அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
13
                     

“மாதாட, மனமாட, மன்னன் பரிவாரமாட, மதனனும் நின்றாட,
மகிழ்வாட, மலராட மார்பினிலே... ... ...”

“பேஷ்! பேஷ் ரகுவீரரே! பதிகம் அருமையாக இருக்கிறதே. மகேஸ்வரனைத் துதித்துப்பாடும் பக்தரும் இவ்வளவு உருக்கமாகப் பாடினதில்லை’

பாடிய ரகுவீரன், பாண்டியனின் கொலுமண்டபத்திலே, முன்னிரவு, நடனமாடிய சுந்தரியிடம் சொக்கியதால், அவளைக் குறித்து எண்ணி எண்ணி ஏங்கிப் பிறகு பண் இசைத்தான். பாடுகையில் தன்னை மறந்தான், தன் நண்பனும் படையிலே தன்னைப்போலவே ஓர் தலைவனுமாகிய, கருங் கண்ணன் வந்ததையும் கவனிக்கவில்லை. ரகுவீரனின் பாடலைக்கேட்டு, கருங்கண்ணன் கேலி செய்யவே, ரகுவீரன், “கண்ணா! மகேஸ்வரனைக் கண்டவர் யார்? நான் கண்கண்ட கடவுளுக்கே கானம் இயற்றினேன்” என்றுரைத்தான். பிறகு இருவருக்கும் உரையாடல் நடக்கலாயிற்று. கருங் கண்ணன் துவக்கினான்.

“தேவனா? தேவியா?”

“தேவியே திவ்ய தரிசனந்தந்தாள்; நடன மேடையில் நின்றாள்; கண்களை எய்தாள்; என்னை வென்றாள்.”

“ரணகள சூரராகிய உம்மையா?”

“ஆமாம் கருங்கண்ணா! இரண்டு வேல்கள் என் இருதயத்திலே பாய்ந்தன. அவள் அன்று நடன மேடையிலே ஆடினாள் என்றே அரசரும் பிறரும் எண்ணினர்; அவள் என் இருதயத்திலே நின்று ஆடினாள்”

“மகிழ்தேன் நண்பரே! கட்க மேந்த முடியாத காலம் வந்தால் நீர் எப்படிப் பிழைப்பீர்! மகனும் இல்லையே காப்பாற்ற என்று எண்ணி நான் உம்மைப்பற்றிக் கவலைப்பட்ட துண்டு, இனி அக்கவலை இல்லை. கட்க மெடுக்காமல் வாழ உனக்கு வழியிருக்கிறது. கவி பாடிப் பிழைக்கலாம்.”

“விளையாடாதே!”

“ஆமாம்! மாற்றார் நமது மண்டலத்தின் மீது போர் தொடுக்கும் வேளை; மகா பயங்கரமான காய்ச்சல் பரவி மக்களைச் சூரையாடும் சமயம்; பஞ்சமும் பரவுகிறது. நண்பா! மதனலீலைக்கு இது சமயமல்ல”

“நீ இந்த வேதாந்தத்தைக் காமனிடம் கூறு. என்னிடம் காரியசித்திக்கு வழி சொல்லு”

“வீதியிலே மக்கள் வேதனையுடன் பேசும் மொழி கேட்டிரா”

“வீணரின் பேச்சை விடு” கண்ணா!

“சாண்வயிற்றுக்காக அவர்கள்... ... ...”

“சாகட்டும். நான் பிழைக்க வழி சொல்லு”

“அவர்கள் செத்து, நீ பிழைப்பதா?”

“அரசநீதி பேசவல்ல, உம்மை அழைத்தது. கருங்கண்ணா! புண்ணின்மீது பூ விழுந்தாலும் வேதனையே தரும் நண்பா! உன் குறும்பு என்னைக் குத்துகிறது.”

“நாடகக்காரி என்று அவளை நினைத்து நெருங்குகிறாய். அவள் நெருப்பு!”

“மணி முடிமங்கையோ?”

“அதற்கும் மேலே!”

“அடக்கும் உமது பேச்சை. அரண்மனைகள் கூட என் ஆவலைத் தடுத்ததில்லை”

“உண்மை. ஆனால் சில சமயம் பணிப்பெண்கள் கூடப்பணிய மறுப்பதுண்டு.”

“நடனசுந்தரிக்கு நான் எதையும் தருவேன். அவள் வேண்டுவது நிம்மதியான வாழ்வுதான். என்னால் அதைத்தர முடியும்.”

“உமது சரசம் அவளுக்குச் சஞ்சலத்தைத் தான் தரும்.”

“சரி உபதேசத்தை நிறுத்தும். நடனசுந்தரியை நான் எப்படியும் அடைந்தே தீர வேண்டும், இந்த நரை, ஊரார் நகைப்பு, பிறரின் பகை, ஆகிய எதையும் தடையாக எடுத்துக் காட்டாதே. கண்ணா! நான் என் மனதை எடுத்துக்காட்ட முடியாது. ஆனால் இதோ, நெற்றியைத் தொட்டுப்பார். தணலாகி விட்டது; தாங்கமுடியாத தாபம்.”

“ஐயோ, பாபம்!”

ரகுவீரன் பேச்சை நிறுத்திவிட்டான். கருங் கண்ணனின் தோளைப்பிடித்துக் குலுக்கினான், தாளைப்பிடிக்கத் தயாராக இருப்பதைக் காட்டினான். மொழிகூற வேண்டியதற்குமேல் அவன் விழி கூறிடவே, கண்ணன், வேறு முறையைக்கையாள்வோம் என்று கருதி, ‘அவள் என்ன அழகு? கன்னங்கரேலென்று கிடக்கிறாள். நடனமாடும் நேரம் தவிர மற்றச் சமயத்திலே, அவள் முகம் சோகபிம்பமாக இருக்கிறது. பேசுவதில்லை; சிரிப்பதில்லை; ஊரில் நடமாடுவதில்லை. அவளிடம் நீ என்ன இன்பம் பெற முடியும்” என்று கூறிட, ரகுவீரன் “அவள் சிரித்தால், நானும் சிரித்து விடுவேன்; பேசினால் நானும் பேசுவேன்; ஆனால், அவளுடைய மௌனம் என்னைக் கொல்கிறது. அவளுடைய சோகம் என்னைச் சோகத்திலாழ்த்துகிறது. அவளைப் பெற்று அணைத்துக்கொண்டு. என் கண்ணே! முகத்தைச் சுளித்தபடி இருக்கிறாய் என்று நான் கெஞ்சிக் கேட்பேன். பஞ்சணைக்குப் பக்கத்திலே அக்கொடி சாய்ந்தபடி, ஒன்றுமில்லை நாதா! என்று கூறிப் புன்முறுவல் செய்வாள், அந்த மலர்ச்சி, என்வாழ்வையே மலர வைக்கும். உப்பரிகை மீதுள்ள உல்லாசியை உற்று நோக்கும்போது, பலகணியைச் சாத்திவிடுவது போல, அவளை நான் பார்க்கத் தொடங்குகையில் அப்பாவை, பூவிழியை மூடி என் மனதைப் புண்ணாக்கி விடுகிறாள். சரசக்காரிகளைக் கண்டுள்ளேன். ஆனால் இவள் போல், சரசத்திற்கே இலாயக்கான ஓர் சிங்காரி வேண்டுமென்றே சோகமாக இருந்ததைக் கண்டதில்லை. அவளுடைய சொகுசு அச்சோகத்தால் கெடவில்லை. அதுவும் ஓர்விதமான சொகுசாகவே இருக்கிறது. தங்கச்சிலைக்குமேல் மஸ்லீன் மூடி போட்டு வைத்திருப்பது போன்றிருக்கிறது” என்று கூறிக் கவலைப்பட்டான். அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, கருங்கண்ணன் ஓலை ஒன்று எழுதியபடி இருந்தான். அதைக்கண்ட ரகுவீரன் வெகுண்டு, ஓலையைப்பிடுங்கி எறியப் போகையில்,“படித்துப்பார், பதைக்காமல்” என்று கண்ணன் கூற ரகுவீரன் படித்தான், சந்தோஷத்தால் குதித்தபின் சரியான யுக்தி! பேஷான யோசனை என்று பூரித்தான்.

“நாளைக்குப் பௌர்ணமி விருந்தொன்று நடத்த உத்தேசம், அதில் தாங்கள் கலந்துகொண்டு, தங்கள் நடனத்தால், விருந்தினரை மகிழ்விக்க வேண்டுகிறேன். மறுக்காமல் பதிலிறுக்க வேண்டுகிறேன்.

ரகுவீரன்.

“இந்த ஓலையைக் கண்டே உளம் மகிழ்ந்தான் ரகுவீரன். ஒரு விநாடியில் மீண்டும் சோகத்திலாழ்ந்தான். “நண்பா! விருந்திலே, நமது பிரமுகர்கள் கலந்து கொண்டால், கருத்தை நிறைவேற்றச் சமயம் கிடைக்காதே” என்றான். “பிரமுகர்கள் வந்தால்தானே தடை! பிரமுகர்போல் வேட மணிந்த சிலரை வரவழைப்போம். மது அருந்தி அவர்கள் மயங்குவர். பிறகு நடனம்; நடனத்திலே நான் இலயிப்பேன்; நீர் நடத்தும் பிறகு உமது நடனத்தை. மதுவை மங்கைக்கும் தந்து விடவேண்டும். அது தரும் ஆனந்தத்திலே அவளுடைய சோகம் பறந்தே போகும்” என்று யோசனை கூறிவிட்டு, ஓலையைத் தந்தனுப்பச் செய்தான்.

“தேனிலே தோய்த்துச் சாப்பிட மா, பலா, வாழை! தினை மாவு தேவையான அளவு எடுத்துக் கொள். மான் இறைச்சி, மிருதுவாக இருக்கும் சுவை அதிகம். மதுக்குடங்கள் இதோ உள்ளன. எமது மன்னன், உமக்கு ஒரு துளியும் மனக்குறை வராமல் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். உன்னைப்போல் அவரிடம் சிக்கிய சிலர் பட்டபாடு கொஞ்சமல்ல, நீ எப்படியோ அவரை மயக்கி விட்டாய். உன்னை அவர் தன் குடும்பத்தினராகக் கருதிவிட்டார்.” என்று உபசாரமொழி பேசி, வீரமணிக்கு விதவிதமான உணவு வகைகளை தந்தனர், காட்டுக் கூட்டத்தினர். வீரமணி, வேதனையை எதிர்பார்த்தான். விருந்து கிடைக்கக் கண்டான். காட்டுக்காவலனின் இப்போக்கு, வீர மணிக்கு விளங்கவில்லை. உபசாரம் செய்து நின்ற ஏவலர்களும் “ஏதுமறியோம், எமது மன்னனின் கட்டளை இது. உமக்கு ராஜோபசாரம் செய்யுமாறு உத்தரவு. அவருடைய எண்ணம் யாதோ எமக்குத் தெரியாது” என்று கூறினர். மதம் பிடித்தோடி வரும் காட்டானை, எதிர்ப்பட்டவரைக் காலால் மிதித்துக் கொல்லுமேயொழிய, கரும்பு பறித்துத் தருமா! சீறிடும் நாகம் பல்லைக் கொண்டு கடித்துக் கொல்லுமே தவிர, படமெடுத் தாடியும், பக்கத்தில் உலாவியும், உடலிலே உரசியும் சும்மா கிடக்குமோ! காட்டரசன் தன் தலையை வெட்டி வீசுவான் என்று நினைத்த வீரமணிக்குக் காட்டரசன் கோட்டையிலே விருந்தும், உபசாரமும், பலமாக நடக்கக் கண்டு, ஒன்றும் புரியாது திகைத்தான். சற்றே சாய்ந்தால், வேலையாட்கள் மயில் விசிறி கொண்டு வீசவருகிறார்கள். இரண்டடி எடுத்து வைத்தால், என்ன தேவை என்று அடக்க ஒடுக்கமாக வேலையாட்கள் கேட்கின்றனர். தேன்குடத்தைத் திரும்பிப் பார்த்தால் ஒரு வேலையாள், வட்டிலிலே தேன் பெய்து, இப்படியே பருகுகிறீரா? தினைமாவு கலக்கட்டுமா? என்று கேட்கிறான்! வீரமணியால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை. இந்த மர்மம் என்னவெனச் தெரிந்து கொள்ள எண்ணிய வீரமணி, தூங்குவது போல் பாசாங்கு செய்தான், அந்தச் சமயத்திலே வேலையாட்கள் ஏதாகிலும் பேசுவர், அதிலிருந்து விஷயத்தை ஒருவாறு தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தான். உண்மையாகவே வீரமணி உறங்கியதாகவே கருதிய காவல் புரிவோர், வீரமணி எதிர்பார்த்திருந்தபடியே பேசலாயினர். ஆனால், அவர்களின் பேச்சு, பயமூட்டக்கூடியதாக இருந்ததேயொழிய, மர்மத்தை விளக்கக்கூடியதாக இல்லை.

“ஏடா, வேங்கை! எனக்கு இந்தப் போக்கே தெரியவில்லை.எதற்காக நமது மன்னன் இந்த வழிப்போக்கனுக்கு இவ்வளவு உபசாரம் செய்கிறார். காரணமின்றி ஒரு காரியமும் செய்யமாட்டாரே, இதற்கென்ன காரணமென்று தெரிந்து கொள்ள முடியவில்லை.”

“போடா, கட்டாரி, இது தெரியவில்லையா? மலை மாதாவுக்கு மாடு வெட்டுவோமே, அதற்கு முன்பு, எருதுக்கு எவ்வளவு அலங்காரம் செய்வோம், கவனமிருக்கிறதா?”

“அதற்கும் இதற்கும் என்னடா, சம்பந்தம்? மலைமாதாவுக்கு மனிதனைப் பலிகொடுக்கும் வழக்கம் கிடையாதேடா, டே! வேங்கை, எனக்குக் கொஞ்சம் பயமாகக்கூட இருக்குதடா”

“கட்டாரி, நீ ஓங்கி வளர்ந்திருக்கிறாயேயொழிய சுத்தக் கோழையாக இருக்கிறாயே. பயமாம் பயம்! இதிலென்னடா பயமிருக்கிறது?”

“ராஜா இவ்வளவு உபசாரம் செய்வதைப் பார்த்தால், இவன் ஒருவேளை பெரிய மந்திரவாதியாக இருப்பானோ என்று திகில் பிறக்கிறது.”

“மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம் தெரிந்தவனாக இருந்தால்நம்மிடம் சிக்குவானா? சிக்கினாலும் கூட, நம்மை ஓரேயடியாகக் கொன்றுவிட்டிருக்க மாட்டானா? அப்படி யொன்றுமில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால் வெளியே சொன்னால் தலைபோகும்.”

“என்னடா அது, சொல்லு சீக்கிரம்”

“குழி வெட்டித் தழைபோட்டு மூடி வைத்து, யானையை அதிலே விழச்செய்வோமல்லவா, அதைப் போலத் தந்திரமாக இவனை நமது மன்னன் வீழ்த்தவே, விருந்தூட்டுகிறான் போலிருக்கிறது”

“நமது வேலும் வாளும் இவனை வீழ்த்தாது, தந்திரத்தால் தான் இவனை வீழ்த்த முடியுமோ! அப்படிப்பட்ட ஆற்றல் என்ன இருக்கிறது இவனிடம்”

வேலையாட்கள் பேசிக்கொண்ட இந்த உரையாடலைக் கேட்டு வியப்பு அதிகரித்ததே யொழிய, விளக்கம் கிடைக்க வில்லை.

விளக்கமும், விலாநோகச் சிரிப்பும் வீரமணிக்கு மறுதினம் கிடைத்தது. கையிலே பழத்தட்டும், நடையிலே நாட்டியமும் கொண்ட நரை மூதாட்டி யொருத்தி வீரமணியைத் தேடி வந்தாள். அவளைக் கண்டதும், காவலாளிகள், பயந்து ஒதுங்கினர். அவள் அவர்களை சட்டை செய்யாது. வீரமணியருகே வந்து அமர்ந்தாள். வீரமணி, “அம்மே! நீ யார்? இங்கு வரக் காரணம் என்ன?” என்று கேட்டான். நரைமூதாட்டி, நகைத்தாள். நாலாறு பற்களிழந்திருந்தாள், அவளுடைய சிரிப்பு ஆபாசமாக இருந்தது. வீரமணியால் அந்தக் கோரத்தைக் கண்டு சகிக்க முடியவில்லை. சிரித்த பிறகு அக்கிழவி, “எத்தனை நாள் காத்துக்கிடந்தேன். உன்னை அடைய! ஏன் வெட்கப்படுகிறாய்! நான் உன்னை விழுங்கிவிடமாட்டேன் பயப்படாதே” என்று சரசமாடலானான்.

“அட பாவி! ஈட்டியாலே குத்திக் கொன்று விட்டிருக்கலாமே, இந்த ஈளை கட்டிய கிழத்தை இங்கே அனுப்பி இவ்விதம் மானத்தைப் பறிப்பது அழகா?” என்று வீரமணி எண்ணி நொந்துகொண்டான். அவனுடைய மௌனத்தைக் கண்ட கிழவி “பல இரவுகள் கனவு கண்டேன். இன்றுதான் என் கனவு பலித்தது. அழகா! என்னை காட்டான் ஏமாற்றிக்கொண்டே வருகிறான் என்று எண்ணிக் கோபித்துக் கொண்டேன்; சலிப்புமடைந்தேன். இப்போதுதான் தெரிகிறது, அவனுடைய சாமர்த்தியம். என் மனதுக்கு இசைந்தவன் கிடைக்க வேண்டுமென்று அவன் எவ்வளவு அலைந்து திரிந்து கொண்டிருந்தான் என்று தெரிகிறது. என் மனங்குளிரவேண்டும் என்று வெகு பிரயாசை எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏன் கண்ணா! வாய் மூடிக்கொண்டிருக்கிறாய்? ஊமையா? என்று கிழவி கொஞ்சினான். நஞ்சையேனும் பருகி விடலாம்; இந்த நரைத்த நாரியின் மொழியைக் கேட்கவும் முடியவில்லையே. இது என்ன கொடுமையான தண்டனை” என்று வீரமணி எண்ணி வியாகூலமடைந்தான்.

“நான் காட்டானின் மாற்றாந்தாய். என்னை உனக்கு மணமுடிக்க, காட்டான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டான், மலைமாதா கோயிலுக்கு அலங்காரம் செய்துவிட்டார்கள். குடிபடைகளின் கூத்துக்காகக் குடங்குடமாகக்கள் இறக்கிவிட்டார்கள். நாளை இரவு, நமக்குத் திருமணம் நடக்கப் போகிறது. இன்றே நாம், ஆனந்தமாக இருக்கலாம், யோசியாதே எழுந்திரு. நான் அரச குடும்பம்; நீயோ ஓர் வழிப்போக்கனாம், இருந்தாலும் கவலையில்லை. உன்னை நான் அடைய, ஒரு தங்கச் சுரங்கத்தையே, காட்டானுக்குத் தந்தேன். அதன் இருப்பிடம் இதுவரை எனக்குமட்டுமே தெரியும் காட்டானின் தந்தைக்கு நான் இரண்டாந்தாரம் அவர் இறந்தபிறகு, வேறொரு வனைக் கல்யாணம் செய்துகொண்டு தங்கச் சுரங்கத்தை அவனுக்கு அளித்து ஆனந்தமாக வாழலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், நெடுநாள் காத்திருந்தும், சரியா ஆள் கிடைக்கவில்லை. தங்கச்சுரங்கம் இருப்பது தெரிந்த காட்டான் “உனக்கு அழகும் இளமையுங்கொண்ட ஒருவனைக் கணவனாக்கி வைக்கிறேன்; நீ அந்தத் தங்கச்சுரங்கத்தின் இருப் பிடத்தை எனக்குக் காட்டு” என்று கேட்டான். நான் இசைந்தேன், இன்று உன்னை அடைந்தேன்; அவனுக்குச் சுரங்கத்தைக் காட்டிவிட்டே. ஆகவே இனி நம்மைத்தடுப்பார் இல்லை. இந்தக் கானகத்திலே காட்டானுக்கு, எவ்வளவு அதிகாரமுண்டோ அந்த அளவு எனக்கும் உண்டு, அதுமட்டுந்தானா? நமக்கு ஓர் ஆண் மகன் பிறந்தால், காட்டானை நீக்கிவிட்டு, அவனை அரசனாக்கிக் கொள்ள இந்த ஆரண்யவாசிகள் சம்மதிப்பர், ஏனெனில் நான் சாதாரணமானவளல்ல, என் தந்தை மாயா ஜாலக்காரன்; எனவே என் சொல்லைமீற இந்த வனவாசிகளால் முடியாது” என்று கிழவி தன் பிரதாபத்தைக்கூறினாள். வீரமணி தனக்கு நடந்து வந்த உபசாரம் எதன்பொருட்டு என்பதைத் தெரிந்துகொண்டான். கிழவியின் காமச்சேட்டையைக் கண்டு, விலா நோகச் சிரித்துவிட்டு, “அதிரூபவதியான உனக்கு நான் ஏற்றவனல்லவே!” என்று கூறினான்.

கிழவி அவன் கேலிசெய்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. “என் கண்களுக்கு நீ மகா சுந்தரபுருஷனாகத் தோன்றுகிறாய். உன்னை நான் என்றுமே பிரியமாட்டேன்” என்று கூறினாள்.

“சீ, காட்டெருமையே! காமக்கூத்தாடும் கிழப்பிணமே! எழுந்து ஓடு, இவ்விடத்தைவிட்டு. இந்த வயதிலே காதலாம்; திருமணமாம். திமிரா; புத்திக் கோளாறா” என்று வீரமணி சீற்றத்தோடு கூவிக் கொண்டே, அங்கு கிடந்த ஓர் கைத்தடியை எடுத்து, கிழவியின் முதுகிலே பலமாகவே அடித்தான். கிழவி கோவெனக் கதறிக்கொண்டு, காட்டரசனைத் தேடிக்கொண்டு ஓடினாள்.
ஃ ஃ ஃ

நடனராணி காமச்சேட்டையைக் கண்டு கலங்கி ஓடும் கட்டம், பாண்டிய நாட்டிலே நடந்துகொண்டிருந்தது. காட்டரசன் கோட்டையிலே காமப்பித்தங் கொண்ட கிழவியை வீரமணி விரட்டினான், பாண்டிய நாட்டிலேயோ, நடனராணி காமப்பித்தர்களின் பிடியிலே சிக்காது, ஓடினாள்.

“மலர்புரி காட்டை விட்டேகிய நடனா, வணிகக் கூட்டத் துடன் சேர்ந்து பல இடங்கள் சுற்றியும், வீரமணி கிடைக்காததால் வெந்துயருற்றுத், தற்கொலை செய்து கொண்டாரோ? காட்டிலே ஏதேனும் மிருகத்திடம் சிக்கி மாண்டாரோ என்று எண்ணி மனங் குழம்பினாள். வணிகர் கூட்டம் பாண்டிய நாடு சென்றபோது, நடனாவும், உடன் சென்றாள். வாழ்க்கை எதற்கென்று சலித்து ஓர் நாள், நடனா ஆண் உடையை அகற்றிவிட்டுத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்து, மதுரை நகரின் மருங்கேயுள்ள சாலையிலே நடுநிசியிலே, மரக்கிளையிலே, தூக்கிட்டுக் கொள்ளச் சென்றாள். அதுசமயம், மதுரையிலிருந்த ஓர் நடனமாது, தன்மகளை இழந்த வருத்தத்தால் மன முடைந்து, தளர்ந்த வயதிலே தன்னைக் காப்பாற்றுவார் இல்லையே என்று ஏங்கித், தூக்கிட்டுச் சாவதேமேல் எனத் துணிந்து, அதே நேரத்திலே அதே சாலையிலே வந்திருந்தாள். கிழவி போகட்டும் பிறகு நமது வேலையை முடித்து விடுவோம் என்று நடனா எண்ணினாள். இவள் யாரோ, தன் காதலனுக்காக இங்கு காத்துக் கிடக்கிறாள் போலிருக்கிறது; அவன் வந்ததும் தொலைந்து போவாள்; பிறகு நாம் உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்று கிழவி எண்ணிக்கொண்டாள். ஒருவரை ஒருவர், பேச்சால் ஏய்க்கப் பார்த்தனர்.

“வாலிபப் பருவமாக இருக்கிறாயே; நடுநிசியிலே இங்கு என்னவேலை. வீடு போய்ப்படு, குழந்தாய் நீ யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாயோ பாவம்; அவன்இந்த வேளையில் உன்னை வஞ்சித்து விட்டு எவளுடனோ கொஞ்சிக் கிடக்கிறான் போலிருக்கிறது. காலையிலே வருவான்; கடுகடுப்பாக இரு, காலைப்பிடிப்பான்; கன்னத்தைத் தடவுவான்; கண்ணே, மணியே என்று கொஞ்சுவான். அப்போது அவனுடைய கள்ளத் தனத்தை மெல்ல மெல்லக் கேட்டுத் தெரிந்துக்கொள். நேரமா கிறது; போய் வீடு சேர்” என்று கிழவி நடனாவுக்குப் புத்தி கூறினாள்.
“தாயே! தள்ளாத வயதிலே, தாங்கள் ஏன் இங்கே உலவு கிறீர்கள். இங்கு வீசும் காற்றும் உமது உடலுக்கு ஆகாதே. காலையிலே மாலையிலே உலவலாம், நடுநிசியிலே நடமாடு வது ஆபத்தாயிற்றே எனக்குத் தூக்கம் வரவில்லை; அதற்காகச் சற்றுநேரம் இங்கு உலவிப்போக வந்தேன். என் வீடு அருகாமையிலே இருக்கிறது” என்று நடனாகூறி, கிழவியைப் போய்விடச் செய்ய முயன்றாள்.

“உன் வீடு அருகாமையில்தானே இருக்கிறதென்றாய்; சரி, புறப்படு குழந்தாய், நான் துணைக்கு வருகிறேன். நீயும் வீட்டிலே படுத்துறங்கலாம். எனக்கும் படுத்துக்கொள்ள இடம் கொடு; வா, போவோம்” என்று கிழவி நடனாவை அழைத்தாள், நடனாவுக்கு வீடு ஏது! கிழவி ஓர் ஏமாந்த பேர்வழி போலிருக் கிறது, நாம் கூறியதை அப்படியே நம்பி விட்டாளே, என்றெண்ணி நடனா நகைத்தாள்.

“நட போகலாம்” என்று கிழவி நடனாவைத் தூண்டினாள்.

“தாயே! உன்னிடம் நான் பொய் பேசினேன். என்வீடு அருகாமையில் இல்லை. மதுரையே எனக்குப் புதிய ஊர். நான் ஓர் அபலை. என் வாழ்க்கை வேதனை நிரம்பியது, அதனை முடித்துக் கொள்ளவே இங்கு வந்தேன்” என்று நடனா உண்மையை உரைத்திடவே, கிழவி சோகித்து, “பச்சைக்கிளியே! இந்த வயதிலே உனக்கேன் இந்த விபரீத யோசனை. நீ யார்? எந்த ஊர்? யாருடைய மகள்? மன முடைந்து பேசக் காரணமென்ன? என்று கேட்டு, நடனாவின் கரங்களைப் பற்றிக் கொண்டாள், துக்கத்தை அடக்கிக் கொண்டு நடனா, “என் எதை மிகப் பெரிது. நான் சோழமண்டலம், என் நாதனை இழந்தேன், இதுவரை அவரை மீண்டும் பெறலாம் என்று எண்ணி எங்கெங்கோ தேடி அலைந்தேன்; காணவில்லை. எனவே இறந்துவிட முடிவு செய்து இங்கு வந்தேன்” என்று கூறினாள்.

“என்ன பேச்சடி பேசுகிறாய் சொர்ண பிம்பமே! நீ தற்கொலை செய்து கொள்வதா? எத்தனை அரண்மனைகள் உள்ளன உன்னை வரவேற்க? மாளிகைகளிலே மணி விளக்கா யிருக்க வேண்டிய நீ, மரக்கிளையிலே தொங்குவதா? என்ன பேதைமை! உன் தாய் தந்தையர் என்ன வேதனைப்படுவர்” என்று கூறிக்கொண்டே, நடனாவைத் தழுவி, முகந்துடைத்து, அன்புடன், “அன்னமே என்னைப்பார். நான் வாழ்க்கையின் கடைசிப் படிக்கட்டிலே நிற்கிறேன். அதுவும் கண்ணீருடன். என் ஆசை மகள் இறந்தாள் சில தினங்களுக்கு முன்பு. நான் நடைப்பிணமானேன். அவள் உலவியவீடு சுடுகாடுபோலாகி விட்டது. நான் இன்று தற்கொலை செய்துகொள்ளவே இங்கு வந்தேன். நீயோ, வாழ்க்கையின் வாயற்படியிலும் நுழையவில்லை. இதற்குள் மனம் உடைந்து இறப்பதா? வேண்டாமடி தங்கம்! உன் வேதனை முழுதும் என்னிடம் கூறுநான் உதவி செய்கிறேன். மகளே! என்னை உன் தாயாக ஏற்றுக்கொள். நான் பாண்டிய மன்னனிடம் பணியாற்றுபவள், என் மகள் அற்புதமான நடனமாடுபவள். இப்போது என்னைத் தவிக்கச் செய்து
விட்டு அவள் இறந்து விட்டாள். எனக்காகவாவது நீ வாழ வேண்டும், என்னுடன் வா! உன் வரலாற்றைக்கூறு. அதைக் கூற இஷ்டமில்லையானால், சொல்லவுந் தேவையில்லை. இறந்த என் மகள் பிழைத்தெழுந்து வந்து விட்டாள் என்று எண்ணிமகிழ்வேன். நீ இதற்கு இசையாவிட்டால், முதலிலே நான் தூக்கிட்டுக் கொண்டு இறப்பேன்; நீ மரக்கிளையிலே தொங்குவதை நான் கண்டு சகிக்க முடியாது. என்னைச் சாகவொட்டாது தடுக்கவேண்டுமானால் நீ உயிரோடு இருக்க இசைய வேண்டும். நடுநிசியிலே, நாசத்தை நாடி நாமிருவரும் இங்கு வந்தோம். நாம் நேசமாகி விட்டால் இருவரும் வாழலாம், ஒருவருக்கொருவர் துணையாக. உன் நாதன் கிடைக்காமற் போகமாட்டான். என்னை நம்பு கண்ணே” என்று கிழவி கொஞ்சினாள். நடனா, மரணத்தை அழைத்தால், மற்றோர் வாழ்வன்றோ நம்மை அழைக்கிறது என்று கூறி, “தாயே நான் அவருக்காகவே இதுவரை உயிரோடு இருந்தேன். இனி உன்பொருட்டு வாழ இசைகிறேன், அவர் கிடைக்காததால், இனியாருக்காக வாழவேண்டும் என்று சலித்தே சாகத் துணிந்தேன். இப்போது நான் வாழ்வதால், உனது வயோதிகப் பருவம், வேதனை நீங்கப் பெற்றிருக்கு மெனத் தெரிகிறது. எனவே நான் வாழ்வதனால் பலன் இருக்கும் என்று ஏற்படுகிறது. நான் உன்மகளாக இருக்கச் சம்மதிக்கிறேன், ஒரே ஒரு கடுமையான நிபந்தனை” என்று சொன்னாள்.