அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
14
                     

“நிபந்தனை நூறு கூறு. எதற்கும் நான் கட்டுப் படுவேன்” என்று கிழவி கூறினாள்.

“நான் கன்னியாக காலந்தள்ளுவதை நீ தடுக்கக்கூடாது” என்றாள் நடனா. கிழவி, “உன் இஷ்டம்போல் நான் நடக்கிறேன்” என்று வாக்களித்தாள். நடனா, புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள். “என் தங்கை மகள் என்னோடு இருக்கிறாள்” என்று கிழவி கூறினதால், மன்னன் ஓர் நாள் அரண்மனைக்கு அழைத்துவரச் சொன்னார். நடனாவின் அரிய நடனத்தைக் கண்டு பாராட்டினார். பிறகு நடனா, அரண்மனைப் பிரதம நடனமாதாக நியமிக்கப்பட்டாள். தனது பழைய உருவம் தெரியாதிருக்க, நடனா முகத்தைக் கருநிறமாக்கிக் காட்டும், மூலிகைத் தைலத்தை உபயோகித்து வந்தாள். ஆனால் பாண்டிய மன்னனின் பிரதானியரில் ஒருவரான ரகுவீரனோ, நடனத்தைப் பெற்றே தீரவேண்டும் என்று பித்தங்கொண்டான். அவனுடைய நண்பன், நடனத்தை ரகுவீரன் தோட்டத்துக்கு நடனத்துக்காக வரவழைத்தான். கள்ளத்தனத்தைத் தெரிந்துகொள்ளாத அக்கன்னியைத் காமப்பித்தங்கொண்ட ரகுவீரன் சரசமாட அழைத்தான், பளீரென்றோர் அறையே கன்னத்தில் பெற்றான். ஆடலழகி ஓடி ஒளிந்தாள்.

“கண்ணுக்குக் காட்சிதான்! ஆனால் கருத்துக்கு மிரட்சியாகவன்றோ இருந்தது. அடே! வலிய வணைந்த சுகம் தெரியாத இந்த வாலிபப்பயலை உடனே விரட்டு; இவனது முரட்டு தனத்தை என்னால் சகிக்க முடியாது. நான் இனி வேறு வழி கண்டுபிடிக்கப் போகிறேன். என் தாய்வீடுபோய், அங்கு, நமது குலத்திலே பிறந்த ஒருவனை மணம் புரிவேன். எவனுமின்றிக் கிடப்போம் என்றாலோ, நான் சிறுமியாக இருந்தபோது மந்திரவாதி சொன்னானே அது என்னை மிரட்டுகிறது. நான் இரண்டாவது கணவனைத்தேடிக் கொள்ளாவிட்டால் என் தலையிலே இடி விழுமாம். ஆகவே நான் எனக்கேற்றவனை மணப்பேன். இந்தப்பயலை விரட்டிவிடு. அவன் இங்கு இருந்தால் என் வேதனை வளரும்.” என்று கிழவி, காட்டரசனிடம், தன்னை வெறுத்து விரட்டிய வீரமணி விஷயமாகக் கூறினாள். அவள் விருப்பப்படி, வேறொருவனை அவள் மணஞ் செய்துகொள்ள இசைந்தால், ஆபத்து தனக்கு வரும் எனக் காட்டரசன் கருதினான். கிழவியை மணஞ்செய்து கொள்வோன், காடாள வேண்டும் என்று கிளம்புவான், கிழவிக்குக் காட்டுமக்களிலே ஒரு கூட்டம் பக்கபலமாகச் சேரும், போர்மூளும், என்பதே காட்டரசனின் அச்சம். ஆகவே அவன் “சில தினத்திலே அவனைச் சரிப்படுத்துகிறேன் - சினமுற வேண்டாம்” என்று கிழவியைத் தேற்றிவிட்டு, வீரமணியை இணங்கச் செய்யும் வழி யாது என்று யோசித்தான்.

அதே விதமாகவே ரகுவீரன், நடனா தந்த அறையினால் திடுக்கிட்டுப்போய், தன் திட்டம் பலிக்காதது கண்டு திகைத்து, வேறுஎன்ன செய்து நடனாவைச் சரிப்படுத்துவது என்று யோசிக்கலானான்.

“நமது திட்டம் சரியானதல்ல நண்பா! விருந்து வைபவத்திலே நடனமாட வரவேண்டும் என்று அவளை அழைத்திருக்கக் கூடாது, விஷயத்தை வெளிப்படையாகக் கூறியே அழைத்திருக்க வேண்டும். நடனமாட அழைத்துவந்து இங்கே சரச மாடவே, அவள் கோபித்து என்னை அடித்தாள்.” என்று ரகுவீரன், தன் நண்பனிடம் கூறினான். “தவறு, திட்டத்திலே இல்லை. நீ பக்குவமாக நடந்து கொள்ள வில்லை.” என்று நண்பன் குறை கூறினான்.

“விருந்திலே நடனம் என்று அழைத்தான்; விபசாரத்துக்கு இழுத்தான். தாயே! போதும் எனக்கு இவ்வாழ்வு. நோயுற்றிருந் தேன்ட அப்போது மருந்திட வந்தவன், மண அறைக்கு வாடி என்றான். இங்கே ரகுவீரன், விருந்தென்றான்; பிறகு கூடிட வாடி கோகிலமே என்று அழைத்தான். நான் கேவலம் நடனமாது தானே, என்றுகூறினேன். அவன், ஆண்டவனே நடன சொரூபி என்று காமப்பேச்சாடினான். என் நடனம் உமது கண்களுக்கு விருந்தாக இருக்கட்டும். என் சேர்க்கை விஷமாகக் கருதப்படும். நீர் பெரிய படைத்தலைவர் என்று கூறினேன்; அவனோ, நீ கலையின் சிகரமல்லவா கண்ணே, என்று காலில் வீழ்ந்தான். இத்தகைக் காமாந்தகாரர்களின் பிடியிலிருந்து தப்பிப்பிழைப் பதன்றி வேறு வேலையே எனக்குக் காணோம். நான், பழையபடி நாடோடியாக வேண்டியது தான்” என்று நடனா சோகித்துக்கூற, அவளை மகளாக ஏற்றுக்கொண்டிருந்த மூதாட்டி, அவளைத் தேற்றி, “அஞ்சாதே தங்கமே! அரசனிடமே இதை நான் கூறுகிறேன்” என்று கூறினாள். நடனா, கோபச் சிரிப்புடன், “அவர்களை நான் நன்கு அறிவேன் அன்னையே!” என்று கூறிவிட்டு யோசனையிலாழ்ந்தாள்.

காட்டிலே வீரமணியும், பாண்டி நாட்டிலே நடனராணியும் இங்ஙனம் கலங்கிக்கிடந்த நாட்களில், மலர்புரியிலே, ஆரியரின் அட்டகாசமும், அரசியின் அடிமைத்தனமும், உத்தமனின் சோகமும் வளர்ந்து கொண்டிருந்தது. தேவிகோயில் பூஜை நேரத்திலே, அரசியைக் கொன்றுவிடத் தீர்மானித்த ஆரியமுனி, உத்தமனை ஓரிரவு சிலைக்குள் இருக்கக் கட்டளை யிட்டு, அரசியை அழைத்தான். நடுநிசி! சிலைக்கு விசேஷ அலங்காரங்கள்! விக்ரகக் கிரஹந்தவிர மற்று இடங்களிலே, இருள்! மூல ஸ்தானத்திலே மட்டும், விதவிதமான விளக்குகள் பிரகாசமாக விளங்கின. ஆரியன் அன்று தன் மனோபீஷ்டம் நிறைவேறப் போவதாகக் கருதிக் கர்வத்தோடு இருந்தான். உத்தமனின் உள்ளம் இதுவென உலுத்தன் உணரமுடியவில்லை. அவ்வளவு சமார்த்தியமாக உத்தமன் தலையாட்டிக் கிடந்தான்.

நடு நிசிப் பூஜைக்குப்பிறகு, தேவியின் திரு அருளால், காதலன், மகள் ஆகிய இருவரையுங் காணப்பெறுவாய் என்று அரசிக்கு, ஆரியன் கூறியிருந்தான். பேதை அதை நம்பியே, பித்தமேலிட்டவள் போல, ஆலயம் புகுந்தாள்; சேடியரை அரண்மனைக்குத் திருப்பி அனுப்பிவிட்டாள். அந்தகாரம் கவிந்திருந்த பிரகாரங்களைத்தாண்டி, ஜோதிமயமாக விளங்கிய மூலக்கிரஹம் புகுந்து, தேவியைத் தொழுதாள், ஆரியன் சிலைக் குப்பக்கம், சிரித்தபடி நின்றான். சில விநாடிகள், கண்களை மூடிக்கொண்டிருந்த அரசி, கண்களைத் திறந்தபோது, ஆரியன், தீபங்களை ஒவ்வொன்றாக அணைத்துக் கொண்டிருக்கக் கண்டு, பயந்தாள்.

“ஆரியரே! விளக்குகளை ஏன் அணைத்து விடுகிறீர்.’

“அவள் ஒளி முன், இவ்வற்ப ஒளிகள் எம்மாத்திரம்? மலர்புரி அரசியே! மாதாவின் ஜோதியைப்பார், இந்தத் தீபங்கள் நிலையற்றன, அவள் நிரந்தரஜோதி; அணையா விளக்கு.”

“உண்மை. ஆனால், இருள் சூழச்சூழ எனக்குத் திகிலாக இருக்கிறதே.”

“தேவி! உன் குழந்தையின் திகிலைப் போக்கு, ஓஹோ! ஜீவன் உள்ள வரையில் திகில் இருக்கத் தானே செய்யும் என்று கூறுகிறாயா? சரி, அப்படியானால், இவளை உன் பாதத்திலே சேர்த்துக் கொள்”

“ஆரியரே, ஏதேதோ அச்சமூட்டும் பேச்சன்றோ பேசுகிறீர்.”

“நச்சுப் பொய்கையிலிருந்து இன்று உன்னை நம் தேவி கரையேற்றப் போகிறாள், நடுங்காதே, நளினி, உன்னை, ஒருமுறை தழுவிக்கொண்டு இன்புற... ... ...”

“சீ! தூர்த்தா! என்னிடமா நீ இந்த வார்த்தை பேசுகிறாய்?”

“அரசியே! அவசரப் படுகிறீர், நான் தழுவ ஆசைப்படு வதாகவா நினைத்தீர்? பேதாய், தேவி உன்னைத் தழுவப் போகிறாள், நானா? உன்னைத் தழுவிக்கொண்டால், உன் அரசைத் தழுவிக் கொள்ள முடியாதே.”

“என் அரசை நீ தழுவிக்கொள்வதா? என்னைத்தேவி தழுவிக்கொள்வதா? இதென்ன இன்று விந்தையாகப் பேசுகிறீர், எனக்கொன்றும் விளங்கவில்லையே”

“விளங்கிவிடும்! சில விநாடிகளிலே விளங்கி விடும்! மலர்புரி அரசியே என் மாதவம் ஈடேறும் நாள் இது. கோயில் பூஜாரி இப்போது நான். நாளையோ, நான் கொலுமண்டபத்து அதிகாரி. உன் வாழ்நாள் முடிந்தது?

“ஐயோ! இதிலேதோ சூதிருக்கிறது. நான் போகிறேன்.”

“கோயிற் கதவுகள் தாளிடப்பட்டு விட்டன. எவ்வளவு கூவினாலும் குரல் வெளியே கேட்காது. இந்த ஓர் இரவுக்காக, நான் எத்தனை இரவுகள் தூங்காது இருந்தேன் தெரியுமா?”
“பாதகா! படுமோசக்காரா! என்னைக் கொல்லவா, இங்கு அழைத்தாய்? தேவிகோயிலிலே இந்தத் தீயசெயலா? மனம் கல்லா? நான் உன்னைப் பக்தியோடு தொழுதுவந்ததன் பலன் இதுதானா? இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?

“தேவி உன்னைக் காப்பாற்ற மாட்டாள்”

“ஏன்?”

“ஏனா? அவள் என்னுடைய தேவி என் சிருஷ்டி, என் ஆயுதம், என்கருவி! நீயே கூறு, அடிதேவி, நானல்லவா உனக்கு மகிமை கற்பித்தேன். என்னால்தானே உனக்கு இந்த அபிஷேகம், ஆராதனை, அலங்காரம்.”

“என்ன பேச்சு இது”

“உண்மைப் பேச்சு. தேவி, வா. உன் சிருஷ்டிகர்த்தவாகிய நான் அழைக்கிறேன் உன்னை. உனக்கு இதுவரை நான் அடிமையாக இருந்தேன். எதற்காக? இவள்போன்ற எண்ணற்றவர்களை உனக்கு அடிமையாக்க! தேவியாம் தேவி; சக்தியாம் பராசக்தி, என் இஷ்டத்தை நிறைவேற்றி வைக்கும் அடிமை இது. வீசு, உன்வாளை; உருளட்டும் இவள் தலை”

அரசிக்கும் பூஜாரிக்கும் நடைபெற்ற இவ்உரையாடலால், அரசியின் அங்கம் பயத்தால் நடுங்கிற்று; கூவினாள், அப்போது சிலைக்குள் இருந்த உத்தமன், “அரசியே, ஆரியனுக்கு அடிமைதான் நான்; அவன் கட்டளையை நிறைவேற்றிவைப்பதே என்வேலை; அவனே என் சிருஷ்டிகர்த்தா; இதை அறிந்துகொள்” என்றுரைத்தான். ஆரியன் வெற்றிச்சிரிப்புடன், “கேட்டாயா, தேவியின் திருவாக்கை” என்று கூவினான்.

“நான் பேசி முடிக்கவில்லையே. சில சமயம், அடிமையே எஜமானுக்குத் துரோகியாவதுண்டு. ஆரிய முனியே! நீ அரசிக்குத் துரோகியானாய். நான் இதோ உனக்குத் துரோகியாகிறேன்” என்று உத்தமன் கூவினான். சிலை அசையக்கண்டு, சிலையின் கரங்கள், ஆரியனின் கழுத்தைப் பிடித்திழுத்து நெரிக்கக்கண்டு, அரசி, மருட்சியும், மகிழ்ச்சியும் கொண்டு உடலாட நின்றாள். “கோயிற்கதவுகள் பூட்டப்பட்டன; கூவினால் சத்தம் வெளியே கேட்காது” என்று கூறிக்கொண்டே உத்தமன், ஆரியனைக்கொன்றான்.

தேவியின் சக்தியே சக்தி, என்று அழுது கொண்டே கூறி, அரசி, சிலையின் பாதங்களைப் பற்றிக்கொள்ள, உள்ளே இருந்த உத்தமன், ‘தேவியுமில்லைத் தேவனுமில்லை. நான் ஓர் தமிழன்’ என்று கூறிக்கொண்டே சிலையை விட்டு வெளியே வந்து நின்று, அரசியிடம் தன் வரலாற்றைக்கூறி, ஆரியனின் சூது தெரியச்செய்தான். மலர்புரி அரசி, தன்மதியீனத்தால் வந்த அவமானத்தையும், ஆபத்தையும், எண்ணி வாடி உத்தமன் துணை கொண்டு, அரண்மனை சென்றாள்.

உத்தமனுடைய யோசனையின்படி, மறுதினம் ஆரியனைத் தேவி தன் திருப்பாதங்களில் சேர்த்துக் கொண்டாள் என்று ஊராருக்கு அறிவிக்கப்பட்டது. இறந்த பிறகு, தன் உடலைக் கழுகுக்கு இரையாக்கும்படி ஆரியன் விரும்பியிருந்தான் என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, ஆரியப் பிணத்தைக் கழுகுகள் கொத்திடச் செய்யப்பட்டது. ஆரியனின் சூழ்ச்சியால் சிறைப் பட்டிருந்த தமிழர் விடுவிக்கப் பட்டனர். ஆலய வீணர்கள் விரட்டப்பட்டனர். தமிழ் மணம் மெல்ல மெல்லக் கமழத் தொடங்கிற்று. உத்தமன், நடனராணியையும் வீரமணியையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறியபோது, மலர்புரி அரசி, தனது கள்ளக்காதலில் கனிந்த மகளையும் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறி, ஒரு நீலமணியை அவனிடம் தந்து, இது என் மகளின் காதணி. ஒன்று என்னிடமும், மற்றொன்று அவள் தந்தையிடமும் இருந்தது. வீரமணி என் காதலரைக் கலிங்கத்திலே கண்டாராம், மேற்கொண்டு தகவல்களை வீரமணி கூறு முன்பு,நான் ஆரியனின் அடிமையாக இருந்ததால், பலவகையான இடையூறுகள் நேரிட்டது. என்னால் முழு விவரமும் தெரிந்துகொள்ள முடியவில்லை. நீ வீரமணியைக் கண்டதும், இந்த நீலமணியைத்தந்து, என் மகள் விஷயமாகக் கேள், என்று கூறினாள். மலர்புரி தமிழ்புரியானதைக் கண்டுகளித்து, உத்தமன் வீரமணியைத் தேடலானான். காட்டரசனும், அச்சமயம், வீரமணியைத் தேடும் வேலையில் ஈபட்டிருந்தான், கிழவியை மணக்க மறுத்த வீரமணியை ஏதோ மூலிகை கொடுத்து, மனதை மாற்றி விடுவதாகக், காட்டரசரின் குடும்பவைத்தியன் கூறி, மருந்து கொடுத்தான். ஆனால் மருந்து, வீரமணிக்குக் கிழவியின் மீது மோகம் பிறக்கச் செய்வதற்குப் பதில், மூளைக்கோளாறு உண்டாகி விட்டது. வீரமணிக்குப் பழய நினைவு மறைந்து போய், எதிர்ப்பட்டோரை அடிப்பது, கிடைப்பதைக் தின்பது, ஓரிடத்திலே தங்காது ஓடுவது, போன்ற செயல் புரியும் பித்தனாக்கி விட்டது. வேறு மருந்துகள் தந்துவந்தனர் ஆனால், ஓரிரவு, கட்டுகளை அறுத்துக் கொண்டு. காவலரை ஏய்த்து விட்டு, பித்தம் பிடித்த வீரமணி, எங்கோ ஓடிவிட்டான், அவனைத் தேடிப்பார்க்க, நாலாபக்கங்களிலும். காட்டரசன் தன் ஆட்களை ஏவினான்.

“நண்பா! நான் எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன்; ஆனால், அந்த ஆடலழகியின் நினைவு என்னைச் சித்திரவதை செய்கிறது. அரண்மனையின் கொலுப்பொம்மையா நான்? எனக்குத் தெரியாதா? பெண்பித்தங் கூடாது; அது பேராபத்து விளைவிக்குமென்று, எல்லாம் தெரிந்து தான் இருக்கிறது. என்றாலும், என்னால் அவளை மறக்கவும் முடியவில்லை. புயலில் சிக்கிய கலம்போல் மனம் தத்தளிக்கிறது. மனச்சாந்திக்கு மதுவருந்தினால், அந்த மதனசுந்தரியின் இதழ் சுவைத்தால், இதனினும் இனிக்குமே என்று ஏக்கம் பிறக்கிறது. கீதம் கேட்க மனக்கொதிப்பைப் போக்கிக் கொள்வோம் என்று பார்த்தாலோ, கீதம் எனக்கு அவள் பேச்சை நினைவிற்குக் கொண்டு வருகிறது.” என்றுமோகமேலீட்டால் ரகுவீரன், தன் நண்பனிடம் கூறித் தன் துயரைத் துடைத்துக்கொள்ள முயன்றான். ஆனால் கிளறிவிட்டதும் நெருப்பு மேலும் ஒளியுடன் எரிவதுபோல, ஆசைத் தீ அவன் உள்ளத்தை பற்றிக் கொண்டது, நடனராணிக்கோ ரகுவீரனின் சேட்டையைக் கண்டதால் ஆடவரின் மனநிலை, அதிகாரவர்க்கத்தின் ஆணவம், சீமான்களின் சேட்டை, காமவிகாரங் கொண்டவர்களின் கபடம், ஆகியவற்றைப் பற்றிய எண்ணம், ஈட்டிபோல் குத்திக் குடைந்தது. இந்நிலைவரக் காரணம், என் அன்பனை இழந்ததாலன்றோ, வீர மணியின் சரசத்தை விரும்பிய எனக்கு இந்தக் கோரணி செயல்புரிவோனா சிக்கவேண்டும். தேன் குடத்தைத்தேடப்போய் தேள் கொட்டியதுபோலாயிற்றே என்நிலை; இன்னும் எத்தனை நாட்கள் இதனைச் சகிப்பது என்ற ஏக்கத்திலே நடனராணி ஆழ்ந்தாள்.

பலபாகங்களில் தேடி அலுத்துக் காட்டரசனின் வேலையாட்கள். வீரமணி கிடைக்கவில்லை என்ற சேதியைக் கூறிவிட்டுத் தமது கால் வீக்கத்திற்கு மூலிகை தேடினர். உத்தமனும் ஊர்பல சுற்றி அலைந்து, வீரமணியைக்காணாது விசனமடைந்தான். வீரமணியோ பித்தங்கொண்டதால், அடவியில் ஓடியும் குன்றுகளிலே கூத்தாடியும், அருவிகளில் நீந்தியும், அட்டகாசஞ ்செய்து கொண்டும், தனது பழைய நிலைபற்றிய கருத்தின்றித் திரிந்துகொண்டிருந்தான். அவனுக்கும், பழைய நிலைக்கும், அவனிடம் மிச்சமாக இருந்த ஒரே தொடர்பு, கலிங்கக்கிழவன் தந்த நீலமணி ஒன்றுதான். பித்தசித்தத்திலும், அந்த நீலமணியிடம் மட்டும், அவனுக்கு ஓர் பிரேமை. அதை இழக்காமல் பாதுகாத்துக்கொள்வதில் ஓர் அக்கறை இருந்தது. நீலமணியைப் பார்ப்பது நகைப்பது, பிறகு அதை கையிலே வைத்துக்கொண்டு கெம்பீரமாக நடப்பது, மடியிலே பத்திரப்படுத்திவிட்டு உறங்குவது, இது வீரமணியின் நிலைமையாக இருந்தது. நீலமணியை உற்றுநோக்கும்போது ஏதோ கொஞ்சம் பழைய நினைவு வருவதுபோல் தோன்றும்; மறுவிநாடியே அந்த நினைவு மறைந்துவிடும். இங்ஙனம் வீரமணி, பல இடங்களில் சுற்றித்திரிந்து கொண்டே பாண்டிய நாடுபுகுந்தான். சிற்றூர் ஒன்றையடுத்த சிறுகாட்டிலே சிரித்துக் கூத்தாடிக்கொண்டு வீரமணி சென்றபோது, வாட்போர் நடக்கும் சத்தம் கேட்டது. விழி அகன்றது; வீரம் ததும்பிற்று; மடமடவெனச் சத்தம்வரும் பக்கம் சென்றான். அங்கு இருவீரர்கள் வாட்போர் புரிந்துகொண்டு இருக்கக் கண்ட, அருகே கிடந்த பாறைமீதமர்ந்து கொண்டு, “சபாஷ்! அப்படித்தான் இப்பக்கம் வீசு!” என்று கூவினான். வாட்போர் புரிந்த இருவரும் இவன் எங்கிருந்து வந்தான் ஓர் பித்தன் என்று வெகுண்டனர். பித்தனின் சேட்டையைக் கண்டு எங்கே குறிதவறிவிடுகிறதோ என்று அஞ்சினர் இருவரும். எனவே, கத்தி வீச்சையும் நிறுத்திக் கொண்டு, “யாரடா பைத்தியக்காரா! போடா, இங்கென்னவேலை” என்று கூவினர்.

“எனக்கா என்னவேலை என்று கேட்கிறீர்கள். அவ்வளவு திமிரா பிடித்துவிட்டது. நான் கற்றுக் கொடுத்த பாடத்தின்படி, போர் செய்கிறீர்களா என்று நான் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் குருவிடமே குறும்புசெய்கிறீர்களா?” என்று வீரமணி கோபமாகப் பேசினான். போரிட்டுக் கொண்டிருந்த இருவரும் தன் சீடர்கள்; தானோர் வாட்போர் ஆசிரியன் என்ற நினைப்பு வீரமணிக்கு! சண்டையையும் மறந்துவிட்டு, இருவரும் சிரித்துவிட்டுச், “சரியான பைத்யமாக வந்து சேர்ந்தது” என்று பேசிக்கொண்டே, வீரமணியின் எதிரே சென்று கும்பிட்டு ‘குருவே நீங்கள் எதிரே நின்றால், எங்களுக்குப் போரிடக் கூச்சமாக இருக்கிறது. ஆகையால் தாங்கள் தயைசெய்து வீடு போய்விடுங்கள், நாங்கள் சண்டையை முடித்துக்கொண்டு சீக்கிரமாக வருகிறோம்” என்று கேலிபேசினர். வீரமணி அதற்கிசைய முடியாது என்று கண்டிப்பாகக்கூறிவிட்டு, “இந்த ஆரம்பப்பாடத்துக்கே இத்தனைநாளா? சுத்த முட்டாள்கள்! உம், ஆகட்டும், நேரமாகிறது. ஆரம்பியுங்கள் சண்டையை. சொல்லிக்கொடுத்த பாடத்தை நன்றாக நினைவிலே நிறுத்திச், சுத்தமாக சண்டைபுரிய வேண்டும். கத்தியைப் பிடித்திருப்பதே சரியாக இல்லை, கால் எப்போது நிமிர்ந்திருக்க வேண்டும். எப்போது வளைந்திருக்கவேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை. உங்கள் மண்டையிலே களிமண்ணோ! எத்தனை நாளடா இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பது” என்று கோபமாகப் பேசினான். வயிறு குலுங்க நகைத்துவிட்டு வீரர்கள். “போடா போ! போகிறாயா, உதைவாங்கிக் கொள்கிறாயா” என்று மிரட்டினர்.

“இதோபாருங்கள் ஒருவிநாடியிலே உங்கள் விழிகள் பிதுங்கி வெளிவரச்செய்கிறேன். என்னிடமா, வாலாட்டுகிறீர்கள்?” என்று வீரமணி கூறிக்கொண்டே, தன்னிடமிருந்த நீலமணியை எடுத்து அவர்களிடம் காட்டிகொண்டு மந்திரவாதி போல் முணுமுணுத்தான். ஒளிவிட்டுப் பிரகாசிக்கும், விலையுயர்ந்த அந்த நீலமணியைக் கண்டதும், இருவீரரும், ஆச்சரியப்பட்டுப் பித்தனிடம் இத்தகைய மணி எவ்விதம் கிடைத்தது என்று யோசித்து, இவனைத் தந்திரமாகத் தம்வசப்படுத்தி நீலமணியைப் பெற்று மன்னனிடம் தர வேண்டும், என்று தீர்மானித்து நீலமணியின் மாயா சக்தியால் மதி மயங்கியவர்போல் பாசாங்கு செய்து வீரமணியை வணங்கி நின்றனர்.

“அடங்கினீர்களா துடை நடுங்கிகளே!” என்று, சிரித்துக் கொண்டே பேசினான் வீரமணி. “குருவே! மன்னிக்க வேண்டும், பிழை பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று இருவரும் கூறி, வீரமணியின் தாளை வணங்குவதுபோல நடித்து, காலைவாரி விட்டனர்; வீரமணி குப்புறக்கீழே விழுந்ததும், தலைப்பாகைத் துணியினால் கைகால்களைப் பிணைத்துக், குதிரைமீது, மூட்டைபோலப் போட்டுக் கொண்டு, வீரமணி போட்ட கூக்குரலைப் பொருட்படுத்தாமல், பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வெகு வேகமாகச் சொல்லலாயினர். கொஞ்சநேரம் கூவிய பிறகு, வீரமணி அலுத்து, மயக்க மேலிட்டு, அசைவற்றுப் போனான். அந்த நிலையிலே மன்னனிடம், வீரமணியைக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். மன்னன் அரண்மனைத் தோட்டத்திலே உலவிக் கொண்டிருந்தான். எதிரே கொண்டுவந்து கீழே உருட்டப்பட்ட வீரமணியை, முதலில் மூர்ச்சை தெளியச் செய்து, அவனைப்பிடித்து வந்தவர்களைப் பார்த்து, “யார் இவன்? செய்த குற்றம் என்ன? என்று வினவினான்.

“மன்னவனே! இவன் யாரென்று தெரியவில்லை. காட்டிலே கண்டோம் தற்செயலாக. இவனிடம் இது இருந்தது.” என்று கூறி நீலமணியை மன்னனிடம் தந்தனர். அதைக் கண்டதும், பாண்டியன் பதைத்து, “ஆ! நீலமணி! நமது அருமை மணி! இது இவனிடம் எப்படி வந்தது? இவன் யார்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான். வீரமணிக்கோ, பித்தம் தெளிய வில்லையாகையால், மன்னவனை ஏறஇறங்கப் பார்த்து, “நீயார்? காட்டானா? இல்லையே! அவன் உன்னைவிட வயதிற் சிறியவனாயிற்றே! கலிங்கத்தானா? இருக்காதே, அவன் கண் இப்படி பிரகாசிக்காதே. முடி தரித்திருக்கிறாய், அரசனா? இது சோழ மண்டலமா? ஐயோ! நான் நுழையக் கூடாதே!!” என்று உளறியபடி இருந்தான்.