அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
4
                     

“உமது மன்னன், கலிங்கப் போரிலே வெல்வான்; கலகப் போரிலே என் செய்வான்? நான் துறவி; எனக்கு மன்னர் கூட்டமே துரும்பு. எனவே நான் துணிந்தே கூறுகிறேன். பட்டத்துக்கு வாரிசுப்படி வரவேண்டிய மன்னன் வந்திருப்பின் இத்தகைய அமளிகள் ஏற்பட்டிரா. தானுண்டு, தன் அரசுண்டு என்று இருந்திருப்பான். இவனோ, எடுவாளை! வீசு தலையை!! என்று கூறின வண்ணமிருக்கிறான். கொலை! படுகொலை! கோரம்! உயிர்வதை! நடந்தபடி இருக்கிறது. யாவும் இவனொருவனின் புகழ் வளர! இதற்கு எவ்வளவு கொலை! பாப மூட்டையைச் சுமந்து கொண்டிருக்கிறான் பார்த்திபன்!” என்றான் யோகி!

கொலையா! கொலை என்றால், கொல்லுவது என்பதுதானே பொருள்! இதிலே பாபமும் புண்ணியமும் என்ன தொக்கிவிட்டது. தொந்தி சுமக்கும் தந்திரவாதியே! உலகிலே, போர்க்களம் ஒன்றில்தான் “கொலை” நடக்கிறதோ! இவ்வளவு காருண்யம் பேசி கண்ணீர் வடிக்கிறீரே, உமது காலடியிலே சிக்கி சிதைந்துபோன சிற்றெறும்பு, புழு, பூச்சி எவ்வளவு. அவை கொலையல்லவா? பாபமல்லவா? போர்க்களந்தானா கொலைக்களம்! உலகமே அதுதானே!! சாவது, சாகடிக்கப்படுவது என்பவை உலகிலே விநாடி தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளல்லவா! காட்டிலும், நாட்டிலும், குருவிக் கூட்டிலும், குகையிலும், புற்றிலும், கடலிலும், விண்ணிலும், மண்ணெங்கும், கொலை நடந்து கொண்டே இருக்கிறது. பாபம், புண்ணியம், என்ற மொழிபேசி, மன்னனை ஏசிடத் துணிந்தீரே, கொலை நடவாத இடம் எது? யோகிகளின் பர்ணசாலைகளிலே, பக்குவமாக வாட்டித் தேனில் தொட்டு தின்னப்படும் மானிறைச்சி, புண்ணியத்துண்டுகளா! பசுங்கன்றின் இறைச்சியைப் பதம் பார்க்கும் முனி சிரேஷ்டர்கள் பாப பாயசத்தைப் பருகினவர்

களன்றோ. எமக்குத் தெரியும் எது முறை என்று! உமது கற்பனை உலகில் நாங்கள் குடி ஏறிடோம். கட்டும் உமது கடையை. இல்லையேல் நடவும் மன்னரிடம். முடியுடன் விளையாடு
கிறீர்; தெரிந்தால் பிடி சாம்பலாக்கப்படுவீர்! கெடுமதி கொண்டு, கலிங்கனின் கைக்கூலியைத் தின்று, கலக புத்தியைப் புகுத்தவந்தீர், போர்க்குண மக்களிடம் பூனைப் பேச்சு பேசுகிறீர்.” என்று கூட்டத்திலே ஒருவன் கொதித்துக் கூறினான். ஆரியன், “ஆத்திரம் விடுக! சந்தேகம் கொள்ளாதீர். நான் சாத்திரத்தை ஓதினேன். வேறில்லை. களத்திலே நடப்பதை நீங்கள் ஆதரிப்பதானால், நான் குறுக்கிடப் போவதில்லை.” என்று கூறினான் விபரீதம் விளையாதபடி இருக்க. மக்கள், “வந்தான் வழிக்கு” என்று கூறிக் கைகொட்டி நகைத்தனர். பின்னர் “ஓய் ஏதோ பேய் என்று சொன்னீரே, அதை உடனே களத்துக்கு அனுப்பும், நல்ல விருந்து கிடைக்கும்” என்று கேலி செய்தனர்.

களத்திலே, சோழனின் படைவீரர்கள், விழியினின்று கனலையும், உடலிலிருந்து குருதியையும் சொரிந்து, வெடுவெடென வீரச்சிரிப்புச் சிரித்துத் தமது நகை, நடை, இடி, பிடியால், கரிகள் திகைக்கும்படி காட்சியளித்தனர். மீனவர் மிரண்டதும், சேரர் மருண்டதும், விழிஞர் விரண்டதும், வந்தவர் செத்ததும் எம்மாலாயிற்றே என்று, முன்பு தாங்கள் முறியடித்த கூட்டத்தினரின் வரிசையைக் கூறி, வாளை வீசிப் போரிட்டனர், குலோத்துங்கனின் வீரர்கள்.

வாளோடு வாள் கலகலவெனப் பேச, கடகடவெனத் தேர்கள் உருண்டோட, யானைகள் மிரள, குதிரைகள் கதற, கோரமாகப் போர் நடந்தது. நெருப்போடு நெருப்பு, மலையோடு மலை, கடலோடு கடல் என்பதுபோல், படையுடன் படை உக்கிரமாக மோதிக் கொண்டன. யானையின் துதிக்கையை எதிரி யானையின் துதிக்கை பற்றி, முறுக்கி ஒருபுறம் இழுத்ததும், தந்தத்தால், மண்டையைக் குத்த, காலால், குத்திடும் கரியைக் குப்புறக் கவிழ்க்கக் குத்துண்ட யானை முயல்வதும், எதிர்ப்பட்ட போர் வீரர்களை, ஒருபுறம், யானைகள் கரகரவென இழுத்து, எலும்புகளை மளமளவென முறித்துக் கீழே வீழ்த்திக் காலால் தேய்ப்பதும் ஆகிய காட்சிகள், தமிழரையன்றி மற்றவரைக் கலங்க வைக்கும் தன்மையினதாக இருந்தன. நெருப்பைப் பரவச் செய்யும் காற்றென, குதிரைப்படை களத்திலே, அங்கும், இங்கும், எங்கும் சுழன்று, சுழன்று சுற்றிச் சண்டமாருதம் மரங்களைச் சாய்ப்பதுபோல், எதிரிகளைச் சாய்த்து அழித்தது. வீரமணியின் திறனை வியக்காதார் இல்லை. “அதோ வருகிறான்! இதோ பாய்கிறான்!” என்று எதிரிகள் மிரண்டு கூறினர். கலிங்கப் படையிலே பெரும் பகுதி அழிந்தது! மற்றது மிரண்டது! மண்டியிட்டாலன்றி மீள மார்க்கமில்லை! மார்தட்டிய மன்னன், களத்திலே இல்லை! கற்கோட்டையை நாடிச் சென்றான். மீசையை முறுக்கிய மந்திரி கேட்பாரற்று கிடந்தான். வேழங்கள் பிணமாயின! குதிரைகள் குடலறுபட்டுக் குவிந்து கிடந்தன! இரதங்கள் தூளாயின! படை வரிசை பாழாயிற்று! வாளேந்திய கரங்கள் குறைந்தன! வேதனைக்குரல் அதிகரித்தது! வெற்றி சோழனுக்கு! தொண்டமானின் தோள்கள் பூரித்தன! வீரமணியின் முகத்திலே ஒளி வீசிற்று! வென்றோம்! வென்றோம்! என்று சோழனின் சோர்விலாச் சூரர்கள் முரசு கொட்டினர். கலிங்கர், களத்தை விட்டோடலாயினர்! மான் வேட்டையாடும் வேங்கைகளாயினர் தமிழர்! கலிங்கப்போர் சோழனின் கிரீடத்துக்கு மற்றோர் வெற்றிமணி தந்தது!

ஆரியமுனி குறிப்பிட்ட பேய்கள், களத்துக்கு வரக் கூடுமானால், வயிறு புடைக்க உண்டிடப் பிணங்கள் குவிந்து கிடந்தன.

இறந்துகிடந்த யானையின் தந்தத்தைக் கொண்டு பேய்கள் பல்விளக்கிக் கொண்டு, யானையின் எலும்பால் நாக்கை வழித்துக் கொண்டு, ஓடும் இரத்த ஆற்றிலே வாய் கழுவிக்கொண்டு, இஷ்டமான பிணத்தை வயிறுபுடைக்கத் தின்னலாம்! வெறும் பிணம் தின்ன விருப்பமில்லையேல், அறுசுவை உண்டியே அங்குச் சமைக்கலாம்; அத்தனையும் அடுக்காக இருந்தன. பிணமான கலிங்கரின் வெண்பற்களைக் குவித்திடின், அரிசி! அதைக் குத்திட உரல் வேண்டுமோ! இதோ, கலிங்கரிடமிருந்து, தோல் கிழிந்து தரையில் உருண்ட முரசுகள். அவைகளிலே கொட்டி, யானைத் தந்தத்தாலே குத்திடலாம்! சமைத்திடச் சாமான் ஏராளம்! சாப்பிடவோ, சகலம் தயார்! விருந்து தீர்ந்ததும் வெற்றிலைப்பாக்கு வேண்டுமா! குதிரையின் குளம்புகள், பாக்கு! யானைக் காதுகள் வெற்றிலை! போட்டு மெல்லட்டும் பேய்கள்!! ஓஹோ! வெண்சுண்ணம் வேண்டுமே! அதுவும் உண்டு. கலிங்கரின் கண்களின் வெள்ளைக்கு மட்டும் குறைவா!! பேய்கள் பெருவிருந்து பெறலாம் என்று கூறும் விதமாகக் கிடந்தது களம்! அத்தகைய போருக்குப் பிறகே, கலிங்க மன்னன், தலைதப்பினால் போதும் என்றோடிவிட்டான். அவனைப் பிடித்துவர ஒரு படை சென்றது. ஓடி ஒளிபவரையும், செத்தவர் போல் படுத்திருப்போரையும் பிடித்திழுத்துக் கைது செய்ய ஒருபடை வேலை செய்தது. களத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வீரமணி வருகையில், இறந்துகிடந்த யானைக்குப் பக்கத்திலே உருண்டு கிடந்த ஒரு கலிங்கத்தானின், ஈனக்குரல் கேட்டது. குற்றுயிராகக் கிடந்தவனைக்கண்ட வீரமணி, குதிரையை விட்டுக் கீழே குதித்து, “கலிங்கப்படை தோற்றது, மன்னன் மருண்டோடி விட்டான். நீர் ஏன் கைதியானீர்” என்று கூறிவிட்டு, வாளை உறையினின்றும் தயாராக எடுத்து உருவினான். சாய்ந்து கிடந்த கலிங்கத்தான், அணையுமுன் ஒளிவிடும் விளக்குபோல், ஒருமுறை சிரித்துவிட்டு, “பிணத்தோடு பிணக்கு ஏன்? உயிரை இழக்கப் போகும் என் முன் உருவி உடைவாள் ஏன்? என்னைக் களத்தைவிட்டு அழைத்துச்செல். உன் கூடாரத்துக்கல்ல. இங்கிருந்த சிலகாத தூரத்திலே ஒரு குகை இருக்கிறது, வழி, நான் காட்டுகிறேன். அங்குப் போனபின், நான் சாகப்போகும் நான் - வயது முதிர்ந்த நான், கடைசி வரை களத்திலே தீரமாக நின்று போரிட்ட நான் - இரகசியம் ஒன்றுரைக்க வேண்டும்” என்றான்.

“கபடம்! நான் கேளேன்” என்றான் வீரமணி.

“வீரனே! சாகப்போகும் என்னிடம் விளையாடதே! வஞ்சகமல்ல நான் பேசுவது! நான் நிம்மதியாக இறக்க, என் மனத்தில் உள்ள பளுவைக் கீழே தள்ள வேண்டும்” என்றான் கலிங்க வீரன்.

கலீர் எனச் சிரித்து விட்டு வீரமணி, “பளுவைத் தாங்க நான் சுமைதாங்கி என்று எண்ணுகிறாயோ” என்று கேட்டான்.

“ஆம்! ஒரு சுந்தரியின் வாழ்வைத் தாங்கும் சுமைதாங்கியாக்கப் போகிறேன். இந்த அபாக்கியவானின் ஆசையின் விளைவு, வேதனை உலகிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். என் மகளைப் பற்றிய மர்மம் உன்னிடம் உரைக்கப் போகிறேன். யோசித்துக் கொண்டிராதே. உன் குதிரை மீது என்னைத் தூக்கி வைத்துக்கொள். என் இருகால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன உயிர் துண்டிக்கப்படுமுன், உன்னிடம் நான் உள்ளத்தில் உள்ளதை உரைத்திட வேண்டும். தூக்கு!” என்றான் கலிங்கன்.

வீரமணிக்குப் பரிதாபம் பிறந்தது. கலிங்க வீரனோவயோதிகன், களத்திலே படுகாயத்துடன், குற்றுயிராகக் கிடக்கும் நேரத்திலே தன்னைக் கெஞ்சுவது கண்டு மனம் இளகினான். வீரமுள்ள நெஞ்சினருக்கு ஈரமும் உண்டன்றோ!

கலிங்க வீரனைத் தூக்கித், தன் குதிரை மீது சாய்த்து தனது மேலங்கியால் மறைத்துவிட்டான். குதிரை மீது தாவி உட்கார்ந்தான். “தெற்குப் பக்கமாகக் குதிரையைத் துரத்து; வேகமாகப்போ! வழியிலே, யார் நிறுத்தினாலும் நிற்காதே; என்னைக் காட்டிக் கொடுக்காதே; கோடி புண்ணியம் உண்டு” என்று வயோதிகன் திணறிக் கொண்டே கூறினான்.

குதிரை கடுவேகமாக ஓடிற்று. வீரமணி செல்வதைக் கண்டு, அவனுடனிருப்போர், துணைக்காகக் கூடச் செல்லலாயினர். வீரமணி, உரத்த குரலில், அவர்களை நோக்கி, “தோழர்களே! நீங்கள் களத்துக்கடுத்த கூடாரத்திலேயே தங்குங்கள். நான் ஒரு அவசர வேலையாகச் செல்கிறேன். விரைவில் வருகிறேன்” என்று கூறி அனுப்பிவிட்டான்.

“நல்ல காரியம் செய்தாய், ஏது! நீ ஒரு தலைவன்போல் தெரிகிறதே” என்றான் வயோதிகன். வீரமணி சிரித்தான். தெற்கு திசையிலே இரண்டு மைலுக்குமேல் சென்ற பிறகு, கிழக்குப் பக்கமாகத் திரும்பினர், கிழக்கே ஒரு மைல் சென்ற பிறகு, சிறு குன்றுகள் தென்பட்டன. அங்குக் குதிரை நிறுத்தப்பட்டது. மூன்றாவது குன்றிலே போ, என்னைத் தூக்கிக்கொண்டு தான் போக வேண்டும்” என்றான் வயோதிகன். வீரமணி வயோதிகனை தோள்மீது அமர்த்திக்கொண்டு, அன்புடன் அணைத்துக் கொண்டான். குன்றின்மீது கொஞ்ச தூர சென்றதும் ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதைத் தள்ளின பிறகு குகை தென்பட்டது. இருள் சூழ்ந்திருந்தது. கிழவன் ஒரு மூலையிலே விளக்கிருக்கும் கொளுத்து என்றான். இருள் நீங்கியதும், குகை, மிக சுத்தமாக ஒருவரிருவர் வசிக்கக் கூடிய விதமாக அமைந்திருப்பதைக் கண்டான். வீரமணி, கிழக்குப்புறமாகத் திரும்பினதும், ஒரு கட்டில் கிடந்தது; அதன்மீது கலிங்கவீரன் படுக்க வைக்கப்
பட்டான். வீரமணி அருகே உட்கார்ந்து கொண்டு, “ரொம்ப களைப்பாக இருக்கிறதோ? ஏதாவது பானம் பருகினால்...” என்று விசாரித்தான்.

“பானமா! எனக்கேனப்பா! ஒன்பது சோழ வீரர்களின் உயிரைக் குடித்தேன். எனக்கொன்றும் தாகவிடாய் இல்லை.” என்றான் வயோதிகன். வீரமணி, புன்னகையுடன், “ஒன்பது சோழ வீரரின் உயிரைக் குடித்தீர்; ஆனால், உள்ளே போன வீரரின் உயிர்கள் உமது உயிரைக் குடிக்கின்றன’ என்றான் வீரமணி.

“என் உயிரை இழக்க நான் அஞ்சவில்லை. என் மனம் உன் உதவியால் சாந்தியானால், போதும். எனக்கு வாழ்ந்து தீரவேண்டுமென்ற அவசியமில்லை. எனக்கு எல்லாம் உண்டு; எதுவும் இல்லை! பொக்கிஷம் ஏராளமாக உண்டு. இதோ இந்தப் பக்கமாக உள்ள பேழைகளிலே உள்ள பூஷணங்கள், கலிங்க நாட்டை விலைக்கு வாங்கி விடலாம், அவ்வளவு இருக்கிறது. ஆனால் இவ்வளவு பொக்கிஷமுள்ள எனக்குப் போகம் இல்லை. மனைவி உண்டு, ஆனால் மகிழ்ச்சி இல்லை, மனைவி என்னுடன் இல்லை. மகள் உண்டு. மணிபோல்! ஆனால் அந்த மணி உள்ள இடமோ எனக்குத் தெரியாது. அவளைக் கண்டு பிடித்து, என் மகளிடம், என் வரலாற்றைக் கூறி, பெற்றேனே தவிர வளர்த்தேனில்லை என் மகளை, அதற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு, என் முயற்சியால் ஈட்டிய இந்தச் செல்வத்தை, என் காதலில் கனிந்த செல்வத்திடம் தர வேண்டும். உனது உழைப்புக்காக நீ இதிலே பாதி எடுத்துக்கொள். என் மகளை ஒரு முறை நான் கண்ணால் கண்டால், களிப்புக் கடலிலே மூழ்குவேன். கையிலே தூக்கி வைத்தேன், சிறு குழந்தையாக இருந்தபோது; இன்றுவரை கண்டேனில்லை. எங்கு இருக்கிறாளோ! என்ன கதியோ! ஏழ்மையோ! நோயோ!” என்று கூறி அழுதான்.

வீரமணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. வயோதிகன் மிக்க சோகத்துடன் பழங்கால நினைவினால் நெஞ்சு நெகிழ்ந்து பேசுவதை இடைமறித்துத் துன்புறுத்தவும் இஷ்டப்படவில்லை; அதிகமாகப் பேசிக் கொண்டே இருந்தால் என்ன ஆகுமோ என்றும் கவலைப்பட்டான். “தாயிருக்க மகளுக்கென்ன குறை!” என்று கேட்டான்.

“தாய்! அவளைப் பெற்ற தாய் என்னை மகிழ்வித்த அம் மாது மகளுடன் இல்லை. தாய்வேறு, மகள்வேறு; தந்தைவேறு; ஒருவரோடு ஒருவர் இல்லை. துயரக் குழம்பப்பா என் சேதி” என்று கதறினான் கிழவன்.

“பரிதாபம்! இவ்வளவு துக்ககரமான வாழ்க்கையிலே நீர் இருப்பது கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பெரியவரே! உமக்கு உதவிசெய்தே தீருவேன். உமது மகளை மூன்று மண்டலங்களிலே எங்கு இருந்தாலும் கண்டுபிடிப்பேன்; இது உறுதி. வடநாடுகளிலே வதியினும் கண்டுபிடித்தே தீருவேன். அவளை என் தங்கையாகப் பாவிப்பேன்” என்றான் வீரமணி.

“தங்கையாக இருக்கட்டும், அவள் எவனையேனும் மணந்துகொண்டிருப்பின்; இல்லையேல் அந்த நங்கைக்கேற்ற நாயகனும் நீயே. வீரமும் விவேகமும் கருணையுங்கொண்ட உள்ளமுடைய உத்தமனே! இந்தப் பாவியினிடம் எவ்வளவு பரிவு காட்டுகிறாய்; என் வாழ்க்கையிலே நான் எத்தனையோவித மகிழ்ச்சி கண்டேன், எவ்வளவோ துயரிலும் வாடினேன்; போர் பல புரிந்திருக்கிறேன். புகழும் அடைந்தேன், பொற்கொடி போன்றவளைப் பூசித்தேன், அவள் தந்த வரம், என் மகள்; அவளை இழந்தேன், இன்று அவள் என் அருகே இருந்து, “அப்பா!” என்று ஒருமுறை அன்போடு அழைத்தால், இந்தப் பாவியின் உயிர் நிம்மதியாகப் பிரியும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு இல்லை என் செய்வது. என் மகன்போல் இன்று நீ இருக்கிறாய் நீயே இனி என் வரலாற்றுக்கு வாரிசு!” என்று கூறி விட்டு வயோதிகன் களைத்துச் சாய்ந்து விட்டான். குளிர்ந்த நீரை முகத்திலே தெளித்து, மேலங்கியால் மெதுவாக வீசினான் வீரமணி. இரண்டொரு நிமிடங்களில், வயோதிகன் கண்களைத் திறந்தான். அணையப் போகும் தீபத்தின் நிலையிலிருந்தன அவன் கண்கள். வீரமணி விசனித்தான்.

“தாய்! அவளைத் தேடுவானேன்! அவள் நிம்மதியாக ஆண்டுகொண்டு இருக்கிறாள். வீரனே! என் மகளின் தாய், ஒரு அரசி” என்றான் வயோதிகன்.

வீரமணி ஆச்சரியப்பட்டான். “அரசியா! எங்கே? யார்? நீர் ஓர் மன்னரா!” என்று பரபரப்புடன் கேட்டான்.

“நான் மன்னனல்ல! ஆனால் என் மனதைக் கொள்ளை கொண்டவள், எனக்குக் காதல் மதுரத்தை ஊட்டியவள், மகளை ஈந்தவள் சாதாரணக் குடியல்ல, என்போல் சாமானியமானவளுமல்ல, ஆம்! அவள் ஒரு அரசி! அன்பினால் நாங்கள் பிணைக்கப்பட்டோம், வஞ்சகத்தால் வெட்டப்பட்டது எமது அன்புச் சங்கிலி! எங்கள் காதலின் கனியும் எம்மை விட்டுப் பிரிக்கப்பட்டது. என் வரலாறு மிகமிகச் சோகமுடையது” என்றான் வயோதிகன்.

“எந்த நாட்டு அரசியைப் பற்றி நீர் பேசுகிறீர்” என்று வீரமணி கேட்டான்.

“சோழமண்டலத்துக்கும் ஆந்திர மண்டலத்துக்கும் இடையே உள்ள மலர்புரி எனும் சிற்றரசு உனக்குத் தெரியுமோ! சோழனிடமே மலர்புரி கப்பம் கட்டுவது” என்று துவக்கினான் வயோதிகன்.

“ஆமாம்! மலர்புரிக்கு விதவை மருதவல்லி அம்மையார் அரசி!” என்றான் வீரமணி.

“உண்மை! அந்த மருதமே, என் மனதை மகிழ்வித்தவள். அவளுடைய விதவைக்கோலம் வெளி உலகுக்கு எனக்கு அல்ல! வீரனே! மலர்புரி அரசிக்கு நான் ஆசைநாயகனாக இருந்தேன்! வஞ்சனைக்கல்ல, அதிகாரம்பெற அல்ல! அன்பால் நாங்கள் இருவரும் சேர்க்கப்பட்டோம். ஆடிப்பாடிக் களித்தோம். அரண்மனை என்பதை மறந்தோம். சோலையிலும் சாலையிலும் சுந்தரமாகச் சரசமாடினோம். அந்த நாளை எண்ணிக் கொண்டால் என் மனம் கரையும். நான் கலிங்கநாட்டிலிருந்து கிளம்பி, பல மண்டலங்களைக் கண்டு மகிழ்ந்து ஒருநாள் மலர்புரி வந்தேன். மலர்புரி மருங்கேயுள்ள ஒரு சோலையிலே உலவிக்கொண்டு இருக்கையில், கம்பீரமான உருவுடன் ஒரு ஆரியன், என்னை அணுகினான்! அவனுடைய நடையும் உடையும் என் மனதைக் கவர்ந்தது. அவன் என்னை அன்போடு ஏற இறங்கப் பார்த்தான். நான் ஆச்சரியத்துடன் அவனெதிர் நின்றிருந்தேன். “பொருத்தமான பாத்திரம்! அரண்மனைக்கேற்ற பண்டம்! என் யோகத்திற்கு ஏற்ற தண்டம்!” என்று மெல்லச் சொன்னான். “நான் ஆரியரே!” ஏதேதோ கூறுகிறீர், என்னை ஏற இறங்கப் பார்க்கிறீர், என்ன விஷயம்? என்று கேட்டேன்.

“குரலிலே ஒரு குளிர்ச்சியுமிருக்கிறது. குமரி பாடு கொண்டாட்டந்தான் எனக்குமட்டுமென்ன?” என்று தன்னை மறந்து பேசினான். எனக்கு கோபமும் வந்தது! அவனுடைய தோளைப் பிடித்து குலுக்கினேன். மரத்தைப் பிடித்தாட்டினால் கனி உதிர்வதுபோல அவன் கலகலவெனச் சிரித்துவிட்டு, “குழந்தாய்! உன்னை அதிர்ஷ்ட தேவி அணைத்துக்கொள்ள வருகிறாள். உனக்கு யோகம் பிறக்கிறது” என்று கூறினான், என்னை உற்று நோக்கியபடியே. “அதிர்ஷ்டதேவியாவது அணைத்துக் கொள்வதாவது!” என்று நான் கூறினேன். ஆரியன், என் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு, “வாலிபனே! உன்னை அழகும் இளமையும் ததும்பும் ஒரு அரசகுமாரிக்கு விருந்தாக அளிக்கப் போகிறேன்” என்றான்.

நான் பல மண்டலங்களிலே சுற்றி வந்தபோது, பல சுந்தராங்கிகளைக் கண்டு சொக்கியதுண்டு. சிலர் கிடைக்காததால் கருத்து கெட்டதுண்டு. என்றாலும், தானாக எனக்கு இந்த வாய்ப்பு வருவதென்றால், எவ்வளவுதான் குதூகலம் பிறக்கும். அவள் எப்படி இருப்பாளோ! எவளோ எக்குணங்கொண்டவளோ, மதிமுகவதியோ மந்திமுகவதியோ, மலர்க்கொடியோ மாமிசப்பிண்டமோ, சரசக்காரியோ விரசவதியோ, என்று ஒரு விநாடியிலே என் மனதிலே எண்ண அலைகள் எழும்பின. என் முகத்திலே பொலிவு பிறந்திடக் கண்ட ஆரியன் புன்னகையுடன், “கன்னி பற்றிய பேச்சே கனிருசியாக இருக்கிறதே! கன்னியைக் கட்டித் தழுவும்போது, ஆஹா! வாலிபனே! எந்த நிலையில் இருப்பாயோ? என்னை நினைப்பாயோ மறப்
பாயோ! என்று கேலி செய்தான்.

“என்ன பேச்சய்யா பேசுகிறீர்! தோட்டம் தெரியாமுன்னம், தொடுத்திடு மாலையை என்று கூறுகிறீர். யார் அம்மங்கை? அவ்வளவு மலிவாகக் கிடைக்கக் காரணம் என்ன? என்னைக் கண்டதும் உமக்கு இக்கருத்து ஏன் உதித்தது?” என்று அடுக்கடுக்காக நான் கேள்விக்கணைகளை விடுத்தேன். ஆரியன் சொன்னான், “வீரா! நீ அறியாயோ, நாங்கள் காலநிலை உரைப்பதுடன் காமநிலையும் உரைப்போர் என்பதை. காதற்கணைகளை எடுத்துச் செல்ல எம்மிலும் மிக்காரும் தக்காரும் உண்டோ? பொருத்தமுரைக்க அறிவோம்! பொன்னுக்கு மெருகு வேண்டுவது போல், உங்களின் வாழ்வு இனிக்க வேண்டுமானாலும், எமது “முலாம்” பூசப்பட வேண்டும் குழந்தாய்! நான் உன்னை இந்த மலர்புரி அரசி மருதவல்லி என்ற மங்கையின் மணாளனாக்கப் போகிறேன்” என்றான்.

“மலர்புரி அரசிக்கு மணவினை இன்னம் நடக்கவில்லையோ?” என்று நான் கேட்டேன்.

“நடந்தது, நலிந்தது, அவள் நாயகனை இழந்தாள் நரம்பு தன் முறுக்கை இழக்கவில்லை, நேத்திரத்திலே ஒளி குன்றவில்லை, நுதலிலே மதி தவழ்கிறது, இதழோ கொவ்வை! இடைகொடிதான்! குணமோ, தங்கம்! குயிலோ என்பாய், குரல் கேட்டால். கொஞ்சிடும் பருவம், கோலமயில் சாயல்” என்று ஆரியன் வர்ணித்தான்.

“என்னை மயக்குகிறீர்” என்று நான் கூறினேன் அடி மூச்சுக்குரலால்.

ஆரியன், பின்னர் மெல்லச் சொன்னான், “மருதம், விதவை! அவளுக்கு உன்னைப் பரிசளிக்க நான் தீர்மானித்ததற்குக் காரணம், ஆண்டவனின் பிம்பமே அவளை ஆரத்தழுவி ஆனந்தமூட்டும் என்று நான் பலநாட்களாகக் கூறி வந்தேன், நோன்பிருக்க வைத்தேன், பூசைகளுக்கும் குறைவில்லை. பேதை, அவள் ஆண்டவன் ஆரத் தழுவ முடியாது என்பதை அறியாள். ஆண்டவனை, உருவமாக, உன்னைத்தான் நான் செய்யப் போகிறேன். பட்டத்தரசி நித்தமும் பூஜிக்கும் பாகீரதி கோயிலின் பூசாரி நான்! மலர்புரியை அவள் ஆள்கிறாள், அவள் மனதை நான் ஆள்கிறேன், அவளை உனக்கு அளிக்கிறேன், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை நீ மானிடன் என்று கூறக்கூடாது; ஆண்டவனின் பிம்பம், என் தபோவலிவால் தருவிக்கப்பட்டவர் என்றே கூற வேண்டும். அவளிடம் ஆடிப்பாடிக் களிக்கலாம், ஜோடிப்புறாபோல் வாழலாம், ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும், உனது உண்மை வரலாற்றை நீ உரைத்திடக் கூடாது. உனது இச்சைப்படி மற்றவற்றிலே நடக்கலாம்’, என்றான். என் ஆச்சரியத்துடன், சற்று ஆத்திரமும் புகுந்தது. “ஓஹோ! உணர்ந்தேன் உமது கபடநாடகத்தை! அரசியின் விதவைக் கோலத்தைக் கண்டீர், வைதீக வஞ்சனையால் வென்றீர், என்னை இரவல் தந்து, அரசியின் உயிரைவிட மேலான மானத்தை உமது உள்ளங்கையிலே வைத்துக்கொண்டு, அரசியை மிரட்டி வாழச் சூது செய்கிறீர். இதற்கு நான் ஒரு கூலியா! என்னை என்னவென்று மதித்தீர்?” என்று கேட்டேன். ஆரியன், சினங்கொண்டானில்லை, “சகஜமான எண்ணங்களே, உனக்குத் தோன்றின. ஆனால் அவை அத்தனையும் தவறு. அவளை நான் இப்போதும், “பாகீரதியின் அருளால்” என் கைப்பாவையாகத் தான் கொண்டிருக்கிறேன். உன்னை நான் உபயோகிக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை, உலகிலே ஆணழகன் நீ ஒருவன்தானோ!” என்று கேட்டுவிட்டு, “அவளுடைய வாலிபத்துக்கு விருந்திடவே இந்த யோசனை, வேறெதற்குமல்ல! பரிதாபம்! அவளுக்கு எல்லாம் இருக்கிறது. அரசு, அந்தஸ்து, அழகு, இளமை, செல்வம் யாவும் இருக்கிறது; பயன் என்ன? அவளை அணைத்துக் கொண்டு, “அன்பே! ஆருயிரே! இன்பமே!” என்று கொஞ்சிக் குலவிட ஒருவன் இல்லை. அது அவள் குற்றமுமல்ல! ஆடவரைக் காணும்போது தன் அரசு என்ற கடிவாளத்தைப் பூட்டியே இச்சை எனும் குதிரையை இழுத்துப் பிடிக்கிறாள். ஆனால் அந்தப் பொல்லாத குதிரை, சும்மாவா இருக்கிறது! அவளைப் படாதபாடுபடுத்துகிறது. அவளை அந்தச் சிறையிலிருந்து மீட்கவே, நான் உன்னை அழைக்கிறேன்.” என்றான். என் இளமை, ஆரியன் கூறுவதை ஏற்றுக்கொள் என்று தூண்டிற்று, என் ரோஷ உணர்ச்சி, சீ! வேண்டாம் என்று சொல்லிற்று. தலைகுனிந்து நின்றோன், தரையிலே, நீர் தளும்பும் கண்களுடன், அழகு ததும்பும் அந்த அணங்கின் உருவம் தெரிவது போலிருந்தது, பெரு மூச்செறிந்தேன்.

என் வாலிபத்துக்கு விருந்தளிக்க, அழகும், இளமையும், அந்தஸ்தும் படைத்தவளைத் தர ஆரியன் முன் வந்தது என் நெஞ்சிலே நினைப்புச் சூழலைக் கிளப்பிவிட்டது. நான் அதனிடம் சிக்கிவிட்டேன். இன்று, நடை தளர்ந்து, தேகமொடுக்கிய பிறகு, எவ்வுளவு வெறிபிடித்து அலைந்தோம் இளம்பிராயத்திலே என்று எண்ணவேண்டி இருக்கிறது. அப்போது அப்படியா! நல்ல மலர், சுவையுள்ள கனி, இன்பகரமான இசை, இவை யாவும் ஓருருக் கொண்டுலவும் மங்கை என்றால், நரம்புகள் நர்த்தனமாடின, நெஞ்சு அலைந்தது, நேத்திரம் சுழன்றது! வாலிபனே! நீ அறியாததா! பாவம்! இப்போது நீயும் அந்த நிலையில்தான் இருப்பாய் என்று எண்ணுகிறேன். எவள் உன் நினைப்பால் சோழ மண்டலத்திலே சோர்ந்து கிடக்கிறாளோ யார் கண்டார்கள்! புன்னகை புரிகிறாய், போர் வீரா! ஆரியன் அன்று என்னை அழைத்ததுபோல் உன்னை அழைத்தால், உதாசீனம் செய்வாயோ! உல்லாசத்துடன் உலவ ஊராரிலே யார் விரும்பார்கள்! நான் இசைந்தேன். ஆரியன் தலை அசைத்தான்; பின்னர் சொன்னான்;

“மலர்புரி அரசியின் மனோரதம் இனி நீயே! மருதவல்லிக்கு இனி நீயே மதி, நிதி, கதி. விதவைக் கோலத்திலுள்ள அந்தக் கெண்டை விழிக்கிளிக்கு இனி நீயே வாழ்க்கைச் செண்டு, பாடிடும் வண்டு! காதல், பூத்திடச் செய்வதே என்போன்றோரின் தொண்டு. காதல், என்றால் சாமான்யமா? காதலுக்கும் கடவுளுக்கும் பேதமொன்றில்லை. கால வேறுபாடு அதை அழிப்பதில்லை. கவிகள் அதினின்றும் தப்புவதில்லை. கலைக்கு அதுதான் பிறப்பிடம். உலக வாலிபர்களின் ஊஞ்சல், அந்த உத்தியான வனத்திலே இனி நீ உலவலாம். மருதம் இனி உன் மனோஹரி. ஆனால், நான் சொன்னதை மறவாதே! நீ ஆண்டவனின் பிம்பம், தேவஜோதி, கடவுட் கனி; ஆமாம், மானிடனல்லன். மானிட உருவந் தாங்கி வந்து மருதத்தை மகிழ்விக்கப் போகும் மகேஸ்வரன்!” என்று ஆரியன் கூறிடுகையில், கோமளவல்லியுடன் கொஞ்சிடப் போகிறோமே என்று குதூகலம் ஒரு புறம் என்னை இழுப்பினும், ஆரியக் கடவுட் தன்மை பற்றிய சந்தேகம் மற்றோர் புறம் என்னை இழுத்தது. நான் தாமிரபரணி, வைகை, காவேரி, பாலாறு ஆகிய அழகிய நதிகளை மாலையாகக் கொண்டுள்ள தமிழகத்தில் இது பற்றிய தர்க்கங்களைக் கேட்டிருக்கிறேன், தத்துவார்த்த உரைகளைப் பலர் பேசிடக் கேட்டதுண்டு. எனவே, ஆண்டவன், மானிட உருக்கொண்டு, மங்கையருடன் மந்தகாசமாக இருப்பது முறை என்று ஆரியன் பேசிடக் கேட்டதால், எனக்கு,எவ்வளவு இழிந்த கொள்கையை இந்த ஆரியர்கள் சுமந்து திரிகிறார்கள் என்று எண்ணவும், வெறுப்படையவும் ஏற்பட்டது. ஆனால் என் செய்வது! ‘தேன் பருக வாராய்’ என்று அவன் அழைக்கும்போது உமது தேவனின் சேதி எப்படி? என்று கேட்பதா? “சரி! உமது இஷ்டப்படியே நடக்கிறேன்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டேன். “விவேகமுள்ளவனே! கேள்; நாளை இரவு எட்டு மணிக்கு, நீ பாகீரதி கோயிலுக்கு வா! அரசி, இரவு 10 மணிக்கு மேல், ஆடை அணி புனைந்து, பரிமள கந்தம் பூசி, தங்கத்தட்டில் பழ வகைகளும், தங்கக் கோப்பையில் பாலும் எடுத்துக்கொண்டு வருவாள் - ஒவ்வோர் நாளும் இதுபோல் வழக்கம். நாளையத் தினந்தான் அரசியின் ஆசை பூர்த்தியாகப் போகிறது. எட்டு மணிக்கு நீ அங்கு வந்ததும், உனக்குச் சில விசேஷ அலங்காரங்கள் செய்ய வேண்டும், தேவ வடிவத்துக்குத் தேவையான “முலாம்” பூசப்பட வேண்டாமா! பிறகு உன்னைப் பாகீரதி சிலைக்குள் போயிருக்கச் செய்வேன் - திடுக்கிடாதே அதற்கு வழி இருக்கிறது - சிலையினுள் நீ இருந்துகொண்டிருக்கும்போது, அரசி சிலையும் உருகும்படி வேண்டிக் கொள்வாள்; ஆராதிப்பாள், அர்ச்சிப்பாள். நான் கணகணவென மணியை அடித்து, “அம்மே! பாகீரதி! அடியவரை இன்னமும் சோதிக்காதே. அரசியரின் மனதை வதைக்காதே! உன் ஜோதியை ஆண் உருவில் வெளியே அனுப்பு! இகபர சுகத்தை இன்றே மருதவல்லியார் அடையும் மார்க்கத்தை அருள்!” என்று கூறுவேன். “மைந்தா! மெச்சினேன் உனது பூஜா விசேஷத்தை! குமாரி! கண்களை மூடிக்கொள்!” என்று கெம்பீரமான குரலிலே கூறு. அரசியின் கண்கள் மூடுமுன்னம், சிலையினுள்ளே இருக்கும் விசையைத் திருப்பு, பாகீரதி இரு கூறு ஆவாள். உடனே வெளியே வா! பாகீரதி பழைய நிலை பெறுவாள்! ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் தாக்கப்பட்டு, மருதம் மயக்கத்துடன் குழந்தை குரலிலே, “தேவா!” என்று கூறுவாள்! மார்போடு அணைத்துக்கொள்! பார் அப்போது அவள் மார்பு படபடவென அடித்துக் கொள்ளப் போவதை! பிறகு, நான் கோயில் திருவிளக்குகளைக் குளிர வைத்து விடுவேன். மூலஸ்தானத்தை மூடித் தாளிட்டுவிட்டு வெளியே செல்வேன். விடியுமுன் வருவேன். அதற்குள் உனது மதனவித்தையைக் காட்டு” என்றான்.

ஆம்! மறு தினம், “தேவா!” என்று குழைந்து கூறி, மலர்புரி அரசி என் மீது சாய்ந்தபோது அவளை மார்புறத்தழுவி, நெற்றியிலே முத்துமுத்தாக வடிந்த வியர்வையைத் துடைத்து கன்னங்களைத் தடவி, இதழைச் சுவைத்து “இன்பமே இன்னுயிரே!” என்று நான் அழைத்தபோது “இகபர சுகங் கண்டேன்! என் பூஜாபலனை உண்டேன். இந்த ஜென்மத்திலேயே தனியளானேன்” என்று மருதம் வணங்கி, என்னை வாழ்த்தினாள். ஆஹா! சிவந்த ரோஜா போன்ற உடலமைந்த அவளுக்குத்தான் மனம் எவ்வளவு வெள்ளை! கடல் போல் இருந்தன கண்கள். கபடத்தைக் கண்டாளில்லை. அவளுடைய மிருதுவான கன்னங்களை என் கன்னத்துடன் ஒத்தியபோது, அப்போது அலர்ந்த மலரை எடுத்து ஒத்திக்கொள்வது போன்று இருந்தது. அவளுடைய அணைப்பிலே நான் சில நிமிடம், என் அணைப்பிலே அவள் சில நிமிடம். என் இதழ் முத்தம் விளைவித்தது சில நிமிடம், அவள் இதழ் அதனைச் செய்தது சில நிமிடம், பொழுது விடியுமாமே! இத்தகைய இன்பபுரியிலே இரவு போய் பகல் வருவானேன்!!!