அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
8
                     

ஈட்டிக் கொண்டு குத்த வந்தாளா?

வைத்தியர், “எனக்கு வைத்தியத்துடன் போரிடவுந் தெரியும்” என்று கூறிவிட்டு, அவள் என்னைத் தன் அழகால் கொல்ல முனைந்தாள். அந்த இரு கண்கள் நஞ்சைப் பொழிந்தன. அவள் பேச்சு, ஈட்டிபோல் குத்திவிட்டது. ஆனால், அவள் தனது அழகால் என்னைக் கொல்லப் பார்த்தாள்; நானோ என் அறிவினால் அவளைக் கொன்றுவிட ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று வைத்தியர் கூறினதும், வேலையாட்களில் ஒருவன், மிரண்டோடினான் மன்னனிடம். கும்பிட்டுக் கை கட்டி, துக்கம் நெஞ்சை அடைக்க, “மன்னர் மன்னவா! நமது வைத்தியர், மனங்குழம்பியதால், நடனாவுக்கு விஷமிட்டுக் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டாராம்” என்று கூறிட மன்னரும் மருண்டு, அம்மங்கையின் அறைக்கு விரைந்தோடி, “கண்ணே! மங்கா! நடனா எங்கே? அந்த நாச நினைப்புக்காரன், நடனாவுக்கு விஷமிட ஏற்பாடு செய்தானாமே.” என்று கேட்டான். மன்னன் மகள், தந்தையே! நடனாவுக்கு ஆபத்தொன்றும் நேரிடாத இடத்திலே இருக்கிறாள், ஊரிலே ஜனங்கள் ஏதோ ஆத்திரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நடனாவை காஞ்சிக்கு அனுப்பிவிட்டேன்.” என்றாள்.

மன்னனும் அவன் குமாரியும் பேசிக் கொண்டிருக்கையிலே கங்காபாலாவின் முகம் பயத்தால் வெளுக்கத் தொடங்கிற்று; உடல் பதறலாயிற்று; கையிலிருந்த பால்சொம்பு கீழே நழுவி வீழ்ந்துவிட்டது. பால் தரையில் ஓடிற்று. அரசகுமாரி, கங்காவைப் பிடித்துக்கொண்டு, “என்னடி பாலா! என்ன உடம்புக்கு? ஏன் இப்படித் துடிக்கிறாய்!” என்று கேட்டுக் கொண்டிருக்கையில், வைத்தியர் தலைவிரி கோலமாக உள்ளே புகுந்து, பாலாவைப் பார்த்து “முடிந்துவிட்டதா காரியம்? ஒழிந்தாளா? விஷம் எப்படி?” என்று கேட்டான். “பாலா மூலமாகத்தான் இந்தப் பாதகத்தைச் செய்யச் சொன்னாயா?” என்று மன்னன் மிரட்டினான். வைத்தியர், “பாதகமா? இதுவா பாதகம். பேஷ்! மகா நீதிமான் நீர்.” என்று கூவினான். பாலா, மிரள மிரள விழித்தாள், கூவினதால் களைத்த வைத்தியன், பால்செம்பை எடுத்து மிச்சமிருந்த பாலை மளமளவெனப் பருகினான். பாலா, “வேண்டாம் பாலைச் சாப்பிடாதீர். அதிலேதான் விஷ மருந்தை கரைத்தேன்!” என்று கூச்சலிட்டாள். “ஆ! என் விஷம் எனக்கேயா” என்று வைத்தியனும், “அடி கள்ளி! என் மகளுக்கா விஷமிடத் துணிந்தாய்” என்று மன்னரும், “துரோகி! அன்போடு பணிவிடை செய்வதாகப் பாசாங்கு செய்தாயேடி” என்று அரசகுமாரியும் ஆத்திரத்துடன் கூவினர். வைத்தியர் சாயத் தொடங்கினார். பாலா, மெல்ல நழுவ யத்தனித்தாள், வேலையாட்கள் பிடித்துக் கொண்டனர். “தள்ளுங்கள் இந்தச் துரோகியைச் சிறையிலே” என்று மன்னன் கட்டளையிட்டு விட்டு, வைத்தியரைக் கவனிக்கலானான். வைத்தியரோ, சிகிச்சையே தேவையில்லாப் பேறு பெற்றார். “விடுகிறேனா பார் உன்னை” என்று வைத்தியர் பிணமானார்.

“மரணம் கொடிதா? மனக்குழப்பத்தோடு கூடிய வாழ்க்கை கொடிதா?” என்று காஞ்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நடனா, காவலாளியைக் கேட்டாள். பொழுது போக்குக்காக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். இடையே இக்கேள்வி பிறந்தது. காவலன், “மனக்குழப்பத்தோடு கூடிய வாழ்வுதான் மிகவும் கொடியது” என்று பதில் கூறிவிட்டு, ஆனால் மனக்குழப்பம் நீங்கும் மார்க்கம் ஏற்பட்டுவிட்டால், வாழ்வு துலங்குமல்லவா? அதற்காகத்தான் சற்றுப் பொறுத்துக் கொண்டால், பிறகு நிம்மதி ஏற்பட்டதும், வாழ்வின் பயனைப் பெற முடியும். கஷ்டம் ஏற்பட்டதும் கலங்கி உயிரைப் போக்கிக் கொண்டால், பெரிய நஷ்டமாகுமல்லவா?” என்று கூறினான்.

“உண்மைதான்! உத்தமன் என்ற உன் பெயருக்கேற்றபடியே, உன் எண்ணமும் இருக்கிறது. ஆனால், ஒருவர் இறந்து போனால், வருத்தப்படும் ஆட்கள் இருந்தால், அந்த மரணத்தால் கஷ்டமும் விளையும்; நஷ்டமும் உண்டு. ஆனால் என்னைப் போல ஒரு அபலை; திக்கற்றவள்; கஷ்டமனுபவித்துக் கொண்டு காலந்தள்ளுவதைவிட இறந்து போவதால் நஷ்டமொன்றுமில்லையல்லவா?” என்று கேட்டாள் நடனா. காவலாளி, “உமது கேள்வி எனக்கு வருத்தமூட்டுகிறது. உமது மரணத்தால் யாரும் வருத்தமடைய மாட்டார்கள் என்று நீர் எண்ணுவது, உமது நண்பர்களுக்கு நீர் துரோகம் செய்வது போன்றதாகும். ஏதோ பொழுது போகப் பேசுகிறீர் என்று எண்ணினேன். உண்மையிலேயே நீர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எண்ண வேண்டியிருக்கிறது உமது விபரீதமான பேச்சைக் கேட்டபின். தயவு செய்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். தற்கொலை கோழைத்தனம்; துரோகம்” என்று படபடத்துக் கூறினான் காவலாளி. சில நிமிடங்கள் இருவரும் மௌனமாகவே சென்று கொண்டிருந்தனர். காவலாள் மீண்டும் பேச்சைத் துவக்கினான்.

“தங்களின் துயரம் நான் அறியாததல்ல; வீரமணி எனக்கு நண்பர்” என்றான். “நண்பர்! உன் நண்பருக்காக என்ன பிரயாசை எடுத்துக் கொண்டாய்? நட்பின் இலட்சணம் என்ன? அவர்மீது அபாண்டம் சுமத்தப்பட்ட போது ஏன் வாய் பொத்திக் கிடந்தீர்கள்? ஒரு பேச்சுப் பேசினீர்களா? இப்போது அவர் எங்கு இருக்கிறாரோ? என்ன கதியோ? யார், அவர் விஷயமாக அக்கரை காட்டினார்கள்? உத்தமா! உன் மீது கோபிப்பதாக எண்ணாதே. என் மனக்கொதிப்பு என்னை இவ்வாறு பேசச் செய்தது. என் நிலையை நீ அறிந்து கொண்டதாகச் சொன்னாய். எனக்கு உதவி செய்வாயா? அவரன்றி நான் வாழ முடியாது. காஞ்சியிலே போய் தங்கிவிட நான் புறப்படவில்லை. இதே பிரயாணம், அவரைத் தேடுவதற்காக என்று மாறிவிட வேண்டும், என்னை உன் தங்கையாகப் பாவித்து என்னுடன் நீயும் வா. இருவருமாகப் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்து அவரைக் கண்டுபிடிக்கலாம்.” என்று நடனா கெஞ்சினாள். உத்தமன், அந்த யோசனையை மறுத்து எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஆனால் அவனுடைய வாதங்களெல்லாம், நடனாவின் விழியிலே புரண்டோடிய கண்ணீரால் கரைந்து போயின. அவனும், வீரமணியைத் தேடும் காரியத்திலே ஈடுபட இசைந்தான். ஆனந்தத்தால் நடனா, குதிரையின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

“பலே! பேஷ்! சரியான சமர்த்தனடா நீ” என்று, மலர்புரியிலே, அரண்மனைக் குருவாகவும் அரசியை ஆட்டிப் படைப்பவனாகவும் இருந்து வந்த சூத்ரதாரி, தன் முன், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், வேல் விடுதல், அம்பு எய்தல் முதலிய விர விளையாட்டைச் செய்து காட்டிய, வீரனைத் தட்டிக் கொடுத்தார். அந்த வீரன், முகமலர்ச்சியின்றிக் கைகளிலே படிந்திருந்த புழுதியைத் தட்டிக் கொண்டே நின்றான். இத்தகைய புகழ்ச்சியினால், பரிசுகளால், பூரிப்பு அடைய, அவன் என்ன, ஊர் சுற்றும் வஸ்தாதா? படைக்குத் தலைவன்; பரம்பரை வீரன்; எதிரிகள் கண்டு வியக்கும் ஏறு; மன்னர் மன்றத்தில் மதிப்புடன் திகழ்ந்த மணியாயிற்றே அவன். மலர்புரி எனும் சிற்றரசுக்குச் செல்லாக இருந்த ஒரு ஆரியனின், பரிசுக்கும் புகழ்ச்சியுரைக்கும் மகிழ்வானா? வீரமணியே மாறுவேடத்தில், மல்யுத்தக்காரனாக மலர்புரியில் வந்திருந்தான். அவனுடைய வீர விளையாட்டைக் கண்டு வியந்த ஆரியன், அவனைத் தனக்குப் பாதுகாவலனாக அமர்த்திக் கொள்ளத் தீர்மானித்துப் பேரம் பேசினான்.

“மல்லனே! இப்படி நீ ஊரூருக்குச் சுற்றிக் கிடப்பதைவிட, இந்த அரசில் ஊதியம் பெற்றுச் சமஸ்தான சேவகம் செய்யலாமே. சம்மதமா உனக்கு?

“சந்தோஷம். தங்கள் சித்தம்போல் நடக்கிறேன்”

“ஊதியம் என்ன வேண்டும், கேள்”

“இதுவரை ஒருவரிடம் ஊதியம் பெற்ற வழக்கமேயில்லை. ஆனால் ஊர் உழைப்பதைத் தின்று வாழ்ந்ததுமில்லை.”

“அதுதான் யோக்கியனின் செயல். ஆனால் இங்கு, சமஸ்தான சேவகம்,- இழிவானதல்ல.”

“தங்களிடம் சேவை செய்வது தேவசேவைக்குச் சமானமன்றோ”

“மெச்சினேன் உன் அறிவையும் ஆற்றலையும். இன்று முதல் நீ நம்மிடம் வேலைக்கமர்ந்துவிடு. தனி விடுதியும் ஆட்களும் தருகிறேன். செலவு பற்றிக் கவலைப்படாதே. உன் திறமையைக் கொண்டு, ஒரு சிறுபடை தயாரிக்க வேண்டும், தேவி சேனை என்ற பெயருடன்.”

தேவிசேனை! தேவிக்குச் சேனை வேண்டுமாம்! தேவிக்கா, இந்தத் திருப்பிரம்மத்துக்கா? தேவி! சகலலோக ரட்சகி, ஜெகன்மாதா என்று கூறுகிறான்; அவள் கையிலேந்தியுள்ள சூலம், எத்தனையோ கொடியரின் உயிரைக் குடித்து இரத்தக்கறை படிந்தது என்று பூஜிக்கிறான். தேவியின் திருவிழியிலே தீப்பொறி கிளம்பினால் திக்கெட்டும் தீக்கிரையாகும் என்று சிந்துபாடுகிறான். என்னைச் சேனை தயாரித்துக் கொடு - தேவி சேனை - என்று கேட்கிறான். இந்த ஆரியனின் அந்தரங்க நோக்கத்தை, அரசியோ, மக்களோ அறிவதாகக் காணோம். எவ்வளவு செல்வாக்கு! மதயானைகளை அடக்கும் வீரர்கள் இவன் முன் மண்டியிடுகின்றனர். உடலில் தைத்த அம்பு ஒடிந்தாலும், எதிரியின் யானையின் தந்தத்தை ஒடிக்கும் வீரமிக்க போர் மரபினர் இவன்முன் ஆமைகளாகின்றனர். அம்பிக்கே! என்று கூவுகின்றான், ஆயிரக்கணக்கான மக்கள் இவனடி வீழ்கின்றனர்.

வீரத்தைப் போற்றியது கண்டுள்ளேன்; புலவரைப் புகழ்வது கேட்டுள்ளேன்;அழகைப் பூஜித்தது அறிவேன்; அரசனை அடுத்ததும் அறிந்ததே; ஆரியனை ஏன், எக்காரணம் பற்றி நமது தமிழ் மக்கள் வாழ்த்தி வணங்குகின்றனர்; பொய்யுரை கேட்டுப் பூரிக்கின்றனர்; இப்புலியோ பசுத்தோல் போர்த்துக் கிடக்கிறது. யோகம் புரிவதாகக் கூறும் அவன் மனத்திலே, எவ்வளவு சூது கொழுந்து விட்டெரிகிறது! மேலுலகைக் கண்டதாகக் கூறும் அவன் விழிகளிலே, பேராசை கூத்தாடுகிறது. ஆண்டவனிடம் அளவளாவுவதாகக் கூறும் அவன் நடை ராஜநடையாகவன்றோ மாறுகிறது. கலிங்கக்கிழவன் குகையிற் கூறியது நடந்ததில் ஆச்சரியமில்லையே. மனிதனைத் தேவனென்று கூறி அரசியை மயக்கினான்; இது ஆச்சரியமா! இல்லாத, காணாத, ஈரேழு பதினாலு லோகத்தை மக்கள் நம்பும்படிச் செய்துவிட்டானே! இனித் தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியோ, அல்லது அரசியை அடியோடு நீக்கிவிட்டு முடிதரிக்கவோ சூது செய்கிறான். அதற்கே தேவி சேனை திரட்டுகிறான். நன்று, நன்று, சேனை திரட்டுவேன், ஆனால் அது தேவி சேனையா அல்லது அரசியின் சேனையா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நடனா! உன் நினைவுக்காக என் நெஞ்சம் குமுறுகிறதேயன்றி, இந்த ஆரியனின் சூதுக்கு நான் அஞ்சவில்லை என்று வீரமணி மலர்புரியில் எண்ணிக்கொண்டு தேவிசேனைக்குத் தக்க ஆட்களைத் திரட்டிப் பயிற்சி தந்து வந்தான். நாளுக்கு நாள், இச்சேனை வளருவதையும், விதவிதமான போர்ப்பயிற்சி பெற்று வருவதையுங் கண்டு ஆரியன் களித்தான். அவனுடைய கபடத்தை நன்கறிந்த வீரமணி, மிக நன்றாக நடித்தான். மெல்ல மெல்ல, ஆரியனின் முழுநம்பிக்கைக்குப் பாத்திரமானான். அடிக்கடி அவன், மணியிடம் ஆலோசனை கேட்கவுந் தொடங்கினான். ஆனால், ஆரியனுக்குக் கடைசிச் செயலில் இறங்கத் துணிவு பிறக்கவில்லை. மரத்தின் உச்சி ஏறி, மதுரமான கனியைத் தொட்டுப் பறிக்கும் நேரத்தில், வேலியருகே சந்தடி கேட்டுத், தோட்டக்காரன் வந்து விட்டானோவென்று திடுக்கிடும் திருட்டுப்பயலின் மனோநிலையிலே ஆரியன் இருந்தான். அரசன் - மலர்புரி மன்னன் - என்ற பெயர் ஒன்றுதான் இல்லையேயொழியச் சகல அதிகாரமும் அவனிடமே இருந்தது. ஆனால், அந்தப் பெயர் மீது பேராவல் பிறந்தது. எவ்வளவு அதிகாரம் இருந்து என்ன பிரயோசனம்? அரசு, என் சொற்படி ஆடுகிறது என்றாலும் என்ன பலன்? முடி ஓர் முண்டையிடம் இருக்கிறது. ஜடைதானே எனக்கு முடி! இந்தக் காவியைக் களைந்துவிட்டு, அரச உடையுடன் நான் காட்சி தந்தால், என் இனத்தவருக்கு எவ்வளவு மதிப்புப் பிறக்கும்? ஆநிரைகள் மேய்த்துக் கொண்டு வந்த ஆரியன் மனிதரை மேய்த்திடும் மன்னனானான் என்று பெருமை பிறக்குமே! கரடுமுரடான நிலத்திலே, காயும் வெளியிலே, குன்றுகளின் இடையிலே, தத்தளித்த நமது கூட்டம், குளிர்ந்த கங்கையில் மூழ்கி, வாழ்வு வளம் பெற்றுவிட்டனர். பல மண்டலங்களிலும் இன்று புகுந்து சிறிது சிறிது செல்வாக்கும் கண்டனர். ஆனால்! அரசு என்றால், அது அலாதியான ஆனந்தமே தரும். இனத்தின் எதிர்காலத்தைச் சிறப்புடையதாக்கலாம். இந்த மலர்புரிக்கு நான் மன்னனாகிவிட்டால், எந்த மண்டலத்திலும் நம் இனத்தவருக்கு இடம் கிடைக்கும். ஏன்! சில காலம் சென்ற பிறகு இந்த இடமே ஆரிய நாடாகியும் விடலாம். ஆலய அதிகாரி அரசின் அதிகாரம் பெறுவது ஆகாத காரியமா! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஓர் நல்ல சந்தர்ப்பத்தைப் பார்த்து அரசியை ஒழித்துவிட வேண்டும். முடி பிறகு நம் காலடியில் கிடக்கும். வேளை - சரியான வேளை வர வேண்டும். மணி வீரன், திறமைசாலி. ஆனால் அவனுக்குப் ‘பக்தி’ ஏற்படவில்லை. என் கட்டளைகளை நிறைவேற்றுகிறானேயன்றி அவன் கண்களிலே, அந்தத் தாசத்தன்மை தோன்றவில்லை. அது ஏற்படாதவரை, அவனை எப்படி நம்ப முடியும்? என்று ஆரியன் எண்ணினான்.

மலர்புரி அரசியோ, “தேவிசேனை’க்காகச் செலவுக்குப் பணந்தருவதை திருப்பணி என்றெண்ணி மகிழ்வதும், மீண்டும் தேவதரிசனம் சரசமும் கிடைக்குமா என்று ஆரியனைக் கேட்பதுமாக இருந்தாளேயன்றி, சேனை தன்னை ஒழிக்கவே தயாரிக்கப்பட்டிருப்பதை அறியாள். ஆரியனின் மதவேடம் அரசியைப் பரிபூரணமாக ஏமாற்றிவிட்டது.

வேடம் எப்படி?

மிகத் திறமையாக இருக்கிறது!

என் பெயர், இனி என்ன தெரியுமா?

குணாளன் என்று அழைக்கட்டுமா?

அது அவருக்குப் பொருத்தமான பெயர். எனக்கு அது பொருந்துமா! என்னை இனித் தொண்டன் என்று அழைக்க வேண்டும்.

நாக்கெழாதே.

இல்லையானால் நமது காரியம் நடக்காதே உத்தமா!

சரி தங்கள் இஷ்டம்போல்....

பார்த்தாயா! ஆரம்பத்திலேயே தவறு. “தங்கள்” “திங்கள்” என்று பேசக்கூடாது. நண்பா! தோழா! தொண்டா! என்று அழைக்க வேண்டும்.

சரி தோழா!

உத்தமனென்றால், உத்தமனேதான்.

இச்சம்பாஷனைக்குப் பிறகு, நடன ராணி ஆணுடையுடன், உத்தமனுடன் ஊரூராய்ச் சென்று தன் காதலனைக் கண்டுபிடிக்கும் பிரயாணத்தைத் துவக்கினாள். பல இடங்களிலே சுற்றியும் துப்பொன்றும் கிடைக்காது துயருற்றுக் காட்டுவழிகளிலே செல்கையில் ஓர் நாள், வணிகர் கூட்டமொன்று வழியில் செல்லக் கண்டு, அவர்கள் சென்று வந்த பல்வேறு நாட்டு வளப்பங்களைக் கூறக் கேட்டு அவர்களின் வாய்மொழியாலும், வீரமணி பற்றிய சேதி ஒன்றும் தெரியப் பெறாது, உத்தமனைக் கண்ணீர் தளும்பும் கண்களுடன் நடனா பார்த்துக் பெருமூச்செறிந்தாள். ஓரிரவு, சற்று அடர்ந்த கானகத்தைக் காலையில் கடக்கலாம் எனக் கருதி, வணிகக் கூட்டம், காட்டோரத்தில் தங்கினர். நடனாவும் உத்தமனும், அவர்களுடன் தங்கியிருக்கச் செய்தனர்.

மலர்புரியின் எல்லைக்காடு அது. காட்டைக் கடந்தால் மலர்புரி. காதலருக்கு இடையே அந்த அடர்ந்த காடும் ஓரிரவும் குறுக்கிட்டன. மலர்புரியிலே மல்லனாக இருந்த மணிக்கு, காட்டை அடுத்த கூடாரத்திலே தன் இருதய ஜோதிமணி இருப்பது ‘தெரிந்தால்’ காட்டு மிருகங்கள் கிலி கொண்டோடும் விதத்திலே, பாய்ந்து சென்று, “கண்ணே நடனா! கண்டேனே உன்னை மீண்டும்” என்று கூவியிருப்பான். நடனாவுக்கும், தன்நாதன், காட்டை அடுத்த மலர்புரியிலே இருப்பது தெரிந்தால், இரவு, கொடிய மிருகம், இவை அவளைத் தடுத்திருக்குமா! காட்டிலே, விதவிதமான கூச்சல், ஆனால் அவைகளில் ஒன்றாவது கலங்கும் காதலருக்குத் தூது கூறவில்லை. ஆனால் கதிரோன் ஒளிகண்டு, கூடாரத்தைச் சுருட்டிக் கொண்டு பிரயாணத்தைத் துவக்கினால், காடு தடுக்கவா போகிறது, காதலரின் சந்திப்பை!

காதலருக்கிடையே இருந்த கடுங்கானகத்திலே, இரவு, எத்தனையோ விதவிதமான காதல் விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நிலவொளியினால், குதூகலமடைந்த மிருகங்கள், சில நேரம் இரைதேடுவதும் காதற்களியாட்டமாடுவதுமாக இருந்தன. மடுவில் இறங்கி நீர் பருகும் பெண் சிங்கத்தைக் கனிவுடன் நோக்கியபடி, மடுவின் கரையிலே நிற்கும் ஆண் சிங்கம், நிலக்கண்ணாடி முன் நின்று டை திருத்திக் கொள்ளும் அழகு மனைவியை, மாளிகைக் கூடத்திலே கெம்பீரமாக நின்றுக்கொண்டு பார்த்துப் பூரிக்கும் சீமான் போல் காட்சி தந்தது. மந்தியும் குரங்கும், மானினத்தின் ஜோடியும், மற்றவையும் மந்தகாசமாக விளையாடிய அவ்வேளையில், நடனராணி, ஆண் உடையில், தனது காதலனைப் பற்றிக் கவலையுடன் கண்ணுறங்காது புரண்டு கொண்டிருந்தாள். உத்தமன் சற்று அயர்ந்து தூங்கினான். தூங்கிக் கொண்டிருந்த வணிகர்களின் முகத்திலே, வியாபார இலாபத்தால் விளைந்த களை தாண்டவமாடிற்று.

நடுநிசிக்கு மேலிருக்கும். தொலைவிலே குதிரைக் காலடிச் சத்தம் கேட்ட நடனா திடுக்கிட்டாள். நிமிடத்திற்கு நிமிடம் சத்தம் வளர்ந்தது. குதிரைக் காலடிச் சத்தத்துடன், பலர் ஒன்றாகக் கூடிப் பாடுகிற சத்தமும் கேட்டது. உத்தமனை எழுப்பினாள். அவன் உற்றுக் கேட்டான். பல வணிகரும் விழித்துக் கொண்டனர். சத்தத்தைக் கேட்டுத் திகைத்தனர். காட்டிலே வசிக்கும் ஏதோ ஓர் கொள்ளைக் கூட்டத்தார் வருகின்றனர் என்பது விளங்கிற்று. வணிகர் திகில் கொண்டனர். வாளை எடுத்தான் உத்தமன், வணிகரை அழைத்தான். வயது சென்றவர்கள், பொன் மூட்டைகளுடன், இப்போதே புறப்படுங்கள், வந்த வழியாக உங்களுக்கு என் நண்பன் உதவி செய்வான். நாங்கள் இங்கு நின்று கொள்ளையருடன் போரிட்டு வருகிறோம். நாங்கள் அவர்களைத் தடுத்து நிற்கும் நேரத்தில் நீங்கள், பக்கத்து ஊரைப் போய்ச் சேரலாம். பிறகு நாங்களும் வந்துவிடுகிறோம் மேலும் யோசிக்க நேரமில்லை. இந்த நேரத்திலே செய்யக் கூடியது அதுதான். சத்தம் பலமாகக் கேட்கிறது. தாமதிக்க வேண்டாம் என்று உத்தமன் அவசரப்படுத்தி, குதிரைகளைத் தயார் செய்து நிறுத்தி, நால்வரை, நடனராணியுடன் சேர்த்து வந்த வழியே வேகமாகச் செல்லுமாறு அனுப்பிவிட்டு, மற்ற வணிகர்களை புதர்களிலே பதுங்கிக் கொள்ளச் செய்து, உருவிய வாளுடன், ஓர் பெரிய மரக்கிளை மீது அமர்ந்து கொண்டு சத்தம் வரும் திக்கை நோக்கினான். வெளிச்சமும் தெரிய ஆரம்பித்தது. நூறு பேருக்கு மேல் கையில் தீவர்த்திகளுடன் குதிரைகள் மீது அமர்ந்து, “தேவிக்கு ஜே! தேவிதாசுக்கு ஜே!” என்று கோஷமிட்டுக் கொண்டு வந்தனர். முகமூடி போட்ட ஒருவன் அப்படைக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தான். புதர்களிலிருந்து வணிகர்கள் இக்காட்சியைக் கண்டு பயந்தனர். உத்தமன் மரக்கிளையிலேயே இருந்து கொண்டு, யோசித்தான், என்ன செய்வதென்று. வணிகர்கள் கூடாரத்தருகே வந்து சேர்ந்ததும், கொள்ளைக்கூட்டம், உள்ளே நுழைந்து பார்த்து, “பட்சிகள் பறந்துவிட்டன” என்று பதைத்துக் கூவின. முகமூடிக்காரன், “இந்த வேளையிலே எங்கே பறக்க முடியும். இங்கும் அங்கும் தேடிப் பாருங்கள்” என்று உத்தரவிட்டான். அங்ஙனம் தேடுகையிலே, வணிகர் சிலர் சிக்கினர், வாளோடு வாள் சந்தித்தது. உத்தமன் மரத்திலிருந்து குதித்து; வீரமாகப் போரிட்டான். ஆனால் வந்தவர்கள் அதிக எண்ணிக்கை யானதால், போர் முடிவு அவர்களுக்கே சாதகமாகிவிட்டது. சில வணிகர் கொல்லப்பட்டனர், சிலர் கைது செய்யப்பட்டனர். உத்தமனுக்கு உடலெங்கும் காயம். “வணிகரின் பிணம் கிடைத்துப் பயன் என்ன? பணம் எங்கே?” என்று பதைத்தக் கேட்டான், முகமூடித் தலைவன். ஒருவரும் பதில் உரைக்கவில்லை. கூடாரத்தைக் கிழித்தான், குற்றுயிராக இருந்தவர்களைக் காலால் மிதித்தான், கொடுமை பல புரிந்தான். ஆனால், ஒரு வணிகரும், வாய் திறக்கவில்லை. முகமூடித் தலைவன், “பிணங்களைக் கழுகு கொத்தட்டும், பிடிபட்டவர்களை இழுத்துக் கொண்டு புறப்படுங்கள்” என்று உத்திரவிட்டான். குதிரைப்படை மலர்புரிக்கு, கதிரோன் ஒளி கிளம்புமுன் சென்றது. தேவிகோயில் தோட்டத்திலே, வணிகர்கள் கைதிகளாக்கி நிறுத்தி வைக்கப்பட்டனர். மலர்புரியைக் கொள்ளை
யிட வந்த கூட்டத்தை ஆரியன், தேவிசேனையின் ஓர் சிறு பகுதியால் எதிர்த்து, கொள்ளைக்காரரைக் கொன்றும் சிறைபிடித்தும், மலர்புரி மக்களுக்கு மகத்தான சேவை செய்தார் என்று பிரகடனம் அரசியாரால் வெளியிடப்பட்டது. ஊர்மக்கள் கொள்ளைக்காரரைக் காணத் தேவி கோயிலில் குழுமினர். கள்ளன், வணிகரையே கொள்ளைக்கூட்டம் என்று கூறி மக்களை ஏய்த்தான். தேவிசேனையிலே, கோயில் பாதுகாவலுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவினரை, ஆரியன் வீரமணியைக் கேட்காமலே அழைத்துச் சென்று, வணிகர் கூட்டத்தைத் தாக்கியதுடன், வணிகரையே கொள்ளைக் கூட்டத்தினர் என்று வாய் கூசாது கூறியது கேட்ட வீரமணி வெகுண்டான். தேவிசேனை இந்தத் திருவிளையாடலுக்குத்தானா என்று தன்னிடம் பயிற்சி பெற்ற வீரரைக் கேட்டான். தங்கள் கட்டளை என்றே ஆரியர் கூறினர், என்று அவர்கள் கூறினர். ஆரியனிடம் நேரடியாக வம்பு வளர்த்துக் கொள்ள அது சமயமல்ல என்பதறிந்த வீரமணி, தன் போகத்தை அடக்கிக் கொண்டு, ஆரியன் அபார வீரத்துடன், போரிட்டுக் கொள்ளைக் கூட்டத்தை அடக்கினதைப் பாராட்டிப் பேசினான். அரசியார் கைது செய்யப்பட்ட கொள்ளைக்கூட்டத்தைப் பார்வையிட வந்தபோது வீரமணியும் உடனிருந்தான். ஆரியன் மேடைமீது நின்றுக் கொண்டிருந்தான். எதிரிலே வரிசையாகக் கைதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அரசி, வீரமணியுடன், அவர்களைப் பார்வையிட்டுக் கொண்டு வருகையில் உத்தமன், வீரமணியைக் கண்டான், ஆச்சரியத்தால், வாய் பிளந்து நின்றான். வீரமணிக்கும் அதேநிலை. இருவரும் முகமும் ஓர் விநாடியில் மாறிவிட்டது. அரசி இதைக் கண்டு ஆச்சரியப்
பட்டு, “மணி வீரரே! ஏன், இக்கொள்ளை கூட்டத்தாரிலே யாரோ உமக்குத் தெரிந்திருக்கிறதுபோல் தோன்றுகிறதே. இவனைக் கண்டதும் உமது முகம் மாறிவிட்டது. அவன் முகமும் மாறிற்றே. இதென்ன விந்தை?” என்று கேட்கவே, வீரமணி சமர்த்தாக, “தேவி! உண்மையில் இவனைக் கண்டதும், ஒருவனுடைய முகம் என் நினைவிற்கு வந்தது. என் தாய், விதவையாக இருக்கையிலே, ஓர் விபத்து நேரிட்டது. விசித்திரமான அந்நிகழ்ச்சி இந்த விநாடி என் மனதிலே அலைபோல் மோதிற்று. அது ஒரு பெருங்கதை” என்று கூறி பெருமூச்செறிந்தான். அரசி, அவ்விடத்தை விட்டு நடந்துகொண்டே, “கதை பெரிதானால் என்ன? சுருக்கமாகக் கூறு” என்று கட்டளையிட, வீரமணி, “என் தாய், தேவப் பிரசாதத்தால் விதவைக் கோலத்திலேயே ஓர் குழந்தையை ஈன்றாள்” என்றான். அரசியின் முகம் மாறிவிட்டது. பேச்சிலே நடுக்க மேற்பட்டது. வீரமணி அதனைத் தெரிந்து கொண்டு மேலும் ஆரம்பித்தான்; “அழகான ஓர் ஆண் குழந்தை, ஆனால், பிறந்ததும் அதனை ஊருக்கஞ்சி வேறு யாரிடமோ கொடுத்துவிட்டார்கள். அந்த மகனின் முகக்குறிகளை, என்னிடம் கூறினார்கள். இன்று நான் கண்ட அக்கொள்ளைக்காரனின் முகம், என் தாய் சொன்ன குறிகளுடன் இருக்கக்கண்டே திகைத்தேன்” என்று கூறி முடித்தான். அரசியால் அதற்குமேல் தன் துக்கத்தை அடக்க முடியவில்லை என்பதை வீரமணி உணர்ந்தான். “தான் பெற்ற குழந்தையைத் தத்தளிக்க விட்டு, தாய் தர்பார் நடத்த முடியுமா தேவி” என்று சொன்னான். “யாரைக் கேட்கிறாய் அக்கேள்வி” என்று அரசிக் கேட்டாள். தங்களையும் கேட்கிறேன், தங்கள் மகளின்...” என்று மெல்லக் கூறினான்.

அரசி முகத்தைக் கைகளால் மூடினாள். “அழவேண்டாம் அரசியாரே! நான் தங்கள் வரலாறு தெரிந்தவன். அவர் மூலமாகவே கேள்விப்பட்டேன், இங்கு நான் வேலைக்கு அமர்ந்ததோ, தங்களின் இழந்த செல்வத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன்தான்” என்று ஆறுதல் கூறினான். அரசியும் வீரமணியும் பேசிக் கொண்டே தேவியின் கோவிலுக்குள் போனதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன் அவசர அவசரமாகக் கைதிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்ப உத்திரவு பிறப்பித்துவிட்டு, கோயிலுக்குள் புகுந்தான். அவன் வருவதை அறிந்த வீரமணி ‘ஆரியன்’ என்று மெல்லச் சொன்னான். அரசியும் சரேலென்று எழுந்து, கோயில் மூலக்கிரஹம் சென்று, தேவியைக் கும்பிட்டு நின்றாள். முத்து முத்தாக நீர் கண்களிலிருந்து வெளிப்பட்டது. “என்ன உருக்கம்! எவ்வளவு பக்தி” என்று வீரமணி, ஆரியனிடம் கூறி வியந்தான். “எல்லாம் அவள் சக்தி” என்று கூறிக்கொண்டே தேவி சிலையைக் காட்டினான் ஆரியன்.

மலர்புரியைக் கொள்ளையிட வந்த கூட்டத்தினரிலே பெரும்பாலோர் பிடிபட்டனர். சிலர் தப்பிச் சென்றனர். அவர்களைத் தேடிப்பிடித்து தூக்கிலிட வேண்டும் என்று மலர்புரி அரசியார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆரியன் கூறினான். அரசி ஓலை தயாரித்தால் ஒரு நொடியில் கையொப்பமிடுகிறேன் என்று பதில் உரைத்திட, உளம் மகிழ்ந்த ஆரியன், வீரமணியை உடனழைத்துக் கொண்டு தேவி கோயிலைவிட்டு வெளியே சென்றான். மலர்புரி அரசின் உத்தரவு அண்டை அயல்நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள அரசியலாரும், எச்சரிக்கையாக இருக்குமாறு ஆரியன் தூண்டிவிட்டான்.