அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
18
                     

சுருக்கிட்டுக் கொண்டிருந்ததால், விழி சற்று வெளியே வந்துவிட்டது. மற்றப்படி அலங்கோலம் இல்லை. பொன்னாற் செய்த பதுமைபோலக் காணப்பட்டாள். தவமணியின் தற்கொலை, ஊரைக் கலக்கிவிட்டது, என் தந்தையின் மனத்தைக் கரைத்துவிட்டது, என்னை குழப்பம் செய்துவிட்டது, இனி, என் அண்ணன் நிலைமையைக் கூறவும் வேண்டுமோ? ஆ! ஐயோ! தவமணி! தியாகவல்லி! கண்மணீ! உன்னை இழந்தேனோ! என்று அவர் கதறியது கேட்ட, அரண்மனைவாசிகள், வேதனைப்
படும் வேங்கை பேசவும் ஆரம்பித்தால் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார். என் அண்ணனுடைய குரலிலே, துக்கமும் கோபமும் கலந்திருந்தது.

தவமணியின் பிரேத விசாரணை நடந்தேறியது. இளமையும் எழிலும், கொண்ட நான் உலவ, இந்த அரண்மனை இடந்தரவில்லை, இது முறையா, என்னினும் எழிலுடைய மங்கை உண்டா, என்னைப் பார்த்துவிட்டுப் பதில் கூறுங்கள், என்று தவமணி கேட்பது போலிருந்தது. சட்டமும் பட்டாளமும், அசரனின் கோபமும் ஆள்வோரின் ஆர்ப்பரிப்பும், சிறையும் பிறவும், என்னை என்ன செய்ய முடியும் என்று கேட்டுச் சிரிப்பது போலவே இருந்தது அந்தப் பிணத்தின் கோலம்! பார்த்தவர்கள் பிரலாபிக்காமலில்லை! மனத்திற்குள் மன்னனைத் தூஷிக்காமலில்லை. அன்று அரண்மனை முழுவதும் அலங்கோலமாகத்தான் இருந்தது. அந்தத் துக்கம் ஆற, ஒரு வாரமாயிற்று. இதற்கிடையே, என் அண்ணன் கொதிக்கும் எண்ணெய் நிரம்பிய கொப்பரையிலே வீழ்ந்தவரானார்! கோவெனக் கதறுவார்; சோறு உண்ணார்; சோகமே உருவானார் தவமணி இறந்தாளே தவிர, என் அண்ணன் மனத்திலே மூண்ட காதற்தீ அணையவில்லை. அவள் இறந்தாள்; தந்தையும் தனயனும் ஒற்றுமைப்படுவர் என்று கூற முடியாத நிலை உண்டாகிவிட்டது. சிறையிலிருந்து விடுவித்தல், முதல் வேலை, என் காதலி தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலையை உண்டாக்கிய காதகனின் கழுத்தை முறிப்பதுதான்! என்று என் அண்ணன் கூறினார். வெறுங்கோபத்தோடு மாத்திரமல்ல, அசைக்க முடியாத உறுதியுடன், கேட்பவர் அச்சங்கொள்ளும் விதத்திலே! சிறைக்கதவுகளைத் தூளாக்குவேன்; கம்பிகளைப் பெயர்த்தெடுப்பேன்; சுவரினைப் பிளப்பேன் என்று இடிமுழக்க மிடலானார். காவலாளிகள் பாய்ந்தனர்! துணை தேடினர். மன்னர் மிரண்டார். தவமணி இறந்ததுடன் ஆபத்தும் நெருக்கடியும் ஒழிந்தது என்று கருதினேன்; புதிய ஆபத்து புறப்பட்டுவிட்டதே! வேதனை இவனுக்கு வெறியூட்டி
விட்டதே! இதற்கென்ன செய்வேன் என்று கதறினார். மீண்டும் நான் தூதனுப்பப்பட்டேன் அண்ணனிடம். என்னைக் கண்டதும் அவர் கோவெனக் கதறி, இப்போதாவது திருப்தி உண்டாயிற்றா அதிகார ஆணவம் பிடித்தலையும் உன் தந்தைக்கு? என் கண்ணைத் தோண்டி எடுத்துவிட்டார்; காரிருள் மயமே இனி எனக்கு இவ் உலகம் என்று கூறினார். நெடு நேரத்திற்குப் பிறகே, அவருக்கு ஓரளவு ஆறுதல் பிறந்தது. பிறகு நான், மன்னர் மிரண்டிருப்பதைக் கூறினேன். மகனுக்குத் தந்தை பயந்து வாழும் நிலைமை கூடாது என்று வாதிட்டேன். மன்னரின் உயிர் பிரியின் தவமணி மீண்டும் வாராளே என்றுரைத்தேன். மிகப் பக்குவமாயப் பேசித் தந்தையைக் கொன்றுவிடத் துணிந்த என் அண்ணனின் எண்ணத்தைக் கொன்றொழித்தேன் பிறகு, அவருடைய எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. வாழ்க்கையிலே எழும்பிய புயல் அடங்கிவிட்டது, இனி பழைய நிலையை அடைந்துதான் தீரவேண்டும் என்றும் நான் உவமான உவமேயங்களுடன் பேசினேன். அவரோ தீயினாற் சுட்டபுண் ஆறும்; ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது. நோய் தீரும்; ஆனால் உள்ளம் ஒடிந்தால், ஓட்டுவித்தை நடக்காது என்று உரைத்து விட்டார். “இனி உனக்கு இங்கு வேலை கிடையாது. என் வேலை இனி, உலகைச் சுற்றுவது, கானாறும் காடும், குன்றும் குடிசையும், மணல்வெளியும் முட்புதரும், எனக்கு இனி தோழர்கள். உங்கள் அரண்மணையிலே அழகிகள் ஆடுவர், பாடுவர்; இனிக் காடுகளிலே, தோப்புகளிலே பறவைகள் பாடிடக் கேட்டு இன்புறுவேன் பனிநீரில் குளித்துப் பட்டாடை பூண்டு, பட்டத்தரசனாகும் வேலை எனக்கு வேண்டாம். என்னை இனிப் பாண்டிய நாடு, உயிரோடு பாராது! இன்றே இப்போதே, பட்டத்து உரிமை, அரண்மனையின் வாழ்வு, பாண்டிய நாட்டு வாசம் எல்லாம் துறந்தேன். இன்றிரவு ஊரடங்கியதும், எனக்கு நாடு கடக்க உத்தரவும், ஒரு வாள் ஒரு புரவி, பட்டத்துக்கு அரசியாகும் பேறு பெறுபவள் அணிவதற்கென நமது பொக்கிஷத்திலே உள்ள நீலமணி. ஆகியவற்றினைத் தரவேண்டும். நான் ஏற வேண்டிய பீடத்திலே நீ வீற்றிருக்கலாம். ஆனால் என் தவமணி அணிந்திருக்க வேண்டிய நீலமணியை, பாண்டிய நாட்டு ராணியாரும் அணியக் கூடாது. இந்த என் வேண்டுகோளை நிராகரித்தால், நாளைக் காலை என் பிரேத விசாரணையைப் பாண்டிய மன்னர் நடத்தட்டும்! அவருக்குத்தான் பிண விசாரணையிலே பழக்கமிருக்கிறதே!!” என்று அண்ணன் கூறினார். வாழ்க்கையை அவர் எவ்வளவு வெறுத்துவிட்டார் என்பது அவருடைய பேச்சிலே தோய்ந்து கிடந்தது.

நடனா! “கடைசி முறையாகக் காணவேண்டும்; நான் வயோதிகன்; அவன் மீண்டும் இங்கு வருவதானால்கூட, நான் உயிரோடு இருக்கமாட்டேனே! இன்றிரவு ஒரே முறை அவனைக் கண்டு அணைத்துக் கொண்டால்தான் என் மனம் கொஞ்சம் நிம்மதி அடையும்” என்று மன்னர் கெஞ்சினார். “என்னை அவர் பார்க்கக் கூடாது! தவமணியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அவரைக் கண்டதும், என் கரங்கள் அவருடைய கழுத்தை நெறித்து விடும்” என்று அண்ணன் கூறிவிட்டார். அன்றிரவு நடுநிசியில் நீலமணியை நான் எடுத்துச் சென்று அவரிடம் தந்தேன்; கண்களிலே நீர் புரள நின்றேன்; காலிலே வீழ்ந்து பணிந்தேன். ஒரு விநாடி அவருக்கு என்னிடம் கனிவு எழும்பிற்று; கட்டித் தழுவினார், மறு விநாடிப் பழையபடி நின்றார். குதிரை ஏறினார்; பறந்தார் அரண்மனைத் தோட்டத்தைவிட்டு. அன்று கண்டதுதான் அவரை நடனா! பிறகு, இதோ நீலமணியைக் கண்டதும், அவரைக் காண்கிறேன்” என்று பாண்டியன் தன் அண்ணன் வரலாற்றினைக் கூறி முடித்தார்.

பாண்டிய மண்டலத்தைத் துறந்தவர், பல்வேறு நாடுகள் சென்று, கலிங்கத்திலே தங்கினார். அக்காலத்திலேதான், மலர்புரியை மயக்கிய ஆரிய முனவனின் தந்திரத்தால், மலர்புரி ராணியின் மனோஹரனாக இருந்தார்; நடனா பிறந்தாள்! முதற்காதலைப் போலவே, மலர்புரி காதலும், சரிந்தது. பின்னர் கலிங்கப் போரிலே மாண்டார், காதலுக்காகப் பட்டத்தைத் துறந்த உன் தந்தை! மலர்புரிராணியே! நீ சோழ மண்டல ஆடலழகியாக இருந்தபோது, வனபோஜன விழாவிலே கண்டு, நீலமணியை எடுத்துக்கொண்டு வந்தாள், உன்னைக் காண்பதற்குப் பதிலாக நீலமணியையாகிலும் காண்போம், என்று போலும்! இவ்விதமாகத்தான் விஷயம் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் புலனாகவில்லை. அவரிடமிருந்த நீலமணி, உன்னிடம் எப்படி வந்தது, என்பது தெரியவில்லை. இந்நீலமணியினை உனக்குத் தந்தது யார்? என்று பாண்டிய மன்னன் நடனாவைக் கேட்டார். ‘இது என் வளர்ப்புத் தாய் தந்தது. அவள் அரண்மனைப் பாதகி” என்று நடனா கூறினாள். பாண்டிய மன்னர், சிரித்துக்கொண்டே, தவமணியை இழந்து மலர்புரி அரசியைப் பெறுமுன், இடையே, அந்தப் பாதகிக்குக் காதலனாக இருந்திருப்பார்! சரி, எப்படியோ ஒன்று, நீலமணி உனக்குத் தானே சொந்தம், தந்தையின் சொத்து, மகளுக்குத்தானே! என்று கூறினார் மன்னர்.

சின்னாட்களிலே, மன்னர், மாறுவேடத்திலே, மலர்புரி சென்று, நடன ராணியின் வரலாற்றினை அரசிக்கு எடுத்துரைத்தார். “என் வாழ்க்கை முழுவதும் விசாரமே குடிகொண்டிருந்தது. இந்தச் செய்தி எனக்கு. இனி புத்துயிர் தரும். அன்று சோழருடைய வனபோஜன விழாவுக்கு நான் மாறுவேடத்திலே சென்றபோது, நடனா, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டாள் என்றும், சோழ மண்டலத்திலே நிரந்தரமாகத் தங்குபவள் அல்லவென்றும் ஆரியன் கூறினான். அதனாலேயே நான், நடனாவை மீண்டும் காண முடியாமற்போய் விட்டது. நடனாவின் காதலனை நான் கொடுமைக்கு ஆளாக்கினேன். என் செய்வது? ஆரியத்திடம் சிக்கிய நான் அறிவிழந்தேன், மன்னரே! மாறுவேடத்துடன் இங்கு வந்து, என் வாழ்வு துலங்கும் வாசகம் உரைத்தீர். இனி ஒரு காரியம் உம்மால் ஆக வேண்டும். எப்படியும், நடனாவும் வீரமணியும், மலர்புரியை ஆள வழிசெய்ய வேண்டும். ஆனால், நடனா, என் விபசாரத்தில் பூத்த மலர் என்பது மட்டும் தெரியக்கூடாது. உலகம் என்னை நிந்தனை செய்யுமே என்பதல்ல என் கவலை! நடனாவுக்குப் பழிச்சொல் பிறக்குமே என்றே நான் கவலை கொள்கிறேன், அவளை – என் மகளை – அருகே அழைத்து, அணைத்து முத்தமிட்டு, வாழ, என் மனம் தூண்டுகிறது;மானம் குறுக்கே நின்று தடுக்கிறது. “மலர்புரி மக்களே! இதோ முழுமதிபோல் முகமும், பூங்கொடிபோல் உடலும், பொன்குணமும் கொண்ட என் மகளைக்காணீர்! அவளுடைய கணவனைப்பாரீர்! எதிரியைக் கதிகலங்கச் செய்யும் தோள் வலியுடையான், என் மகளின் மனக்கோவிலின் தேவன்; என் மருகன், வீரமணியைப் பாரீர்! இனி இவர்களே உங்களின் அரசன், அரசி” என்று மக்களிடம் கூறிக் குதூகலிக்க என் உள்ளம் ஊறுகிறது. ஆனால், நடனா என் விதவைக் கோலத்து விருந்தின் விளைவு என்பது வெளிப்படுமே, என்ற எண்ணம், வேதனையை ஊட்டுகிறது. நான் என் செய்வேன்! புதையலின் மீது புலி படுத்துக் கிடக்கிறது; வீணையின் நரம்பைச் சுற்றிக் கொண்டு விஷப்பாம்பு இருக்கிறது. இதற்கென்ன செய்வேன்? பேதமையினால் கெட்ட எனக்கு, என் சொந்த மகளிடம் ஊரறியப் பேசவும் முடியவில்லையே! என் கரத்தினால் மணிமுடியை அவளுக்குச் சூட்டி மகிழக் கருத்து எழுகிறதே; கரம் அதற்குப் பயன்பட முடியாத நிலையிலன்றோ இருக்கிறது. மலர்புரி ராணிவிபசாரியாக இருந்தாளாம் என்ற சொல் மட்டுமா? மலர்புரியின் ராணி நடனா, விபசாரியின் மகள், என்று வீணர்கள் உரைப்பரே! வேற்று நாட்டவர் இழித்துப் பழித்துப் பேசுவரே! அவளுக்கு உரிமையுள்ள, இந்த மண்டிலத்தை அவள் அடையமுடியாத படி, என் நிலைமையன்றோ குறுக்கிடுகிறது” என்று மலர்புரி அரசி சோகித்தாள்.

“தந்தையின் நிலையேதான் போலும் மகளுக்கும்! அவர் ஆளவேண்டிய பாண்டியநாடு, அப்பேறு பெற முடியாது போயிற்றல்லவா?” என்று மன்னர் பெருமூச்செறிந்தார். மலர்புரி அரசி, “நான் மறந்தேவிட்டேன். அவர் பாண்டிய குமாரர் என்பதைத் தாங்கள் கூறினீர்களே! என் மகளின் நினைப்பு எனக்கு, அந்த அதிசயத்தைச் சாதாரணமானதாக்கிவிட்டது. அவர் ஒரு மறத்தமிழர் என்றுதான் நான் எண்ணியிருந்தேன். இப்போது உமது மொழியே எனக்கு அவர் அரச குடும்பத்தில் உதித்தவர் என்பதை உணர்த்திற்று” என்றாள்.

“அது சரி! ஆனால், தாங்கள்தான், ‘தேவன்’ என்று அவரைக் கருதினீரே, மனிதராகவே எண்ணவில்லையே!” என்றார் மன்னர், வேடிக்கையாக. “உண்மைதான்! எனக்கு அவர் தேவன். அதில் சந்தேகமில்லை” என்று அரசியார் கூறிவிட்டு, “முக்கியமான விஷயத்திற்கு என்ன பதில் கூறுகிறீர். நடனா, மலர்புரியை ஆளவேண்டும்; அவள் என் மகள் என்பதும் தெரியக்கூடாது! இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க வேண்டுமே! என்று கேட்டிட, மன்னன் சிரித்துக்கொண்டே, “தாங்கள் கூறிக் கொண்டிருக்கும்போதே, நான் ஓர் வழி கண்டுபிடித்துவிட்டேன்” என்று சொன்னான். ‘மார்க்கமிருக்கிறதா, மன்னரே!’ என்று மலர்புரி அரசி கேட்டாள்.

விதவைக் கோலத்திலே பெற்ற காதல் விருந்தின் விளைவான நடனா நாடாள, வழி இருக்கிறது; அதே சமயத்தில், ஊர் நிந்தனை பிறவாதபடி தடுக்கவும் வழி இருக்கிறது என்று பாண்டிய மன்னர் கூறிடக் கேட்ட மலர்புரி அரசி மகிழ்ந்து, “என்ன வழி? எனக்குக் கூறுங்கள் விரைவாக” என்று ஆவலுடன் கேட்டாள்.

“அரசியாரே! என் திட்டம் சுலபமானதுதான். ஆனால் அதற்குச் சோழனுடைய ஆதரவு வேண்டும்” என்று பாண்டியன் கூறிடக் கேட்ட மலர்புரி அரசி, “சோழ மன்னருக்கு உமது திட்டம் பிடிக்காமல் போனால் என் செய்வேன்” என்று கேட்டாள் ஏக்கத்துடன். “அரசியாரே, அஞ்சாதீர் மலர்புரிக்கு மாறுவேடத்தில் வந்ததுபோலவே, சோழ மண்டலம் செல்கிறேன். வரலாறு முழுவதையும் மன்னருக்கு உரைப்பேன். வீரமணியின் மீது சோழ மன்னர் கொண்டுள்ள கொதிப்பை மாற்றுவேன். உண்மை தெரிந்தபிறகு அவரே வீரமணியை வரவேற்பார். தவற்றை வேண்டுமென்றே செய்யும் மன்னர்களும் தமிழ்த்தரணியில் உண்டா! என் திட்டத்தையும், அது எந்நோக்குடன் செய்யப்படுகிறது என்பதையும் சோழருக்குக் கூறுவேன். அவரும் இசைவார் என்றே நம்புகிறேன்” என்று பாண்டியன் கூறினார். அரசியார்‘ ஒருவாறு மனந்தேறினாள். ஆனால் மறுகணமே, திகிலுடன் “அது சரி, பாண்டிய பூபதி! தங்கள் திட்டம் என்ன? அதைக் கூறவில்லையே” என்று கேட்டாள். பாண்டியன் புன்னகை பூத்த முகத்துடனே, “மலர்புரிமீது, வீரமணி படை எடுத்து வருவான். போர் மூளாமுன்னம் தூதுவிடுவான், மலர்புரி அரசி, முடிதுறக்க இசைவார்; மக்கள் வீரமணியை மன்னராகத் தேர்ந்தெடுப்பர். ஆரியத்துக்கு அடிபணிந்ததற்குக் கழுவாய் தேடிட, அரசி, தன் பதவியைத் துறந்தது முறையே என்று சோழனும், பாண்டியனும் கூறுவர். இதுதான் என் திட்டம்” என்றான். “போர் மூண்டுவிட்டால். வீணாகப் பலர் மடியவேண்டுமே” என்று கவலைப்பட்ட அரசியாருக்குப் பாண்டியன் “அந்தப் பயமேவேண்டாம்” என்று கூறித் தேற்றினான். மலர்புரி அரசியிடம் விடைபெற்றுக்கொண்டு சோழநாடு சென்று பாண்டியன் திரும்பு முன்னம், மலர்புரி அரசி. மந்திரிப் பிரதானியாரிடமும், ஊர்ப்பெரியவர்களிடமும், “ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நான், இனியும் நாடாளுவது முறையாகாது, வேறு தகுதியானவரை மன்னராக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி வைத்தாள். ஆனால் ஒருவராவது, மலர்புரி அரசி மீது மனத்தாங்கல் கொள்ளவில்லை. ஆரிய நச்சரவுதான் அழிந்தொழிந்ததே; இனியும் ஏன் அரசியார் அஞ்சவேண்டும், என்று கூறினர். பாண்டியன் சோழனிடம் சவிஸ்தாரமாக, வீரமணி நடன ராணி வரலாற்றினைக் கூறினான். சோழன் தமிழ் வீரனாம் வீரமணி துரோகியல்ல; துயருற்ற ஒருவருக்குத் துணை நின்றதன்றி வேறு தீங்கிழைக்கவில்லை என்பது தெரிந்து, வீணாக வீரமணியை நாடு கடத்தி விட்டோமே என்று வருந்தி, நெடுநாட்கள் பலவகையான துன்பங்களை வீரமணி அனுபவித்ததும், கொடியிடைக் கோமளம் நடனம், பல பாடுபட்டதும், தனது துலாக்கோல் சாய்ந்ததால்தான் என்பதை உணர்ந்து வருந்தி, வீரமணியிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்பினார். அன்றே அரச சபையிலே, வீரமணி மீது முன்னர் படிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ததுடன், சோழன், பாண்டிய மன்னரும் மலர்புரி ராணியும் தயாரித்த திட்டத்தைத் தகர்க்கக் கூடியதான வேறோர் அறிக்கையும் விடுத்தார். மாறு வேடத்துடன் அரச சபையிலே இருந்த பாண்டியன் திடுக்
கிட்டுப் போனார். ஆனால் முகமோ புன்னகை மேடையாயிற்று.

“தமிழர்களே! நாம், கலிங்கத்தின்மீது போர்த்தொடுத்து, அந்நாட்டரண்களைப் பிளந்தெறிந்து, மன்னனை முறியடித்து, அந்த மண்டலத்தை நமது ஆட்சியின் மேற்பார்வைக்குட்படுத்தினோம். கலிங்க மன்னன், வாரிசு இன்றி இறந்து போனான். கலிங்கத்திலே நாம் பெற்ற வெற்றிக்கு முக்கிய துணையாக இருந்த நமது மறத்தமிழன் வீரமணி. மாசிலாமணி என்பது விளங்கிவிட்டதால், இன்று நாம் நமது வளர்ப்புப் பெண் நடனராணியை வீரமணிக்குத் திருமணம் முடிக்கவும், நடனராணிக்கு நமது நன்கொடையாக கலிங்கத்தைத் தரவும், தீர்மானித்துள்ளோம். வீரமணியும் நடனராணியும் இதுபோது பாண்டிய நாட்டிலே உள்ளனர். அவர்கள் ஒரு திங்களில் இங்கு வருவர். நமது தலைநகரிலே திருமணம் நடைபெறும். மறுகணம் நடனராணி, கலிங்கராணி என்று பிரகடனம் வெளியிடப்படும். அந்தச் சந்தோஷச் செய்தி கேட்டுத் தமிழகம் மகிழும் என்பதில் ஐயமில்லை. கலிங்கராணி வாழ்க!” என்று மன்னர் அறிக்கை படித்து முடித்தார். கரகோஷமும் ஆனந்த ஆரவாரமும் அடங்கிய பிறகு. பாண்டியன், சோழ மன்னரைத் தனியே அழைத்து, “மலர்புரி அரசியின் மனக்கோட்டையை இடித்துவிட்டீரே” என்றான். “இடிக்கவில்லை, மலர்புரிக்குக் கலிங்கம் வெளி அரணாக இருக்கும். நடனாவும் வீரமணியும் கலிங்கத்தை ஆள்வர். சில காலமானதும், மலர்புரி. பாதுகாப்புக்காகக் கலிங்கத்துடன் இணைக்கப்பட்டு, இருநாடுகளும் நடன–வீரக்கோட்டமாகத் திகழும். காலம் இதைச் செய்யட்டும். தாயையும் மகளையும் ஒன்றுசேர்க்க, தலையுருட்டும் சண்டை வேண்டாமென்று எண்ணியே நான், உமது திட்டத்துக்குப் பதிலாக வேறு திட்டமிட்டேன். மேலும், பாண்டியரே! ஆரியரின் ஆதிக்கம் பரவாது இருக்க வேண்டுமானால், நாம், தனித்தனி அரசுகளாக இருப்பதைவிட ஓர் கூட்டாட்சி அமைப்பதே நலன் என்று நான் கருதுகிறேன். கலிங்கமும் மலர்புரியும் மட்டுமல்ல; சேர சோழ பாண்டிய நாடுகளும், எல்லைப் புறமாக உள்ள வடுகர் நாடும் விந்தியம் முதல் குமரி வரை, திராவிடம். இங்கு ஆரியம் புகாதபடி பாதுகாக்க, இங்குள்ளவர்கள், ஓர் கூட்டாட்சி அமைக்க வேண்டும். மறத்தமிழரின் தோள்வலி குன்றவில்லை; ஆனால் மனவலி குன்றுகிறது. அதைக்காண எனக்குக் கவலையாக இருக்கிறது. ஓர் பலமான கூட்டாட்சி அமைத்துவிட்டால், ஆரியத்தைத் தடுக்க வசதியாக இருக்கும். இதுபற்றிப் பிறகு யோசிப்போம். இனி பாண்டிய மண்டலத்திலே உள்ள, உனது அண்ணன் மகள், மலர்புரி அரசியின் குமாரி, என் வளர்ப்புப் பெண், நடனாவையும் அவளுடைய நாயகனையும் வரவழைப்போம்; மலர்புரிக்கும் ஓலைவிடுப்போம்” என்றுரைத்தான்.
மலர்புரி திரும்பிய பாண்டியன் கூறிய மொழி கேட்ட அரசிக்கு, ஓர் விதத்திலே சந்தோஷமும் மற்றோர் விதத்திலே சோகமுமாக இருந்தது. “என் செய்வது, என் செயல் அப்படி இருந்தது” என்று கூறினாள்.

மறுதிங்களிலே, தமிழக மன்னர்கள் முன்னிலையில், நடனா – வீரமணி திருமணம் விமரிசையாக நிறைவேறியது. நெடுநாட்களுக்குப் பிறகு சோழ நாடு வந்த வீரமணிக்குச் சொல்லொணாச் சந்தோஷம். நடனாவுக்கு, அரண்மனையிலே அமோகமான வரவேற்பு. சோழரின் குமாரி, தங்கை நடனாவைக் கண்டு பூரித்தாள்.

திருமணத்தைவிட அதிக விமரிசையாக நடனாவின் முடிசூட்டு வைபவம் இருந்தது. போரால் இளைத்துப் போன கலிங்கம்; இனிவளம் பெறும் என்று பலரும் வாழ்த்தினர். முடிசூட்டு விழா முடிந்தது. இசைவிருந்து நின்ற பிறகு இரவு நெடுநேரத்திற்குப் பிறகு, கலிங்கராணியும், கலிங்கத்தை வென்ற வீரமணியும், அரண்மனை நந்தவனத்திலே ஆடிப்பாடிக் கொண்டிருக்கையிலே,

“உனக்கென்னம்மா உல்லாசத்துக்குக் குறை! பாண்டிய நாடு தகப்பன் தரணி, மலர்புரி தாய்நாடு, சோழநாடு வளர்ப்புத் தந்தையூர்; கலிங்கமோ, உனக்கே சொந்தம்” என்று வீரமணி கேலி பேசினான்.

“போம், கண்ணாளா! வீரம் உம்முடையது, விருது எனக்குக் கிடைத்தது. ஆனால் அன்று. நான் முதன் முதலாக என் தாயை, மலர்புரி அரசியைத் சந்தித்தேனே, நமது திருமணத்திற்கு முன்னாள், அன்று இருவரும் அழுத கண்களின் சிகப்பு என்றுமே மாறாது உலகுக்கு நாங்கள் வேறு வேறுதானே! இதுபோல எங்கு உண்டு? தாயை மகள் அறியாமல் எத்தனை காலம் தவித்தாள்; அறிந்தும் பிரிந்தே வாழ்ந்தாள் என்று உலகம் கூறாதோ, என்ன வாழ்வு இது! அன்று என் அன்னை என்னை அணைத்து உச்சிமோந்து முத்தமிட்டபோது, எனக்கு இரு கண்களிலிலும் நீரருவி கிளம்பிற்று. இன்னும் அதனை எண்ணினால் என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை” என்று நடனா சோகத்துடன் கூறினாள்.

“கலிங்கராணியாரே! சோகத்தைப் போக்க மருந்துண்டு தெரியுமோ” என்று வீரமணி வேடிக்கையாகக் கேட்டான். கேட்டுவிட்டு, கண்களை மூடிக்கொள். என்று கெஞ்சினான். கலிங்கராணியின் கண்களும் மூடின. துடித்துக் கொண்டிருந்த வீரமணியின் இதழும் நடனாவின் கனியிதழைக் கவ்வின!

முற்றும்

(திராவிடநாடு - 1943)