அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
17
                     

“தந்தையே காதல் என்பது தர்க்கத்துக்குக் கட்டுப்படாது. அதனை அளக்கும் கோல் கிடையாது, நிறுத்திடும் துலாக்கோலும் இல்லை. இதுப்பற்றி அதிகம் பேசிடவோ எனக்கு மனம் இல்லை. ஒன்றுமட்டும் உரைப்பேன். உத்தமோத்திமராகிய தாங்கள் அறியாததல்ல நான் கூறப்போவது. அரும்பு மலர, முகூர்த்தம் குறிப்பாரில்லை. யார் எவ்வளவு முயன்றாலும் அரும்பை அவரிஷ்டத்துக்கு இணங்கவைத்து மலராகும்படிச் செய்யமுடியாது. பகலோனைக் கண்டதும், மலர்ந்திடும் பங்கஜத்தைப் பட்டத்தரசனுங்கூட சட்டமிட்டுத் தடுத்திட முடியாது. முடிவேந்தனானாலும், ஓர் மயிலை ஆடு என்று கட்டளையிட்டுத் தோகையை விரித்தாடச் செய்யவும் முடியாது. தானாகக் களிகொண்டு ஆடிடும் மயிலையும் “நிறுத்து உன் நடனத்தை” என்று கூறிடமுடியாது. அதுபோலவே, தர்க்கமும், தடை உத்திரவும், தண்டனையும் நிந்தனையும், வம்பும் வல்லடியும் வாலிப உள்ளத்திலே மலரும் அந்தக் காதல் எனும் உணர்ச்சியைப் பறித்துவிட முடியாதல்லவா? தந்தாய்! தவமணியின், காவியே என்னைத் தடுக்க முடியவில்லை. ஆஸ்ரமமாயிற்றே அங்கு ஆத்மாவுக்கும் ஆண்டவனுக்கும் பரஸ்பரம் ஏற்படவேண்டுமே ஒழிய, ஆணுக்கும் பெண்ணுக்கும், ஆலிங்கனம் உண்டாவது முறையா என்று தர்க்கிக்க என்மனம் இசையவில்லை. காரணம், காலம், விளைவு, முதலிய எதனையும் பொருட்படுத்தாது திடீரெனக் கிளம்பும் ஜோதியன்றோ காதல்” என்று என் அண்ணன் கூறினர்.

“அது ஜோதியோ, அல்லவோ, எனக்குத் தெரியாது. இவள் இந்த மண்டலத்துக்கே பெருந்தீயானாள். தந்தைக்கும் மகனுக்குமிடையே, சண்டை மூட்டுகிறாள். பாண்டிய குடும்பத்தின் மணியை மாசாக்குகிறாள். பாண்டிய நாட்டுக்கு ஓர் பழிச்சொல் ஏற்படச்செய்து விட்டாள், வன்னஞ்சக்காரி! வளர்த்த தகப்பனின் காமக்கூத்துக்கு இடமளித்த வேசி!” என்று என் தந்தை தவமணி எனும் பெண்ணைக் கடிந்துரைத்தார். என் அண்ணன், அச்சொல்கேட்டு வெகுண்டு, “தந்தையே! அரச நீதியின்படியும், பாண்டிய பரம்பரை முறைப்படியும், இவள், பட்டத்தரசியாகும் உரிமை இழந்தவளாகலாமே தவிர, பழிச்சொல் கேட்டுத் தீரவேண்டுமென்று நியதி இல்லை. அவளை நான் மனமார என் பிரிய நாயகியாகக் கொண்டு விட்டேன். எனவே இனி யார் அவளைப் பற்றி இழிவாகப் பேசத் துணிந்தாலும், நான் சகியேன்” என்று கூறினார்.

பிறகு அங்கு நடைபெற்ற சோகரசமான சம்பவங்களை நான் சுருக்கமாகவே கூறுகிறேன். நடனா! என் தந்தை கெஞ்சியது மட்டுமல்ல, தவமணியும் எவ்வளவோ இதமாக என் அண்ணனுக்குப் புத்தி சொன்னாள். நானும் என்னால் கூடுமான மட்டும் அவரைத் திருப்ப முயன்றேன். அவர் பிடிவாதம் குறைவதாகத் தெரியவில்லை. பிறகு என் தந்தை ஓர் பயங்கரமான முடிவுக்கு வந்தார். தலைமீது கரங்களால் மோதிக்கொண்டார், தடதடவென ஓடினார், மடமடவென ஏதேதோ பேசினார். பிறகு “கடைசி முறை. என் சொல்லைக் கேள்” என்று கூறினார். என் அண்ணன், முடியாது என்பதைத் தெரிவிக்கத் தன் தலையை அசைத்தார் கம்பீரமாக. அந்தக் கம்பீரம், என்னைத் தூக்கிவாரிப் போட்டது. ஓர் அரசனின் கோபம், ஒரு தந்தையின் ஆத்திரம், அதுமட்டுமா, அரசபோகம் பறிமுதலாகும் என்ற நிலை எதுவும், துச்சமெனக் கருதிய அவருடைய துணிவுக்குக் காரணம், ஒரு துடி இடையாள்!

காவலாளிகளில் ஒருவனை அழைத்து, அரசர் ஏதோ கூறினார். அவன் விரைந்துசென்றான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், மன்னரின் மெய்ப்பாதுகாவலர் அங்குவந்துசேர்ந்தனர். மன்னர், “ஆணவம்பிடித்த இவனையும், சாசகமிகுந்த இவளையும் சிறையில் தள்ளுங்கள்; தனித்தனி சிறையில் கடுங்காவலுடன் அரண்மனைக்குள்ளாக இருக்கும் பிரத்தியேகச் சிறையில்” என்று உத்தரவிட்டார். இருவரும் மெய்ப்பாதுகாவலரால் இழுத்துச் செல்லப்பட்டனர். மன்னரும் மற்றக் காவலாளிகளும் அரண்மனைக்குச் சென்றுவிட்டனர். நான் மட்டுமே, நெடுநேரம் சிந்தாகூலனாக உலவிக் கொண்டிருந்தேன். யாருடைய நிலைமை எப்படி இருந்தால்தான் என்ன, அந்த நிலவு வழக்கம்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

சிறையிலே, என் அண்ணன் அவருடைய மனத்தை விழியாலும் மொழியாலும் மருட்டிய தவமணியும் அடைபட்ட செய்தி, மெல்ல மெல்ல நகருக்குள் பரவலாயிற்று. ஊரிலே இதுபற்றி விபரீதமான வதந்திகள் பரவாதிருக்க வேண்டுமென்று கருதிய என் தந்தை, வம்பளப்போருக்குக் கடுந்தண்டனை தரப்படும் என்று முரசறைவித்தார். நடந்ததைச் சுருக்கமாக மக்களுக்கு அறிவிக்குமாறு பிறகு மந்திரிக்குக் கட்டளையிட்டார். “ஆஸ்ரமத்திலே இருந்த அந்தப் பெண் ஒரு ஜாலக்காரியாம். இளவரசருக்கு அவள் ஏதோ மருந்திட்டு மயக்கினாளாம், அவளும் இளவரசருமாகச் சேர்ந்து சதிசெய்து, மன்னரைக் கொல்ல முயன்றனராம்” என்று மக்கள், பேசலாயினர். மன்னரின் கோபம் தணிந்தபாடில்லை. பிரதானியர்களிலே சிலர் சிறுமைக் குணம் கொண்டவர்கள். அவர்கள், என்னாலேயே, இளவரசருக்கு இந்த இடுக்கண் நேரிட்டதென்று பேசிடக் கேட்டேன். என் மனம் பதைத்தது. என் அண்ணனுக்குச் சொந்தமான அரச உரிமையை நான் அபகரிக்கச் செய்தேன் என்று கூறும் கயவரின் நாவைத் துண்டித்திட எண்ணினேன். அவ்வளவு ஆத்திரம் எனக்கு. மோசம் செய்யும் உலுத்தனா நான்? எவ்வளவு இழிகுணம் இவர்களுக்கு என்று கூறினேன் – சோகித்தேன்.

இளவரசர் சிறையிலே தள்ளப்பட்டதும், மந்திரிகளும், பிரதானியரும், என்னைக் கண்டதும், விசேஷ மரியாதைகள் செய்யலாயினர். அது எனக்குப் புண்ணிலே புளித்தகாடியை ஊற்றுவது போலிருந்தது. என்மீது வீண் சந்தேகம் கொண்ட அவர்களையும், அவர்கள் பெரிது எனப்பேசும், அரச பதவியையும் தூசு எனக் கூறிவிட்டுத் துறவு பூண்டுவிட வேண்டும் என்றுகூட நினைத்தேன். இந்தத் தீர்மானத்தைத் தந்தையிடம் கூற அவரிடம் சென்றேன். ஆனால் அவருடைய விழி சிவந்திருந்ததையும், அவருடைய மொழியிலே. சோகம் தோய்ந்திருந்ததையும் கண்டதும் என்னால் ஏதும் பேச முடியவில்லை.

“கடைசி முறையாக, நீ போய்க் கேள் அவனை. என்னைச் சாகடிக்கத்தான் அவன் பிறந்தானா என்று கேள். குலை தள்ளியதும் வாழையை வெட்டி வீழ்த்துவதையும், விழுதுவிட்டால் ஆல் நிலைத்து நிற்பதையும் அவனுக்குக் கூறு. பாண்டியனைப் படுகளத்திலே கொல்ல முடியாதுபோன பகைவர்களின் பங்காளியா, பட்டத்தரசன் பரிவைப் பெரிதென எண்ணும் புதல்வனா அவன் என்பதைக் கேட்டுப்பார்” என்று என்னிடம் கூறினார். புயலைப் போய் அடக்கு என்று கட்டளையிடுவதுபோல, இருந்தது, என் தந்தையின் சொல். நான் என் செய்வேன்! சரி என்றுகூற எப்படித் தைரியம் வரும் – முடியாது என்றும்கூற முடியுமோ! தலை அசைத்தேன். தந்தை தலையைக் கவிழ்த்துக் கொண்டார். துக்கம் அவரைத் துளைத்தது. என் செய்வார் அவர்? சிறைச் சென்றேன். காவல் புரிவோரை வெளியே போகச் சொல்லிவிட்டு, என் அண்ணன் இருந்த அறைக்குள் நுழைந்தேன், அவர் புன்சிரிப்போடு என்னைப் பார்த்து, “தெரியும் எனக்கு, தந்தை எப்படியும் சம்மதிப்பார் என்று. அவர் சம்மதத்தைக் கூறத்தானே நீ வந்தாய்?” என்று கேட்டார். எனக்கு அவர் மொழியைக் கேட்ட பிறகு, நடுக்கமும் பிறந்தது. இவ்வளவு நம்பிக்கையும் ஆவலும் கொண்டுள்ளவருடன், என்ன பேசி, மன்னர் வழிக்கு அவரைத் திருப்புவது? நடக்கக்கூடியகாரியமா? என்ற எண்ணம் என்னைக் கோழையாக்கிவிட்டது. நான் இந்த முயற்சியைச் செய்யாதிருப்பின் முடிபெற வேண்டியே நான் சும்மா இருந்துவிட்டேன் என்ற பழிவந்து சேரும். இரு நெருப்புக்கிடையே சிக்கிய நான் எவ்வளவு தவித்தேன் தெரியுமோ! என் நிலையை ஒருவாறு யூகித்துக் கொண்டார் அண்ணன். அவருடைய புன்னகை மறைந்துவிட்டது. பொலிவு குறைந்தது. பெருமூச்சுடன் “தந்தை இசைய மறுக்கிறாரா?” என்று கேட்டார். “ஆம்” என்று நான் மெதுவாகக் கூறினேன். “சரி!” என்று கோபமாகக் கூறிவிட்டு, அவர் அங்கிருந்த மஞ்சத்திலே படுத்துக்கொண்டார். என் நெஞ்சு உலர்ந்துபோய் இருந்தது. நெஞ்சை நனைத்துக் கொள்ள, அங்கிருந்த நீர்க்குவளையை எடுத்தேன். என் அண்ணன் “வேண்டாம்! அந்த நீரைப் பருகாதே” என்று கூறினார். நான் பயந்துவிட்டேன். ஒரு சமயம், தற்கொலை செய்துகொள்ளச் நீரிலே, ஏதேனும் விஷம் கலந்து தயாராக வைத்திருக்கிறாரோ, என்று திகில் பிறந்தது. அண்ணா! என்று கூவினேன். “தம்பி! பயப்படாதே! அதிலே விஷமில்லை, ஆனால் அந்தக் குவளை நீரிலே, என் கண்ணீர்த்துளிகள் சிந்தின. நீர்பருக அங்குச் சென்றேன்; என் நிலையை நினைத்தேன்; கண்ணீர்ப் பெருகிக் குவளையிலே சிந்திற்று; நீர் கெட்டுவிட்டது” என்று அவர் கூறினார். அதைக்கேட்ட நான், எவ்வளவு பதறினேன் தெரியுமா! நடனா! நெடுநேரத்திற்குப் பிறகே, நான் அவருடன் பேச முடிந்தது. பேச்சினால் என்ன பயன் விளைய வேண்டுமோ, அது ஏற்படவில்லை. அதற்கு மாறாக, என் அண்ணன் காதலையே கலையாகக் கொண்டிருப்பவர் என்று நான் கண்டு கொண்டேன். ஒரு பெரும் புலவர் பேசுவது போலிருந்ததே தவிர அவருடைய பேச்சு, மைவிழியாளுக்காக வீண் பிடிவாதம் செய்யும் வீணுரையாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய வாதங்களும், மனோதத்துவ மொழியும், அவருடைய வாதங்களும், மனோதத்துவ மொழியும், மிக அழகாக இருந்தன. தந்தையின் துக்கத்தை நான் அவருக்கு எடுத்துரைத்தேன். ஒரு பெண்ணுக்காகக் குடும்பம் அழிவதாக என்று கேட்டேன். நான் கற்றிருந்த திறமையைத் தனையையும் காட்டித்தான் நான் பேசிப் பார்த்தேன். அவ்வளவையும் அவர் சிதறடித்தார். அவர் அன்று கூறிய சில வாசகங்கள் பிறகு பல இரவுகள் என் சிந்தனைக்கு வேலை தந்தன. அவர் அன்று கிளப்பிய பல பிரச்சினைகளுக்கு, எனக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை.

“தம்பீ! அரசனின் கடமை, அரச பதவியின் பொறுப்பு, நிலைமைக்கேற்ற நடவடிக்கை, என்று பல கூறினார் தந்தை. நீயுந்தான் கூறுகிறாய். அரசனாக ஒருவன் இருப்பதனால் ஒரு சாதாரண மனிதனுக்குள்ள மிகச் சாதாரணமான மனிதனுக்குள்ள மிகச் சாதாரணமான உரிமையையும் அரசனென்ற நிலைமைக்காக, பதவிக்காக இழந்து விடவேண்டுமா? அறிவுடைமையா அது? அரசபோகத்துக்காக, குடும்ப இன்பத்தைப் பறிகொடுக்க வேண்டுமா? அது சரியா” என்று என்னை அவர் கேட்டார். இன்றுவரை நான் அதுபற்றிச் சிந்தித்துப் பார்க்கிறேன், சரியான பதில் கிடைக்கவில்லை.

“தம்பி! பாண்டிய நாடு பெரிது, உன் பரிவுக்கேற்ற மங்கையல்ல! என்று தந்தை கோபத்தோடு கூறினார். கோபம் அவருடைய சிந்தனா சக்தியைக் கெடுத்துவிட்டது. நீ யோசித்துப் பார்! ஒரு மங்கைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது அவளைப்பெற ஆண்மையில்லாது, பேடியாகித் துரோகியாகி, நான் இந்த மண்டலத்தை ஆண்டு என்ன பயன்? தந்தையின் கோபத்துக்குப் பயந்து ஒரு தையலின் மானத்தை நசுக்க நான் துணிந்து விட்டால் நாளைக்கு ஒரு மண்டலத்து மக்களின் மானத்தைக் காப்பாற்றும் மகத்தான பொறுப்பை நான் நிறைவேற்ற முடியுமா! நீ கூறு. ஏழை எளியவர், அபலை அனாதிகள், எனும் எவரிடமும் பரிவு காட்டி, அவருடைய சுகத்திற்காகப் பணியாற்றுவது அரசபதவியின் மேன்மை என்று அறவுரை புகல்கிறார்களே, அந்தப் பதவிக்கு நான் இலாயக்குள்ளவனாவதற்கு ஒரு மங்கையரின் மனத்தைப் புண்ணாக்கி. வாழ்வைப் பாழாக்குவது பயிற்சி முறையா கூறு? அவள் கண்ணீர்ப் பெருகப் பெருக, நான் பனிநீரால் குளிப்பாட்டப்பட்டு பட்டத்தரசனாவதா? அவள் கரங்களைப் பிசைந்துகொண்டு ஓர் இடத்திலே அழுதுகொண்டிருப்பது,வேறோர் இடத்திலே நான் கரத்திலே செங்கோலேந்தி அரசாள்வதா! ஒரு புறத்திலே, நான் நீதியின் சின்னமாக கொலுவீற்றிருப்பது, மற்றோர் இடத்திலே ஓர் மங்கை என்னை அநீதியின் இருப்பிடமே என்று கடிந்துரைப்பதா! பாண்டியன் நாட்டுக்கு, ஒரு பாவையின் வாழ்வைக் கெடுத்த பாதகனா அரசனாவது? ஒரு பெண்ணை நிர்க்கதியாக்கும் நீசனுக்கா மக்கள் நெடுந்தண்டமிடுவது? யோசித்துப்பார்” என்று அவர் அன்று சொன்னார். இதுவரை பல பெரியவர்கள் இதற்குப் பலபடப் பதில் கூறினர், எனக்குத் திருப்தியாகவில்லை.

நடனா! அவர் எவ்வளவு கருத்துடன் பல நூற்களைப் படித்திருந்தார் என்பது, அன்று அவர் பேசியதால் நன்கு விளங்கிற்று. காதலால் தாக்குண்டவர்களின் நிலைமயைப் பற்றி அவர் கூறியவற்றிலே ஒன்றைக்கூற என் மனம் என்னைத் தூண்டுகிறது. காதலால் தாக்குண்டு காடுமேடு சுற்றிய உனக்கும் வீரமணிக்கும் அது நன்மை பயக்கும், என்றுங் கருதுகிறேன்.

ஒரு தமிழ் அணங்கின், காதலன், பொருள் தேட, வேற்றூர் சென்றானாம், அதுபோது, அந்தப் பெண்மணி, தன் முற்றத்திலே, முறுவலின்றி முடங்கிக் கிடந்தாள். நெடுவழி சென்றவனை நினைத்தாள். அவன் சென்ற இடமோ, நீரும் குளிர்ச்சியும் வளமையும் வசீகரமும் இல்லாத இடமாம். மழைகாணா மண்டிலத்துக்காகத் தன் மணாளன் சென்றிருப்பது தெரிந்து, வெப்பம் அவனை வாட்டுமே என்று அவள் வருந்தினாளாம். வருத்தத்தோடு, அந்த வனிதை வானை நோக்கினாள். வெண்மேகக் கூட்டத்தைக் கண்டாள். மேகங்களே! என் மணாளன் சென்றுள்ள மண்டிலத்துக்கு விரைந்து சென்று, மழை பொழியலாகாதா என்று கேட்டாளாம், அந்தக் காரிகை, கேட்டபின்னர், அவளே யோசித்தாள் வெண்மேகம், மழைபொழியும் ஆற்றலற்றதல்லவா? நீர் இல்லையே, அவற்றிடம்! அவை எங்ஙனம் மழைதரும், என்று யோசித்தாள். அயர்தாளோ? இல்லை. நீர் மொண்டு உண்டு வெண்ணிறம் மாற்றி கருமேகமாகுமின். காதலன் சென்றுள்ள இடம் சென்று மழைபொழியச் செய்து அவன் வெப்பத்தால் வாடுவதைப் போக்குமின் என்று வேண்டினாள் வெண்மேகங்களை! எவ்வளவு அன்பு அவளுக்கு? காதலன் பிரிந்ததால் தனக்குற்ற கஷ்டம் மட்டுமே பெரிது என்று அவள் எண்ணவில்லை. வெப்பமிக்க இடத்திலே அவர் வருந்துவாரே என்ற நினைப்பே அவளுக்கு அதிக வருத்தமுண்டாக்கி விட்டது. விரைந்துவா! என் வேதனையைப் போக்கு! என்று மட்டுமே காதலனை வேண்டினாள் என்று கூறினால், அவளுக்குத் தனியே இருந்து தவிக்க மனமில்லை, மணாளனுடன் இன்பமாக வாழ மனம் நாடுகிறது என்ற அளவே, அவளுக்கு இருந்த அன்பு என்று ஏற்படும். எந்த மங்கைக்கும் இது இயல்புதானே! சுகமாகச் சந்தோஷமாக வாழத்தானே எவரும் எண்ணுவர். அதுபோல் இவளும் எண்ணினாள். ஆனால் இந்த மங்கை தன் சுகத்தையும் சந்தோஷத்தையும் இரண்டாவதாக்கினாள். வேற்றூர் சென்றுள்ள காதலனுக்கு இரண்டு கஷ்டம்; தனக்கு ஒரு கஷ்டம் என்பதனை உணர்ந்தாள்; அவனின்றித்தான் வாடுவதுபோல, அவளின்றி அவனும் வாடித்தானே கிடப்பான். ஒத்த காதல்தானே தமிழ் மரபு. எனவே பிரிவால் வரும் துயரம் இருவருக்கும் உண்டு. அதே கஷ்டத்தால் காரிகையும் வாடுகிறாள். காளையும் வாடுகிறான். ஆனால் காரிகை சொந்த நாட்டில் குளிர்ச்சியுள்ள இடத்திலே இருக்கிறாள்; அவனோ அவளைப் பிரிந்திருக்கும் கஷ்டத்தோடு,வேறோர் கஷ்டமும் அனுபவிக்கிறான். அவன் சென்று நடமாடும் இடம் வெப்பமிக்க வெளி, ஆகவே, அவனுக்குள்ள கஷ்டம் இருவகைப்படும். இதனைத் தெரிந்ததாலேயே, அவள் மேகங்கள்! அவர் அங்கு அவதிப்படுகிறாரே, வெப்பத்தைப் போக்க மழை தாருங்கள் என்று வேண்டுகிறாள். அன்பு மட்டுமா! அறிவும் ததும்புகிறது அவள் மொழியிலே! வானமண்டலத்திலே எவனோ தேவன் உட்கார்ந்துகொண்டு மழையைப் பொழியச் செய்கிறான் என்று வறட்டுப் பேச்சல்ல அவள் உரைத்தது. நிலத்திலே உள்ள நிரை உண்டு கருமேகம், பின்னர் மழையாகப் பொழிவிக்கும் என்ற அறிவு மொழி பேசுகிறாள் அந்த மங்கை. “கடைக்குப் போய் கனி ஒரு ரூபாய்க்கும், கற்கண்டு இரண்டு ரூபாய்க்கும், சந்தனம் ஒரு வீசையும், மல்லிகைச் செண்டு ஒரு கூடையும், வாங்கிக் கொண்டு வா” என்று பணியாளுக்குக் கூறிவிட்டால் மட்டும் போதுமா? இவற்றை அவன் கடையிலே பெறக் காசு அவனுக்குத் தந்தனுப்பினால்தானே, பழமும் பிறவும் அவன் பெற்றுவருவான்! காசு தராவிட்டால், வெறுங்கையன் என்ன கொண்டு வர முடியும்? அதுபோலவே வெண்மேகங்களே! நீரை மொண்டு உண்டு, கருமேகமாகி, மழை பொழிமின் என்று கூறிவிட்டால் போதுமா, நீர்நிலையங்களைக் காட்டவேண்டாமோ அந்த மங்கை, நீர்நிலையங்கள் மட்டுமல்ல, நீர்வீழ்ச்சிகளையே வெண்மேகங்களுக்குக் காட்டுகிறாள். எங்கேயோ எவருக்கோ சொந்தமானவை அல்ல அவள் காட்டும் நீர்வீழ்ச்சிகள். அவளுடைய சொந்தச் சொத்து!

“வெண்மேகங்களே! இதோ பாருமின் அவர் இல்லாததால் வருந்திடும் நான், அழுதபடி யிருக்கிறேன். என் கண்களிலே பொழியும் நீரைமொண்டு, உண்டு, வெண்ணிறம் மாறி, கருமேகமாகிப், பின்னர் வெப்பமிக்க இடத்திலே சென்றுள்ள என் மணாளன் மகிழ, அங்கு மழை பொழிமின், என்று, அந்த மங்கை வேண்டிக்கொண்டாளாம். அவளுடைய அன்பு எவ்வளவு அழகு!
தம்பி! தமிழகம் இதுபோன்ற காதலகமாக இருந்தது என்று அன்று என் அண்ணன் உரைத்தார். பல நாட்களக்குப் பிறகு, புலவரொருவர் ஏதோ ஓர் ஏட்டுச் சுருணையிலிருந்து ஏழெட்டடி பாடிக் காட்டினார். இக்கருத்துப்பட, ஒரு பாடலை. நடனா, மற்றும் பல காதற் சித்திரங்களை அவர் தீட்டினார் அன்று; என்ன அருமை தெரியுமா?

காதற் சித்திரங்களைத் தீட்டிக் கொண்டே, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், இருக்க என் அண்ணன் தயாராக இருந்தாரே தவிர, தவமணியைக் கைவிட ஒரு துளியும் சம்மதிக்க
வில்லை. நான் குனிந்த தலையுடன், என் தந்தையிடம் சென்றேன். விஷயத்தை உணர்ந்து கொண்ட என் தந்தை “தெரிகிறது, அந்தத் தூர்த்தன் உன் சொல் கேட்க மறுத்துவிட்டான். ஆம்! போதை குறையாது அவனுக்கு. கள், உண்டவனையே கெடுக்கும்; காமம், அதினினும், கொடியது. அவன் அப்பேய் வயத்தனாகிவிட்டான், எனவே இனிப்பிறர் சொற்கேட்கும் பெருங்குணம் அவனிடமிராது. பாம்பும் அவனுக்கு இனிப்பழுதையாகத் தோற்றும். படுபாதாளத்திலே அவன் விழ இருப்பதைத் தடுக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. என் செய்வது? ஒரு காரிகையின் கருவிழிக்காக அவன் தன் பரம்பரை வழியையும் இழக்கத் துணித்துவிட்டான். அவன் ஒரு புன்சிரிப்புக்குப் பலியானான்! நான் அவனுடைய கண்களிலே புரளும் நீருக்குப் பலியாவதா? பாண்டிய மன்னனின் நீதி, மக்கட்கு ஒருவிதமாகவும் மகனுக்கு வேறாகவும் இருந்தது என்ற பழிச்சொல் எனக்கு வரக்கூடாது. தலைமுறை தலைமுறையாக ஒளிவீசும், பாண்டியப் பண்பு, பாகுமொழிக்குப் பலியான ஒரு காளையைக் காப்பாற்றுவதற்காகக் கெட விடுவதா! இல்லை! அவன் என் மகனல்லன்! என் சட்டத்தை மீறிய சாதாரணக் குடிகமனே! கட்டுக்கு அடங்க மறுக்கும் அவன் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுத் தயாரித்து, அடுத்த வெள்ளியன்று, விசாரணை நடத்தியே தீருவேன். இதற்கான காரியங்களைச் செய்யுமாறு, மந்திரிக்குக் கூறு. இதோ பார்! இன்று முதல், நீ இளவரசர் மாளிகையை உனது இருப்பிடமாக்கிக்கொள். அம்மனைப் பணியாட்களிடம் பட்சமாக நட, இளவரசப் பதவிக்கேற்ற பண்புடன் வாழவேண்டும்” என்று கூறினார். இனி, என் அண்ணன் தப்பமுடியாது என்பது நிச்சயமாகிவிட்டதால், என்மனம் மிக அதிகமாக வேதனைப்பட்டது. அவர் உலவிய திருமனையிலே நான் எப்படி உலவுவேன்? அவருடைய பணியாட்களிடம் நான் எப்படிப் பேசுவேன்? அவருடைய உரிமையைப் பறித்துக்கொண்டு நான் எப்படி மக்களிடை உலவுவேன் என்றெல்லாம் எண்ணி ஏங்கினேன் ஊரார் எப்படியும் என்னைப் பழிப்பார்கள் என்று பயந்தேன். நான் ஏன் பாண்டிய மன்னனுக்கு மகனாப் பிறந்தேன்? பழிச்சொல் ஏற்கவா? என்று துக்கித்தேன். என் அண்ணனுக்கு என்ன தண்டனை தருவார்களோ என்று திகிலடைந்தேன்? அனால், என் அண்ணனோ கவலையின்றி, இச்செய்தியைக் கேட்டுக்கொண்டார். “காலதாமதின்றி விசாரணை நடத்தி, என்னை நாடு கடத்தட்டும், அவளையும் உடனழைத்துச் செல்ல மட்டும் அனுமதி தரவேண்டும். அவளைச் சிறையிலே அடைத்து வைத்துக்கொண்டு என்னை வெளியே துரத்தினால், நான் சும்மா இரேன். பிறகு, பாண்டிய நாடு என் பகைவர் நாடுதான்! எந்தக் கோட்டையிலே அந்தத் தவமணியைக் கொண்டுபோய் வைத்திருப்பினும், எத்தனைப் பட்டாளத்தைக் காவலுக்கு வைத்தாலும், நான் நுழைந்தே தீருவேன்; இது நிச்சயம்” என்றுரைத்தாராம் காவலாட்களிடம். திங்கள் போய் செவ்வாய்; பிறகு புதனும் வியாழனும் விடிந்தது. என் வேதனையும் கட்டுக்கடங்க மறுத்துக் கண்ணீராக வெளிவந்தது. வெள்ளியன்று விசாரணை நடந்தது. ஆனால் என் அண்ணன் செய்த குற்றத்தைப் பற்றிய விசாரணையல்ல. தவமணியின் பிரேத விசாரணை நடந்தது! நடனா! உனக்கு இது கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது போலத்தான், வெள்ளி விடிந்ததும் வேலையாட்கள் ஓடோடி வந்து, தவமணி தற்கொலை செய்து கொண்டாள் என்று செய்தி கூறியதும் நான் துடித்தேன்.

தன்னால் தந்தைக்கும் தனயனுக்கும் தகராறு விளைவதையும், அரச குடும்பத்திலே அமளி மூள்வதையும் கண்டு சகிக்க முடியவில்லை தவமணியால்! ஒரு பெண்ணின் பொருட்டு இளவரசர் இத்தனை இன்னலை அனுபவிப்பதா! அரசு இழந்து, சுற்றமிழந்து தவிப்பதா? இதற்கு நாம் இடந்தருவதா? என்று யோசித்தாள். காதலெனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த என் அண்ணனை விடுவிக்கத் தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தாள். “விசாரணையா? இளவரசரையா, விசாரிக்கப் போகிறார்கள்! வீணர்கள்; அவர்கள் விவேகமில்லாத ஆணவக்காரர்கள்; இருதயத்தின் துடிப்பை உணராத மூடர்கள்! என்ன செய்தாராம், என் பதி! உள்ளம் உரைக்கும் வழிப்படியேதான் நடப்பேன்; ஊராள்வோன் குறுக்கிட்டாலும் கவலைகொள்ளேன் என்று கூறினார். இது குற்றமா? பட்டவர்த்தனப் பேச்சு; சொல்லுக்கேற்ற செயல், பாண்டிய மண்டிலத்திலே குற்றங்கள் போலும். காதல் என்ற உணர்ச்சி, அரண்மனைகளிலே நுழையாதபடி, மன்னர் சட்டதிட்டமிடுவது, முடியுமா? நடக்குமா? ஆகுமா? மன்னராம் மன்னர்! நீதியாம் நீதி! இதற்கு ஒரு விசாரணையாம்! விசாரணை நடத்தட்டும் நாளைக்கு! விசாரணைக்குக் கூடிடும் விவேகிகளை நான் கேட்கிறேன் சில கேள்விகள். பதில் கூறட்டுமே பார்ப்போம் அந்தக் கண்ணியர்கள்” என்று வியாழனன்று இரவு, தவமணி, தான் அடைபட்டிருந்த சிறையிலே கூவிக்கொண்டிருந்தாளாம். எப்போதும் அடக்கமாக இருக்கும் தவமணி அன்று ஆர்ப்பரித்தது கண்ட காவலாளிகள் கூடக் கொஞ்சம் கடிந்து தவமணியைக் கள்ளி என்றும்காமச்சேட்டைக்காரி என்றும் திட்டினராம். “தூ! கூலிக்கு வேலை செய்யும் கூளங்களே! வாயை மூடுங்கள்! என்ன தெரியும் உங்களுக்கு நியாயம்! மந்தையிலே வாழும் உங்கட்கு மனத்தின் சுதந்திரம் என்ன தெரியும்? மன்னன் மொழிக்கு மறுமொழி இல்லையென்று கூறி, மண்டியிட்டு வாழ்ந்து, வயிறு கழுவுங்கள். அது உங்கள் நிலை. எனக்கென்ன? இந்த அரசன், எனக்கு ஒரு துரும்பு! இந்த உலகம் எனக்குப் பிடிமண்! சட்டம் எனக்குச் சாக்கடைச் சேறு! என்னை யார் என்று தெரிந்துகொள்ள முடியாது உங்களால் – இன்று! நாளைக்குக் காணுங்கள் என்னை!! நான், யார் என்பது விளங்கும்!” என்று தவமணி ஆத்திரமொழி பேசினாளாம். அவள் உரைத்ததன் பொருள், வெள்ளி விடிந்ததும் விளங்கிவிட்டது. கார்மேகம் போல இருண்டு, மினுமினுப்புடன் விளங்கி, நீண்டு அடர்ந்து இருந்த, கூந்தலே அவளுக்குக் கூர்வாளாகிவிட்டது. அதனைக்கொண்டே, சங்கு போன்ற கழுத்திலே சுருக்கிட்டுக் கொண்டு, சிறை அறையிலேயே, பிணமானாள் அப்பெண்! நோயின்றி, நலிவின்றி இருந்தவள் திடீரென்று இறந்ததால், உடல் ஒரு துளியும் வாடவில்லை.