அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
16
                     

“அன்று நல்ல நிலவு! நான், இதே சோலையில் வேறோர் பக்கத்திலே உலவிக் கொண்டிருந்தேன். இளவரசர், அதாவது என் தமயன், அச்சமயத்திலே தலைநகரில் தங்குவார், நான் வெளியூர்கள் சென்று, போர் வீரர் விடுதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால், ஆறேழு திங்கள் அரண்மனையில் இல்லை. அன்றுதான் ஊர் வந்தேன். இரவு, சோலையில் உலவிக்கொண்டிருந்தேன், நிலவின் அழகொளியோ, அந்த ஒளியினால் அலங்கரிக்கப்பட்டு அபரிமிதமான அழகுடன் விளங்கிய சோலையின் சொகுசோ என் மனதினை அதிகமாக இழுக்கவில்லை. எனக்குக் கோட்டை கொத்தளம், அரண் அகழி, படை வீடு முதலியனவற்றிலேயே அதிக அக்கரை. நான், மன்னனின் இரண்டாம் மைந்தன்; பட்டத்துக்குரியவர் என் அண்ணன்; என் அண்ணன் ஆட்சிக்கு நாடு வந்ததும். நான், படைத்தலைவனாக வேண்டுமென்பது என் தந்தையின் விருப்பம். ஆகவே, எனக்குப் பெரும்பாலும், படை வீடே உறைவிடமாகக் கிடந்தது. நானும் பல்வேறு நகர்களில் பாசறைகள் அமைத்துப் பூரிப்பதும், கடலோரக் கண்காணிப்பு, மலையோரக் காவல் முதலிய பாதுகாப்பு முறைகளில், புதுப்புது ஏற்பாடுகள் உண்டாக்கிக் களிப்பதுமாக இருந்தேன். மன்னனின் இருமைந்தரும், நமது மண்டலத்துக்கு இரு கண்கள்; மூத்தவன் முடிதரித்து ஆள்வான்; இளையவன், இமைகொட்டாது நின்று எதிரிகள் நுழையாதபடிக் காவல் புரிவான் என்று மக்கள் பேசிடக்கேட்டு நான் மகிழ்வதுண்டு. மூத்தவன் தூங்கா விளக்கு, இளையவன், சுழல் விளக்கு என்றுங் கூறுவர்.”

“அன்றிரவு என்ன நடந்தது?” என்று நடனா குறுக்கிட்டுக் கேட்டாள். மன்னன் பாலிய பருவத்தைப் பற்றியே விரிவுரை யாற்றத் தொடங்கியதும். மன்னனும், நீண்ட கதையைச் சுருக்கமாகக் கூறுவதாகச் சொல்லிவிட்டு வளர்த்தக் கூடாது என்று கருதி, “ஆமாம்! நடனா! அன்றிரவு நடந்ததைக் கூறுகிறேன்; கேள். நான் நிலவொளியில் சோலையில் உலாவிக் கொண்டிருந்தபோது, யாழின் ஒலி கேட்டது பளிங்கு மண்டபத்தின் பக்கமாக. இசை இனிமையாக இருந்தது! இனிமை என்றால் சாதாரணமான இனிமையல்ல; போர்முறைப் பற்றிய புதுத் திட்டங்களை மனதிலே சித்தரித்துக் கொண்டிருந்த என்னையே இழுத்தது அந்த இனிமை. யாழின் இனிமையால், நான் சமர்பற்றிய சிந்தனையை மறந்தேன்; இசையில் இலயித்தேன். பாம்பையும் புலியையுங்கூட வசியப்படுத்தக் கூடியதும், புண்பட்ட நெஞ்சுக்கு மருந்திடவல்லதும், புயல் கொண்ட மனதுக்கும் சாந்தி தரக்கூடியதுமான இசையின் இனிமையில் நான் சில விநாடி, கோட்டை கொத்தளங்களை மறந்தேன்; குளிர்ந்தமனதுடன் உலவினேன். யாழும், சூழும், என் அண்ணனுக்குத் தோழர்கள். நான் கட்கத்தை எவ்வளவு நேசித்தேனோ அவ்வளவு நேசம், கலையிடம் என் அண்ணனுக்கு. நான் புதுக்கோட்டைகள் கட்டி மகிழ்வதுபோல, என் சகோதரன், இசைவாணரின் புதிய புதிய பண்கேட்டு இன்புறுவான். அகழியின் ஆழத்துக்கும் அகலத்துக்கும் இருக்க வேண்டிய அளவமைப்புப் பற்றிய ஆராய்ச்சி எனக்கு! என் அண்ணனுக்கோ மூன்று நரம்பு யாழுக்கும் 9 நரம்பு யாழுக்கும் உள்ள இசை வித்தியாச நுணுக்கத்திலே பிரேமை. எந்தப் படை கொண்டு எதிரியை முதலிலே தாக்குவது, வேழப்படை கொண்டா, குதிரைப் படை கொண்டா, என் பதிலே நான் சிந்தனையைச் செலவிடுவேன்; அவரோ, குழல் கேட்டபின் யாழ் கேட்பதா, யாழுக்குப் பிறகு குழல் கேட்பதா, எது அதிக இனிமை பயக்கும், இரண்டினையும் ஏககாலத்திலே கேட்டு இன்புறுவதா என்பதிலே யோசனையை வழங்குவார். அன்று நான் யாழைக் கேட்டதும். “சரி! வழக்கமான விருந்துண்டு, அவர் களிக்கிறார்; பழக்கப்படி நாம் பட்டாளத்து விஷயமாக எண்ணிக் கிடக்கிறோம்” என்று எண்ணிக்கொண்டு, உலவினேன்; ஆனால் யாழின் இசையுடன் கலந்து கிளம்பிய ஓர் குரல் என்னைப் பளிங்கு மாளிகைக்கு நடந்திடச் செய்தது. ஓர் மங்கையின் மதுரமான கீதம், மயக்க மூட்டக்கூடிய தனிவிதமான இனிமை அக்குரலிலே தோய்ந்திருந்தது. சுவை பயக்கும் குரலுடன், சோகமும் இழைத்து, கேட்பவரின் சித்தத்தை உருக்கிவிடக் கூடிய அலாதியானதாக அக்குரல் இருந்தது. என்னை “வா! வா! வந்து கேள்! வீணான விஷயத்திலே மூழக்கிக் கிடக்கிறாயே, இதோ இனிமையுடன் இரண்டறக் கலந்துகொள்” என்று அந்த இசை கூவி அழைத்தது. மெல்ல மெல்ல அங்கு சென்று, முல்லைப் புதரருகே பதுங்கிக் கொண்டேன், அந்த மங்கையுடன் என் அண்ணன் நிச்சயம் இருப்பாராதலால் நான் அவர் கண்களில் படாது இருக்க வேண்டுமென்று. சோகம் ததும்பிற்று; சோபிதம் வழிந்தது அந்த மங்கையின் சுவைமிகு பாடலில்.
“வாயால் சொல்ல முடியாதபடி தேனிலந்த இனிப்பேதடி”

என்று அந்த மங்கை பாடினபோது, நான் பெற்ற இன்பம், வாயால் சொல்ல முடியாததுதான். தேனில் நிச்சயம் அந்த இனிப்பைகாண முடியாதுதான் என்று தோன்றிற்று. அம்மங்கை, இசைப் பயிற்சி மிகுதியும் பெற்றதனால் மட்டும் அவ்வளவு நேர்த்தியாக அந்தக் கீதத்தைப் பாடவில்லை. பாடல், அவளுடைய இருதயகீதம். கரும்பை ஆலையிலிட்டதும், ரசம் பொழிவதுபோல, வாழ்க்கை நிலையால், அவள் அடைந்த வாட்டம், அந்தக் கீதத்தை அவளுக்குத் தந்தது. தலைவி, தோழியிடம், தலைவனின் திருக்குணத்தைக்கூறிச் சோகிக்கும் பாணியிலே அமைந்திருந்தது. அப்பண்

நீ என்னடி கண்டாய் அந்த
மன்னவன் தரும் இன்பம்!
வாயாற்சொல்ல முடியாதடி
தேனிலந்த இனிப்பேதடி (நீ என்னடி)
தமிழ்ப்பேசுதல் கேளாச்செவி
இருந்திடுவது வீணே,
அமைவாய் எனை மாதே கன
அன்புடன் தழுவிடுவானே, (நீ என்னடி)

ஆஹா! நடனா! நான் அதற்கு முன்பும் அதற்குப் பிறகும், கேட்டதில்லை, அவ்விதமான பண். தேனிலந்த இனிப்பேதடி என்று பாடும் போது,தேன் குழைந்துவந்து செவியில் புகுந்தது. எந்த மன்னவனோ! அவன் எவ்வண்ணம் தழுவினானோ? அவளன்றி யாருக்குக்கூற முடியும்! அவளோ, அந்த இன்பத்தை வாயாற்சொல்ல முடியாதபடி என்று பாடிவிட்டாள். நான் பரவசமானேன். மேலும் பாடினாள் அந்த வனிதை விசித்திரமான அமைப்புடன் கூடிய அப்பாடலை.

“இரவே பகல் நாளே கலை
நல்விருந்துயர் காதல்
உருவே விழி, வாழ்வே மணம்
இன்ப அருவி அதன் மீதிலே (நீ என்னடி)

இன்ப அருவியாம்! அதன் மீதிலே நடமாடும் நங்கை கண்ட இன்பத்தை நாம் எப்படிக் காண முடியும்! அந்தப் பாடல் முடிந்தது, என் குரலும் “சபாஷ்! அருமை!” என்று கூறிற்று. நான் என்னையும் மறந்து பளிங்கு மண்டபம் புகுந்தேன்; பயந்து ஓர் வனிதை நின்றாள் என் எதிரில், பக்கத்திலே என் முன்னவர் இல்லை. நான் பதறினேன். ஏன் தெரியுமா? பாடி என்னைப் பரவசமாக்கிய அந்தப் பாவை, பளிங்கு மண்டபத்தில் பாதி ராத்திரிவேளையில் பாகுமொழி கீதத்தால் தனது தாபத்தைக் காட்டும் நிலையிலுள்ளவள் என்று நான் கனவிலுங் கருதியதில்லை. அது மட்டுமா! என் எதிரில் நின்ற அந்தச் சமயமும், அவள் அணிந்திருந்த கோலம் எப்படிப்பட்டது தெரியுமோ? மெல்லிய காவி உடை! தைலம் அதிகங் கண்டிராததும் மலர்ச்சுமை இல்லாததுமான கூந்தல்! மை இல்லாத கண்கள்! சதங்கை இல்லாத தாள்! வளையணியாக் கரங்கள்! அவளுடைய மார்பில் முத்து வடமோ இரத்தின கண்டியோ கிடையாது. செவியிலே செம்பொன்நிறமான புஷ்பம். நெற்றியிலே சந்தனத்தால் பிறை வடிவில் ஓர் குறி. தவக்கோலத்தில் இருந்தாள் அத்தையல்! தவக்கோலந்தான்; ஆனால் தாபத்தின் வேகத்தை அவளுடைய கீதம் நன்கு காட்டிற்று. என்னைக்கண்டதும் அவளுக்கு விழியில் நீர் துடித்தது; எனக்குப் பொறி பறந்தது. தவச்சிரேஷ்டரென்று தந்தையாரால் பூஜிக்கப்படுபவரும், குலகுரு என்று கொண்டாடப்படுபவரும், கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்து. பாண்டியநாடு பல்வளங்களோடு திகழவேண்டுமென்று பல்வகை யாகங்கள் செய்தவரும், என் தந்தைக்கு நிழல்போல் இருந்து வந்தவரும், ஆஸ்ரமவாசியுமான, சத்யப்பிரகாசரின், ஏகபுத்ரிதான் அவள்! என் அண்ணன் ஏகாந்தமாகத் தங்க ஏற்பட்ட பளிங்குமண்டபத்திலே தங்கி, யாழ்மீட்டி, ‘இன்ப அருவி அதன் மீதிலே’ அவள்கண்ட இன்பம், தேனிலும் கிடையாது என்று பாடினாள். அவளுடைய மலரடியையும், என்பிதா பணிந்ததுண்டு, நானுந்தான்! சத்யப் பிரகாசர், அவள் அம்பிகையின் அவதாரமென்று கூறிஇருந்தார். அவள் பூஜைக்காகத் தனியான பணிப்பெண்கள்! அவளுடைய பாதபூஜையிலே பலருக்குப்பிரியம். அவ்விதமானயோகி அன்றிரவு, தாபத்தைத் தாங்காது, தனியே பாடிக்கிடந்தாள். அக்காட்சியைக் கண்டதும் எனக்குப் கோபம் கட்டுக்கடங்க வில்லை. என் பார்வை அவளுக்குப் பயத்தைக் கிளறிவிட்டது. அவள் உடல் நடுங்கிற்று; ஏதோ பேச வாயெடுத்தாள்; என் கேலிச்சிரிப்பு அவள் பேச்சை நிறுத்திவிட்டது. கூப்பிய கரத்துடன் என் எதிரில் நின்றாள். ஆம்! அவளை நான் தேவியின் திரு அவதாரமென்று பலமுறை கும்பிட்டதுண்டு. அவள் அன்றிரவு, என்னைக் கும்பிட்டு நின்றாள். அவள் கேட்கும் வரம் என்ன? வெளியே கூறி என் மானத்தை பறித்திடாதே என்பது தான்! நானா விடுவேன் அந்தக் கள்ளியை! “காவி உடை; காமச்சேட்டை! தூ!” என்று கூறி அதட்டினேன்.

“காதலி!” என்றோர் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன். அது என் அண்ணனின் குரல்! அவளும் திரும்பினாள். நானும் சத்தம் வரும் திக்கில் திரும்பினேன். “ஒழிந்தான் உன்னை ஆட்டிப் படைத்த தூர்த்தன். இதோ அவனுடைய இரத்தம் ஒழுகுவது கண்டுகளி. உன் கோபத்தையும் சோகத்தையும் இந்தச் செந்நீரால் கழுவிக்கொள்” என்று கூறிக்கொண்டே என் சகோதரர் அங்கு வந்தார். நானும் அவளும் ஏககாலத்தில், ஆ! என்று அலறினோம். என் அண்ணனின் கரத்திலே, குலகுருவின் தலைதொங்கிற்று உடலற்று! இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.

போர்க்களங்களிலே, தலை வேறு உடல்வேறாக அறுபட்டதையும், இரத்தம் ஆறென ஓடினதையும், குருதி தோய்ந்த கரத்துடன், வீரர்கள் நிற்பதையும் நான் கண்டதுண்டு, கலங்கியதில்லை. ஆனால் நடுநிசியில், அரண்மனைப் பூங்காவில், அரசகுமாரன், குலகுருவின் தலையை வெட்டி, இரத்தம் ஒழுக ஒழுகப் பிடித்துக் கொண்டு நிற்பதை யார்தான் கண்டு கலங்காதிருக்க முடியும்! கலை இன்பத்திலே திளைத்திருக்கிறார் அண்ணன் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அவர் கொலைத்தொழிலும் செய்வது காணக்கூசிற்று. அந்த இரவு, நிலவொளியிலே நான் கண்டகாட்சியை நினைத்தால் இப்போதும் நடுக்கம் பிறக்கிறது.

“நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று அவர் என்னைக் கேட்டார். பயத்தால் மெய்மறந்து நின்றேன். என்னை இக்கேள்வி கேட்டு விட்டு அவர், தலையைக்கீழே போட்டார். அந்தச்சத்தம், எனக்கு என் நிலைமையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தது.

“நான் உலவிக் கொண்டிருந்தேன். இசை கேட்டது. இங்கு வந்தேன், இதைக்கண்டேன்” என்று நான் படபடத்துக் கூறினேன். அவர், மேலங்கியால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவளோ, பதுமை போலாகிவிட்டாள். அசைவற்று நின்று கொண்டிருந்தாள், கண்களிலே நீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது.

“தவக்கோலத்திலே உள்ள இக்காரிகை என் காதலுக்கு உரித்தானவள். இவளுடைய உடைக்கு இவள் பொறுப்பல்ல. காவியால் மூடி இவளுடைய கருத்தைத் தூங்கவைக்கலாம் என்று, இக்காதகன் கருதினான். இவனுடைய கபடத்தைத் தெரிந்து நான் இக்காரியம் செய்தேன்” என்று அண்ணன் கூறினார். எனக்கு அவருடைய விளக்கம் திருப்தியை உண்டாக்க வில்லை. மனச்சாந்தி ஏற்படாததால், நான், கீழே உருண்டுகிடந்த தலையையும், உக்கிரத்துடன் என் எதிரே நின்ற சகோதரனையும், நீர் புரளும் கண்களுடன் நின்ற அந்த நங்கையையும் மாறி மாறி நோக்கினேன். மருட்சியால் மயக்கம் வந்து விடும்போலிருந்தது எனக்கு. வேடிக்கையைக் கேள் நடனா! நான் இப்படித் தவித்துக் கொண்டிருந்தேனே, அதை ஒரு துளியும் பொருட்படுத்தாது, என் அண்ணன் அந்த அணங்கை அருகே இழுத்து அணைத்துக்கொண்டு, கண்களைத் துடைத்து, “அஞ்சாதே! உன் அழகை ஆயுதமாகக் கொண்டு அக்ரமச்செயல் புரிந்துவந்தவன் அழிந்தான். இனி உன் வாழ்வு மலரும், மனம் மருளாதே” என்று கூறித் தேற்றினான். நான் ஒருவன் நிற்பதை
யும் அண்ணன் மறந்து விட்டார். காலடியிலே உருண்டு கிடந்த குரு தலையேகூட அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையிலே என் தகப்பனார், மன்னர், திடீரெனச் சில காவலாட்களுடன் அங்குவரக் கண்டேன்.

“அண்ணா! அரசர்!” என்று கூறினேன் அச்சத்துடன். அந்த மங்கை, என் அண்ணனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, அவ்விடத்தைவிட்டு ஓடிவிடப் பார்த்தாள். புன்சிரிப்புடன் என் அண்ணன், அவள் கரத்தைப் பிடித்திழுத்து நிற்கவைத்து, “நில், ஏன் ஓடுகிறாய்?” என்று கேட்டார். இதற்குள் மன்னன் அங்குவந்து சேர்ந்துவிட்டார். அவர் பேசுமுன்னம், எனக்குப் பயத்தால் பாதி உயிர் போய்விட்டது.

“தவமணீ! நீ இங்குதானா இருக்கிறாய், உன் தாளினை வணங்குகிறேன். குருத்துரோகம் செய்த இக்கொலை பாதகனை, நொடியிலே நான் வீழ்த்துகிறேன். நீ பிழை பொறுத்துப் பாண்டிய மண்டலத்தின்மீது பகை காட்டாது விடு, அம்மையே” என்று கூறிக்கொண்டே என்பிதா, காவி உடைக்காரியின் காலில் விழலானார். அவள் அதைத்தடுத்து அவரைத் தூக்கி நிறுத்தினாள். இதற்குள் காவலர், உருண்டு கிடந்த தலையை எடுத்து ஓர் பீதாம்பரத்தில் மூடிப் பிடித்துக் கொண்டனர். இரு காவலர் உருவிய வாளுடன் என் அண்ணனின் இரு மருங்கிலும் நின்று கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்ததில், என் தந்தை, என் அண்ணனைக் கைது செய்யத் தீர்மானித்து விட்டார் என்பது விளங்கிற்று.

“குருதேவனைக் கொலைசெய்து விட்டார் உமது மூத்த குமாரன்” என்று யாரோ சீடர் கூறிடக் கேட்டுக் கொதித்தெழுந்த என் தந்தை, என் அண்ணனைத் தேடிப்பார்த்து, தோட்டம் வந்தார். அங்கு, குருவின் தலை உருண்டுகிடந்ததைக் கண்டார். குருவின் புத்திரி, தவமணி அங்கு இருக்கக்கண்டு, அவளுடைய தபோபலத்தால் மண்டலத்தையே நிர்மூலமாக்கி விடுவாள் என்று பயந்து, அவளைப் பணிந்து, மன்னிப்புக்கோரி நின்றார்.

தவமணியின் கோலம் ஒன்று, செயல் வேறு; அது எனக்குக் கோபமூட்டிற்று; என் பிதாவோ, அவளுடைய கோலத்தைக் கண்டு மதிமயங்கி மண்டியிடுகிறார். என் அண்ணனோ அவளுடைய அழகிலே சொக்கிக் கொலையும் புரிந்துள்ளார். இவ்வளவு நிகழ்ச்சிகளையும் நினைப்பையும் கிளரிவிட்ட அந்த நங்கை, என் பிதாவை நோக்கி, மிருதுவான குரலில் சில சொல் புகன்றாள்.

“அரசே! என்பிழை பொறுத்தருள வேண்டும். நான் தவசியுமல்ல, யோகசித்திகள் பெற்றவளுமல்ல. எவனுடைய தலை கீழே உருண்டு கிடப்பதற்காகக் கோபங்கொண்டு தாங்கள், தங்களின் மூத்த புதல்வர்மீது பாய்ந்திட வந்திருக்கிறீரோ, அந்த கபட சன்யாசிக்கு நான் மகளுமல்ல! அவனுடைய கருவியாக இருந்துவந்தேன். எங்கோ மரத்தடியிலேகிடந்த ஓர் குழந்தை, பார்க்க ரம்மியமாக இருப்பதுகண்டு, தவவேடம் புனைந்து தந்திரத்தால் வாழ்ந்துவந்த சத்யபிரகாசர் எடுத்து வளர்த்து வந்தார்; அந்தக்குழந்தையின் எழில் வளர, வளர, அவனுடைய புகழும் செல்வாக்கும் வளரலாயிற்று. பல இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இங்கு வந்து சேர்ந்தோம். ஆம்! நான்தான், அவன் கண்டெடுத்த குழவி இங்கு அவன், தங்களை எப்படி எப்படியோ மயக்கினான், என்னையும் பெரிய யோகி என்றுகூறித் தங்களை நம்பிடச் செய்தான். இளமையும் எழிலும் இருந்தும், தவவேடமும் கபடத்துக்கு உடந்தையுமாக நான் காலங்கழித்து வருகையிலே, உமது புதல்வரின் கண்கள், என் காவி உடையைக் கிழித்தெறிந்து, என் இருதயத்திலே, இயற்கையான எண்ணங்கள் தவழுவதையும், பர்ணசாலையிலே பாழகிக்கிடக்கும் வாழ்வை நான் வெறுக்கிறேன் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆமாம்! கடலிற்குளித்து முத்து எடுக்கும் பணியாளே எங்கு குளித்தால் முத்து கிடைக்கும் என்பதை அறிவான். அதுபோலத்தான் அவர் என் அகத்தை மறைத்துக் கொண்டிருந்த புறக்கோலத்தால் மயங்காது, என்னைக் கண்டறிந்தார். என் மனம் அவரை நாடிற்று. என்னைப் பூஜிக்கப் பலர் வந்ததுபோலவே அவரும் வந்தார். ஆனால் என் தவவேடத்தைப் பூஜிக்காமல், என் அன்பை வேண்டினார்; நான் அளித்தேன் அகமகிழ்ச்சியுடன். தவக்கோலத்திலேயே, நான் அவருக்குப் பிரியையானேன். சத்யப்பிரகாசர் இதனை எப்படியோ தெரிந்து கொண்டார். தெரிந்து கொண்டால் என்ன? என்னை என் வழிப்படி விட்டுவிடலாம். இல்லையேல், இங்கிருந்தால்தானே, இது நடக்கும், இனி வேறு இடம் செல்வோம் என்றாவது இங்கிருந்து கிளம்பிவிட்டிருக்கலாம்; இல்லையேல், என் அன்பரை அழைத்து, அறிவுரை புகன்று தடுத்திருக்கலாம். அதுவும் இஷ்டமில்லையேல், என்னைக் கொன்று விட்டிருக்கலாம். இவை எதையுஞ் செய்யாது, என்ன செய்தார் தெரியுமோ! எந்த மடியிலே, நான் சிறுகுழந்தையாகப் படுத்துக் கொண்டு, தூங்கினேனோ, அதே மடியிலே, சாய்ந்து கொண்டு, மையல் ஊட்டவேண்டுமென்று கட்டளையிட்டான். மகளாக இத்தனை காலம் இருந்தது போதும், இனி எனக்கு மனையாளாகிவிடு என்று கூறினான். என்னைக் கேட்டானா இதுபோல். இல்லை, சொல்லைச் செலவிடவில்லை. ஓரிரவு பக்தகோடிகள் போய்விட்டபிறகு, நான் படுத்துக்கொண்டிருந்த அறையிலே மினுக்கிக் கொண்டிருந்த தீபம் அணைந்தது; அணைக்கப்பட்டது. ஓர் உருவம் என் மஞ்சத்தருகே நின்றது பெருமூச்சுடன். நான் “அப்பா!” என்று அலறினேன். அந்த உருவம் கலகலவெனச் சிரித்திடக் கேட்டுச் சித்தம் மருண்டது. சத்யபிரகாசரே அங்கு வந்து நின்றவர். என்னை வளர்த்த தந்தையே விளக்கை அணைத்துவிட்டு அங்கு நின்றார், என்பது தெரிந்தது, என் திகில் கொஞ்சம் நீங்கிற்று, நான் மஞ்சத்திலே எழுந்து உட்கார்ந்துகொண்டு, “என்னப்பா இது? இப்படி மிரட்டிவிட்டீர்” என்று கேட்டேன். அவர், என் பக்கத்திலே வந்து உட்கார்ந்தார். நான் வழக்கமாக அவரிடம் நெருங்குவது போல் நெருங்கினேன். அவரோ என்னை என்றும் அணைத்திராத விதமாக அணைத்தார், “அப்பா!” என்று அழைத்தேன். அவரோ ‘மகளே’ என்று அழைக்காமல், தவமணி என்று அழைத்தார். குரலிலே ஓர் மாதிரியான தழுதழுப்புத் தென்பட்டது. அவருடைய முகத்தைச் சரியாகப் பார்க்கவிரும்பி, அணைப்பிலிருந்து விடுபட முயன்றேன், அவரோ என்னை இறுகக் பிடித்துக் கொண்டார். எனக்குத் திகில் பிறந்தது. அவருடைய வலிமைக்கு நான் ஈடா? மஞ்சத்திலே நான் சாய்க் கப்பட்டேன். கூவிய என் வாயை, அவர் தமது வாயால் மூடி விட்டார். என் கன்னங்கள் அவருடைய கோரப்பற்களுக்கு இரையாயின. என் இதழ் துடித்தது, என் உடல் பதறிற்று, என்உயிர் போய்விடும் போலாகிவிட்டது. மகளே என்று அழைத்து வந்த அந்த காதகன், அன்றிரவு என்னைத் தன் காமத்துக்குப் பலியாக்கி விட்டான் அழுது அழுது என் கண்கள் சிவந்து விட்டன. அவனோ சிரித்துச் சிரித்து என்னைச் சித்திரவதை செய்தான். தான் பயிரிட்டசெடி, மரமாகிக் கனி தந்தால், அதனைச்சுவைக்க வேறுயாருக்கு உரிமை உண்டு? என்று கேட்டான். என் நிலைமையை நினைத்தாலே நடுக்கம் பிறந்தது. வெளியே சென்று யாரிடம் முறையிடுவேன்? எவரையும், என் மொழியைக் கேளாவண்ணம் அவன் தடுத்து விடுவான்! என் பிரியபதியாக யாரைக் கொள்ள வேண்டுமென்று நான் நிச்சயித்திருந்தேனோ, அவர் முகத்தில் எங்ஙனம் விழிப்பேன் என்று திகைத்தேன். பகலிலே தவமணி! மாலையிலே உமது மூத்த மகனின் காதற்கனி! இரவிலே, அந்த காமக்கள்ளனின் போகமாது! இந்நிலையிலே எத்தனைகாலம் நான் தள்ளமுடியும். என்னால் சகிக்க முடியவில்லை. எனவே இவரிடம் உண்மையைக் கூறினேன். இவன் தலை கீழே உருண்டது. என் நெஞ்சிலே இருந்துவந்த பாரம் குறைந்தது” என்று தவமணி என்ற அந்தத் தையல் தன்வரலாற்றினை உரைத்தாள். நான் திக்பிரமை அடைந்தது போலவே, என் தந்தையும் திக்பிரமை அடைந்தார். “தவவேடமிட்டுத் தகாத செயல் புரிந்துவந்த இந்தத் தூர்த்தன் ஒழிந்தது முறையே! மகளையே மஞ்சத்துக்கு இழுத்த மாபாவி ஒழிந்தது சரியே இவன் தலை கீழே உருண்டது கண்டு மருண்டு. என் மகனையேயன்றோ ஏதேதோ செய்திட எண்ணினேன்,” என்று மன்னர் கூறினார். சரி ஒருவாறு தொல்லை தீர்ந்தது, என்று நான் நினைத்தேன். ஆனால் நடந்தது விபரீதமாயிற்று. என் அண்ணன், மன்னரை நோக்கி” தந்தையே! நான் தவமணியை மணம் புரிந்துகொள்ளத் தாங்கள் அனுமதி தர வேண்டும்” என்று வேண்டினார். இச்சொல்கேட்ட என் தந்தை, தீ மிதித்தவர்போல் குதித்தார்.

“பாண்டிய நாட்டுப் பார்த்திபனாக வரவேண்டியவனடா நீ! படுமோசச் செயலைப் புரியலாகாது”

“படுமோசம் நான்புரியவில்லை இப்பாவையை மணக்க விரும்புகிறேன். சிங்காதனம் இச்சிங்காரியுடன் நான் வீற்றிருக்க இடமளித்தால் சரி, இல்லையேல், அது வேண்டாம் எனக்கு”

“தவமணி, யோகி வேடந்தாங்கியிருந்த காமிக்குப் போகப்பொருளாக இருந்தாள், அவளை நீ உன் அன்புக்கு இருப்பிடமாக்கினாய். ஆனால் உன் குடும்பவிளக்காக அவள் இருக்க முடியுமா?”

“அன்பு இல்லாதவிடத்து, மணம் இல்லை”

“நாடாளப் பிறந்தவன் நீ, வெறும் ஏட்டாளனாக இராதே. தவமணி இங்குத் தங்கட்டும். அவளுடைய இல்லம் உனக்கு இன்ப மாளிகையாகயிருக்கட்டும்; ஆனால், அரசமாளிகைக்கு வேறு ஒருவள் இருந்தே தீரவேண்டும். அதுதான் முறை”

“தந்தையே! உமது வார்த்தையை மீறுதவற்காக மன்னிக்க வேண்டுகிறேன். அவள் ஓர் காமுகனின் சேட்டையால் சிதைந்தாள், அது அன்னவள் குற்றமல்ல. என்றையத்தினம் நான் அவளை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கினேனோ, அன்றே நான் அவளை ஆஸ்ரமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கவேண்டும். தவமணியை நான் அங்கு விட்டதனால் தான், தகப்பனாக நடித்த அந்தத் தறுதலை தகாத செயல்புரிந்தான். அவனுக்குத் தண்டனை தந்தாய்விட்டது. இவள் செய்த குற்றமென்ன? ஏன் இவளை என்னிடமிருந்து பிரிக்கவேண்டும்?”

“நீ அரசனின் மகன், மூத்த புதல்வன்; இளைய அரசன், நாளை அரசாள வேண்டியவன். அது கவனமிருக்கட்டும்!”

“இவளோடு, பாண்டியநாடு என்னை ஏற்றுக் கொண்டால் நானிங்கு இருப்பேன், இல்லையேல், அரசும் வேண்டேன்.”

இந்த உறுதியான பேச்சைக்கேட்ட என் தந்தை கோபமேலிட்டு, “பாண்டியநாடே பெரிது; உன் பிடிவாதமல்ல! என் ஆணையே பெரிது; உன் ஆசையல்ல. பலகோடிமக்களின் பாதுகாவலனாக இருக்கும் பணியே சிறந்தது; ஒரு பாவையுடன் புரண்டுகிடக்கும் போகமல்ல. அரசன் நீதியின் அடையாளம்; பொறுப்பின் சிகரம்; போகத்தின் தூதனல்ல. காரியமும் வீரியமும் மிளிர அவன் விளங்கவேண்டும்; காதலுக்காகக் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கலாகாது. பாண்டி நாட்டுப் பார்த்திபனின் மகன் இப்படி, பழுதுபட்ட ஓர் பாவைக்காகத் தனது பரம்பரைப் பண்பு, பாராளும் உரிமை தந்தையின் வேண்டுகோள் எனும் இவற்றைத் தட்டத்துணிவது மடைமை, கொடுமை, இதை நான் அனுமதியேன். நாடு அனுமதிக்காது; வேண்டாம் பிடிவாதம். எப்படியோ இந்த மங்கைக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டாகிவிட்டது. அதற்காக வேண்டி. நீ மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு என்ன என்பதையும் அந்தத் தொண்டு புரிய எது தகுதியான முறை என்பதையும் மறவாதே. தந்தை தனயனிடம் தர்க்கிக்க வேண்டிய விஷயமுமல்ல இது. நீ உனது நிலைமையை உணர்ந்து நட” என்று மன்னர் கூறினார்.