறது - நாம் அதற்குப் போகிறோம் - அப்படியே இந்தக் காரியமெல்லாம் முடித்துக் கொள்கிறோம்” என்றார். ஐயர் சொன்ன பிறகு மளமள வென்று ஏற்பாடுகளைச் செய்தார் இளையபூபதி. பணமுடை, பரவாயில்லை; முந்திரித் தோப்பை விற்றுவிடு என்றார் கணக்கப் பிள்ளையிடம். வேறு சில இடங்களிலே பணம் கடன் வாங்கினார். சில நகைகளையும் விற்றார். ஆக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது. நானும் ஐயரும் இளையபூபதியுடன் முதல் வகுப்பு வண்டியிலே கிளம்பினோம். ரங்கன் மூன்றாவது வகுப்பிலே வந்தான்.

பல வருஷங்களாகக் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ தொடர்பு இருந்தாலல்லவா, இளைய பூபதிக்கு, அரிபுராவில் என்னென்ன நடைபெறும்’ யாரார் வருவார்கள், என்னென்ன பேசுவார்கள் என்பது தெரியும். புதுத் தொடர்பு; அதிலும், பழைய ஜமீன்தாரிடம் கொண்டிருந்த பகைமையைக் காட்டிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் என்பதற்காகத்தானே, இளையபூபதி எலக்ஷனிலேயே ஈடுபட்டார்! எனவே அவருக்கு, அவ்வளவு அக்கறை இல்லை, கட்சியிடமோ, அந்தக் கட்சியின் வேலைகள் என்று எதை எதையோ பற்றி ஐயர் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றியோ, கோயிலிலே அர்ச்சகர் செய்கிற சஹஸ்ர நாமத்தின் பொருள் விளங்கிவிடுகிறதா, அங்கு செல்லும் பக்தர்களுக்கு! தெரிவதில்லை - என்றாலும், அர்ச்சகரின் சத்தத்தைக் கேட்கும் போது சித்தத்தை அலையவிடுவது மகாபாபம் என்று எண்ணிக் கொண்டு, பயபக்தியுடன் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்! அதுபோலவே இளையபூபதி, காங்கிரசின் ஆரம்பம் - வளர்ச்சி - திட்டம் - காங்கிரசார் சர்க்காரிடம் போட்ட சண்டைகள் ஆகியவை பற்றி ஐயர் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டு வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தார். எனக்குச் சிரிப்புத்தான் - ஆனால் என்ன செய்வது! ஐயர் விஷயத்திலே இளையபூபதிக்கு, மதிப்பு அதிகமாகி விட்ட நேரம் அது. பயணத்தின் போத நடைபெற்ற பல விஷயங்கள், இளையபூபதிக்கு ஐயரிடம் இருந்த மதிப்பை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்ததது. ஏதாவதோர் இடத்திலே ரயில் நிற்க வேண்டியதுதான் தாமதம், ஐயர், கீழே இறங்குவார் - இப்பக்கம் அப்பக்கம் பார்ப்பார் - பார்த்து விட்டு, “அடடா! அனந்தகிருஷ்ணய்யரா? என்று ஆச்சரியத்துடன், கூறுவார் - கைதட்டி அழைப்பார் - காதிலே வைரக் கடுக்கனும், விரல் களிலே வைர மோதிரங்களும் மின்ன, கட்டப்பட்ட பற்களிலே வெண்மை மின்ன, யாரேனும் ஓர் வயோதிகர் வருவார் இருவரும் அளவளாவுவர் - ரயில் புறப்படும்வரை. பிறகு, ஆரம்பிப்பார் ஐயர், “என் பால்ய சினேகிதன் அனந்தன்! மைசூரில் பிரபல வக்கீல் - மாதம் பத்திலிருந்து பதினையா யிரம் வரையில் வருமானம் அனந்தகிருஷ்ணனுக்கு - அருமையான ஜாதகம். அவனுடைய பார்யாளை, முதலிலே எனக்குத் தருவதென்றுதான் ஏற்பாடாயிற்று. பிறகு ஜாதகப் பொருத்த மில்லை என்று கூறி, அந்தச் சம்பந்தம் வேண்டாமென்று கூறி விட்டோம். நம்ம அனந்தன், கல்கத்தாவுக்குப் போகிறானாம். கபூர்தலா மகாராஜாவுக்கும் இவனுக்கும் பல வருஷ சினேகிதம் அவர் என்னமோ, சீமைக்குப் போகிறாராம், போவதற்கு முன்பு அனந்தனைப் பார்த்தாக வேண்டுமென்று தந்திமேல் தந்தி கொடுத்தாராம் - அதற்காகத்தான் அனந்தகிருஷ்ணன் புறப்பட்டி ருக்கிறான். எப்போதுமே அவனுக்கு, சினேகிதன் என்றால் உயிர்” என்று ஒரு மூச்சு, அனந்தகிருஷ்ண புராணம் படிப்பார். டாக்டர், என்ஜினியர், பாரிஸ்டர், ஜட்ஜு, சூபரின்ட்டு, இப்படித்தான் அகப்படுவார்கள் வழி நெடுக. “பிராணனை வாங்கினான் காப்பி சாப்பிட்டத்தான் என்று, கொடுடாப்பா உனக்கேன் மனக்குறை என்று கூறி, ஒரு முழங்கு கொட்டிக் கொண்டேன்” என்று கூறி குருசாமியின் குணாதிசயம், அவனிடம் உள்ள குச்சுநாயைப் பெங்களூரில் ஆறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கின பெருமை, இப்படிப் பேசுவார். உண்மையிலேயே, பலர், ஐயரிடம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டனர். ஐயர், பலருக்குத் தெரிந்த பேர்வழி என்பதிலே சந்தேகமில்லை. ஏற்கனவே இளையபூபதிக்கு இருந்த மதிப்பு, இதனால் வளராமல் இருக்க முடியுமா! இளைய பூபதி ஐயரிடம் விசேஷ மதிப்புக் காட்டும்போது, நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா? கால் பங்கு பயணமாவதற்குள், ஐயர், பெரிய மனது வைத்து, எங்கள் இருவரையும் அழைத்துச் செல்கிறார் என்று பலர் எண்ணும்படியான நிலை உண்டாயிற்று - உண்மையோ, ஐயருடைய காப்பி வெற்றிலைப் பாக்குச் செலவு உள்பட, இளையபூபதியுடையது! என்ன செய்வத! இப்படிச் சிலருக்கு யோகம்! தந்திரம் ஒன்று தவிர வேறு முதல் போடுவதில்லை, அவர்கள் - ஆனால் வாழ்க்கை வியாபாரத்திலேயோ அவர்களுக்குக் கிடைக்குமளவு இலாபம், வேறு பலருக்குக் கிடைப்பதில்லை. ஐயர், அந்த ரகத்தைச் சேர்ந்தவர்.

காங்கிரசிலே, முக்யஸ்தர்கள் என்று, சிலரை, இளைய பூபதியிடம் ஐயர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“நம்ம ஜமீன்தாரர் காங்கிரசிலே சேர்ந்த பிறகு, ஜில்லா கலெக்டருக்குத் தூக்கமே கிடையாது - என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று திகில். அவர் அப்படிப் பயப்படுவதிலேயும் அர்த்தமில்லாமலில்லை - ஏனெனில் ஜமீன்தாரர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், ஜனங்கள், எதை வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் - போலீசாலும் முடியாது - பட்டாளத்தாலும் முடியாது, ஜெனங்களை அடக்க” என்று ஒருவரிடம் கூறுவார். இளையபூபதியின் கரங்களைப் பிடித்துக் குலுக்குவார், அந்தப் பிரமுகர் - இஷ்ட தெய்வத்தைத் தரிசித்தவர் போலாவார். “உண்மையிலே, உம்போன்றவாதான், இந்த சுயராஜ்யப் போரை முன்னாலிருந்து நடத்த வேண்டியவா. ஏனென்கிறீரோ! இந்த வெள்ளைக்காரன் நம்ம ராஜ்யத்தை உம்போன்ற பிரபுக்கள், ராஜாக்கள், மகாராஜாக்களிடமிருந்துதானே அபகரிச்சிண்டா; ஆனதாலே இப்ப அவாளை எதிர்த்துப் போராட வேண்டியவர், நீங்கள் தான்! உம் போன்றவாளுடைய வீரதீரம், நம்ம பாரதமாதாவுக்கு ஜெயத்தை நிச்சயமாகத் தரும். வந்தே மாதரம்! அடுத்த ஜங்ஷனில் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுப் போவார். ஐயருக்கு, தன்னிடம், மிகுந்த அக்கறை, அதனாலே, பல பெரிய மனிதர்களிடம், தன்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து பேசுகிறார், என்று எண்ணிக் களிப்பார், இளையபூபதி. இவ்விதம் எங்கள் பிரயாணம் ரம்மியமான தாகத்தான் இருந்தது - முத்துராமலிங்கம் வந்து சேருகிற வரையில். எப்படியோ, ஏனோ, தெரியாது, அவன் ஏதோ ஒரு இன்ஷுரன்ஸ் கம்பெனி வைத்து நடத்தி, ஐம்பதாயிரமோ அறுபதாயிரமோ, “மோசம் செய்து விட்டதாக, எவனோ பொறாமையினாலே பொய்க் கேஸ் ஜோடித்து விட்டான்.” என்றார். “கேஸ் ஜோடித்ததோ, நிஜமோ, தண்டனை நிச்சயமாகி விட்டது” என்றார் முத்துராமலிங்கம், கொஞ்சம் கேலியாக. கோபம் வெடித்துக் கொண்டு வந்தது ஐயருக்கு. “உனக்குத் திருப்திதானே! பிராமணத் துவேஷீ!” என்று கூவினார். முத்துராமலிங்கம் சிரித்துவிட்டு, “வார்த்தைகளை, ஜாக்ரதையாக, ஒழுங்காக, அளந்து, பேச வேண்டும் ஐயர்” என்றார். “அது உன் பிரசங்கத்திலே வைத்துக் கொள். அந்தக் கேலி - கிண்டல் - குத்தல் - இதெல்லாம். என்னிடம் வேண்டாம். என் தம்பி அயோக்கியன், மோசக்காரன் என்பது உன் தீர்ப்பு...” என்று பேசிக் கொண்டிருக்கையில், முத்துராமன், அவரை மடக்கி “என் தீர்ப்பா! கோர்ட் தீர்ப்பய்யா! நீர் இங்கு கொக்கரிக்கிறீர் - என்ன செய்வது - அங்கே, உன் தம்பியே குற்றத்தை ஒப்புக் கொண்டாராமே” என்றார். “ஆமாம் ஒப்புக் கொள்ளாமல் என்ன செய்வான். நியாயம் வழங்கும் அதிகாரி, ஒரு பிராமணத் துவேஷி - மேலும் சர்க்கார் குலாம் - என் தம்பி என்ற உடனே காங்கிரஸ்காரன், தம்பியைத் தண்டிக்க வேண்டு
மென்று தீர்மானித்து விட்டான். காலம் அப்படி இருக்கிறது. இது தெரிந்தது, என் தம்பிக்கு. “என்னமோண்ணா! எனக்குக் கிரஹம் சரியாக இல்லை - வீணாகத் கேஷûக்குப் பணத்தைப் போட்டு பாழாக்க எனக்கு இஷ்டமில்லை. நான் குற்றம் செய்தேன் என்று கூறியே விடுகிறேன்” என்று என்னிடம் சொன்னான் - யுசித்தம் போல் செய்யடாப்பா என்று சொன்னேன். அவனைத் தண்டித்து விட்டார்கள். தண்டித்து விட்டதாலேயே அவன் குற்றவாளி என்று கூறிவிடலாமா? உன் நாக்கு அழுகாமலிருக்குமா? உன்வாழ்வு, எப்போதுமா இப்படியே இருக்கும்? பிராமணர்களும், என்னென்ன இம்சை வரும், ஆபத்து ஏற்படும், நாசம் சம்பவிக்கும் என்று சதா மனதிலே எண்ணிக் கொண்டே இருக்கிற, மகாபாபியாச்சே நீ, உன் கதி, கடைசி காலத்திலே, எப்படி ஆகிறதுபார் - புழுத்துச் சாகப் போகிறாய்” என்று, ஐயர் ஆத்திரமும் அழுகுரலும் கலந்த குரலில் கூவினார். இளையபூபதி, “என்ன இருந்தாலும் பெரியவர்களை இப்படி இம்சிக்கக் கூடாது” என்று ஐயர் சார்பில் பேசினார். என் பார்வையும், முத்துராமலிங்கத்துக்குச் சாதகமாக இல்லை - ஆனால் அவன் இதற்கெல்லாம் அஞ்சவுமில்லை - தன் போக்கை மாற்றிக் கொள்ளவுமில்லை. “ஆத்திரப்பட்டுக் கூவாதீர், ஐயரே! மண்டை வெடிக்கக் கடவது, மாடு ஆகக்கடவது - என்று சாபம் கொடுக்கிற காலமல்ல இது - அது, அந்தக் காலம்” என்று மீண்டும் கேலியாகப் பேசினான்.

“உன்னை யாரும் இங்கே அழைக்கவில்லை - அந்தக் காலம் இந்தக் காலம் என்று பிரசங்கம் செய்யச் சொல்லி” என்று சற்றுக் கோபமாகவே இளையபூபதி கூறினார். “ஆமாம், இதற்கு அழைப்பீர்களா? ஓட்டு வேட்டைக்குப் பிரசங்கள் செய்வதற்கு மட்டும்தான் அழைப்பீர்கள் - தெரியுமே எனக்கு” என்று இளையபூபதிக்கும் சாட்டைக் கொடுக்க ஆரம்பித்தான் முத்து ராமலிங்கம்.

“வாயாடிகளுக்கு இது காலம் போலிருக்கிறது” என்று வேதாந்தம் பேசினார் ஐயர். இளையபூபதியின் முகம் சிவந்தது - முத்துராமலிங்கத்தைப் பார்த்து, “உன் போக்கிரித் தனமான பேச்சுக்கு, இந்த இட பேதம் அனுமதி தந்து விட்டது. ஊரிலே நீ இதுபோலப் பேசியிருந்தால், உன் வாலை ஒட்ட நறுக்கச் சொல்லி இருப்பேன்” என்று கூறினார். இதேது வழியிலே சண்டை முற்றிவிடும் போலிருக்கிறதே, என்றெண்ணி நான் பயப்பட்டேன். இளையபூபதி போர்க்கோலம் பூண்ட உடனே, ஐயரின் முகத்திலே புதிய களை உண்டாயிற்று. “தோலை உரித்து விடச் சொல்லியிருப்பேன்” - என்று கோபத்தை வார்த்தைகளாகக் கொட்டினார் இளையபூபதி. முத்துராமன் மீண்டும் சிரித்துக் கொண்டே, “வாலை நறுக்க, தோலை உரிக்க, உன்னாலே முடியாது - ஆள் வைத்துத்தானே செய்ய வேண்டும் - அசகாயசூரன் நீ, என்பது இதிலிருந்தே தெரிகிறதே” என்று மேலும் கேலிசெய்தான். இளையபூபதி, அவனை அடிக்கக் கையை ஓங்கினார். போக்கிரி மடையன்! குடிகாரன்! சண்டாளன்! துராத்மா! என்று, ஆத்திரமாகக் கூவினார் ஐயர், உட்கார்ந்தபடியே. நான் அலறினேன் - இளையபூபதியைப் பிடித்திழுத்து, “இதென்ன வம்பு! ஓடும் ரயிலில் சண்டையா?” என்று இளையபூபதியிடம் கூறிவிட்டு, முத்துராமனைப் பார்த்து, “யாரய்யா நீ, கொஞ்சம் கூட நியாயமாக இல்லை நீ செய்கிறகாரியம் - வலுவில் சண்டைக்கு வருகிறாய். தாறுமாறாகப் பேசிக்கொண்டே இருக்கிறாய். பெரிய லீடர் என்றார்கள் உன்னை - பொதுஜனசேவை என்பது இது தானா!” என்று கோபமாகக் கேட்டேன். அவன், என்னைக் கவனிப் பவனாகவே தெரியவில்லை. இளையபூபதியைப் பார்த்த படியே, “இது நல்ல உபாயந்தான். சூரரே!சரியான உபாயம். கூட ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வருவது - கோழைத் தனத்தை மறைக்க பெருமையாகக் கூறிக் கொள்ளலாமல்லவா, எனக்குப் பிரமாதமான கோபம் வந்தது, அடித்துக் கொன்று விட்டிருப்பேன் - ஆனால் கூட, பெண் இருந்தாள் - புலம்பினாள் - அதனாலே பயலைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் என்று பேசிக்கொள்ளலாமல்லவா! அற்காகவே, பிரயாணத்தின்போது உன் போன்ற கோழைகள், பெண்களை அழைத்துக்கொண்டு வருவது” என்று கூறினான் இளையபூபதியால் அதற்கு மேல் தாங்கமுடியவில்லை. “மடையா! என்று அவர் கூறிய சொல் மட்டுந்தான் என் காதிலே விழுந்தது - பெரும்போர் மூண்டு விட்டது - சரியான சண்டை! ரயில் ஓடுகிறது - ஐயர் கூவுகிறார் - நான் அலறித் துடித்து அழுகிறேன் - அந்த இரண்டு காளைகளும், ஒன்றை ஒன்று தாக்கிக் கொள் கின்றன. கீழே வீழ்கிறார் பூபதி - மேலே சாய்கிறான் அந்த அதிகப் பிரசங்கி - அவனைக் காலால் உதைத்துத் தள்ளுகிறார் இளையபூபதி - அவன் கீழே சாய்கிறான் - பூபதியின் கால் செல்கிறது, அவன் மார்புக்கு நேராக - அவனோ, உதை தன்மீது விழாதபடி தடுத்துக்கொண்டு, இளையபூபதியின் காலைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளுகிறான். இப்படியே சண்டை நடக்கிறது. நான் மிகவும் பயந்து போனேன் - ஐயர் கோவெனக் கதறவே ஆரம்பித்தார் - எனக்குத் திடீரென்று ஓர் யோசனை உதித்தது.

“ரயிலை நிறுத்து ஐயரே! சங்கிலியைப் பிடித்து இழு” என்று கூவினேன் - ஐயர் தயங்கினார் - நானே சங்கிலியை பிடித்து இழுத்துக்கொண்டே, “வண்டி நிற்கட்டுமடா போக்கிரி, ரங்கனைக் கூப்பிட்டு, உன் மண்டையைப் பிளக்கச் செய்கிறேன்” என்று கூறினேன். சபாஷ்! - என்று கூவினார் ஐயர். வண்டிமெது வாக நின்றது. இளைய பூபதியும் முத்துராமலிங்கமும், சண்டையை நிறுத்தவில்லை. பலர் ஓடி வந்தார்கள் ஐயர், “அனந்தராம்! ஆத்மானந்தம், குமாரசாமி! -” என்று வண்டியி லிருந்த தன் நண்பர்களைக் கூவி அழைத்தார். நான் ரங்கா! ரங்கா! என்று கூவினேன். புலிபோலப் பாய்ந்தோடி வந்தான் ரங்கன் - நிலைமையைக் கண்டான் - ஒரே குத்து - முத்துராமலிங்கம் கீழே வீழ்ந்தான். இரண்டாவது குத்துக்கு, முத்துராமனின் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டிற்று. இளையபூபதி களைத்துச் சாய்ந்து கொண்டார் - ஐயர் விசிறியபடி, என்ன விஷயம், என்ன விஷயம் என்று கேட்டவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். போலீசும் வந்துவிட்டது. முத்துராமனைப் பிடித்துக் கொண்டார்கள்.

“திருட்டுப்பயல்! ஜமீன்தாரர் இளையபூபதியின் பணப் பெட்டியைக் களவாட நுழைந்தான் - அவர் விடவில்லை - அடித்து நொறுக்கினார்” - என்பது ஐயர் கட்டிவிட்ட கதை. அங்கு கூடினோர் யாவரும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர் சந்தேகம் துளியும் கொள்ளாமல். நான் சற்று திகைத்தேன் ஐயரின் முகத்திலே வெற்றிக்களை! முத்துராமனைப் போலீசார் இழுத்துச் சென்றனர். அவன் போகும்போது என்னைப்பார்த்து “இதுதானம்மா இவர்கள் கையாளும் முறை என்று -” கூறிக்கொண்டே ஐயரைக் காட்டினான்.