அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
11
                     

தனது தந்திரப்பேச்சு, கரிமுகனைப் பதட்டமாக ஏதும் செய்ய வொட்டாது தடுத்திடப் பயன்பட்டதேயன்றி, அவனுடைய மூலநோக்கத்தை மாற்றாதது கண்டு அரசி சற்று அஞ்சினாள். மணி வீரனின் படைகளும், தனக்கு உதவி செய்ய முடியாத நிலைமையிலிருப்பதையும், ஆரியன் ஏதும் செய்யாதிருப்பதையும் எண்ணி ஏங்கினாள். விடியமட்டும் பேசினாலும், கரிமுகன் தன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பது தெரிந்து திகைப்புற்று நின்றாள்.

“அரசியாராக நீர் இருத்தல் கூடாதென்று மட்டும் கூறுகின்றேனேயன்றி, உமக்கு வாழ்க்கை வசதியைத் தரவோ, மதிப்புத் தரவோ, நான் மறுக்கவில்லை. மலர்புரியின் நிலைமையை உத்தேசித்து, மலர்புரியின் புகழ் மங்கி வருவதைக் போக்க வேண்டுமென்பதற்காகவே நான் இக்காரியத்தைச் செய்யத் துணிந்தேன்” என்று கரிமுகன் தன் நோக்கத்தை விளக்கியுரைத்தான்.

சொல்லம்புகள் இங்கு பறந்து கொண்டிருந்தபோது, அகழ் வாயிலில் எரிஅம்புகள் பறந்து கொண்டிருந்தன. வீரமணி அகழைக் கடக்கப் பல வித முயற்சிகள் செய்து பார்த்தான்; முடியவில்லை. கரிமுகனின் படை உள்ளே என்னென்ன காரியம் செய்கிறதோ, அரசியைக் காவலிலே வைத்துவிட்டதோ, அரசியின் உயிருக்கே ஏதேனும் ஆபத்து நேரிட்டதோ என்றெல்லாம் வீரமணி எண்ணி ஏங்கினான்.

ஆரியன் தேவி கோயிலிலே கொலு மண்டபத்திலே கோலாகலமாக வீற்றிருந்தான். அவனுடைய சூது பலித்து வருவது கண்டு சந்தோஷித்தான். கரிமுகனைக் கொண்டு அரசியின் கர்வத்தை அடக்கி விட்டோம், கரிமுகனின் செயலைக் கண்டு வெறுப்படைந்துள்ள மக்களைக் கொண்டு இனிக் கரிமுகனை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து, பொழுது விடியட்டும் என்று எண்ணினான்.

அரசியைக் கரிமுகன் அரண்மனையிலே காலங் கடத்தவிடவில்லை. அரசிக்கு வேறோர் வழி தோன்றிற்று. “சரி! என் முடியைத் துறப்பதானால், அதை அரச வம்சத்தாருக்கே தர வேண்டும். நீ படைத்தலைவன், ஆகவே, தேவி சன்னதியிலே என் கிரீடத்தை வைத்துவிடுகிறேன். நீ உன் அரசிக்கு கேடு செய்ததுபோல, தேவி கோயிலிலும் உன் துடுக்குத்தனத்தைக் காட்டி, முடியை எடுத்து அணிந்து கொண்டு, மலர்புரியை நாலாவதரசாக்கு” என்று வெறுத்துக் கூறுபவள்போல் பேசினாள். கரிமுகன் அதற்கு இசைந்தான். இருவரும் தேவி கோயிலுக்குச் சென்றனர்.

ஆனந்தமாக உள்ளே அமர்ந்திருந்த ஆரியன், இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டான். ஏதுமறியாதவன் போலக் கரிமுகனை நோக்கி, “அரசியைக் கைதியாக்கியா இங்கு கொண்டு வந்தாய்? உன் அக்ரமம் அரண்மனையோடு நிற்கட்டும், ஆலயத்திலுமா நுழைந்தாய்? உன் பேச்சைக் கேட்டுப் படை நடக்கவும், பயந்த மக்கள் பதுங்கிக் கொள்ளவும், நீ கொக்கரிக்கவும், அரசி துயருறுதலுமான காலம் வந்ததே, இதற்கென்ன செய்வது?” என்று கூறினான். ஆரியனின் மொழிகேட்டு, அரசியின் மனம் உருகிற்று. என்ன “வாஞ்சை இவருக்கு! ஒரு ராஜ்யத்தை அபகரிக்கும் அக்ரமக்காரனிடம் அச்சமின்றிப் பேசுகிறார் எதிர்த்து! தேவியின் அருள் பெற்றவரிடம் இவன் என்ன செய்ய முடியும்? என்று எண்ணி, துக்கத்தையும் மறந்து புன்சிரிப்புடன் ஆரியனின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, “ஆலய அரசே! கரிமுகனின் படைபலம் என் பட்டத்தைத் தட்டிப் பறிக்க வேண்டுமென்பது தேவியின் திரு உள்ளமாக இருப்பின் அதை நான் மாற்ற முடியுமா? அவள் ஆணைப்படி நடக்கட்டும்” என்று கூறிவிட்டுக் கைகூப்பி நின்றாள்.
கரிமுகன், ஆரியனை நோக்கி, “கூறுமய்யா கோயிற்காவலரே! தேவியின் கட்டளையைக் கூறும்” என்று பேசினான். ஆரியன் சற்றுத் திகைத்தான். தன் ஏற்பாட்டின்படியே கரிமுகன் இப்புரட்சியை நடத்தினானென்ற போதிலும், கரிமுகனின் கரம் வலுத்துள்ள அந்த நேரத்தில் அவன் என்ன முடிவுடன் ஆலயம் வந்துள்ளானோ என்று அச்சமாகத்தான் இருந்தது. கரிமுகனைத் ‘துரோகி, புரட்சிக்காரன்’ என்று மக்கள் கருத வேண்டிய அளவுதான் புரட்சி இருக்க வேண்டுமென்று ஆரியன் நினைத்தான். ஆனால் மக்கள் ஒரே அடியாக அடங்கி விடுவர் என்று ஆரியன் கருதவில்லை. பெருத்த அமளி நடக்கும் ஊர் மக்களின் எதிர்ப்பு, கரிமுகனின் படைபலத்தை ஒடுக்கிவிடும் என்றே எண்ணியிருந்தான். கரிமுகனின் கரம் மிக அதிகமாக ஓங்கிவிட்டதே என்று கலங்கினான். இந்தச் சமயத்திலே தேவி சேனையை வெளியே அனுப்பியதும் தவறு என்று எண்ணி வருந்தினான். ஆலயத்துக்குள் இந்த நிலையில் இருக்கையில், தீ! தீ! தீ! என்று பெருங்கூச்சல் கேட்டது. மலர்புரி வீதியிலே, பல இடங்களில், நெருப்புப் பிடித்துக் கொண்டுவிட்டது. தீ பரவியபடி இருந்தது. ஊர்மக்கள் ஓவெனக் கூவிக்கொண்டு அல்லோலகல்லோப் பட்டனர். பாசறைகளிலே ஆயுதங்களைப் போட்டுவிட்டு படைவீரர்கள், தீயணைக்க வந்தனர்.

கரிமுகனின் புரட்சியை அடக்கத் தம்மிடம் போதுமான ஆயுதபலம் இல்லையே என்று எண்ணி ஏங்கிய மக்கள் சிலர் கூடிப் பேசித் தத்தம் வீடுகளுக்குத் தீயிட்டுக் கொள்வதென்றும், தீ பரவினால், ஊரிலே படையிடம் உண்டான அச்சமும் பறந்து போகும் அளவு, குழப்பம் ஏற்படும்; அச்சமயத்திலே, படைவீரர்களும் ஏமாறுவர்; அதே நேரத்தில் பாசறை புகுந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்வதென்றும், தந்திரத் திட்டம் வகுத்து, அதன்படியே, சில தன்னலமற்ற தியாக புருஷர்கள், எத்தகைய கஷ்ட நஷ்டமேற்கவும் துணிவுகொண்டு, தத்தமது மாளிகைகளிலே தீ மூட்டிவிட்டனர். தீயணைக்கப் பலர் கூடுமுன், தீ பரவலாயிற்று. அவர்கள் எண்ணியபடியே ஊர்மக்கள், புரட்சியையும் கரிமுகன் படையையும் மறந்து தீ! தீ! எனக் கூவிக் கொண்டு, பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றவும், பேழைகளைத் தேடவுமாயினர். தமது வீட்டு மக்களைக் காப்பாற்றும் நினைப்புமின்றி, அந்தத் தியாகப் புருஷர்கள், ஓடோடிச் சென்று, பாசறை புகுந்து, ஆயுதங்களை வாரி வாரி எடுத்துத் தமது தோழர்களுக்குக் கொடுத்தனர். ஆயுதங்கள் கிடைத்ததும், மக்கள் சந்தோஷ ஆரவாரம் புரிந்து, “தீர்ந்தான் கரிமுகன்!” என்று கூவிக் கொண்டு ஆயுதங்களைச் சுழற்றினர். இதற்குள், தீயணைப்பு வேலையும் ஒருவாறு முடிந்தது. கோயிலுக்குள்ளே குமுறிக் கிடந்தவர்கள் ஒரு பக்கம் தீ அணைக்கப்படுவதையும், மற்றோர் புறம் ஆயுத ஒலி எழும்புவதையும் கேட்டு, விஷயம் விளங்காது திகைத்தனர். இதனிடையில் அகழிவாயில் அமளியைக் கண்ட ஆயுதம் தாங்கிய அறப்போர் வீரர்கள், கரிமுகனின் கட்டளையால் போரிட்ட கூட்டத்தைத் தாக்கி, அகழிப் பாலத்தைப் பழையபடி பொருந்தினர். மணிவீரனின் படைகள் வீராவேசத்துடனும் களிப்புடனும், நகருக்குள் பிரவேசித்தன. ஆயுதமிழந்த கரிமுகன் ஆட்கள், ஒருபுறம் ஆயுதந்தாங்கிய மக்களின் எதிர்ப்பும், மற்றோர்புறம் மணிவீரனின் படை தரும் உதையும்பட்டு, மூலைக்கு மூலை ஓடவும், பதுங்கவும், மண்டை நொறுங்கிச் சாகவும் ஆயினர். வெற்றி தன் காலடியிலே கிடப்பதாக எண்ணிக் களித்திருந்த கரிமுகன், எதிர்பாராத விதமாகத் தீயும், தெருச்சண்டையும், பாசறைச் சூறையாடலும், படையின் திணறலும், மணிவீரனின் பிரவேசமும் நடந்திடக் கண்டு, மனம் மருண்டு, கோயிலை விட்டு வெளியே ஓடினான். ஆத்திரமடைந்த மக்களின் ஆயுதங்கள் பல, அவன் அங்கங்களைச் சிதைத்தன. கோபங்கொண்ட கூட்டத்தால் மிதிபட்டு, மாண்டான். அரசி வாழ்க! வாழ்க மணிவீரன்! வாழ்க தீ! தீ மூட்டிய வீரர் வாழ்க! என்ற உற்சாகக் கூச்சலுடன் மக்கள் மணிவீரன் தலைமையில் ஊர்வலமாகக் கோவில் சென்றனர். எதிர்பாராது இத்தனை சம்பவங்கள் நடந்ததால், மலர்புரி அரசியின் மனம் குழம்பி, மயங்கி, பிரக்ஞையின்றிக் கீழே கிடக்க, ஆரியன், அரசியின் முகத்தில் நீர் தெளித்துக் கொண்டிருப்பதை வீரமணி கண்டு, வாளை உருவினான், இவ்வளவு அமளிக்கும் அக்கிரமத்துக்கும் காரணமாக இருந்த ஆரியனை வெட்டி வீழ்த்துவது என்ற முடிவுடன்.

வீரமணி ஓங்கியவாள், மட்டும், ஆரியனின் கழுத்திலே விழுந்திருந்தால், மலர்புரியைப் பிடித்திருந்த பீடை தொலைந்திருக்கும். - தமிழகத்தை அரிக்கும் புழும் செத்திருக்கும். கூரிய அந்தவாள், ஆரியனனின் சிரத்தைச் துண்டிக்கத் துடித்தது. உறையைவிட்டு வெளிவந்த அவ்வாள், புற்றிலிருந்து சீறி வெளிக்கிளம்பிய நாகம்போலவும், குகையை விட்டுக் கூச்சலுடன் பாய்ந்தோடி வந்த புலிபோலும் இருந்தது. ஆனால்! வீரமணியின் கரத்திலிருந்த வாள், திடீரென வீரமணியின் கரத்திலிருந்து, தடுகக் முடியாத சக்தியினால், பிடுங்கப்பட்டு, சரேலென மேலுக்குக் கிளம்பி, கோவில்கூடச் சுவர்நடுவே போய் ஒட்டிக்கொண்டு நின்றது. வீரமணி ஆச்சரியத்தால் இஃதென்ன! என்று கூவினான். ஆரியன் சிரித்துவிட்டு, “அவள் ஆணையடா தம்பீ! தீபத்தை அணைக்க உன்னால் முடியுமா? தேவியின் புதல்வனை உன் வாள் என்ன செய்யும்? அதோ பார், அது தொங்குவதை! ஏன் உன் உடல் பதறுகிறது? முட்டாளே! என்னைக் கொல்ல உன்னால் முடியுமா? உன் வீரம் எங்கே? வாள் எங்கே?” என்று கம்பீரமாகப் பேசினான். வீரமணி ஆச்சரியத்தால் திக்பிரமை அடைந்திருந்ததால், பதிலுரைக்க நா எழவில்லை. உருவியவாள், உயரப் பறந்து சென்று கூரையிலே தொங்குவதைக் கண்டு, அவன் ஏதும் புரியாது திகைத்தான். கரத்தைவிட்டு கட்கத்தை ஓர் சக்தி இழுத்ததும், அதைத் தடுக்கத் தனக்குச் சக்தி இல்லாமற் போனதும், அவனுக்கு ஆச்சரியத்தை மட்டுமல்ல, மிரட்சியையே கொடுத்தது. ஒருவேளை, “தேவி”க்கு இத்தகைய சக்தி இருக்கிறதோ என்று சந்தேகித்துத் திகைத்தான். ஆரியனுக்கு ஆபத்து வருவது அறிந்தே “தேவி” தன் கரத்திலிருந்த கட்கத்தைப் பிடுங்கி விட்டாளோ, என்று எண்ணினான். ஆரியப் புரட்டை அவன் அறிவான். ஆனால், கத்தி எப்படித் தன் கரத்தை விட்டு உயரத்தாவிச் சென்று விட்டது என்பது விளங்காததால், அவன் மனம் மருண்டது. வீரமணி ஆச்சரியத்தால் தாக்குண்டு நின்ற சமயம், அரசியின் கண்கள் திறந்தன; கைகூப்பினாள். ஆரியன் ஆசீர்வதித்து, “அரசியே! அன்னை பராசக்தியின் அருளால், நீ காப்பாற்றப்பட்டாய், அவள் மலரடி வணங்கு. இதோ பார்,மேலே தொங்கும் கத்தியை இது என் கழுத்தைத் தேடி வந்தது, தேவி அதனை மேலுக்கு அழைத்துக் கொண்டாள். இதனை, என்மீது வீசினான், வீராதி வீரன், தலைகுனிந்து நிற்கிறானே, இந்த மணி! கேள் அவனை! பார் அவன் முகத்தை! வீசிய கத்தியின் சக்தி எங்கே? வீரா, உன் கத்திவீச்சு, தேவியின் கண்வீச்சின்முன் எம்மாத்திரம்” என்று ஆரியன் கேலிச்சிரிப்புடன் கூறினான். வீரமணியை அரசி கோபத்தோடு நோக்கி “என்ன துணிவு உனக்கு? மணிவீரா! நீயுமா கரிமுகன்போல் கெடுமதி கொண்டாய்? அவன் என் அரசைக் கவிழ்க்கப் பார்த்தான், நீ ஆரிய முனியைக் கொல்லத் துணிந்தாயே. ஏன், இவ்ளவு பாதக எண்ணங்கள் பிறந்தன” என்று கோபமும் சோகமும் ததும்பக் கேட்டாள். வீரமணியின் செவியிலே இவை ஏதும் படவில்லை. வெடுக்கென்று வாளை இழுத்தது எது? அந்தச் சக்தியின் மர்மம் என்னவென்று எண்ணுவதிலேயே அவனுடைய சிந்தனை புதைந்துவிட்டது. ஆரியன் அரசியிடம், ‘அம்மே! இவன் அணவத்தைத் தேவி அழித்தாள். நான் வாழவேண்டும் என்பது அவள் சித்தமாக இருக்கும்போது, இந்தப் பித்தன் என்னைக் கொல்லத் துணிந்தால் நடக்குமா? நெருப்பைக் கறையான் எரிக்குமா?” என்று கூறினான்.

“தேவியின் அருளால் தாங்கள் தப்பினீர்கள். உத்தரவிடும், இவனை என்ன செய்வது?” என்று அரசி கேட்க, ஆரியன், “காராக்கிரமே இவனுக்குச் சரியான தண்டனை” என்று கூறிட, வீரமணியøச் சூழ்ந்து கொண்டனர் சில வீரர்கள். வீரமணிக்கு வீரர்கள் தன்னைச் சூழ்ந்துகொண்டபோதுதான், தன் நிலை தெரிந்தது.

‘அரசியே இது பெரும்பழி! என்னை வீணாகச் சந்தேகிக்க வேண்டாம், ஆரியனே, கரிமுகனைத் தூண்டினவன்” என்று கூவினான். அரசியோ போர்வீரர்களை அழைத்து, “உம்! இழுத்துச் செல்லுங்கள் இவனை” என்று உத்தரவிட்டாள். மணிவீரனின் ஆட்களுக்கு, மனம் சஞ்சலமாக இருந்தது என்றபோதிலும், அரசியின் உத்தரவுக்கு அஞ்சி, வீரமணியைக் கைது செய்தனர். மேலும் கத்தி கூரைக்குச் சென்ற சம்பவம் அவர்களுக்கு ஆச்சரியத்துடன், பயத்தைக் கிளப்பிவிட்டது. எனவே வீரமணியைக் கைது செய்யாவிட்டால், தங்களுக்கு ஆபத்து வருமே என்று பயந்தனர்.

வீரமணியைச் சிறைக்கூடத்திற்கு இழுத்துச் சென்றபோது ஊர் மக்கள் பதறினர். கோவிலிலே நடைபெற்ற ஆச்சரியமான சம்பவத்தைக் கேட்டு மக்கள் ஏதும் கூற இயலாது திகைத்தனர். வெற்றியின் ஆனந்தம், ஆரியனின் முகத்திலே புதியதோர் ஜொலிப்பைத் தந்தது. கரிமுகன் செத்தான்; கர்வமிக்க மணிவீரன் சிறை புகுந்தான்; ஊரிலே நமது மகிமை பற்றிய பேச்சாக இருக்கிறது; இனி நமது எண்ணம் சுலபத்திலே ஈடேறும் என்று எண்ணிக் களித்தான். உத்தமன் மட்டுமே, ஆரியனை ஒழிக்க மிச்சமாக இருந்தவன். பெரும்பாலானவர் ஆரியனிடம் தேவசக்தி இருக்கிறது என்று நம்பி நடுங்கினர். அரசி, ஆரியனின் அடிபணிந்துவிட்டு, ஆசிபெற்று, அரண்மனை சென்றாள். அன்று முதல் ஓர் கிழமை வரையில், தேவி சக்தியால், கூரைக்குப் பறந்து சென்றவாள் தரிசனமும், அதற்கான பூசையும் நடைபெற்றது. ஊர் மக்கள், திரள் திரளாகக்கூடி வாளை வணங்கினர். சகலரும் தேவி சக்தியே, இந்த ஆச்சரியத்துக்குக் காரணம் என்று கருதினர். ஆரியப்புரட்டுகள் பற்றி அடிக்கடி போதித்து வந்த கரிமுகனின் ஆசிரியரிடம் சிலர் சென்று, இது பற்றிக் கேட்டனர். அவரும் ஆலயம் சென்று வாளைக் கண்டார்; நெடுநேரம் யோசித்தார், வீடு திடும்பினார். ஏடுகளைப் புரட்டினார்; சிரித்தார். அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது. ஆரியன் மிக்க விகேத்துடன் அற்புத நிகழ்ச்சி ஏற்படச் செய்யத் துணிந்தது கண்டு ஆயாசமடைந்தார். தான் அறிந்த உண்மையை ஊராருக்கு உரைத்திட கருதினார். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தார். ஊரெங்கும் ஆரியனின் மகிமையைப் பற்றிய பேச்சாகவே இருக்கக் கண்டு ஏங்கினார். ஆலயமென்பது ஆரியக்கோட்டை என்பதும், தந்திர யந்திரம் என்பதும், பாமரருக்குப் பலிபீடம் என்பதும், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்தவர் சிக்கிச் சிதையும் சிலந்திக்கூடமென்பதும், அவருக்குத் தெரியும். அதனைத் தெரிந்திருந்த தமிழரோ, அதனை மறந்தனர். சூதுகளைச் சூத்திரங்கள் என்று நம்பியும், மமதையாளரின் போக்கை மகிமை என்று எண்ணவுமான நிலைபெற்றது கண்டு வாடினர். வீரமணியின் வாள் உறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதும், அது அவன் கரத்திலிருந்தும் மேலுக்கு இழுக்கப்பட்டது தேவி சக்தியினாலும் அல்ல; மந்திரத்தினாலுமல்ல; சாதாரண காந்த சக்தயினாலேதான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் கூறும் மொழிகேட்க ஆட்கள் இல்லை. ருஜு கேட்பர்; நீ செய்து காட்டு என்று அறைகூவுவர் என்பது ஆசிரியருக்குத்தெரியும்.

தமிழர்கள் அறிவுத் திறனால், இயற்கையின் கூறுகளை, உண்மைகளைக் கண்டறிந்து, இயற்கையின் சக்தியை, மனிதனின் தேவைக்கு உபயோகித்ததை அவர் நன்கு அறிந்தவர். போர் முறைகளில் தமிழர் எவ்வளவு அபூர்வமான முறைகளைக் கையாண்டனர் என்பது அவருக்குத் தெரியும். உறையினின்றும் எடுக்கப்பட்ட வாள் மேலுக்கு எழும்பியது போன்ற அற்புதங்கள் பலவற்றைத் தமிழர் தமது வாழ்க்கையிலே நடைமுறையிலே காட்டி வந்தது, ஏட்டினால் அவருக்குத் தெரிந்தது. அத்தகைய ஏடுகளைத் தமிழர் மறந்து ஆரியக் கற்பனைகள் மலிந்து, சூதுகள் நெளிந்து கிடக்கும் ஆரிய ஏடுகளைக் கேட்டும் படித்தும் மதிகெட்டு வருவது அவருக்கு மிக்க வருத்தமூட்டிற்று. வாள் சம்பவத்தின் உண்மையை ஊர் மக்கள் உணரும்படிச் செய்யாவிட்டால், ஆரியன் எது சொன்னாலும் கேட்டு நம்பவும் எதைச் செய்தாலும் சரி என்று கூறித் தலை அசைத்துத் தாசராகவும் தமிழர் தயங்கமாட்டார்கள் என்பது தெரிந்து அவர் திகில்கொண்டார். அரசியின் கண்கள் ஆரிய நோயினால், கெட்டுக் கிடப்பது, தமிழகத்தையே கெடுத்துவிடும் என்று துக்கித்தார். சுவடிகளைப் புரட்டும் தமிழ்ப் புலவர், இனி சுலோகங் கூறுபவருக்கு அடைப்பம் தாங்கும் நிலை வருமோ என்று அஞ்சி, அறிவுத்றையிலே ஆற்றலுள்ளவர்களாக இருந்து, அழியாப் புகழ்பெற்ற அருந்தமிழ்ப் புலவர்கள் அளித்த அரிய கருத்துகள் தேய்ந்து வருவதை எண்ணி மனம் புழுங்கினார். அதுவரை மூலையில் கிடந்தவரும், முத்தமிழில் முழுத் திறமையற்றவருமாக இருந்து, வெறும் ஏடுதாங்கிகளாக இருந்த சில தமிழ்ப் பண்டிதர்கள், வாள் சம்பவத்தால் ஆரியனுக்கு ஏற்பட்ட மகிமையைக் கண்டு, அவன் புகழ்பாடி, பல்லிளித்து நிற்கப் புறப்பட்டது கண்டு கடுங்கோபங் கொண்டார். சில்லறை அறிவும், சுயநல வேட்கையும், பொருளாசையும் கொண்ட சில புலவர்கள் “மணிவீரன் வீழ்ச்சி” – “தேவி திருவருள்” – “வாள் விடு தூது” என்று பாக்களமைத்து, ஆரிய பாதந்தாங்கிகளாகி அவற்றைப் படித்துப் பொருள் ஈட்டவும் ஆரியனின் ஆதரவைப் பெறவும் கிளம்பினர். தமது கவித்திறமையைக் கபடனுக்குக் காணிக்கையாகத் தந்து, பொன் பெற்று வாழ வழி செய்து கொண்டனர். இவ்விதம், தமிழும், தமிழ் அறிவும், கலையும், கலைவாணரும், ஆரியத்துக்கு அரணாக அமைக்கப்படுவது தன்மானத் தமிழ்ப் புலவருக்குத் தாங்கொணாத் துயர் கொடுத்தது. என்ன நேரிட்டாலும் சரி; உண்மையை உரைத்திடுவது என்று தீர்மானித்தார் புலவர். அரசிக்கு ஓர் ஓலை விடுத்தார். அதிலே ஆரியன் கூறியபடி, தேவி சக்தியினால், வாள் கூரையில் தொங்கவில்லை என்றும், இயற்கையான ஓர் பொருளின் சக்தியினாலேயே, இது நிகழ்ந்ததென்றும், இதனை விளக்கிடத் தயாராகத் தாம் இருப்பதாகவும், சபை கூட்டினால் அதுபற்றிச் சகலமும் செப்ப முடியுமென்றும் புலவர் எழுதியிருந்ததுடன், இவ்விதமான மடல் விடுத்திருக்கும் செய்தியை நாற்சந்திகளிலே நின்று கூறிடவுமானார். ஊருக்கு இஃதோர் புதிய ஆச்சரியமாக இருந்தது. இவன் ஓர் புதிய பித்தன் என்று அரசி எண்ணினாள். நமது கீர்த்தியைக் கண்டு பொறாமைப்பட்டே, இக்கிழவன் இது போலப் பேசுகிறான் என்று ஆரிய தாசராகிவிட்ட புலவர்கள் எண்ணினர். ஆரியனோ, ஓர் எதிர்ப்பு மடிந்தால் மற்றொன்று பிறக்கிறதே, என்ன செய்வது என்று ஏங்கினான்.

சபை கூட அரசி ஏற்பாடு செய்துவிட்டாள். ஊர் திரண்டது. போலிப் புலவர்கள், ‘ஆரியனுக்குப் பரிவாரகமாக நின்றனர். அஞ்சா நெஞ்சினராகப் புலவர் சபை புகுந்தார்; அரசியை வணங்கினார். ஆரியன் அவரை அலட்சியமாகப் பார்த்தான்.

“ஆரிய! கேளாய், கெண்டை வீசி வராலிழுத்திடும் வகைபோல், ஆரியக் காரியம் நடைபெறுகிறது. தேவி திருவருள் என்று பேசி, நீ மக்களுக்கு மனமருள் உண்டாக்கினாய். என்று நான் உன்மீது குற்றம் சாட்டுகிறேன்” என்றுகூறினார். ஆசனத்திலமர்ந்தபடியே ஆரியன் பேசினான், புலவனிடமல்ல அரசியிடம்!

“தேவி திலகமே! இந்தப் புலவனை, இந்தக் காரியமாற்றத் தாங்கள் நியமித்து எவ்வளவு நாட்களாயின” என்று கேலி மொழி பேசிய ஆரியன், நடுங்கும்படி புலவன் புகன்றார், “ஏ! பூசாரி! கெடுமதி எனும் உட்கோட்டை இடிய நாட்கள் வரும்; உன் மமதை ஒழியும்; வாள் சம்பவத்தைத் தேவியின் வரப்பிரசாதம் என்று கூறி, ஊரை ஏய்த்தாய். இது முழுப்பொய். வெறும் தந்திரம். மணிவீரனின் வாள், கூரையிலே தொங்குவதுபோல எத்தனை வாளை வேண்டுமானாலும் தொங்கும்படி நான் செய்யவல்லேன். வாள் மட்டுமல்ல! நீ வணங்கும் அந்தத் தேவியையே தொங்கும்படி செய்வேன்” ஆரியன், “புலவனே! கவியாகாதே! வாள் நொறுக்கப்பட்டுவிடும். என்னைத் தூஷித்து விடு. நான் கவலை கொள்ளேன். என் அன்னையை மட்டும் ஏளனம் செய்யாதே, பாழாக்காதே? தேவியை நீ அறியாய்! அவளுடைய அருளாலேயே என் உப்பைத் தின்று வளர்ந்த அந்த மணிவீரன், என்மீது வீசிய வாள் அவன் கரத்தை விட்டு இழுத்தெறியப்பட்டது. தேவியின் சக்தியே அதற்குக் காரணம்” என்று கூறினான்.

ஆரியனின் கோபத்தைக் கிளறிக் கிழக்கவி என்ன கஷ்டத்திற்கு ஆளாவானோ என்று மக்கள் பயந்தனர். புலவனோ, துளியும் பயங்கொள்ளவில்லை. சீற்றத்தால் முகம் சிவக்க நின்றான்.

“ஆரியனே! உன் மொழியால் என்னைத் தவறான வழியிலே செல்லும்படி செய்ய உன்னால் முடியாது. உன் மிரட்டலை நான் துரும்பெனவும் மதியேன். உன் சூது தெரியாதவர்களிடம் உன் சொரூபத்தைக் காட்டு. தமிழன் என்ற உணர்ச்சியை இழக்காதிருக்கும் என்னிடம் காட்டாதே உன் இறுமாப்பை. நான் பொன்னனுக்காகப் புளுகுரைக்கும் புலவனல்லன்; பாமரருக்குச் சாமரம் வீசிச் சொகுசாக வாழச் சொர்ணம் தேடும் சோற்றுத் துருத்தியுமல்ல. உண்மைக்கு ஊழியன். ஊர் முழுதும் உன்னை நம்புகிறது. ஆனால் நான் உன்னை மதிக்க மறுக்கிறேன்” என்று தைரியமாகக் கூறிய புலவரை நோக்கி, அரசி, “புலவரே! பொங்காதீர்; பொறுமையை இழக்காதீர்; பெரியவரைப் பழிக்காதீர். வாள் சம்பவம், தேவி சக்தி இல்லை என்று கூறுகிறீர், காரணம் கூறும், அது என்ன சக்தி என்பதை எடுத்துக்காட்டும். வீணாகத் தூற்றுவது விவேகமாகாது. மணிவீரன் கரத்திலிருந்த வாள் எப்படி அவன் கரத்தைவிட்டுப் பறந்து, மேலே சென்று தொங்கிற்று, அதற்குக் காரணங் கூறு” என்று கண்டிப்பாகக் கூறினாள். சபையோர் கைகொட்டினர். புலவர், அரசியாரே! “மணிவீரனின் வாள், கோவில் மாடத்திலே தொங்குவது தேவி சக்திதான் என்று ஆரியன் எப்படி ருசுப்படுத்த முடியும்?” என்று கேட்டார், “அவர் சொல்கிறார், நான் நம்புகிறேன். நீர் மறுக்க வந்தீர், நீரே காரணம் காட்டவேண்டும்” என்றாள் அரசி.

“அரசியாரே! மேகத்தைக் கண்டு மயில் ஆடுவது ஏன் தெரியுமோ தங்களுக்கு” என்று புலவன். கேட்டான். ஆரியன், “அபாரமான அறிவு இவருக்கு” என்று கேலி செய்தான். அரசியாரும் சிரித்திடக்கண்ட செந்தமிழ்ப் புலவன், “அரசியரே! சபையினரே! மேகத்தைக் கண்ட மயில் ஆடக்காரணம், அந்த மேகத்திடம், மயிலுக்கு மகிழ்ச்சியூட்டி, மயிலைத் தன்வசம் இழுக்கும் ஓர் காந்தசக்தி இருப்பதுதான். அதுபோலவே தேனில் உள்ள காந்தசக்தியே, வண்டுகளை ரீங்கார மிடச் செய்கிறது. அழகில்உள்ள காந்தசக்தியே, ஒருவர் மனதை மற்றொருவருடைய மனதுடன் பிணைக்கிறது. இயற்கைப் பொருள்களுக்குள்ள காந்த சக்தியின் தன்மையை அறிந்தோர், மணிவீரனின், வாள் காந்த சக்தியினாலேயே இழுக்கப் பட்டது என்பதை அறிவர். கோயில்மாடிக் கூரையிலே, ஓரிடத்திலே, ஆரியன், காந்தக் கல்லை அமைத்திருக்கிறான். அந்தக் கல்லின் காந்த சக்தியே, மணிவீரனின் உருவிய வாளை தன்னிடம் இழுத்துக்கொண்டது. சந்தேகமிருப்பின், கூரையிலே, நான் குறிப்பிடும் அக்கல்லைப் பெயர்த்தெடுத்துவிட்டுப், பிறகு, வாளையோ, வேறு எதையோ, மேலே போகச்செய்ய உத்திரவிட்டுப் பாருங்கள். உரத்த குரலிலே, தேவி! தேவி! என்று ஆயிரந் தடவை ஆரியன் அர்ச்சித்துப் பார்க்கட்டும், அசைகிறதா தேவி என்று பார்க்கிறேன்” என்று கோபத்துடன் கூறினான். சபையினர், புலவனின் பேச்சு, ஆரியனின் முகத்திலே, ஓர் விதமான மாறுதலை உண்டாக்கியது கண்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அரசியோ, ஆரியனோ, புலவரின் அறைகூவலுக்குப் பதில் கூறுமுன், சேவகர் சிலர் ஓடிவந்து, “மணி வீரன், சிறைச்சாலையினின்று தப்பித்துக் கொண்டு ஓடுகிறான், அவனைப் பிடிக்க ஆட்கள் கிளம்பிவிட்டனர்” என்று கூறிடவே, சபையிலே விசேஷ பரபரப்பு ஏற்பட்டது.