அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
9
                     

இருந்த ஓர் வாலிப வணிகனும் என்னவானார்கள் என்று கேட்டான். ஆரியன் சிரித்துக்கொண்டே ‘எனது உத்தரவு அவர்களைத் தேடி அங்கும் சென்றதால், அவர்கள் அங்கும் தங்காது எங்கோ சென்றுவிட்டனர்’ என்று கூறினான். உத்தமன் சோகித்தான்.

“சோகியாதே! சிறையிலே உழல வேண்டிய உன்னை என் மாளிகையிலே உபசரிக்கிறேன். காரணம் என்ன தெரியுமா? உன் முகத்தைக் கண்டதும் எனக்கு உன்னிடம் பிரேமை ஏற்பட்டு
விட்டது. உன் முகக்குறியிலிருந்து நீ வெகுவிரைவில், உன்னதமான உயரிய பதவியில் அமரப் போகிறாய் என்று தெரிகிறது. அதற்காகவே நான் உன்னிடம் அக்கறை கொண்டேன்” என்று ஆரியன் தனது காரியவாதிப் பேச்சை துவக்கினான்.

வணிகரைக் கொள்ளையர் என்று பழி சுமத்திய பாதகன், சிறையிலிருந்த தன்னைக் கொண்டு வந்து வெளியே விருந்தளித்து, வினயமாகவும் அன்புடனும் பேசுவது சூதன்றி வேறு யாதாக இருக்க முடியுமென்று உத்தமன் தெரிந்து கொள்ளாமலில்லை. ஆனால் பசப்பும் பாதகனின் அந்தரங்க நோக்கந்தான் என்னவென்பதைக் கண்டறிய வேண்டுமென்று, ஆரியன்மீது எழும்பிய கோபத்தை அடக்கிக் கொண்டு “ஐயா! என்மீது கருணை காட்டுவது கண்டு என் மனம் குளிர்கிறது. என்னால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் கூறும்” என்றான்.

“பலசாலி மட்டுமல்ல நீ யுக்திசாலியுங்கூட! இப்படிப்பட்டவர்களுக்கே யோக ஜாதகம் இருக்கிறதென்று மேலோர் கூறுவர். என் இஷ்டப்படி நடப்பவர்களை நான் எத்தனை பெரிய அந்தஸ்திலும் வைப்பது வழக்கம். நாடோடியாக என்னை வந்து அடுத்த மணிவீரன், இன்று பெரும் படைத்தலைவனானான்” என்று ஆரியன் தன் பெருந்தன்மைக்கு ஆதாரம் காட்டினான். வீரமணியைப் பற்றிய விஷயத்தைத் தெரிந்துகொள்ள விரும்பிய உத்தமன் “மணிவீரன் யார்? எங்கிருந்து இங்கு வந்தான்” என்று கேட்க, ஆரியன் “அவனுடைய பூர்வோத்திரம் நானறியேன், மல்லனாக இங்கு வந்தான், என்னிடம் வேலைக்கமர்ந்தான், இன்று மேனிலையில் இருக்கிறான். அதுபோவே நீயும் என் சொற்கேட்டால் சுகம் பெறுவாய்” என்றான். “உத்தமன் தடை இல்லை! தயாநிதியாகக் காணப்படும் உம்மிடம் நான் சேவை செய்வதே யுக்தம்; கூறும் கேட்கிறேன்” என்றான்.

உத்தமா ஊருக்கு அரசி உண்டு. மகா பொல்லாதவள்; காமாந்தகாரம் மிக்கவள்; கர்வம் பிடித்தவள்; வணிகரான உங்களைக்கூடக் கொள்ளையர் என்று கூறுமாறு என்னைப் பணித்தவளும் அப்பாதகியே. பரம்பரையாக அவள் குலம் இந்நாட்டை ஆண்டு வந்த காரணத்துக்காக அவள் ஆள்கிறாள் என்று கூறிப் பெருமூச்செறிந்தான். உத்தமன் சினத்தை உள்ளடக்கிக் கொண்டு, “அவ்வளவு கொடியவளை ஏன் மக்கள் இன்னமும் அரசியாகக் கொண்டிருக்கின்றனர். விரட்டக் கூடாதோ வெளியே” என்று கேட்டான்.

‘வீரமிக்கவனே! உன் போல் ஆட்கள் இங்கு இல்லை. ஒருவேளைச் சோற்றுக்காக, எதையும் செய்வர், இங்குள்ள ஊமைகள். நம் போன்றவர்கள் ஏதேனும் செய்தால்தான் பயன் உண்டு. நானும், ஏதேதோ யோசித்துக் கடைசியில் ஓர் முடிவுக்கு வந்தேன், அரசி கொல்லப்பட வேண்டும். அதுவும் உன்னால்!’ என்றான். உத்தமன் திடுக்கிட்டான். அதைப் பார்த்த ஆரியன், பதறாதே! பக்குவமான திட்டம் இருக்கிறது. அரசி, தேவி பூஜைக்காகக் கோயில் வருவாள். தேவியின் சிலைக்குள் உன்னைப் புகுத்தி வைக்கிறேன். நான், “தேவி, உன்பக்தையை உன் பாதத்தில் சேர்த்துக்கொள்” என்று கூறுவேன். உடனே நீ சிலையின் கரத்தில் உன் கரத்தை நுழைத்து ஓங்கி அவள் மண்டையில் அடிக்க வேண்டும்” என்று கூறினான்.

ஓர் நாட்டை ஆள்பவளைக் கோயிலிலே கொல்வதற்கு இவ்வளவு சூதான திட்டமிட்டு, அதைக் கூசாது குளறாது கூறியது கேட்ட உத்தமன், திடுக்கிட்டான். ஆனால் இச்செயலை நாம் செய்ய மறுத்தால், வேறு யாரையாவது கொண்டு செய்துவிடுவான். எனவே, நாமே இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, ஆரியனை, நோக்கி, “சரி” என்று கூறினான். “சபாஷ்!” என்று கூறிக்கொண்டே, ஆரியன் உத்தமனின் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

“தேவியின் திருக்கூத்தை என்னென்பது; நேற்றிரவு, என் சொப்பனத்திலே தேவி பிரசன்னமாகி, சில கட்டளைகள் பிறப்பித்தாள்” என்று ஆரியன், படைத்தலைவன் கரிமுகனிடம் கூறினான். கரிமுகன், மலர்புரிப் படைகளுக்குத் தலைவன். அரசி ஆரியன் சொற்கேட்டு ஆடுவது கண்டு மனம் புழுங்கி, அரச காரியத்தை வெறுத்துக் கிடந்தான். மலர்புரிப் படைகளுக்கோ, கரிமுகனிடம் அபாரமான அன்பு. கரிமுகனிடம் கட்டளைகளைப் படையினர் மிகக் களிப்போடு செய்வது வழக்கம். கரிமுகன் மலர்புரி அரச குடும்பத்திடம் விசேஷ அக்கரை கொண்டவன். மலர்புரியின் நிலைமையை மேன்மையுறச் செய்ய வேண்டும் என்பதிலே கரிமுகனுக்கு அளவுகடந்த பிரியம். சுற்றுப்புறங்களிலே இருக்கும் காடுகளை நாடுகளாக்க வேண்டும். மலை ஜாதியினரை அடக்கி, அந்த மண்டிலங்களை மலர்புரியில் இணைக்க வேண்டும், மூவேந்தரின் மண்டிலங்கள் போல் மலர்புரியும் திகழ வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். அரசியோ ஆரியனின் மொழிகேட்டுக் கெட்டதால், மலர்புரியின் முன்னேற்றத்திலே அக்கறைகொண்ட கரிமுகனின் திட்டங்களெதையும் ஆதரிக்கவில்லை. கரிமுகன், படையைப் பார்ப்பதும், பெருமூச்செறிவதும், பாசறை செல்வதும், தோள் துடைத்துக் கொள்வதுமாக இருந்து வந்தான். கரிமுகனை அடக்கி வைத்துவிட்டோம். இனி அவனுடைய சக்தி சரிந்துவிடும் என்று ஆரியன் தீர்மானித்துவிட்டான். கரிமுகன், செல்வாக்குடனிருந்தால், ஆரியனுக்கு எப்போதும் ஆபத்துதான்.

படைத்தலைவன் கரிமுகன் அடக்கப்பட்டாலும், அவனிடம் அன்பு பூண்ட படை எந்த நேரத்திலும், கரிமுகன் சொற்கேட்டு தன்மேல் பாயும் என்று அஞ்சிய ஆரியன், வீரமணி கிடைத்ததும், தேவிசேனை தயாரித்துக் கொண்டான். சமயம் நேரிட்டால் “தேவிசேனை”யைக் கொண்டு கரிமுகனின் படையை ஒழிக்க வேண்டுமென்று கருதினான். ஆரியனின் ஆவல் அவனை ஏக காலத்தில் பல திட்டங்களைத் தயாரிக்கச் செய்தது.

கரிமுகனை அடக்க வீரமணி வீரமணிக்குத் தெரியாமலே, அரசியைக் கொல்ல உத்தமன்; உத்தமனுக்குத் தெரியாமல்தான், கரிமுகனிடமே ஆரியன் சென்றான். மற்றோர் சதிச்செயல் புரிய. மலர்புரி அரசி மாண்டால் மக்கள் கரிமுகனிடம் பற்றுக்கொண்டு அவனை மன்னனாக்கிட எண்ணினால், என்ன செய்வது என்று யோசித்த ஆரியன், அரசி இருக்கும்போதே, கரிமுகன் அரசாளப் பேராசை கொண்டு சூது செய்யத் துணிந்தான் என்ற நிலையை உண்டாக்கி விட்டால், அரசி கொல்லப்பட்ட பிறகு, தனக்கு ஒரு எதிரியும் இல்லாது செய்துவிடலாம் என்று ஆரியன் திட்டமிட்டான்.

இந்தச் சூதான எண்ணத்துடன், ஆரியன் வந்ததைக் கரிமுகன் தெரிந்துக்கொள்ளாது, இத்தனை நாட்களாகத் தன்னை உதாசீனம் செய்து கொண்டிருந்த ஆரியன், தானாகத் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருப்பதால் பூரித்தான். அந்திவேளை! ஆற்றோரம்! அரச மரத்தடியிலே, இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். செவ்வானத்தின் அழகு போலக் கரிமுகன் முகத்திலே சந்தோஷம் தவழ்ந்தது. வர இருக்கும் இருள்போல, ஆரியனின் நெஞ்சிலே, சூது கப்பிக் கொண்டிருந்தது.

“தேவியின் கட்டளை என்றால் விளங்கவில்லையே” என்று கரிமுகன் ஆரியனைக் கேட்டான். “கரிமுகா! உனக்கு என்னிடம் பிரியம் கிடையாது. எனக்கும் உன்னிடம் அப்படித்தான், என்மொழி கேட்டு அரசி நடப்பது உனக்குப் பிடிக்கவில்லை. என் மொழி வழி செல்ல நீ இசையாததால், எனக்கு உன்னிடம் பற்றுக்கிடையாது. ஆகவே இப்போது நான் உன்னிடம் வந்தேன் என்றால், அது என் இஷ்டத்தினால் அல்ல என்பதைத் தெரிந்துகொள். தேவி கட்டளையிட்டதால் நான் இங்கு வந்தேன்” என்று ஆரியன் உரைத்திடக் கரிமுகன், திடுக்கிட்டுப் போய், தேவியின் கட்டளையா? தேவிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? தேவி, உன் ஆயுதம்! மலர்புரிப் படைத்தலைவனை மடக்கி வைத்த இயந்திரம். ஆண்மையை மலர்புரி இழந்திடச் செய்த பொறி என்று ஆத்திரமாகக் கூறினான். ஆரியன் புன்னகையுடன், “உன் எண்ணம் இது என்பது எனக்குத் தெரியும். தேவியும் அறிந்திருப்பாள் என்பதை நான் கூற வேண்டுமா? அவள் சர்வலோக ரட்சகி. எவனொருவன் தன்னை நிந்திக்கிறானோ, எவன் தன்னை அலட்சியப்படுத்துகிறானோ அவனையே அணைத்து ஆதரித்து, பின்னர் தன் பெருமையை அவனும் உணரும்படி செய்யும் பெரு நோக்கமுடையாள். தன்னைக் கடிக்கும் குழந்தையின் கன்னத்தை முத்தமிட்டுக் கொஞ்சும் தாய்போல், அவளை அவமதித்து வரும் உன்னைத் தேவி ஆதரிக்க முன்வந்தாள். அவள் பெருமையை அறியாத நீயும் இனி அவள் பெருமையை உணரப் போகிறாய், அவளடி தொழப் போகிறாய், தேவி பக்தனாகப் போகிறாய் என்பது சத்தியம்” என்று ஆவேசங் கொண்டவன்போல் ஆரியன் பேசினான். கரிமுகன் ஆச்சரியப்பட்டான். “நான் நிந்திக்கும் ஆள் என்பதற்காக என்னை அந்தத் தேவி ஆதரிக்கிறாள் என்று கூறுகிறீரே, இது விந்தையல்லவா!” என்று கேட்டான்.

“அன்னையின் போக்கை நீ என்ன அறிவாய்? அவள் சட்டம், ஊனக்கண் படைத்த உனக்கு என்ன தெரியும்! அதை உணர, ஞானக்கண் வேண்டும். கரிமுகா! நமது சுகதுக்கங்கள் அவளுடைய லீலைகள். இதோ தெரியும் செவ்வானம் அவளுடைய ஆடை! சூரிய சந்திரர் அவளுடைய விழிகள்! அண்டசராசரம் அவள் உடல்! அவனியிலுள்ள உயிர்களெல்லாம், அன்னையின் மூச்சு. அவளைக் கட்டுப்படுத்த அரச ஆக்கினை பயன்படுமா? உங்கள் உடுக்கை ஒலியின் முன் உன் படைஒலி, சிங்கக் கர்ஜனைமுன், நரியின் ஊளை போலாகும். பொன்னால் செய்யப்பட்ட சிங்காதனமேறும் மன்னர்களையே நீ அறிவாய். அவர்கள் முன் மண்டியிட்டுப் பழக்கப்பட்டவன் நீ. மாகாளியின் ஆசனம், எது தெரியுமோ! மக்களின் மனம், அவள் ஆசனம். அவள் சினம், அரண்மனைகளைச் சுடுகாடாக்கும்; சுடுகாடுகளையும் என் அம்மை விரும்பினால் சொர்ணபுரியாக்கிக் காட்டுவாள். அவள் பெருமை சொல்லுந்தரத்தல்ல” என்று மேலும் பேசினான் ஆரியமுனி. கரிமுகன், “போதுமய்யா உமது போதனை. உன் தேவியின் திருக்கலியான குணங்கிடக்கட்டும். இப்போது என்னிடம் வந்த காரணம் யாது, அதைக்கூறு. உன் பூஜாரிப் புலம்பலை ஆலயத்திலே நடத்து” என்று கூறினான்.

ஆரியன் கோபங்கொள்ளாது, “விடியுமுன் இருட்டு அதிகரிக்கும், அதுபோலவே அன்னையின் அருள் ஒளியைக் காணப்போகும் நீ இப்போது அஞ்ஞான அந்தகாரத்திலே கிடக்கிறாய். ஆனால் நீ பாக்யசாலி. இப்பிறவியிலே நீ இத்தகைய தேவநிந்தனை செய்கிறாயே தவிர, முற்பிறப்பிலே புண்யவானாக இருந்ததால், இப்போது உனக்குத் தேவிப் பிரசாதம் கிடைக்கிறது” என்று ஆரியன் கூறினான்.

“பிரசாதமா? என்ன அது? தேன் கலந்த பழமா?”

“அதைவிடச் சுவையுள்ளது. மரத்தில் குலுங்காத கனி, கூண்டில் தங்காத தேனில் கலக்கப்பட்டு அன்னையின் உள்ளங்கை எனும் குவளையிலிடப்பட்டு, உனக்கு அன்புடன் ஊட்டப்படுகிறது.”

“அழகான பேச்சு, ஆனால் பொருளில்லை”

“புரியாதது, பொருளின் குற்றமல்ல”

“போதும் பூஜாரியே! காரியம் கூறும், தேவி உம்மை என்னிடம் அனுப்பிய காரணம் என்ன?”

“கரிமுகனே! கேள்! தேவி, உன்னை மலர்புரி மன்னனாகும்படி கட்டளையிடுகிறாள். அதைக் கூறுமாறு என்னை இங்கு அனுப்பினாள்.”

இப்போது கேட்ட கரிமுகன், ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றான். அவனது அந்நிலையை பயன்படுத்திக் கொள்ள ஆரியன், ஆவேசமாக மேலும் சில மொழி புகன்றான். ஆரியனின் பேச்சுக் கெட்டு, கரிமுகன் தன்னை மறந்து நின்றான். செவ்வானம், மாறி இருள் சூழ்ந்த கொண்டது. ஆரியனின் முகத்திலே வெற்றி தாண்டவமாடுவது கரிமுகனுக்குத் தெரியவில்லை. “தேவி! உன்னை மன்னனாகும்படி கட்டளையிட்டு விட்டாள். நீ உன் படையுடன், அரண்மனையை முற்றுகையிட வேண்டும், அரசியிடம், தேவியின் கட்டளையைக் கூற வேண்டும். அரசி முடிதுறக்க இசைவாள், ஆலயத்திலே போய்ச் சேருவாள். நீ மன்னனாக வேண்டும். இதை நீ மறுத்தால், மாபாதகம் உன்னைத் தீண்டும். நான் ஏதோ கூறினேன் என்று எண்ணாதே. நீ அரசனானவுடன், நான் ஆரண்யம் சென்றுவிட வேண்டுமாம், தேவியின் உத்திரவு அது” என்று ஆரியன் கூறியது கேட்டு என்னால், நம்ப முடியவில்லை, எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே என்று தழுதழுத்த குரலில் கரிமுகன் கேட்டான், ஆனால் அவன் மனதிலேயோ ஆசை படமெடுத்
தாட தொடங்கிற்று. படைகள் அரண்மனைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரிப்பதும், அரசி, முடியை எடுத்தெறிவதும், பிறகு தர்பார் கூடித் தனக்கு முடிசூட்டுவதுமான காட்சிகள் அவன் மனக்கண் முன் தோன்றின. கரிமுகன், ஆசை கொண்டானென்றால், அரச போகத்திலே புரள வேண்டும் என்ற சுயநலத்தால் அல்ல. தான் ஆளத் தொடங்கினால், படைபலத்தைக் கொண்டு, மலர்புரியின் கீர்த்தியை மேலோங்கச் செய்யலாம் என்ற நோக்கத்தாலேயே, அவனுக்கு அரச பீடத்தின் மீது ஆவல் உதித்தது.

“தேவி கட்டளையிட்டாளோ இல்லையோ, அது ஒருபுறம் கிடக்கட்டும், ஆரியனிடம் சிக்கி நாட்டை முடமாக்கிய மலர்புரி அரசியிடமிருந்து நாட்டை மீட்டிட நாம் ஏன் நமது சக்தியை பயன்படுத்தக் கூடாது?” என்று கரிமுகன் யோசித்தான். விநாடியிலே காட்டுத்தீ போல அவனுடைய ஆவல் மூண்டுவிட்டது. ஆரியனை நோக்கினான்: “சரி! நான் படைகளுடன் அரண்மனையை முற்றுகையிட்டால், நீ புதியதாகச் சிருஷ்டித்துள்ள தேவிசேனை என் படையுடன் போரிடுமா?” என்று கேட்டான்.

“தேவியின் கட்டளையை நிறைவேற்றவே தேவிசேனை” என்று மறுமொழி புகன்றான் ஆரியன்.
“மக்கள் புரட்சி செய்தால்...” என்று கரிமுகன் இழுத்தான்.

“ஆம்! அது படைகளின் வலிமையைவிட ஆபத்து. பெரும் புயல் அல்லவா மக்களின் கோபம்? அதற்காகத்தான் தேவி முதலிலே உன்னைத் திருக்கோயிலை வலம்வந்து, திருநீறணிந்து, அவளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்டுப் பீதாம்பரங்களை நீ அணிந்து, பிறகே அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறாள். நீ தேவியிடம் அருள் பெற்று இக்காரியத்தைச் செய்கிறாய் என்பது தெரிந்தால்தான் மக்கள் புரட்சி செய்யாதிருப்பர். உனக்குத் தேவியிடம் பக்தி பிறக்கும்போது பிறக்கட்டும், கனியக் காலம் பிறக்கும். இப்போது யுக்திக்காகக் கவனித்தாலும், நான் கூறினதே சரி என்று உனக்குத் தோன்றும்” என்று ஆரியன் மொழிந்தான்.

“உண்மைதான்! ஊர்மக்கள், என் உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் உறுமி, எதிர்த்து என் முயற்சியைக் கெடுக்கவும் முற்படுவர். ஆரிய முனியே! உன் யோசனையே சரி! அதன்படியே செய்வேன். ஆனால் ஒன்று, இக்காரியம் நடைபெறுவதற்கு மணிவீரன் தடையாக இருப்பான்! அவனை எங்காவது அனுப்பினால் நல்லது” என்று கரிமுகன் கூறினான்.

வீரமணி இன்றிரவு தேவி சேனையுடன் மலர்புரிக்குத் தெற்கே உள்ள மலைக்காட்டிலே சந்தனக்கட்டைகளைச் சேமித்து வைத்துள்ள மலைவகுப்பினரை அடக்கி, சந்தனக்கட்டையைத் தேவிக்குக் கொண்டு வரப் புறப்படுகிறான். இங்கு அவன் வரும்போது சந்தன மணத்துடன் நுழைவான். நீ அரச மணத்துடன் அவனை வரவேற்று உபசரிப்பாய், இதுவும் தேவி கட்டளைதான்!” என்றான் ஆரியன்.

“நல்ல தேவி! அரசியல் தந்திரங்கள் அவ்வளவும் அறிந்து தேவி திட்டமிடுகிறாளே” என்று கரிமுகன் கேலி செய்தான். “அன்னையின் தந்திரத்தை நீ என்ன அறிவாய்!” என்று ஆரியன் பதிலுரைத்தான். அப்போது அவன் மனதிலே, “மடையன்! ஆரிய ஆதிக்கத்தை அடக்கி அரசாள வேண்டுமென்று எண்ணுகிறான். அதற்கு ஆரியனொருவன் கூறும் யோசனையைத் தழுவிக் கொள்கிறான். சிலந்திக் கூண்டை நெருங்கும் பூச்சி இவன்” என்று எண்ணினான். அந்த எண்ணம் அவன் முகத்திலே ஓர் ஜொலிப்பைத் தந்தது.

கரிமுகன் புரட்சி முதலிலும், பிறகே அரசியின் கொலையும் நடத்தப்பட வேண்டுமென்று ஆரியன் திட்டமிட்டு, உத்தமனிடம், “தக்க சமயம் வந்ததும் தெரிவிக்கிறேன், பொறுத்திரு” என்று கூறிவிட்டுக் கரிமுகனை உடனே அரசிக்கு எதிரிடையாகப் புரட்சி செய்யும்படி தூண்டினான். எந்த அரசில் சேவகம் செய்து உணவும், உடையும், விடுதியும், புகழும், செல்வாக்கும் பெற்றோமோ, அதே அரசுக்கே ஊனம் விளைவிப்பது அறமாகுமா, என்று கரிமுகனின் மனம் கலங்கிற்று. “அரசாள வேண்டுமென்ற பேராசை பிடித்தலைந்தே கரிமுகன் இக்காரியம் செய்கிறான்” என்று அரசி எண்ணிடின் என்ன செய்வது! மக்களும் அதுபோலக் கருதினால், ஆபத்தாகவன்றோ முடியும் என்றும் அஞ்சினான். மக்களை மயக்க, தேவி பக்தனாக வேடம் போடுவதே சிறந்த வழி என்று அவனுக்குத் தோன்றிற்று. ஆனால், புரட்சி செய்வது சரியா, தவறா என்ற சந்தேகம் மட்டும் அவன் மனத்தைக் குடைந்தபடி இருந்தது. அதிலும் முன் அறிவிப்பின்றி, திடீரெனப் பாய்ந்து தாக்குவதும், எந்தப் படை தனக்குப் பாதுகாப்பளிக்கும் என்று அரசி கருதியிருந்து வருகிறாளோ, அதே படையையே துரோகச் செயலுக்கு உபயோகித்துக் கொள்வதும் ஒழுங்காகுமா, தமிழகம் ஒப்புமா என்பது வேறு அவன் மனத்தைக் குடைந்தது. கரிமுகனுக்கு உண்மையில் அரச போகத்திலே மோகம் இருப்பின் ஆரியன் கூறினதும் “ஆம்” என்றுரைத்து, அரசிமீது பாய்ந்திருப்பான். ஆனால் அவன் உள்ளத்தில் அத்தகைய கள்ளச் சிந்தை இல்லை. அரசியின் கள்ளங்கபடமற்ற முகமும், கருணை ததும்பும் கண்களும் கரிமுகனின் நினைவிற்கு வரவே அவனது மனம் பதறிற்று. மனத்திற்குச் சாந்தியும் உறுதியும் பிறந்தாலன்றித் தன்னால் ஏதும் செய்ய முடியாதென்று தோன்றவே, தனக்கு ஆசானாக இருந்த பெரியார் ஒருவரிடம் சென்று, விஷயத்தை வெளிப்படையாகக் கூறாமல், மறைமுகமாகப் பேசலானான்.

“மலர்புரி அரசு நிலைமை தங்கட்குத் திருப்தி தருகிறதா? தமிழ் வீரமும், நெறியும், அறமும் மலர்புரியிலே மணக்கிறதா?”

“நல்ல கேள்வி கேட்டாயப்பா கரிமுகா! பாலில் விஷங் கலந்த பிறகு, தங்கக் கோப்பையிலே உள்ள தீஞ்சுவைப் பால் எப்படி இருக்கும் என்று தர்க்கித்துக் கொண்டு இருப்பார்களா! ஆரியனிடம் பிடியைக் கொடுத்துவிட்ட பிறகு மலர்புரியிலே தமிழ் அரசு ஏது?”

“நம்மை ஆள்வது தமிழ் மங்கை தானே! ஆரியன் ஏவலனாகத்தானே இருக்கிறான்”

“ஏவலன், காவலர் மகளைக் கேவலம் பதுமை போல ஆட்டி வைக்கிறானே தம்பீ! ஏதுமறியாதான் போல் பேசுகிறாயே. ஆள்வது தமிழ் மங்கை என்றாள். சிங்கத்தின் முதுகில் சிறுநரி சவாரி செய்வதுபோல, மலர்புரி அரசின் முதுகில், முனிவன் அமர்ந்திருக்கிறான். ஆரியனே ஆண்டால் நான் அஞ்சமாட்டேன். அந்த ஓர் காட்சியே தமிழர் கண்களைத் திறந்துவிடும். அரசனாக அவன் அதிக நாட்கள் நிலைக்க முடியாது. இப்போது அரசி என்று ஓர் தமிழ் மங்கை இருப்பது, ஆரியனின் காரியத்துக்குத் தக்க திரையாகவன்றோ இருக்கிறது”

“நோய் தீர வழி இல்லையா?”

“யார் முயன்றார்கள் இதுவரையில்? என் முதுமை என்னைத் தடுக்கிறது. மணிவீரனின் வறுமை அவனுக்குக் குறுக்கே நிற்கிறது. உன் பதவி உன்னை மடக்குகிறது. ஊர் மக்களோ உண்மையை உணரவில்லை. ஆரியக் கற்பனை அவர்களின் உணர்ச்சியின் ஊற்றைக் கெடுக்கிறது.”

“உண்மை! ஆனால், இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்ய முடியும்? அரசியோ யார் கூற்றையும் கேட்பதில்லை. அரசிக்கு எதிராகக் காரியம் செய்வதோ கொடிய குற்றமாகும்.”

“எந்த நீதிப்படி குற்றம்?”

“ஏன்? அரச நீதிப்படி குற்றந்தானே?”

“மனிதநீதி, அரசநீதியை விடப் பெரிது. அதுதான் அரசநீதிகளை அவ்வப்போது மாற்றியும் திருத்தியும் வருவது”

“வெளிப்படையாக எனக்கு உத்தரவு இடுங்கள். நான் வேதனைப்பட்டு இங்கு வந்தேன்.”

“கரிமுகா! உனக்கு உத்தரவு தர உன் உள்ளம் ஒன்றே உரிமை பெற்றது. நான், உன் சிந்தனைக்கு வேண்டுமானால் சில தருவேன். உத்தரவு கிடையாது.”

“என்ன கூறப் போகிறீர்கள்?”

“சங்க நூற்களைப் படித்துக் காட்டப் போகிறேன். நீயும் பாடங்கேட்டுப் பல நாட்களாகிவிட்டன.”

“நாட்டு நிலையை எண்ணி நொந்திடும் நேரத்திலே ஏட்டின் கவியைக் காட்டினால்...”

“பாடமும் உண்டு, பலனும் உண்டு.”

கரிமுகனும், அவன் ஆசானும் இதுபோல் உரையாடிய பிறகு, முதியவர் சங்க நூற்சுவடிகளைக் கொண்டு வந்து படித்துப் பொருள் கூறலானார். தமிழரின் வீரர், போர்த்திறம், மக்கள் மாண்பு ஆகியவைகளை விளக்கும் கவிதைகளைக் கனிரசம் எனத்தகும் பொருள் அழகுடன் எடுத்துக் கூறினார். கரிமுகன் சங்கக் கவிகளின் சுவையை ரசித்தான் என்றபோதிலும், அவன் உள்ளக் கொதிப்பு அடங்கவில்லை.