அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
15
                     

“இவனுக்கு மூளைக்கோளாறு இருக்கிறது. நமது சிகிச்சைச் சாலைக்கு அனுப்புங்கள். புத்தி சுவாதீனத்திற்கு வந்ததும் விசாரிப்போம்.

“ஆ! அண்ணா! உன்னைக்காணாது வாடும் எனக்கு, நீல மணியைக்காணும் பேறாவது கிடைத்ததே. முடிதரித்து, வீற்றிருக்கவேண்டிய நீ, இந்தப் பாழும் நீலமணியினால், முடி இழந்தாய்; குடும்பத்தைத் துறந்தாய்; என்ன கதியானாயோ? நீல மணியே! உனக்கு வாயேது, பேச! பேசும் வாயுடையவனோ, பித்தனாக இருக்கிறான். என் மனம், எதையோ எண்ணி ஏங்கு கிறதே. எங்கள் குடும்பத்தைக் கெடுத்த கோரமணியே! உன் அழகு, இவ்வளவு அவதியைத் தந்தது. உன் மர்மத்தை நான் யாரிடம் கூறுவேன்.” என்று பாண்டியன் பலப்பல கூறிப் பிரலாபித்தது கண்ட, அவ்விரு வீரரும், “இந்தப் பொல்லாத நீலமணியைத் தொட்டவருக்குப் பித்தம் பிடிக்கும் போலும், இதைக்கண்டு, மன்னர் கண் கசிந்து, ஏதேதோ பேசுகிறாரே” என்று எண்ணினர். வேலையாட்கள், வீரமணியை, அரண்மனை சிகிச்சைச் சாலைக்கு அழைத்துச்சென்றனர். வீரர்கள் வேந்தனிடம் விடை பெற்றுக்கொண்டு போயினர். மன்னனோ, ஓர் மேடை மீது அமர்ந்து நீலமணியை உற்று நோக்கியபடி இருந்தான். முத்து முத்தாக அவன் கண்களிலே நீர் வெளிப்பட்டது!

நீலமணி எடுத்துவந்த வீரனொருவன், சித்தங் கெட்டுக் கிடக்கிறான், சிகிச்சைபெற்று வருகிறான் என்ற விஷயம் ஊரிலே, பரவி, நடனாவின் செவிபுகுந்தது. ஆனால், பித்தர்கள் பலரிருக்க, இவன் ஒருவன் தானோ கிடைத்தான் சிகிச்சைக்கு என்று அவள் கூறினாள், அழகிகளின் அணைப்புக்காக மனதை அலையவிடும் பித்தர்கள், ஆடம்பரவாழ்வுக்காக, அதிகாரத்துக்காக, எதையுஞ் செய்யத் துணியும் பித்தர்கள் உண்டல்லவா என்றுரைத்தாள். மருந்திடவந்தவன் மையல் கொண்டலைந் தான், ஒரு பித்தன் எமது மண்டலத்திலே. இங்கொருவன் நடனமாட வாடி என்றழைத்துப் பஞ்சணைக்குப் போடி என்று பணித்தான்! எத்தனையோ பித்தர்களைக் கண்டாயிற்று, இவன் அதுபோல் ஒருவன், என்று அலட்சியமாக நடனா கூறினாள்.

“இவன் சாமான்யனல்லன் வாட்போர்வீரன், பேசுவது பூராவும் போர்பற்றியே, சோழமண்டலத்தைப்பற்றியும் மன்னனைப் பற்றியும், பேசுகிறான் பெருமையுடன். கலிங்கப் போர் பற்றி சிலாகித்துக்கூறுகிறான்” என்று அரண்மனைச் சேடியர் கூறினர். “அங்ஙனமாயின் நான் காணவேண்டும்” ஏன்றாள் நடனா. அரசாணை பெற்று நடனா, அந்தச் சிகிச்சைச் சாலை சென்றாள். வீரமணியைக் கண்டாள்; கண்ணா என்று அரண்மனை அதிரக் கூவினாள். நடனா என்றோர் எதிரொலி கிளம்பிற்று; இரு உருவமும் ஒன்றாகப்பிணைந்து விட்டன, இருதயத்திலேகிடந்த எண்ணங்களை எடுத்துரைக்க முடியாத நிலை. இதழ்கள் ஒன்றையொன்று பற்றின; பிரிய மறுத்தன. காவலர் ஓடோடி மன்னனுக்குரைத்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து “நீதானா? நினைவு தானா? நிஜமா?” என்று கேட்டுக் கேட்டுக்களித்தனர்,

எப்படி இங்கு வந்தாய்?
எங்கெங்கே இருந்தாய்?
ஐயோ, என்னென்ன கஷ்டமோ?
ஏன், இப்படி மெலிந்திருக்கிறாய்?
என் அன்பே! இன்றேநான் வாழ்வைப் பெற்றேன்.
என் இன்பமே! எத்தனை காலம் பிரிந்திருந்தாய்?
என்னை எங்கெங்குதேடி அலுத்தாயோ?
என்னால் உனக்கு இவ்வளவு இடையூறா?

என்ற கேள்விகள், யார் முதலில் கேட்டனர், யார் பிறகு கேட்டனர் என்பது தெரியமுடியாத வண்ணம், ஏககாலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். இருவரும் பதில்கூற வாய்திறந்தாரில்லை. சில கேள்விகளுக்குப்பதில் முத்தம்; சில கேள்விகளுக்குக் காதலின் பிணைப்பு! சில கேள்விகளுக்குப் பதில் கண்ணீரைத்துடைப்பது! என்ற முறையிலிருந்ததே தவிர, ஒருவர் வரலாற்றை ஒருவர் கேட்கமுடியவில்லை. நடுக்கடலில் நாவாய் கெட, அலையுடன் போரிட்டுத் திமிங்கிலத்திடமிருந்து தப்பித், தத்தளித்தவனுக்குத் திடீரென ஓர்கலம் கிடைத்தால், யாருடையது? எங்கே செல்கிறது? எங்கிருந்து இங்கே வந்தது?” என்று அந்த மரக்கலத்தின் வரலாறுவிசாரிக்கவா மனமிருக்கும்! ஆ! மரக்கலம், இனி நான் அதனிடம் அடைக்கலம்! உயிர்தப்பினோம் என்று உவகைக் கூத்தாடிடுவானன்றோ! அதுபோலப், பலப்பல தொல்லைகட்கு ஆளாகிப் பல்வேறு நாடுகளில் சுற்றி அலைந்த காதலர், ஒருவரை ஒருவர் கண்டதும், கேள்விகள் மனதிலே கிளம்பி, நாவிலே நர்த்தனமாடினவே தவிர பதில்கூறவோ, கேட்கவோ முடியாதபடி அவர்கள் நிலைமை இருந்தது.

அன்பே! உயிரே! இன்பமே! என்று யார், யாரை அழைத் தனர் என்று தெளிவு இல்லை. அன்பே, உயிரே என்ற சத்தம் கேட்டது. ஒரு ஆண்; ஒரு பெண் குரல். இருகுரலிலும் காதல் கனிவு தோய்ந்து கிடந்தது. மன்னனும் அவன் சேவகரும் வந்தனர். காதலர் மண்டியிட்டனர்; “நோயறியாது மருந்திட எண்ணினேன்,” இவ்வீரனின் வியாதிபோக்க இவ்வேல் விழியாளே மருந்தானாள்” என்று மகிழ்வோடு மன்னன்கூறி, மாளிகையிலே இருவரும் இருக்கட்டும்; ஏவலர் அவர் விரும்பும்போது வேண்டுவதைத் தரட்டும்; நாளைதான் அவர்கள் நமது உலகுவருவர்; அப்போதுதான், அவர்கள் இருவர் வரலாறும் நாம் கேட்டறிதல் கூடும்; நாம் அவர்கள் நிலைமையை ஒருவாறு அறிவோம்; தேனைமொண்டுண்ணும் தேனீயைக் கலைத்தலோ, கீதத்தின் ரசத்திலே மூழ்கி இருக்கும் இசைவாணனிடம் பேசுவதோ, இயற்கையின் எழிலில் இலயித்திருக்கும் ஓவியக் காரனிடம் சென்றுஓவெனக் கூவுவதோ கூடாதன்றோ. வாழ்க இக்காதலர்! வளம் பெறுக இவர் வாழ்வு!!” என்று கூறிவிட்டுப் பணியாளர் சிலரை அமர்த்திவிட்டுச் சென்று விட்டான்.

“மன்னன் சென்றுவிட்டான் கண்ணாளா!” என்று மதுரம் பொழிந்தாள் நடனா. “எந்த மன்னன்? என்று வீரமணி கேட்டானில்லை. “ஆயின், மடிமீது உட்காரு” என்று கூறினான்.

“கண்ணே! நாம் எங்கிருக்கிறோம்.”

“என் பக்கம் நீர்! உம் பக்கம் நான்!”

“ஆமாம்! இது எந்த மண்டலமாக இருந்தால் தான் நமக் கென்ன? நீ இங்கே, உன் பக்கம் நான்! இது ஆனந்தபுரி, ஆமாம், நான் இன்றுவரை தேடித் தேடித் வாடினேன், இதோ ஆனந்தபுரி.”

“பேசாதிரும் பிரியரே! உமது முகத்தைக் கண்டு எவ்வளவு காலமாகிவிட்டது. வாய் திறவாதீர் நான் ஆசை முகத்தைச் சரியாகப் பார்க்க வேண்டும். அந்த மோகனப் புன்னகை, கெம்பீரத் தோற்றம், ஆண்மையை அறிவிக்கும் கண்ணொளி, இவைகளை நான் உண்ணத்தலைப்படும் நேரத்திலே ஒரு பேச்சும் பேசாதீர்.”

“தங்கமே! செல்வமே! மணியே.”

உரத்தக் குரல் மங்கிற்று; தழுதழுத்த பேச்சுத் தொடங்கிற்று, பின்னர் உதடுகள் மட்டுமே அசைந்தன. பிறகு அதுவும் இல்லை. இரண்டு உருவங்கள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் அறபுதமான சிலையைக் கைத்தேர்ந்த சித்திரக்காரன் செய்து வைத்ததுபோன்ற காட்சி. உயிர் ஓவியம் என்பதற்கு ஒரே அத்தாட்சி. அவர்களின் கண்களிலே புரண்ட நீர், இடைஇடையே கேட்ட “இச்” சொலி! காதல் உலகிலே அவர்கள் குடியேறினார்கள். சுற்றும் முற்றும் பார்க்க அவர்களுக்கு வேலையில்லை. பேசவுங்கூடவில்லை. ஆம்! சோழ மண்டலத்திலே பிரிந்து பாண்டிய நாட்டிலே சந்திப்பு. அவர்களின் நிலைமையை உணர்ந்தோர், அப்பக்கம் அணுகவும் தயங்கினர். உணவு வேண்டுமா என்று கேட்கவும் பயந்தனர். இவ்வளவு காதல் கொண்ட இருவர், எப்படித்தான் பிரிந்திருந்தார்களோ? என்னென்ன கஷ்டமோ? எங்கெங்கு தேடினார்களோ? என்று காவலர்கள் பேசிக் கொண்டனர். நடனாவும் வீரமணியும், அக்காவலருக்குத் தத்தமது முன்னாள் காதற் சம்பவங்களை நினைவிற்குக் கொண்டுவரும் தூண்டுகோளாயினர். நடனாவைக் கண்டு மணியின் முகம் மலர்ந்தது; மணியைத் தழுவிய நடனாவின் நயனம் மலர்ந்தது. இருவரின் ஆனந்தத்தைக் கண்ட, அரண்மனை பூராவும், களிப்புக் கூத்தாடிற்று. அரண்மனையின் ஆனந்தம், நகருக்குள்ளேயும் நடமாடத் தொடங்கிற்று. கீதம், எழும் இடத்தில் மட்டுமா இன்பமூட்டும்! நந்தவனத்து நறுமணம், நாலு பக்கமும் வீசாதா!

இன்ப அருவியிலே நீந்திய இளங் காதலரின் களிப்பின் படபடப்பு, எங்கும் நிறைநாதமாயிற்று!

பிரிந்துகூடிய காதலரின் களியாட்டச் செய்தியைக் கேட்டுத் தெரிந்த பாண்டியன் புன்முறுவல் பூத்து, சித்திரமன்ன அச்சிற்றிடையாள் சிந்திடும் சிரிப்பை உண்டு, சிந்தையில் கள் கொண்ட குமரனின் குதூகலத்தை எவ்விதத்தேனும் குலைத் திடல் அடாத செயலாகும் என்றுகூறி, மண்டலங்களை மறந்திடச் செய்வதும், கடமையைக்கூடத் துச்சமாகக் கருதிடச் செய்வதும், பாம்பைப் பழுதையென்றெண்ணிடச் செய்வதும், பாவையரின் பாகுமொழி தரும் சுகபோதையன்றோ! தம்மை மறந்து கவிவாணர் பாடிடுவதும் காரிகையின் கோலாகலக் கூத்தில் மூழ்குவதாலன்றோ என்று எண்ணினான். மேலும், நயனங்களில் நீர்ததும்பியபடி நின்ற நங்கைக்கு, ஏற்ற இந்நம்பி, நெடுநாள் பிரிந்திருந்து இன்று வந்து சேர்ந்தான்; அவள் இழந்த இன்பத்தை மீண்டும் பெற்று உண்ணத்தலைப்படும் நேரத்

திலே, ஊறு விளைவித்தல் கூடாது என்றன்றோ ஆன்றோர் கூறுவர். என்று கருதினான். ஆனால், அந்த அணங்கு யார்? அவளுடைய அணைப்பிலே சொக்கிடும் காளை எந்நாட்டவன்? நீலமணி, அந்த நீண்டகன்ற கண்ணாளிடம் எங்ஙனம் சிக்கிற்று? என்பதனைத் தெரிந்துகொள்ள மன்னன் துடித்தான்.

மதுரமான பழவகைகளையும், மணம் வீசும் புஷ்பக் கொத்துகளையும், கலவைச் சந்தனத்தையும், பணியாட்கள்மூலம் அனுப்பிவைத்தான். சந்தனம் உலருகிறது; பூங்கொத்துகள் புழுதிபடிந்துள்ளன; கனிகள் கசங்கிக் கிடக்கின்றன; காதலரோ பேசிக் கிடக்கின்றனர் என்று பின்னர் வந்துரைத்தனர் பணியாட்கள். பார்த்திபன், பூங்கொடிபோன்ற அவள் ஆலிங்கனமே அவனுக்கு மதுரம்; கனியும் கலவைச் சந்தனமும், முல்லை மல்லிகை முதலியன அவனுக்கு இதுபோது தேவையில்லைத் தான் என்றுகூறி, சரி, அவர்கள் பாண்டிநாட்டு அரண்மனையில் இருப்பதும், அவர்களின் வரலாற்றினை அறிந்திடத்துடிக்கும் அரசனொருவன் காத்துக்கிடக்கிறான் என்ற நினைவும் பெறட்டும், பிறகு நாம் அவர்களைக் கண்டு பேசுவோம் என்று தீர்மானித்துக்கொண்டான். நாடாளும் மன்னனுக்கு, வீடாளும் வனிதையரின் விசாலமான கண்களில் விரகம் வீசும்போது, காதலரன்றி வேறெதுவும் ஒரு பொருளாகத் தோற்றாது என்பது தெரியும். காடுகளிலே கடுவேகத்துடன் ஓடிடும் மானினங்களும், சுனை நீரருகே பெண்மான் சென்றதும், நீரருந்த நாயகி செல்லட்டும் நான் நிமிர்ந்துநின்று காவல் புரிவேன் என்று கூறுவது போலக் கொற்றவனென நின்றிடும் நேர்த்தியை மன்னன் கண்டதில்லையா! கோணல் சேட்டையால் குவலயத்தைச் சிரிக்கச் செய்யும் குரங்கும், தன் காதற்கிழத்திக்குக் கனிவுடன் கனியூட்டும் காட்சியைக் கண்ட தில்லையார் என்ன அதிசயம் கண்டானோ இவன்? ஏன் இப்படி அந்த மடந்தை சென்ற திக்கையே இமைகொட்டாது பார்த்துக் கிடக்கிறான்? என்று கேலி செய்திடும் நண்பர்களைப் பொருட்படுத்தாது, காதலால் பிணைப்புண்டகுமரன், ஆயிரம் கேள்விகளுக்கும் ஒரே பெரு மூச்சினைப் பதிலாகத்தருவதைப் பார்த்திபன் தன் வாலிபப் பருத்திலே கண்டதில்லையா! தொழுவத்திலே முரட்டுக் காளைகள்; முற்றத்திலே வேட்டை நாய்கள்; இங்கு மங்கும் காவலர்; இவற்றினைச் சட்டை செய்யாது எழிலிடையாள் ஒருத்திக்காக, மைஇருட்டில் மதில்தாவி, மனைநுழையும் மறவரின், காதல் திருவிளையாட்டுகளை அவன் கேட்டதுண்டு. எனவே நடனராணியும், வீரமணியும், உலகையேமறந்து, உவகையில் மூழ்கிக்கிடந்தது கேட்டு ஆச்சரியப்படவுமில்லை. ஆயாசமடையவுமில்லை, இது சகஜம் என்று இருந்தான்.

“இன்னுயிரே! உன்னை இதுநாள்வரை காணாது கலங்கினேன்; கதி கெட்டேனோ என்று கதறினேன்.”

“ஊசலாடிக்கிடந்த உயிர், விநாடிக்கு விநாடி விடைபெற்றுக்கொள்ள எண்ணியபோதெல்லாம், என் மன்னனை ஒரே ஒருமுறை கண்டுவிட்டால் போதும், கவலையில்லை நீ போகலாம் என்றன்றோ உயிருக்கு உரைத்தேன். உத்தமனே, ஊண் உண்டா, உறக்கம் உண்டா!”

“எழிலுடை நடனா! மலர்புரியாளின் ஆரிய போதை, ஆரியனின் மமதை, காட்டானின் கடு நெஞ்சு, அங்கோர் தூர்த்தையின் காமக்கூத்து, பின்னர் சித்தக்குழப்பம், புலியால் ஆபத்து, பிலத்திலே பாம்பு, மலைகளிலே ஓட்டம், காடுகளிலே உறக்கம், மண்மேடுகளிலே உபவாசம், எனப் பலப்பல தொல்லைகள் அடைந்தேன்; ஆனால், உன்னைக் கண்டேன்; அவ்வளவையும் மறந்தேன்; இனிப்பயமே இல்லை”

“கண்ணாளா! முதலிலிருந்து முறையாகக் கூறும். கலிங்கப்போரிலே, நீர் நம் காவலருக்கு என்ன குற்றம் இழைத்தீர்?”

“குற்றம் இழைப்பவன் நானா? கோமளமே, நீ இப்படிக் கேட்கலாமா?”

காதலரின் இவ்வுரை தடைப்படும்படி, பாண்டியனின் பெருநகை கிளம்பிற்று, பக்கத்திலே அவன் நின்றதைக் கண்டு கொள்ளாது, காதலர் பேசிக் கொண்டிருந்தனர்.

“நீயா, குற்றம் இழைக்கவில்லை! எவ்வளவு கொடியவன் நீ? இந்தக் கொடியிடை துவளும்படி விட்டு வைத்ததைவிடக் கடுங் குற்றம் ஏதுளது” என்று, மன்னன் கேட்டான். வணங்கிய படி, வீரமணி, “வழக்குரைப்பேன் வேந்தே! தண்டனை தரும் உரிமை உமக்குண்டு. நான் சுற்றாத இடமில்லை; தேடாத மண்டலமில்லை. இவளே, மின்னல்போல் மறைந்து என் மனதைக் குழப்பினாள். தண்டனைக்குரியவள் இவளே” என்று வீரமணி கூறிட, வெகுண்டவள்போல நடித்து நடனா, “வேந்தே! ஆடிக்கிடந்த என்னைத் தேடிப் பிடித்திழுத்தான் இக்கள்ளன்; பின்னர் தேம்பித்தவித்திட விட்டுச் சென்றான்” என்று நடனா வழக்குரைத்தாள். “இவ்வித விசித்திர வழக்கை விசாரித்துப் பழக்கம் நமக்கில்லை என்றபோதிலும், மண்டலத்து வழக்கனைத்தும் மன்னன் விசாரித்திடுதல் முறையாதல் பற்றி, உமது வழக்கினை விசாரித்திடுவோம்; ஆனால் வழக்குரைக்கு முன்னம் வாதாடலாமோ! கட்சிக்காரான நீவிர் இருவரும், உமது ஊர் பேர் விவரம் கூறிடாமுன்பு, வழக்கை விசாரிக்க முடியுமா? காதற் குற்றவாளிகளுக்கும், காலதேச வர்த்தமானம் கேளாது, தீர்ப்பளிப்பது எங்ஙனம்.” என்று பாண்டியன் கேட்டிட, முத்துப் பற்கள் வெளியே தெரிய, பவழ இதழ்விரிய, பசும் பொன் பதுமையன்ன நடனா வீரமணியைச் சுட்டிக்காட்டி, “இவர் என் காதலர்” என்றாள்.

விளங்கிய விஷயமன்றோ இது. ஊர், பேர், விவரம் உரை, என்று மன்னன் கேட்டிட, நடனா சோழ மண்டலத்திலே, வீரருக்கு மணியாக விளங்கிய வரலாறும், கலிங்கப் போர் மூண்ட காதையும், வெற்றிச் செய்தியுடன் வீரமணி நாடு கடத்தப் பட்டான் என்ற வேதனைச் செய்தியைக் கேட்ட கூற்றும், விம்மிய விழியுடன் கிடந்த சோகமும், மருத்துவன் கொண்ட காமநோயும், மாற்றாரின் சதியினால் சோழமண்டலத்திலே ஆபத்துவர இருந்ததும், அரசியாரின் உதவியால் உத்தமனுடன் தான் சோழநாட்டைவிட்டு வெளியேறியதும், இடையே உத்தமன் பிரிய நேரிட்டதுமாகிய வரலாற்றினை நடனராணி விவரமாகக் கூறினாள். மன்னன் முன் இந்த வரலாறு கூறப்பட்டதால், மங்கையின் இதழ் தப்பிற்று. இல்லையேல், அவள் தன் வரலாற்றினைக் கூறிக் கொண்டிருக்கையில், மனம் நெகிழ்ந்த வீரமணி, நடனாவைப்பற்றித் தழுவி முத்தமிட எண்ணியது, ஒருமுறை இரு முறையல்ல!

வீரமணியும் பிறகு, தனது முழு வரலாற்றினையும் கூறினான். காட்டானின் சிற்றன்னையின் காமக் கூத்துப் படலத்தை வீரமணி கூறினபோது வேந்தன் விலா நோகச் சிரித்தான்.

இருவர் வரலாற்றினையும் கேட்டறிந்த பாண்டியன், “சோழனிடம், நீ மாசற்றவன் என்பதை நாமே கூறிடுவோம்; சோழமண்டலத்திலே நீர் மீண்டும் வசித்திடும் உரிமையை வாங்கித் தருவோம்; மலர்புரியில், ஆரியம் மலர்ந்திருப்பதால் தமிழகமே கெட்ட வாடையால் வாடிடும். எனவே, அத்தத்தீய செடியினை வேரோடு களைந்தெறிவோம்” என்று மன்னன் அன்புடன் கூறிவிட்டு, “நீலமணியினை உனக்குக் கிழவனொருவன், கலிங்கப்போர் முடிவின்போது, குகையிலே தந்தான் என்றுரைத்தாயே, அவன் எப்படி இருந்தான், அவன் உருவத்தைச் சற்று விவரமாகக் கூறமாட்டாயோ” என்று வீரமணியை மன்னன் கேட்டான். வீரமணி தனதுநினைவிற்குத் தெரிந்த வரையில் கலிங்கக் கிழவனைப்பற்றி வர்ணித்தான். ஆனால் கலிங்கக் கிழவன், மலர்புரி அரசியின் காதற்கூத்தனாக இருந்தவனானதால், மலர்புரி அரசியிடம் முழுவிவரம் தெரிந்துகொள்ள முடியும் என்று யோசனை கூறினான்.

“இறந்தவனைப்பற்றி இவ்வளவு கவலையா! ஏதோ ஓர் நீலமணிக்கு இத்தனை விவாதமா” என்று சலித்துக் கேட்டாள் நடனா.

“பெண்ணே! உனக்குத் தெரியாது இந்த நீலமணியின் நீண்டகதை” என்று மன்னன் சோகத்துடன் கூறிக் கொண்டே, மடியிலிருந்து நீலமணியை எடுத்தான்; அதனைக் கண்டதும், நடனராணி, பதைபதைத்து, அதனை வாங்கிப் பார்த்து, “இதுவா நீங்கள் பேசிய நீலமணி; இது, என் காதணியன்றோ! சோழமன்னனின் வனபோஜன விழாவுக்கு நடனமாட நான் சென்றபோது, யாரோ, என் காதணியைக் கவர்ந்து சென்றனர். அது தான் இது; இதன் ஜதை எங்கே?” என்று கேட்டாள். மன்னனும் வீரமணியும் ஒரே சமயத்தில் நடனாவை நோக்கி,“இந்த நீலமணி, உன் காதணியா?” என்று கேட்டனர். “ஆமாம், சந்தேகமேயில்லை” என்றாள் நடனா. “என்ன ஆச்சரியம். நடனா! நீ யார் தெரியுமா” என்று பாண்டியன் பாசத்தோடு கேட்டான்.

பாண்டியன் பாசத்தோடு அப்பாவையைப் பார்த்து, “நடனா! நீ யார் தெரியுமா?” என்று கேட்டபோது நடனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஏன்? நான் சோழமண்டல அரண்மனைத் தாசியின் வளர்ப்புப் பெண்” என்றாள், தழுதழுத்த குரலில்.

“மகளே!” என்று பாண்டியன் கூறிக் கொண்டே, நடனாவின் கரத்தைப் பிடித்திழுத்து, அணைத்துக் கொண்டு, முகத்தில் தோன்றிய வியர்வையைத் துடைத்தபடி, “என் மகளே! நீ யார் என்பது தெரியாமல் இத்தனை காலம் வளர்ந்து வந்தாய். உன் தாயையும் அறியாய், உன் தந்தையையும் தெரியாய் நடனா! நீ என் சகோதரனின் மகள்! மலர்புரி அரசியின் மகள்!” என்றான். இச்சொல் கேட்ட நடனா வீரமணி இருவரும் திடுக்கிட்டனர்.

“மலர்புரி அரசியின் வரலாற்றினை நான் அறிவேன், கூறினேனே தங்களிடம்” என்று மணி கூறினான். “கூறினாய் குமர! ஆனால் கூறாதது இதுதான்; தெரியாத காரணத்தால். மலர்புரி அரசியின் மனதைக் கவர்ந்த கள்ளனே கலிங்கக் கிழவன்; அது நீ அறிந்ததே, கலிங்கக் கிழவனே என் அண்ணன், நீண்ட கதை அது. நெஞ்சு நோகும். சுருக்கமாகச் சொல்வேன்; சோலைக்குச் செல்வோம் வாரீர்” என்று சொல்லி நடனாவையும் வீரமணியையும் பாண்டியன் அரண்மனைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். மனத்திலே பல நாளைய சம்பவங்கள் ததும்பினதால், மன்னவன் வழியில் ஏதும் பேசவில்லை. பாண்டியன் நாட்டுப் பாவையா? மலர்புரி மங்கையா? அரச பரம்பரையா? மலர்புரி மங்கையா? அரச பரம்பபரையா இந்த ஆடலழகி? என்று எண்ணி ஆச்சரியப்பட்டான் மணி. விசித்திர மாகவன்றோ இருக்கிறது. பாண்டியநாடு தகப்பன் பிறந்த இடம், மலர்புரியோ தாயின் இருப்பிடம்; வளர்ந்ததோ சோழ மண்டலம், அரச குடும்பத்தில் பிறந்து நாட்டியத்தைப் பிழைப்பாகக் கொண்டோம்; இது என்ன விந்தை என்றெல்லாம் நடனா எண்ணி எண்ணி, பூராவிஷயமும் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டாள். நடனா கைக்கு எட்டாக் கனியோ என்றோர் கவலை வீரமணிக்கு உதித்தது. மன்னன் அவன் மனக்குறையை மாற்றுபவன் போல் வீரமணியின் முதுகைத் தட்டிக்கொடுத்து, “சரியான வீரனப்பா நீ. இந்த நங்கை அவளுடைய சிறிய தகப்பனிடம் வந்து சேரும்படி நீயன்றோ செய்வித்தாய். ஆனாலும் நீர் ஓர் கள்ளன். நடனாவைப் பறித்துக்கொண்டு போகத்தான் காத்திருக்கிறாய்” என்று கூறிவிட்டு, “நடனா! அதோ பார், ஓர் பளிங்கு மண்டபம், அருமையான சித்திர வேலைகள் அமைக்கப் பெற்றது. அதன் அழகைப் புகழாதார் கிடையாது. ஆனால் அதன் அருகே, நாங்கள் யாரும் செல்வதே இல்லை. ஏன் தெரியுமா? அந்தப் பளிங்கு மண்டபத்திலேதான், என் அண்ணன் தனது அரசுரிமையைத் துறந்தான், ஆண்டியாகியல்ல, அரசபோகத்தையே அல்பமெனக் கருதும் விதத்திலே அவனுக்கு மையல் ஊட்டிய ஓர் மலர் விழியாளின் சுகபோகத்தை வேண்டி! அதோ, அந்தப் பளிங்கு மண்டபப் படிக்கட்டுகளிலே என் தந்தை மண்டியிட்டுக் கேட்டார் “மகனே என் சொல்லை மீறாதே” என்று. நானும் “அண்ணா! அண்ணா!” என்று கூறி அழுதேன். என் அண்ணன், அன்று அங்கு நின்றதும், தந்தையின் பேச்சை கேட்கமறுத்ததும், இப்போதுதான் என் கண் முன்பாகவே நடப்பதுபோல் தோன்றுகின்றன” என்று பாண்டியன் கூறிக் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். ஆச்சரியம் மேலுக்குமேல் வளருகிறதேயொழிய, விளங்கக் காணோமே என்று வீர மணியும் நடனாவும் எண்ணினர். சில வினாடிகளுக்குப் பிறகு, அரசன் அங்குக் கிடந்த ஆசனமொன்றிலே அமர்ந்தான். எதிரே பசும் புற்றரையில் நடனா உட்கார்ந்தாள். வீரமணி, நின்று கொண்டிருந்தான்.
“நடனா! நீ, என் அண்ணன் மகள்; ஆகவே உனக்குப் பூரா விஷயமும் தெரிந்தாக வேண்டும். கேள், உன் தகப்பனின் வரலாற்றினை” என்று பீடிகையிட்டுப் பாண்டியன், பழைய கதையைக் கூறத் தொடங்கினான்.