அறிஞர் அண்ணாவின் புதினங்கள்

கலிங்கராணி
10
                     

முதியவர் புன்னகையுடன், “நமது புலவர் பெருமக்களின் சொல், நமக்கு வரும் இடையூறுகளைப் போக்கும். கேள் கரிமுகா, கலித்தொகையிலே ஓரிடத்திலே, தலைவனைப் பிரிந்த தலைவி, தனியாக இருக்கிறாள்; முகத்திலே வாட்டம் கப்பிக் கொண்டிருக்கிறது. தலைவனோ, பொருள் ஈட்டச் சென்றவன் வந்தபாடில்லை. தலைவியோ பிரிவினால் பெருந்துயர் உறுகிறாள். அதனை அவள் பேசிக் கொண்டா இருந்தாள்? பேசுவானேன், அவள் முகமே அகத்திலே ஆழ்ந்து பதிந்திருந்த கவலையை எடுத்துக்காட்டிற்று. நல்ல சித்திரம், சிதைந்தால் என்னென்போம்? பாழ்பட்டது என்று கூறோமா! அந்தத் தலைவியின் முகத்தைக் கவி, “பாழ்பட்ட முகம்” என்றுதான் கூறுகிறார்.

தலைவனுடன் கூடி வாழ்வதே வாழ்வு, தலைவியின் முகம், அந்த வாழ்க்கை இன்பம் இருந்தால் மட்டுமே பொலிவுற்று விளங்கும். காதுவரை வளர்ந்த மான்விழி கொண்ட மங்கையாக இருக்கலாம்; சுருண்டு அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ என்று கூறும்விதமாக இருக்கலாம்; முல்லைப் பற்களிருக்கலாம் ஆனால், இவை இருப்பதால் முகத்திலே பொலிவு உண்டாகி விடாது. அந்த விழிகள், காதல் கனிந்தொழுகும் இரு வேறு விழிகளோடு சந்திக்க வேண்டும், அப்போதுதான் முகத்திலே “பொலிவு” தவழும். மயிலுக்குத் தோகை உண்டு, ஆனால் விரித்து ஆடினால்தானே தோகையின் அழகு தெரியும்! மாதரின் முகப்பொலிவு, காதலரின் பிரிவினால் மங்கி மறைகிறது, மயில்தோகையை அடக்கி மடக்கிக்கொண்டு இருப்பது போலாகி விடுகிறது. அந்த நிலையைத்தானே “பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்ட மை வாளோ,” என்று அழகாகக் கூறினார். “இது கலித்தொகை கரிமுகா!” என்றார் ஆசான்.

“மன்னிக்க வேண்டும் பெரியவரே! நான் காதற் கவிதைகளைக் கேட்டு இன்புற வந்தேனில்லையே. தலைவனைப் பிரிந்த அத்தலைவியின் முகம் பாழ்பட்ட கதை கிடக்கட்டும், என் முகத்தைப் பாரும் சற்று” என்று சலித்துக் கூறினான். சிரித்து விட்டு, பெரியவர், “கவி, அதை மறந்தாரென்றா எண்ணினாய்? பித்தா! கேள் இதை. தலைவியின் முகம் பாழ்பட்டது என்று கூறிய÷õடு திருப்தி பெறவில்லை. தலைவியின் முகநிலை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக்க, கவி கூறினார்:

“ஆள்பவர் கலக்குற
உலைபெற்ற நாடுபோற்
பாழ்பட்ட முகத்தோடு
பைதல்கொண்ட மைவாளோ”
ஆட்சி சரியில்லை, மக்களின் மாட்சிமையும் சரியிராதல்லவா? கோல் நேர்வழி நில்லாது அலைகிறது, மக்களின் கண்களிலே அதனால் நீர் அலைகிறது. மக்கள் பொலிவு குன்றிவிடுகிறது. தீய ஆட்சியினால் மக்களின் முகம் கவலையின் இருப்பிடமாகி விடுகிறதே, அதுபோல இருந்தது தலைவனைப் பிரிந்த தலைவியின் முகம் - இதுவன்றோ கவியுள்ளம். கரிமுகா! புரிந்ததா ஏடு படிக்கும் நோக்கம்?” என்று முதியவர் கேட்டார்.

“நன்றாய்ப் புரிந்தது. மதிமிக உடையோய், தங்கள் மனநிலை தெரிந்தேன், மகிழ்ந்தேன். இன்பம் தர வேண்டிய தலைவன் இல்லை, தலைவியின் முகத்தில் பொலிவு இல்லை, நீதி தரவேண்டிய அரசநெறி இல்லையானால் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. உண்மை, உண்மை. மீண்டும் பொலிவு பெற...?” என்று கேட்டான் கரிமுகன்.

“என்ன செய்வது? இதுபோல் ஏடு படிப்பதுதான் வழி” என்றார் முதியவர்.

“மீண்டும் விளையாட்டா? இவ்வேளையிலா?” என்று முணுமுணுத்தான் கரிமுகன்.

“கரிமுகா, கேள்!

“ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்
குலையாது காத்தோம்பி
வெல் புகழுலகேத்த
விருந்து நாட்டுறைபவர்”

மன்னரின் மாண்பு விளக்கமப்பா இது! கடும் வெயிலில் நடந்து செல்கிறாய், களைக்கிறாய், பாதையிலே ஓர் மரம் கண்டாய், அதன் நிழலில் ஒதுங்கினாய்! குளிர்ச்சி கண்டாய். உடனே அந்த மரம் “ஓ, நீ போக வேண்டிய பாதை அது. அங்கு வெயில் என்று இங்கேன் வந்தாய் என்றா கூறும்! அதுபோல், நாம் இருக்கும் நாட்டிலே நல்லாட்சி இல்லையானால், நல்லாட்சி உள்ள இடத்துக்குப் போய் வாழலாம். ஆனால் அது நமக்கு மட்டுமே தானே நலன் பயக்கும். நம் நாட்டவர் அனைவரும் நலிய நாம் மட்டும் மகிழ்ந்திருப்பது நல்லதல்லவே. பாதையிலே நமக்கோர் நிழல்தரும் மரம் கிடைத்தது, அது நம்முடன் வந்தவண்ணம் இருக்குமோ? ஆகவே நல்லாட்சி இல்லாவிடத்து, நல்லாட்சி ஏற்படுத்த, அண்டை அயலிலிருக்கும் அரசர் படை எடுத்து வருதலும், தீய ஆட்சியை வீழ்த்தலும், நல்லாட்சி அமைத்தலும், மன்னர் மாண்புகளில் ஒன்று என்று தமிழ் கூறுகிறது. இன்னமும் தயக்கம் ஏன்?” என்று உணர்ச்சியுடன் கேட்டார்.

“அயல்நாட்டு மன்னரே வேண்டுமா? அன்றி...” என்று கரிமுகன் இழுத்தாப்போல் பேசினான். உடனே முதியவர், “அம்பு எதுவானால் என்ன? விலங்கு சாக வேண்டும்” என்றார்.
“தெளிந்தேன். உம்மை வணங்குகிறேன். மலர்புரி மக்களை இனி நான் விடுவிக்க முனைவேன்” என்று கூறிவிட்டுக் கரிமுகன் விடை பெற்றுச் சென்றான்.

அரசைக் கைப்பற்ற ஆரியன் அநேகவிதமான சூதுகள் செய்வது வீரமணிக்குத் தெரிந்தாலுங்கூட, அவைகளை முறியடிக்குமளவு போதுமான ஆதரவு கிடைக்காததால் பாய முடியாது திகைத்தான். அரசியுடன் அந்தரங்கமாகப் பேசினதில், காணாமற் போன பெண் விஷயமாக அரசி கசிந்துருகுவது தெரிந்தது. மறுபடியும் சந்தித்து முழு விவரமும் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. உத்தமனைக் கண்டு பேசவும் முடியவில்லை. இந்நிலையில் ஆரியன், தன்னைத் தேவிசேனையுடன் சந்தனக்காடு சென்று மலை வகுப்பினரை அடக்கும்படி கட்டளையிட்டதறிந்து கலங்கினான். தான் ஊரிலில்லாச் சமயத்திலே ஆரியன் யாருக்கு என்ன கேடு செய்து விடுவானோ என்று அஞ்சினான். ஆனால் மறுத்துரைக்கவோ கூடாது. தேவி சேனையுடன் வீரமணி தத்தளிக்கும் மனத்தினனாய்ச் சென்றான். ஆரியன் அப்படை ஊர் எல்லையைக் கடந்ததும் தொலைந்தது ஓர் பீடை என்று எண்ணினான்.

கரிமுகன் ஆசிரியர் மொழிகேட்டு, ஆயாசம் நீங்கி, உறுதி பெற்றுத் தன்படையின் முக்கியஸ்தர்களைக் கலந்தாலோசித்தான். கரிமுகனே மலர்புரி காவலனாக வேண்டுமென்று அவர்கள் கூறினார். புரட்சிக்கோர் நாள் குறித்துவிட்டான். புத்தாடை பூண்டு, பூமாலை சூடி, தேவி கோயில் சென்று வழிபாடு புரிந்தான். வாய் பிளந்து நின்ற மக்களிடம் “நான் இதுவரையில் தேவியை நம்பாதிருந்தேன். இப்போது தேவியின் பெருமையை உணர்ந்தேன். தேவாலயம் புகுந்தேன்” என்று கூறி, ஊர்வலம் வந்தான். கள்ளச் சிந்தனைக்கார ஆரியனின் உள்ளம் களிப்புடன் கூத்தாடிற்று. கரிமுகனின் காலம் முடிந்துவிட்டது என்று கருதினான். யுக்தியே யோகம், தந்திரம், தவம் என்று கூறிப் பூரித்தான்.

தேவிசேனை வேறாகவும், கரிமுகன் தலைமையிலிருந்த மலர்புரிப் படை வேறாகவும் இருந்தாலும், இரண்டுக்கும் தொடர்பு அறவே இல்லாமற் போகவில்லை. குதிரைகளின் தேய்ப்பு மேய்ப்புகளுக்கு ஒரே கூட்டத்தினர் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் தேவிசேனை சந்தனக் காட்டுச் சமருக்குப் புறப்படுகையில் உடன் வரவில்லை, ஒருவரிருவரே வந்தனர். இதனை வீரமணி ஊர் எல்லைபோனதும் தெரிந்து, ஆச்சரியப்பட்டு அவர்களிலொருவனை அழைத்து, “ஏன் மற்றவர்கள் வரவில்லை” என்று கேட்டான். “ஆரியர் உத்தரவு” என்றான் அவன். “ஏன்? படை கிளம்பும்போது உடன் வராதிருக்கலாமோ?” என்று வீரமணி கேட்க அவன், “கரிமுகனின் குதிரைப்படைக்கு அவர்கள் தேவையாம், அதற்காகவே, மலர்புரியில் தங்கிவிட்டனர். குதிரைகளைத் தேய்த்து மேய்த்து சரியான நிலைமையில் இருக்கச் செய்யும்படி ஆரியன் உத்தரவு பிறப்பித்தார். கடுமையான வேலைக்குச் சித்தமாகக் குதிரைப்படை இருக்க வேண்டுமாம்” என்றான்.

“வீரமணியின் முகம் கோபத்தால் சிவந்துவிட்டது. கரிமுகனின் படையைக் கொண்டு ஆரியன் ஏதோ காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன்; அதற்கு நாம் குறுக்கே நிற்போம் என்று அஞ்சியே சந்தனக்காட்டுக்கு நம்மை அனுப்புகிறான் என்று தெரிந்துவிட்டது. தேவிசேனையுடன் திரும்பி மலர்புரி சென்றாக வேண்டும் என்று எண்ணினான். உள்ளே தேவிசேனை நுழைந்ததும், ஆரியன் கோபித்துத் தன்னை கைது செய்து காரியத்தைக் கெடுத்துவிடுவானோ என்று அஞ்சினான். அவசரப்பட்டு, இதில் எதுவும் செய்வதற்கில்லையே என்று ஆயாசப்பட்டு மேலே படைகளை செல்லவொட்டாது நிறுத்தி அந்த இரவு கூடாரமடித்துத் தங்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு யோசிக்கலானான்.

தேவிசேனையை, கூடாரத்திலே இருக்கச் செய்தவிட்டுத் தான்மட்டும் தனியே மலர்புரி சென்று வருவதென தீர்மானித்தான். தன் பரி ஏறி, மலர்புரி சென்றான். எவருமறியா வண்ணம் தேவி கோயிலுக்குள் நுழைந்தான். ஆரியன் சிலருடன் மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்கக் கண்டு, அங்கோர் இடத்திலே பதுங்கிக் கொண்டான். கோயில் விளக்கை ஆரியன் தூண்டினான். அந்த வெளிச்சம், அவனுடன் கரிமுகன் நிற்பதைக் காட்டிற்று. வீரமணியின் உடல் நடுங்கிற்று. பலவான் சூதுகாரனுக்குத் துணை நிற்கிறானே என்று சோர்ந்தான்.

“தேவீ! உன் பக்தனை இனி நீதான் இரட்சிக்க வேண்டும்” என்று ஆரியன் சற்று உரத்த குரலிலே கூறினான். கரிமுகன் சிரித்துக் கொண்டே “தேவியை ஏன் அடிக்கடி இழுக்கிறீர். நான் நடையுடன் அரசியின் மாளிகையை முற்றுகையிடும்போது தேவியா எனக்குக் கத்தி கேடயம்? என்று கேட்டான். ஆரியன் அதற்கென்ன பதில் சொன்னான் என்பதைக் கேட்கவும் வீரமணி அங்கு தங்கவில்லை. பூனைபோல் மெல்ல அடியெடுத்து வைத்தான், கோயிற்சுவரைத் தாண்டினான், போர்வையை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டான். வெளியே நடந்தான். விரைவிலே ஊர்க்கோடி சென்று, அங்கோர் தோட்டத்திலே கட்டி வைத்திருந்த குதிரையை அவிழ்த்து, ஏறிக் கொண்டு கூடாரத்தை நோக்கிக் கடுவேகமாகச் சென்றான்.

கோயிலைவிட்டு வெளியேறினான் கரிமுகன். குழல் ஊதினான். மக்கள் “என்ன? என்ன?” என்று கேட்கலாயினர். கரிமுகனின் படை “கரிமுகன் வாழ்க! எமது தலைவர் கரிமுகன் வாழ்க!” என்று கூவிக்கொண்டு கிளம்பின. மக்கள் தீவர்த்தி ஏந்திக்கொண்டு கரிமுகனின் படை அரண்மனையை நோக்கிக் செல்வது கண்டு மருண்டனர். மூலைக்கு மூலை சிறுசிறு சச்சரவுகள். படையினரோ ஆயுதபாணிகள். மக்கள் ஏதுஞ்செய்ய முடியவில்லை. ஊர் அல்லோலகல்லோலப் பட்டது.

“ஓடு! ஓடு! அகழிப் பாலத்தைத் தூக்கிவிட்டு இப்புறத்திலே காவல் புரியுங்கள்” என்று படையில் ஓர் பிரிவுக்குக் கரிமுகன் உத்தரவிட்டான்.

மலர்புரியைச் சுற்றி அகழி! அதைக் கடக்க ஓர் அருமையான வேலைப்பாடுள்ள பாலம். அதனை யுத்த காலங்களிலே அகற்றி வைக்கும் பொறி உண்டு. அது தெரிந்த கரிமுகன், அரசிக்கு ஆதரவாகச் சுற்றுபுறத்துக் கூட்டம் வராமலிருக்க வேண்டும் என்பதற்காக, உடனே அப்பாலத்தை அகற்றும்படி உத்தரவிட்டான். கரிமுகனின் படையில் ஓர் பிரிவு சென்று அக்காரியத்தைச் செய்துவிட்டு, அகழின் இப்பக்கம் காவலிருந்தனர். எதிர் பக்கத்திலே சற்று தொலைவில் தீவர்த்திகள் தெரியக் கண்டு-, “சரியான நேரத்திலே சரியானது செய்தோம்” என்று எண்ணிச் சந்தோஷித்தனர். வீதியின் முனைகளிலே ஆயுத வீரர்கள் பாரா நின்றனர், மக்களைத் தடுத்துக் கொண்டு, படையின் பெரும் பிரிவு இறைச்சலிட்டுக் கொண்டு அரண்மனையைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அரண்மனைக் காவலாளிகள் கொல்லப்பட்டும், சிறைப்பட்டும் போயினர். சேடியர் முகத்திலறைந்து கொண்டு அழலாயினர். அரசி, அரண்மனை மாடி மண்டபச் சாளரத்தைத் திறந்து, நிலைமையைக் கண்டு மனநிலை குலையாது தோழியரை அழைத்து, ‘மாடத்து விளக்குகளைத் தூண்டுங்கள்! பிரகாசமாக இருக்கட்டும்! இரண்டு பீடங்களை இங்கே போட்டுவிட்டு, நீங்கள் போய்ப் படுத்துறங்குங்கள். இப்புயல் அடங்கிவிடும்” என்று கூறினாள்.

சேடியர் ஆபத்து பெரு நெருப்பெனச் சூழ்ந்து வருவது கண்டு அரசியார், கலக்கமின்றிப் பேசுவது கேட்டுத் திகைத்தனர். “அரண்மனைக் கதவுகளைத் தாளிட்டு விடலாமே” என்றுக் குளறிக் கூவினர். மலர்புரி அரசி, “பேதைகளே! புயல் வீசும்போது மரங்கள் போர்வை தேடுகின்றனவா! கடல் குமுறும்போது கப்பலுக்குக் கஷாயமா காய்ச்சுவர்! அரண்மனைக் கதவுகளைப் பெயர்த்தெடுக்கவா, இந்த அமளி! அரசுக்காக! அதை இழக்க நான் உயிரோடு இருக்கும்வரை இசையேன். போரிடும் ஆண்மகனைக் கண்டு பெண் பதுங்குவது தமிழ்க்குலப் பண்பல்ல! இனிச் சில விநாடிகளிலே கரிமுகன் இங்கே வருவான். நான் தனித்திருந்து அவனிடம் பேச வேண்டும், நீங்கள் போய்விடுங்கள், பயம் வேண்டாம்” என்றுரைத்தாள்.

கதவுகள் பிளக்கப்பட்டுக் கத்திகள் வீசப்பட்டு, அரண்மனை களமாகிவிட்டது! சேடியர் கதறிக் கொண்டோடி அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டனர். பதின்மர் மாடி மண்டபம் புகுந்தனர். கரிமுகன், உருவிய வாளுடன், தலைவிரி கோலமாய் நின்றான். அரசி புன்னகையுடன் மண்டபத்தின் மறுகோடியிலே நிற்கக் கண்டான். விளக்கொளி கண்டான், அரசியின் உடல் வெடவெடுத்துப் போகவில்லையே என்று வியந்தான். தன்னுடன் வந்தவர்களைக் கீழே கொலுமண்டபத்துக்குச் சென்றிருக்கச் சொல்லிவிட்டு, வாளை உறையிலிடாமலே, அரசியை நோக்கி நடந்தான்.

திடீரெனச் சதிச்செயல் புரிந்த கரிமுகனின் உண்மை ஊழியத்தை அரசி அறிவாளாகையால், ஏதோ ஆத்திரப்பட்டே இக்காரியம் செய்கிறான் என்பதை உணர்ந்து, தந்திரத்தால் அவனைத் தடுத்திட முடியும் என்று தீர்மானித்து மனத்திலே திட்டம் தயாரித்துவிட்டாள். இதற்குள்ளாகவே ஆரியன் ஏதேனும் சூட்சமம் கண்டுபிடிப்பான். தேவியின் உதவியைத் தேடுவான் என்று எண்ணி கோபத்தோடு வருபவனை அந்த நேரத்தில் தடுத்துவிட்டால் போதும் என்று கருதி அதற்கேற்றபடி நடக்கலானாள்.

உருவிய வாளுடன் தன் முன்வரும் கரிமுகனைக் கண்டு புன்சிரிப்புடன் அரசி நின்றாள். சுற்றிலும் பல போர்வீரர்கள் நின்றாலும் கலங்காத கரிமுகன் அரசி துளியும் பயமின்றி நிற்பது கண்டுக் கலங்கினான். அரசியா! அரசி போன்ற சிலையா! என்று சந்தேகிக்க வேண்டியும் இருந்தது.

“என்ன கம்பீரமான நடை! வருக! வருக!” என்று அரசி வரவேற்றது கேட்ட கரிமுகனின் கால்கள் ஸ்தம்பித்துவிட்டன. திகைத்து நின்று அரசியை ஏற இறங்கப் பார்த்தான்.

“முகத்திலே ஏன் கோபம் கூத்தாடுகிறது?” என்று கேட்டாள் அரசி.

அவன் “கோபமா? களிப்பா?” என்று அலட்சியமாகக் கேட்டான்.

“களிப்பு இப்படி இருக்குமா? கரிமுகா! களிப்பிருந்தால் முகம் சுளிக்காதே”

“அரசியே! விஷயத்தை வளர்த்துவானேன். அதோ சத்தம் கேட்கிறதா?”

“கேட்கிறது. எனக்குக் கேளாக் காதென்றா எண்ணினாய்? ‘அரசியே! அரசியே!’ என்று அனவரதமும் நீ துதி செய்ததால், செவி கெட்டாவிட்டது? சத்தம் நன்றாக கேட்கிறது, உன் கை துடிப்பதால் கட்கம் ஆடுகிறதே, அது உண்டாக்கும் சத்தமும் கேட்கிறது. வெளியே பெருங்கூச்சல் நடப்பதும் கேட்கிறது.”

“என் படைகளின் சப்தம் அது.”

“ஆமாம்! உன் படைகள் எப்போதுமே அப்படித்தான்; ஓநாய்கள் போலக் கூவுகின்றன. உன்னிடம் பயமில்லை அவைகளுக்கு!”

“நான் உன்னை கைதியாக்க வந்திருக்கிறேன்.”

“இனிமேலா கைதியாக்கப் போகிறாய்?”

“இதே கணத்தில்! அரண்மனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் நிற்கின்றனர். இந்த நிமிடமுதல் நீ என் கைதி!”

“விஷயம் சரி! ஆனால் கணக்கு தவறு. நான் உன் கைதியாகி, 5 ஆண்டு 6 மாதம் 21 நாட்களாகின்றன. அரண்மனையிலல்ல நான் கைதியானது. குன்றின் மீது! பகல் வேலையிலுமல்ல, இது போன்ற பாதி இராத்திரி நேரத்திலுமல்ல; செவ்வானம் தோன்றிய நேரத்தில். உன் படைகளின் மிரட்டலால் அல்ல, உனது அழகால் கரிமுகா! என்னை நீ இன்று கைது செய்ததாகக் கூறுகிறாய், அது தவறு. நான் உன் கைதியாகி ஐந்தாண்டுகளுக்கு மேலாகின்றன.”

“என்னிடமா இதைப் பேசுகிறாய்”

“இல்லை! கரிமுகனிடம், என் கண்களில் உலகைக் கண்ட கரிமுகனிடம் பேசுகிறேன். என் குரலில் கீதங்கேட்ட கரிமுகனிடம்; என் அருகிலிருப்பதே அஷ்ட ஐஸ்வரியம் என்று பூரித்த கரிமுகனிடம். பஞ்சணையில் என்னிடம் கொஞ்சிடத் தவங்கிடந்த கரிமுகனிடம் பேசுகிறேன். என் கிரீடத்தின் மீது மோகங் கொண்ட உன்னிடமல்ல, என் சிங்காதனத்தின் மீது பிரமை கொண்ட பேயனிடமல்ல!”

“போதும் நிறுத்து! திகிலால் உன் மனம் குழம்பி ஏதேதோ பிதற்றுகிறாய்! கரிமுகனிடம் பேசுகிறேன் என்றும் சொல்லுகிறாய். என்னிடம் பேசவில்லை என்றும் கூறுகிறாய், குன்றும் காதலும் என்று குளறுகிறாய்.”

“கரிமுகா! உன் நெஞ்சை நீ ஏமாற்றாதே, ஐந்தாண்டுகட்கு முன்பு ஓர் நாள், அதோ அக்குன்றின் மீது, நாமிருவரும் பேசிக் கொண்டிருந்தபோது நீ என்னைக் காதலிக்கவில்லையா?”

“வெறும் புளுகு! பெரும் பொய்! உன்னை நான் எப்போது காதலித்தேன்?”

“சீ துஷ்டனே! இந்த ராஜ்யத்தை எடுத்துக் கொள். ஆனால், என் மீது காதல் கொண்டிருந்ததை மட்டும் மறைக்காதே. ஒரு பெண் எதையும் இழக்கத் துணிவாள், காதலை மட்டும் இழக்கச் சம்மதியாள். நான் அரசி, ஆனால் ஓர் பெண் என்பதை மறவாதே. அன்று அக்குன்றின்மீது நாம் அமர்ந்துகொண்டு பேசினபோது, நீ என்னை எவ்வளவு அன்பு கலந்த பார்வையுடன் நோக்கினாய், பெரு மூச்செறிந்தாய்? இன்று அதை மறுக்கிறாய். அன்றே நான், என்னை உனக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். உன்னை மணம்புரிந்து கொள்ள ஓர் நாள் வேண்டியே தேவியைத் துதித்து வந்தேன். ‘ஏழாண்டுகள் கழியட்டும், இஷ்டப் பூர்த்தி உண்டாகும்’ என்று தேவி வரமளிக்கவே, நான் இந்நாள்வரை எவரிடமும் கூறாத என் காதலை மூடி வைத்திருந்தேன். நீ என்னை இன்று ஈட்டியால் குத்திக் கொன்றாலும் இவ்வளவு வேதனையிராது, என்னைக் காதலித்து இன்று கைவிடுகிறாய். பாதகா துரோகி!”

“எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. நான் உன்னிடம் காதல் மொழி பேசினதே கிடையாதே.”

“பேச வேண்டுமா! உன் நடவடிக்கை அதை எனக்கு உணர்த்தவில்லையென்றா எண்ணினாய்? சரி. நான் பழங்கதை அவ்வளவையும் கூறித்தான் உன்னைத் தெளிய வைக்க வேண்டும் போலிருக்கிறது. இந்த இரைச்சலிலே நாம் நிம்மதியாக எப்படிப் பேச முடியும்?” இந்தப் பேச்சினால் கரிமுகன், வலையிலே வீழ்ந்தான்; சாளரத்தருகே சென்றான். வெளியே தலை நீட்டினான். படையினர், அவனைக் கண்டு ஆர்ப்பரித்தனர்! கையை அமர்த்தினான். சத்தம் அடங்கிற்று.

“நண்பர்களே! நள்ளிரவிலே நாம் வந்த காரியம் முடிந்துவிட்டது. பாசறை சென்று படுத்திருங்கள். பகலிலே, நாட்டின் எதிர்கால அமைப்பு ஏற்பாடாகும். அரசியார் பணிந்துவிட்டார்கள்! முழு விவரம் கொலு மண்டபத்திலே கூறுகிறேன்” என்று கூறினான். படையின் சந்தோஷ ஆரவாரம் அதிகரித்தது. ஜெயகோஷம் கடலொலி போலாகிவிட்டது. படை, பிரிவு பிரிவாகப் பாசறை சென்றன. அரசியோ, அதையுங் கவனியாமல் பீடத்திலே கரிமுகனை இருக்கக்கூறி, பலப்பல காதற் சம்பவங்களைக் கூறிக் கொண்டே வந்தாள்.

“புதிய மலர்த் தோட்டத்திலே உலவும்போது என் மேனி பொன்னிறமானது என்று கூறவில்லையா?”

“கவனமிருக்கிறது! சொன்னேன். ஆனால் அது காதலுக்காகக் கூறவில்லையே. ஆரியன் அன்று, அவன் பூஜிக்கும் தேவியின் சிலை பொன்னால் செய்ய வேண்டுமென்று கூறினான். ‘பொன் சிலையைப் பூஜிப்பானேன், பொன்நிற மேனி கொண்ட எமது அரசியாரே எமக்குத் தேவி!’ என்று சொன்னதுண்டு. காதலித்தேன் என்றா கருதினீர்.”

“அது மட்டுந்தானா? ஒரு மண்டலத்தைத் தங்கள் காலடியிலே கொண்டு வந்து காணிக்கை செலுத்துவேன்” என்று ஓர் நாள் சொல்லவில்லையா? அதன் பொருள் என்ன?

“படை பலத்தைக் காட்டவே அது கூறினேன். காதலுக்காக அல்லவே”

“இரவு பகல் எந்த நேரம் தங்களைப் பற்றியே எண்ணி எண்ணி ஏங்குகிறேன் என்று சொன்னதுண்டா இல்லையா? அதுவும் காதல்மொழியல்லவா?”

“சொன்னதுண்டு! தாங்கள் அரச காரியத்தைக் கவனிக்கவில்லை, மலர்புரியின் கீர்த்தியைப் பரப்ப முயலவில்லை என்று ஏங்கியே அதைக் கூறினேன். மாலை சூட்ட அல்லவே”

“நான் எதை எதைக் காதற்பேச்சு என்று நம்பினேனோ அவைகளை எல்லாம் நீ மறுத்துப் பேசுகிறாயே, கரிமுகா! என் மீது பிறந்த காதலை, தொல்லை நிரம்பிய அரசுக்காக, அநியாயமாகக் கொன்றுவிடாதே” என்று மலர்புரி அரசி கூறினது கேட்டு கரிமுகனின் மனம் மருண்டு விட்டது. ‘நாம் எண்ணியது ஒன்று, நடப்பது நேர்மாறாக இருக்கிறதே. இதென்ன விபரீதம்’ என்று எண்ணித் திகைத்தான். அரசி எதிர்ப்பாள், இல்லையேல் கதறுவாள் என்று எதிர்பார்த்தானேயொழிய காதல்மொழி பேசுவாள் என்று கனவுகூடக் கண்டதில்லை. மாதரிடம் நெருங்கிப் பழகியுமறியாதவன் கரிமுகன். அதிலும் அரசியிடம், அவன் ஒரு நாளும் இதை எதிர்பார்த்தவனல்லன். எனவே கரிமுகன் ஒன்றுந்தோன்றாது விழித்தான். அவன் திகைப்பது தெரிந்த அரசி, மேலும் மேலும் காதலே பேசலானாள். கர்ண கடூரமாகிவிட்டது கரிமுகனுக்கு.

அகழிக்கு வெளியே, வீரமணியின் படை ஆர்ப்பரிப்பதறிந்து, கரிமுகனாட்களிற் சிலர் அரண்மனைக்கு வந்தனர். மாடி மீது நின்றபடியே கரிமுகன், “என்ன விஷயம்” என்று கேட்டான். “மணியின் படைகள் அகழிக்கு வெளியே இருக்கின்றன” என்றுரைத்தனர். கரிமுகன் பதில் கூறுமுன் அரசி அவனிடம் “கரிமுகா! வீணாக நமது ஆட்கள் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக் கொள்ள வேண்டாம். மணியின் படை தேவிக்குச் சொந்தம், அதை எதிர்ப்பது பாவம்” என்றுரைத்தாள்.

“தேவியும் அவள் திருவடி தாங்கியான ஆரியனும், அவனுக்குத் துணையாக உள்ள மணியின் படையும் என்ன யோக்யதை கொண்டனவென்பதை நானறிவேன். நீர் குறுக்கிட வேண்டாம். கொஞ்சு மொழி பேசி என் கோபத்தைத் தணிக்க முடியாது. நிச்சயமாகக் கூறுகிறேன், நான் உன்னைக் காதலித்ததுமில்லை; இனிக் காதலிக்கப் போவதுமில்லை. அரசு ஆளுந்திறனை நீ இழந்துவிட்டாய். ஆகவே முடி துறந்துவிடத்தான் வேண்டும். இதுவே என் முடிவான பேச்சு” என்று கூறிவிட்டு “மணியின் படைகள் மீது இப்பக்கமிருந்தே எரிஅம்புகளைச் சொரியுங்கள். அகழ் சுற்றுக் காவலரைச் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யுங்கள்” என்று படைவீரருக்கு உத்தரவிட்டான்.