அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
7
                     

“அரச மன்றத்திலே என்றேனும் ஓர் நாள் உமது அருமையான வாதத்திறமையைக் காட்டுமய்யா; எனக்குத் தெரியாது வாதம்புரிய” என்றாள் மங்கை. “பேதைமை மாதர்க்கு அணிகலமாம்!” என்றார் வைத்தியர். “மருந்துக்காக நீர் பல சுவடிகளைப் படித்திருப்பீர்; அது ஏட்டுச்சுரை. எனக்கேன் வைத்தியரே அவை! கேளும்; ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதுபோல, நீர் என்னை நாடி வருவதற்கு முன்பு, உமது கீர்த்தி என் காதைத் தேடி வந்தது. அவர் விஷயம் அப்படியல்ல! அவரை நான் முதலிலே கண்டேன்! அவருடைய கீர்த்தி என்னவென்று அப்போது நானறியேன். உமது கீர்த்தியைக் கேட்டு எங்ஙனம் பாராட்டுகிறேனோ அது போல், அவரைக் கண்டு என் நெஞ்சமெனும் கோயிலில் அவரை இருக்கச் செய்துவிட்டேன். மற்றவர்கள் இந்தச் சோழ மண்டலத்திலே, வாள் வீச்சு, ஈட்டி எறிதல், குதிரைச் சவாரி ஆகிய வீரவிளையாட்டிலே வீரமணிக்கு நிகர் யாருமில்லை என்று புகழக் கேட்டேன், அவர் நெஞ்சிலே புகுந்த பின்னர். அவரது திறமையை நான் கண்டதுமில்லை, காண வேண்டுமென்று கருதினதுமில்லை. என்னை அவருடைய வாள் வீச்சு வீழ்த்தவில்லை. அவரிடம் நான் நெஞ்சைத் தந்த பிறகே, என் நேத்திரானந்த பூபதி, நிகரற்ற ஓர் போர் வீரர் என்பதை அறிந்தேன். எம்மைப் பிரிக்கும் மருந்து உம்மிடம் இல்லை. வீணே சிரமப்பட வேண்டாம். உண்மையிலே உமது திறமை கண்டு நான் வியக்கிறேன். ஆனால் வியப்பது வேறு. விரும்புவது என்பது வேறு” என்றுரைத்தாள் நடனா.

“என் திறமறிந்தும் என்னிடம் உனக்கு அன்பு உண்டாகவில்லையா?” என்று கேட்டார் வைத்தியர்.

“திறமையைக் கண்டு வியந்ததும், ஒரு பெண், அந்த ஆடவனைக் காதலிப்பது என்று இருந்தால், வைத்தியரே! பெண்கள் எத்தனை எத்தனை ஆடவரை, நித்தம் நித்தம் காதலிக்க வேண்டி நேரிடும் தெரியுமா! கழைக் கூத்தன் பனை உயரத்தில் நின்று பம்பரம்போற் சுழன்றாடுவான்; பார்க்க மிக்க ஆச்சரியமாக இருக்கிறது! பாணனின் பாடல் பரமானந்தமூட்டுகிறது. கவியின் கற்பனை உள்ளத்தை உருக்குகிறது. ஓவியக்காரரின் சித்திரம் சித்தமதைக் களிப்புக் கடலிற் செலுத்துகிறது. அலைகடலை அடக்கி மரக்கலம் செலுத்துவோன், புலியையும் பிறவையும் வேட்டையாடிப் பிடிப்பவன், மல்யுத்தம் செய்து மார்நிமிர்த்தும் மறவன், போரில் வெற்றி பெற்றுக் கழலணிந்தோன், ஆகியவருடைய செயல் திறமையாக இல்லையா? எந்தத் திறமையைக் கண்டு வியப்படையாமல் இருக்கிறோம். ஏன்? அரண்மனையின் விகட கவியின் திறமை கண்டு வயிறு வெடிக்கச் சிரிக்கிறோம்! இவ்வளவு பேருடைய திறமையைக் கண்டு சந்தோஷித்தால் அவர்களைக் காதலிப்பது என்று பொருள் இருப்பின். வைத்தியரே! உலகம் ஓர் விபரீதபுரியாகி விடுமே! இதையேனும் உணரக்கூடாதா?” என்றுரைத்தாள் நடனராணி.

“பெண்ணே! உன் பேச்சிலே அலங்காரம் இருக்கிறது; அறிவு காணப்படவில்லை.”

“தங்கள் மனக்கண் குருடாகிவிட்டது, அதற்கு மருந்திடுங்கள் முதலில்”

“மமதை, மகா கொடிய வியாதி”

“வியாதியின் கொடுமை தெரிந்தும் அதை ஏன் வளர்த்துக் கொள்கிறீர்? உமது பேச்சு அதைத்தான் காட்டுகிறது.”

“இரக்கமற்ற உனக்கு இயற்கை இவ்வளவு அழகைத் தருவானேன்! குற்றுயிராக நீ மஞ்சத்திலே படுத்துக் கிடந்தபோது, எத்தனை இரவுகள் உனக்காக இந்தக் கண்களை மூடாமல் காத்திருந்தேன்? எவ்வளவு கவலை கொண்டேன்? ஜீவசக்தி உன் உடலில் மீண்டும் வருவதற்காக எவ்வளவு பாடுபட்டேன்? வேறு வேலைகளை விடுத்தேன்; நீ பிழைத்தெழுந்தால் போதுமென்றிருந்தேன். உன்னைச் சாவுக் கிடங்கிலே தள்ளிவிட்டிருப்பார்கள்; நான் உன்னை உலகிலே உலவ வைத்தேன். நன்றிகெட்ட நங்கையே! நொந்த உள்ளத்தை நீ மேலும் வாட்டுகிறாய். நான் உன் பொருட்டுப்பட்ட கஷ்டம் எவ்வளவு என்பது உனக்குத் தெரியுமா?”

“பேஷாகத் தெரியும்! என்னை ஈன்றபோது என் தாய் பட்ட கஷ்டத்தைவிடத் தாங்கள் அதிகம்பட்டிருக்க முடியாது. என் தாயே தடுத்தாலும் நான் அவரை நெஞ்சிலிருந்து வெளியே தள்ள முடியாது. என் இருதய சித்திரத்தை அழிக்க முடியாது.”

“நீ அழிந்தால்...”

என்று கேட்டுவிட்டு வைத்தியர், மிகக் கோபமாக நடனாவின் அறையை விட்டு வெளியே சென்றார்.

“நீர் என்ன துர்வாசரா, விஸ்வாமித்திரரா அவளைச் சபிக்க!” என்று கேலி செய்துவிட்டுச் சிரித்தாள் கங்காபாலா. அவள், வைத்தியர் நடனாவிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மறைந்திருந்து. வைத்தியர் வெளியே கோபமாக வந்ததும், வழி மறித்துக் கேட்டாள்.

“எங்கள் பேச்சு...” என்று இழுத்தார் அற்புதானந்தர். “கனி கொடுக்க வந்தேன், காதிலே விழுந்தது” என்று பாலா முடித்தாள்.

“இதை வெளியே சொல்லாதே பாலா! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று வைத்தியர் வேண்டினார். பாலா “இரகசியத்தைக் காப்பாற்றுகிறேன்; பரிசு உண்டோ...” என்று பேரம் பேசினாள். “வா! வெளியே போய் பேசுவோம். ஏன்? என் வீட்டுக்கே வா, அங்கு...” என்று பேசிக் கொண்டே நடந்தார் வைத்தியர். “அங்கு, என்னையும் கண்ணே கனியே, என்று சரசமொழி பேசி, இசையாவிட்டால் சபிப்பீரோ, என்று திகில் வருகிறதே!” என்று மேலும் கேலி செய்தபடி, பின் தொடர்ந்தாள் பாலா.

“கங்கா! நான் என்ன காமுகனா” என்றார் வைத்தியர்.

“கண் இருக்கிறதே உமக்கு. கண்ணுக்கு உருவாக எது தெரிந்தாலும், கருத்துச் சுழலுமாம். இதோ பாரும், தேவேந்திரன் நித்தநித்தம் ஜோதி ஸ்வரூபங்களான அரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியவர்களைக் கண்டு களிப்பவன். பாருங்களேன், ஒரு நாள், எங்கோ பர்ணசாலையிலே இருந்த ஒரு ரிஷிபத்தினியைக் கண்டான்; காதல் கொண்டான். ஆண்களின் சுபாவம் அதுதானே” என்று ஆரியக்கன்னி கேட்டபோது, வைத்தியரின் மனதிலே, “ஆமாம்! இவள் சுந்தரியாகத்தான் இருக்கிறாள். அந்த மண்டைக் கர்வங் கொண்டவளிடம் மண்டியிட்டதை விட இவளிடம் கொஞ்சம் ஜாடைகாட்டி இருந்தாலும் போதுமே! இசைவாளே!” என்று தோன்றிற்று. மனதிலே நடனாவின் சித்திரம்; பக்கத்திலே பாலா. இருவரையும் ஒப்பிட்டான். இருவரும் இளமை எழில் உள்ளவர்களே. ஆனாலும், அந்த நடனாவின் வசீகரம் இவளிடமில்லையே! என்று ஏங்கினான். இருவருமாக வைத்தியரின் வீடு போய்ச் சேர்ந்தனர். நேரத்தை வீணாக்காமல் பாலா, பேச்சைத் துவக்கினாள்.

“வைத்தியரே! வேட்டையாடிய புலி வலையில் வீழ்ந்தது போன்ற நிலை, ஆண்கள், தாங்கள் விரும்பும் கன்னி இசைய மறுத்தால் பெறுவராம். உமக்குள்ள நிலை அதுதான். நான் தெரிந்து கொண்டேன். ஆனால் வெறும் ஆத்திரம் பயன் தராது. சபித்து விடவும் முடியாது” என்றாள். விசாரத்திலாழ்ந்த வைத்தியர், “பாலா! அப்படியானால், நான் அவளை மறக்கத்தான் வேண்டுமா? அந்த ஒளி வீசும் கண்களை, துடிக்கும் அதரத்தை, கொடி இடையை...” என்று பெருமூச்சுடன் பேசலானார்.

“சரி! சரி! அவளை நீர் வர்ணித்துக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க நான் வரவில்லை. அவள் அதிரூபவதியா இல்லையா என்பது பற்றி எனக்கொன்றும் கவலை இல்லை. அவளைப் பிச்சை கேட்டீர்; அவள் காறித் துப்பினாள். நீர் இப்போது என்ன செய்யப் போகிறீர். அதுதான் கேள்வி” என்றுரைத்தாள்.

‘என்ன செய்வது? ஏங்கிச் சாவது” என்றார் வைத்தியர். “அவளுக்காகவா?” என்று கேட்டாள் பாலா. வைத்தியரின் பெருமூச்சுதான் பதில் கூறிற்று.

“நீர் இறந்துவிட்டால், அவளை அடைந்ததாக அர்த்தமா?” என்று கேட்டாள் பாலா.

“வெந்த புண்ணிலே, வேலைக் குத்துகிறாய்! என்னை என்ன செய்யச் சொல்கிறாய்”

“வஞ்சந் தீர்த்துக் கொள்.”

“கற்பழிப்பதா?”

“சீ! அவளை அழிப்பது. ஏன், உன்னிடம் வகை வகையான விஷமில்லையா! ஏதாவதொன்றை மருந்துடனோ, உணவுடனோ, கலந்து தந்தால் ஒழிகிறாள். உனக்கு இணங்க மறுத்த அவள், பிறகு எவனாவது ஒரு வீரனுடன் கூடி ஆடிக் கிடப்பதைக் கண்டால், நீ புழுப் போல் துடிக்க மாட்டாயா?”

“துடிப்பேன். ஆனால், அதற்காக அவளைக் கொல்வதா! சீச்சீ! கூடாது அக்கொடுஞ்செயல்”

“ஓஹோ! காவியணிய உத்தேசமா?”

“அதுவுமில்லை”

“வைத்தியரே! உடலிலே, நோயூட்டும் கிருமிகள் இருந்தால், கிருமிகளை அழிக்க நீர் மருந்திடுவதில்லையா? கிருமிகள் சாகுமே என்று பரிதாபப்பட்டால், கிருமி, ஆளைக் கொல்லாதா? நடனா, உமது வாழ்வை வதைக்கும் கிருமி. நீர் அந்தக் கிருமியை அழிக்காவிட்டால், உம்மைக் கிருமி அழித்துவிடும்.”

“ஆமாம்!”

“எதற்கெடுத்தாலும் ஆமாம், ஆமாம், என்று கூறுகிறீர். துணிவாக எதையேனும் செய்யச் சொன்னால், ஐயோ, ஆகாது, என்கிறீர். சுத்தப் பித்துக்கொள்ளியாக இருக்கிறீர்.”

“பாலா! நீ பேசுவதைக் கேட்கவே எனக்குப் பயமாக இருக்கிறது.”

“கோழைத்தனம். உமக்கு ரோஷம் இல்லை. அரண்மனையிலே ஒரு பணிப்பெண் அவள். அவள் உம்மைக் காறித் துப்பினாள், உமக்கு உணர்ச்சி இல்லை. நான் ஆணாக இருந்து, எனக்கு அக்கதி நேரிட்டிருந்தால் நடனா இவ்வளவு நேரம் உயிரோடு இருக்க முடியுமா? மானத்தை இழக்க உமக்கு மனமிருக்கிறது. உமது இஷ்டப்படி செய்யும். எனக்கென்ன. அரண்மனையிலே, இனி, உம்மைப் பற்றித்தான் ஓயாது கேலி செய்வார்கள். நீர் தலை காட்டினால் போதும்; இதோ பாரடி, மருந்து கொடுக்க வந்த கிழவன், நடனாவை இழுத்தானாம்; அவள் உதைத்தாளாம் என்று கேலி செய்வார்கள்.”

“உண்மைதான். ஊர் பூராவும் கேலி செய்யும்.”

“பிறகு உமது மதிப்புப் போகும்”

“போய்விடும். ஆ-மா-ம்”

“அரண்மனை வைத்தியமும் போகும்”

“ஆமாம்”

“இவ்வளவு ஆபத்தும் அந்த ஒரு சிறுக்கியினால்”

“என் வாழ்வுக்கே பெரிய ஆபத்து”

“புத்தி இருந்தால், அதை நீக்கிக் கொள்ளலாம்”

“பொற்கொடி போன்றவளை விஷமிட்டுக் கொல்வதா?”

“வேண்டாம், வேண்டாம்! அவள், வேறோர் புருஷனிடம் கொஞ்சி விளையாடும்போது, நீர் அங்கே போய், அவனுக்கு அடைப்பந்தாங்கும்.”

“பாலா! பதட்டமாகப் பேசாதே”

“பேசினால் என்ன? பெண்ணுக்குப் பயப்படுபவர் நீர். என்னை மிரட்டுகிறீரே”

இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு, அவசர அவசரமாக வைத்தியர், தமது மருந்துப் பெட்டிகளைத் தேடினார். ஒரு சிறு கருநிற மாத்திரையை எடுத்தார். கண்களிலே மிரட்சியுடன், அதைப் பாலாவிடம் கொடுத்தார். “இதை அவள் உட்கொண்டால் ஒழிந்தாள். விஷம் பருகிச் செத்தாளென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு அபூர்வமானது இது. இயற்கையான மரணமாகவே தோன்றும். பாலா! இனி என்னெதிரில் இராதே. என் மனம் மாறிவிடும் போ! போ! நடனா ஒழியட்டும்” என்று கூவினார். பாலா, ஆவலுடன் அந்த மாத்திரையைப் பெற்றுக் கொண்டு, “இது ஆண் மகனின் தீரம். வைத்தியரே! உமது வாக்குப் பலிக்கும். விரைவிலே நீர் நடனாவின் மரணச்செய்தியைக் கேட்பீர்” என்று கூறிவிட்டு, விடை பெற்றுக் கொண்டாள். அவள் வாயிற்படியைத் தாண்டும் முன்னம், வைத்தியர், மீண்டும் அழைத்தார்.

“ஏன்? மனம் மாறிவிட்டதா?” என்று பாலா கேட்டாள்.

“இல்லை! ஆனால், உனக்கு நடனா மீது இவ்வளவு விரோதம் ஏன்?” என்று கேட்டார்.

“உமக்கேன் அவளிடம் அவ்வளவு பிரேமை உண்டாயிற்று.” என்று கேட்டாள் பாலா.

“யாருக்குத்தான் உண்டாகாது” என்று பெரு மூச்செறிந்தார் வைத்தியர்.

“நீர் அவள் அழகிலே சொக்கினீர்; நான் அவளுடைய நிலை கண்டு, நினைப்புக் கண்டு அவளை வெறுக்கிறேன். அவள் எனக்கும் நஞ்சு; உமக்குந்தான்! அவள் ஒழியத்தான் வேண்டும்” என்றாள்.

“என்ன இருந்தாலும், பாலா! நடனாவுக்கு விஷங்கொடுக்க எனக்கு மனம் இடந்தரவில்லையே” என்றார் வைத்தியர்.

“அது சரி! கிடைத்த மாத்திரையை இழக்க நான் இசைவேனா? வைத்தியரே, நீர் நமது சம்பாஷணையை, முற்றிலும் மறந்துவிடும். நீர் ஏவிய மரணம், அவளைத் தழுவக் காண்பீர் விரைவில்” என்றாள் பாலா.

“என் பின்னோடு வா. ஊர்ப்புறமாக உள்ள சத்திரத்துக்கு” என்று ஒரு குரல் கேட்டது. கங்கா திடுக்கிட்டாள். உருவம் முகத்தைக் காட்டினதும், “நீயா? என்ன விசேஷம்?” என்று கேட்டாள். “அங்கே சொல்கிறேன், நட” என்று அதிகார தோரணையிலே அந்த உருவம் கூறிக் கொண்டே நடந்தது, பாலா அதனைப் பின் தொடர்ந்தாள். உருவம் சரியாக வெளியே தெரியாதபடி மேலே ஓர் போர்வையுடன் காணப்பட்டது.

இருவரும் ஊர்க்கோடியிலிருந்த சத்திரத்தை அடைந்தனர். கூற்றுமுற்றும் பார்த்து விட்டு, வந்தவன் பாலாவைப் பார்த்து, “பாலா! நீ சுத்த மக்கு! ஒரு காரியமும் நடப்பதில்லை. அரண்மனையிலே ஒரு துளி கூடக் கலகம் ஏற்படவில்லை; மாதா மாதா பணம் பெறுவது மட்டுமே வேலை என்று எண்ணுகிறாய். நமது நோக்கம் ஈடேற ஒரு வழியும் செய்யக் காணோம்” என்று கடிந்துரைத்தான். பாலாவின் முகத்திலே கோபமும் சலிப்பும் கலந்து வீசிற்று. ஏதோ பேச வாயெடுத்தாள், வந்தவன், அதைத் தடுத்துவிட்டு, மேலும் பேசினான்: “பாலா! உனக்கு மட்டுந்தான் இந்த அர்ச்சனை என்று எண்ணாதே; எனக்குந்தான். இன்று வந்த ஓலையிலே, எனக்கும் ஒரு முழு நீளமுள்ள அர்ச்சனை நடந்திருக்கிறது. கலிங்கப்போர் நடந்தபோது சோழ மண்டலத்திலே கலகம் நடக்கும்படி ஏன் தூண்டவில்லை? எதற்கு நீ ஜெனனமெடுத்தாய்? குல முன்னேற்றத்தைக் கவனியாத நீ பிறந்து பயன் என்ன? என்றெல்லாம் எனக்கும் வசவு கிடைத்திருக்கிறது. நான் எவ்வளவோ கரடியாகத்தான் கத்தினேன், போரை ஆதரிக்க வேண்டாமென்று; பலிக்கவில்லை. நான் என்ன செய்வேன்? பாலா! நமக்கு அவர் கட்டளைகள் பிறப்பிக்கிறாரேயொழிய நமக்கிருக்கும் கஷ்டங்கள் தெரிகிறதோ? சோழமண்டலம் என்ன மலர்புரியா? அங்குத் தான் ஒரு ஸ்திரீ கிடைத்தாள்; அவர் ஆட்டி வைக்கிறார். இங்கு முடியுமோ? பாலா எனக்கு இருக்கும் கஷ்டந்தானே உனக்குமிருக்கும். இருந்தாலும், அவர் சொல்லியனுப்பியதை உனக்குக் கூறினேன். என் மீது கோபங் கொள்ளாதே” என்றுரைத்தான்.

“பதஞ்சலி! உன் மீது கோபித்து என்ன பயன்? நானும் என்னாலானதைச் செய்து தான் பார்க்கிறேன். ஒன்றும் சரியாக முடிவதில்லை. இப்போதும் ஒரு அருமையான ஏற்பாடு என் மனதிலே இருக்கிறது. எனக்கு அந்தப்புரத்திலே ஒரு தடையாக இருக்கும் நடனா என்கிற நாட்டியக்காரியைக் கொன்றுவிடத் தீர்மானித்துவிட்டேன். அருமையான விஷம் கிடைத்திருக்கிறது ஒரு வைத்தியனிடமிருந்து. அவளிடம் காதல் வேண்டினான்; அவள் மறுத்தாள். இடையிலே நுழைந்தேன்; இதைப் பெற்றேன்” என்று கூறி, மாத்திரையைப் பாலா காட்டினாள்.

“விஷமிடுவதா?” என்று கேட்டாள் பதஞ்சலி.

“ஏன்? பாபம் சூழ்ந்து கொள்ளுமோ?” என்று கேலியாகக் கேட்டாள் பாலா.

“பாவமும் புண்ணியமும்! அந்தப் பயல்களை ஒழிக்கத்தானே அதைக் கூறினோம். நான் யோசிப்பது அதற்கல்ல பாலா! கொலை கடைசி வேலையாக இருக்க வேண்டும். கேவலம் ஒரு பணிப்பெண்ணின் செல்வாக்கைப் போக்கவா, கொலையில் ஈடுபட வேண்டும். பாலா! ஒரு கொலை செய்வதன் மூலம் ஒரு ராஜ்யமாவது கிடைக்க வேண்டாமா? அல்லது நமது ஆரியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் பெரிய வீரனாவது ஒழிய வேண்டும். நீ, கேவலம் ஒரு வேலைக்காரிக்காக, இதைச் செய்வதா?” என்று பாலாவை கேட்டுவிட்டு, பாலாவை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை மனதிலுள்ளதெதுவென்பதைக் காட்டிற்று. பாலா பதறினாள். “பதஞ்சலி! ஆபத்தாக முடியும். இதை மன்னனுக்கோ, அவன் மகளுக்கோ தந்தால். நீ அதைத்தான் யோசிக்கிறாய் என்பது தெரிகிறது. ஆனால் நான் அவ்வளவுக்குத் துணிய மாட்டேன்” என்று பாலா கூறினாள்.

“இப்போது வேண்டாம்! சமயம் கிடைக்கும். நடனாவைப் பற்றி நீ கவலைப்படாதே. அவள் அதிக நாட்களுக்கு இங்கு இருக்க முடியாது. ஊரிலே, அவள் மீது பல வதந்திகளைப் பரப்பும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். நடனா ஒழிவாள் ஊரைவிட்டு. பிறகு, பதுங்கியிருந்து பாயும் புலிபோல், இந்த மாத்திரையைக் கொண்டு நீ காரியத்தைச் செய்யலாம். நான் அவருக்கு உன் விஷயமாகத் தெரிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, செலவுக்குப் பொருள் தந்தாள். பின்னர் இருவரும் பிரிந்து போயினர்.

வேதனைப்பட்ட வைத்தியருக்கு, விஷ மாத்திரையைக் கொடுத்துவிட்ட பிறகு, கிலி அதிகமாகிவிட்டது. நடனா மீது இருந்த கோபங்கூட அதனால் குறையலாயிற்று. அவள் அழகை
யும், எண்ணினார். அவளைக் கொல்வதா என்று பதறினார். பாலா, துவேஷத்தினால், நடனாவைக் கொன்றே விடுவாளே! என்ன செய்வது என்று ஏங்கினார். காதல் முறிவு, கோபம், ஆத்திரம் ஆகிய பல நோய்களால் தாக்கப்பட்ட வைத்தியருக்கு, இந்த வேதனையும் சேரவே, அவருடைய மனமே குழம்பிவிட்டது. தலைவலிக்கு மருந்து கேட்போருக்கு மார்வலி போக்கும் மருந்து; காய்ச்சலுக்கு மருந்து கோருவோருக்கு காசநோய் மருந்து; குமட்டல் போக்கும் மருந்து என்று கேட்போருக்குக் குஷ்ட நிவாரணி என்று கொடுத்து வரலானார். ஊரெங்கும் வைத்தியருக்கு வந்துற்ற மனக்குழப்பமே பேச்சாகிவிட்டது. வைத்தியரின் நோயைப் போக்க வேறோர் வைத்தியரை, அரசர் அனுப்பி வைத்தார்.

பதஞ்சலி கூறினபடி, ஊரிலே, நடனாவைப் பற்றிய வதந்திகள் பரவலாயின. கழனி, மேடு, சாவடி, தோட்டம், கடைவீதி, எங்கும், “துரோகம் புரிந்த வீரமணிக்கு அவள் காதலிதானே! அவள் இங்கு இருக்கலாமா? பாம்புக்குப் பாலூற்றுவதா? நெருப்புக்கு முத்தமிடுவதா? அவளும் ஒழியத்தான் வேண்டும். அவளையும் ஊரைவிட்டு ஓட்டித்தான் தீர வேண்டும். அவள் ஏதோ ஆடியும் பாடியும் நமது அரசிளங்குமரியை மயக்கிவிட்டாள். மன்னர் இனி ஒரு விநாடி அந்தப் பணிப்பெண்ணை அரண்மனையிலே இருக்க விடக்கூடாது” என்று கூவினர் மக்கள். அரண்மனைக்கும் செய்தி எட்டிற்று. மன்னரிடம் பலர் மெல்ல மெல்லச் சேதியைக் கூறினர். “மக்களின் மனம் கோபக்குழம்பாகிவிட்டது, இந்த நேரத்திலே ஏதேனும் செய்யாவிட்டால், ஆத்திரப்பட்ட மக்கள் ஏதேனும் செய்வர்” என்று மந்திரிகள் கூறினர். அந்தப்புரத்திலே, சேடியர் கைபிசைந்து கொண்டனர். அரசிளங்குமரி, “இதென்னடி பாலா! இந்த மக்கள் ஏதேதோ கூவுகிறார்களாம். அவன் துஷ்டன். துரோகி. நடனா மீது என்ன குற்றம் சுமத்த முடியும்” என்று கேட்டாள். “எனக்கென்ன தெரியும்? உங்கள் மக்கள் எதையும் நிதானித்துப் பார்த்து, உரை போட்டுப் பேசுவர் என்று கூறிக் கொண்டிருப்பீரே” என்று பாலா கேலி செய்தாள்.

இத்தகைய சுழலுக்கிடையே இருந்த சுந்தராங்கி, இதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அவளுடைய நினைப்பெல்லாம், யாருமறியாதபடி எப்படி வெளியே போவது என்பதிலேயே இருந்தது.

கங்காபாலாவுக்குச் சிக்கலான பிரச்சினையாகிவிட்டது. விஷமூட்டிக் கொல்வதா? ஆத்திரப்படும் மக்களைக் கொண்டே நடனாவை விரட்டி விடுவதா? பிறகு, விஷத்தை யாருக்கு உபயோகிப்பது? என்று யோசிக்கலானாள்.

அன்றிரவு, ஓர் தோழி நடனாவிடம், தனியாக வந்து, மக்களின் மனம் மது உண்ட குரங்காக இருப்பதையும், அரண்மனை வாயிலுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக வதந்தி இருப்பதையும் கூறி, அரசிளங்குமரி சில காவலருடன், நடனாவைக் காஞ்சிக்கு அனுப்பி வைத்தல் உசிதமென்று எண்ணுவதாகவுங் கூறி, நடனாவின் இஷ்டமென்னவென்று கேட்டாள். தப்பியோட இதுவே சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய நடனா, பயந்தவள்போல் நடித்து, “அரசிளங்குமரி கூறுவதே சரியான யோசனை. அதிகமாக ஆட்கள் கூடாது. ஒரே ஒரு காவலாளி மட்டும் வரட்டும். நான் இப்போதே மாறுவேடமணிந்து கொண்டு புறப்படுகிறேன். அரசகுமாரியிடம் போய்ச் சொல்” என்றுரைத்துவிட்டு, மகிழ்ச்சியோடு ஆணுடை அணிந்து கொண்டாள். அரசகுமாரி ஒரு காவலுடன் அங்கு வந்து நடனாவுக்குத் தைரியங்கூறி, மக்களைச் சில நாட்களிலே சமாதானப்படுத்தி விடுவார் மன்னர். பிறகு நீ மறுபடியும் வந்து சேரலாம். நடனா! உனக்கு இப்படி இடிமேல் இடி வருவது கண்டு என் மனம் பற்றி எரிகிறது. என்ன செய்வதடி! மன்னனாக இருந்தாலும், மக்களின் மனப்போக்கைக் கவனித்துத் தானே நடந்தாக வேண்டும். மக்களுக்காகத்தானே மன்னன். ஆகவே நீ மனதைக் குழப்பிக் கொள்ளாதே. உன்னை நான் கைவிட்டு விடுவதாக எண்ணாதே. உன்னைப் பிரிந்திருக்கவும் மனம் இசையவில்லை. அதிலும் நீ நோய்வாய்ப்பட்டு இப்போது தான் கொஞ்சம் தேறியிருக்கிறாய். இந்நிலையிலே உன் மனம் நோக வைக்கின்றனர் மக்கள். சில நாட்கள் காஞ்சியில் இரு. பிறகு நாம் பழையபடி இங்கே மகிழ்ந்திருப்போம்” என்று அன்புமொழி பேசி ஆரத்தழுவிக் கன்னத்தை முத்தமிடுகையில், கண்ணீர் பெருகுவது கண்டு, “கண்ணே நடனா! காஞ்சிக்குப் போய்ச் சில தினங்கள் இருக்கத்தானே சொன்னேன். இதற்கு அழுவதா?” என்று தேற்றினாள். நடனாவின் அழுகையின் காரணம் அரசகுமாரிக்குத் தெரியுமோ! செல்வமாக வாழ்ந்து மன்னர் குடும்பத்தின் ஆதரவு பெற்று வந்த இடத்தைவிட்டு, பாய்மரமற்ற கப்பல் போல் இனி உலகிலே சுற்றப் போகிறோமே என்ற துக்கத்தால் அவள் அழுதாள். சில நிமிடங்கள் சோகத்திலாழ்ந்திருந்தனர் இருவரும். பிறகு, தோட்டத்தைக் கடந்து, அரண்மனைப் பின்புற வாயிலை அடைந்து, அங்குத் தயாராக இருந்த குதிரைகளிலே, நடனாவும், காவலாளியும் ஏறிக்கொண்டு, அரசகுமாரியிடம் விடை பெற்றுக் கொண்டனர். குதிரைகள் கடுவேகமாக ஓடலாயின.

அதே நேரத்திலே, வைத்தியரின் மனம் மிக அதிகமாகக் குழம்பிவிட்டதால், அவர் படுக்கையை விட்டெழுந்து வீட்டெதிரில் வந்து நின்று கொண்டு, “அடி நடனா! நீ எத்தனை காலம் இனி உயிரோடு வாழ முடியும்? அதிலே சேர்க்கப்பட்டுள்ள மூலிகை என்ன தெரியுமோ!” என்றும், “பாலா! கொடுத்துவிட்டாயா விஷத்தை? முடித்துவிட்டாயா காரியத்தை? பாலில் கலந்து கொடுத்தாயா, பழத்திலே சேர்த்தாயா?” என்றும், பிதற்றிக் கொண்டு நிற்பதும் வழியிலே போவோர் வருவோரைப் பார்த்து, நான் அரண்மனை வைத்தியன் ஏராளமான சொத்து இருக்கிறது. எனக்கு என்னடா குறை? என்னைக் கலியாணம் செய்து கொள்ள அந்த நடனா மறுத்தாளே அவளைச் சும்மா விடுவேனோ? ஒரே ஒரு மாத்திரையைக் கொடுத்தேன், அவ்வளவுதான்! தூங்கி விட்டாள். இனி ஊர் ஜனங்கள் கூடி ஓவென்று அலறினாலும், ஓடிப் போன வீரமணி ஓலமிட்டழுதாலும், அவள் எழுந்திருக்கவே முடியாது” என்று கூறுவதும், இங்குமங்கும் ஓடுவதுமாக இருக்கக் கண்டு மக்கள் வைத்தியரின் புத்தி கெட்டுவிட்டது பாவம் என்று பரிதாபப்
பட்டனர். வைத்தியன் அரண்மனை வாயிலை அடைந்தான். வாயிற்காப்போன், வைத்தியருக்கு மரியாதையாக வழிவிட்டு, “இந்த நேரத்தில் எங்கேயோ?” என்று வினயமாகக் கேட்டான்.

“ஏன்? நடனாவைப் பார்க்கப் போகிறேன். உனக்கென்ன?” என்று கோபமாகப் பதில் கூறினார் வைத்தியர்.

“நடனாவைக் காண இந்த நேரத்திலா? என்ன விசேஷம்?” என்று வேலையாள் கேட்க, வைத்தியர் வேலையாளின் முதுகைத் தட்டிக் கொடுத்து, “அது பரம இரகசியம். யாரிடமும் கூறாதே. நடனா செத்துவிட்டாளா? இருக்கிறாளா? என்று பார்க்கவே போகிறேன்” என்று கூறினார். வேலையாள் வைத்தியரின் பேச்சையும் முகத்தையுங் கண்டு, சந்தேகங்கொண்டு, வைத்தியர் பித்தன் போல் பிதற்றுகிறார் என்று தெரிந்து, இந்த நிலையிலே இவரை உள்ளே போகவிடக் கூடாதெனத் தீர்மானித்து, மெல்ல அவரை வழிமறித்து நின்று, “வைத்தியரே! காலையிலே போய்ப் பார்க்கலாம். இப்போது உள்ளே போக வேண்டாம்” என்று தடுத்தான். உடனே வைத்தியருக்குக் கோபம் பீறிட்டெழுந்தது. அடே! அற்பகுணம் படைத்தவனே, அயோக்யா! என்னை யாரென்று எண்ணினாய்? நான் அரண்மனை வைத்தியன்; யாசகம் கேட்க வருபவனா? போக்கிரி! போன மாதந்தானேடா உனக்குப் பூரண சந்திரச் சூரணம் கொடுத்து, உனக்கு வந்த முடக்குவாதத்தைப் போக்கினேன். உன் தாய்க்கு வந்த குளிர் காய்ச்சலுக்குக் குளிகை கொடுத்தேன். என்னை இப்போது உள்ளே விட நீ மறுக்கிறாயே மடையா! என்று கூவினார். வேலையாள் ஆத்திரமடையாது, பக்குவமாகவே அவரைப் பிடித்துக் கொண்டு, “பதறாதீர்! வைத்தியரே உரக்கக் கூவாதீர்” என்று சாந்தமாகப் பேசிக் கொண்டு, வேறு வேலையாட்களை அழைத்து, வைத்தியரை, மரியாதையாக அழைத்துக் கொண்டு மன்னரிடம் கொண்டு போய்விடுங்கள்” என்று கூறினான்.

“சரி! டே! ஒருவன் முன்னால் நட, மற்றவன் பின்னாவே வா!” என்று வைத்தியர் உத்தரவிட்டு விட்டு, கெம்பீரமாக நடக்கலானார்.

அதே நேரத்தில் அரசகுமாரி முன்னால் ஆரியப்பெண் கங்காபாலா நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் கையிலே பால் நிரம்பிய தங்கக் கிண்ணத்தை ஏந்திக் கொண்டிருந்தாள். பாலாவின் முகத்திலே வெற்றிக்குறி தென்பட்டது. பாலிலே, மாத்திரை கரைத்துவிட்டிருந்தாள்!

“வைத்தியர் என்றால், வக்காவென்றோ கொக்கு என்றோ எண்ணிக் கொண்டாள் அந்தத் துஷ்டச்சிறுக்கி. அந்த மாத்திரை வேலை செய்யும்போதுதானே, அவளுக்கு என் திறமை தெரியப் போகிறது” என்று கோபமாகக் கூறிய வைத்தியரை, வேலையாட்கள் “எந்த மாத்திரை? எந்தப் பெண்?” என்று கேட்டனர். “அது அரண்மனை ரகசியம். வெளியே தெரியக் கூடாது. ஆனால், நீங்கள் யோக்யர்கள். உங்களிடம் சொன்னால் பரவாயில்லை. அந்த நடனாவுக்கு விஷங்கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று பூரிப்போடு வைத்தியர் சொன்னார். திடுக்கிட்ட வேலையாட்கள், “நிஜமாகவா?” என்று கேட்க வைத்தியர் சீறி விழுந்து, நான் புளுகுவேனா? போய்க் கேளுங்கள் பாலாவை கருப்பு மாத்திரை கொடுத்தேனா இல்லையா என்று. முட்டாள்களே! தீட்டிய சித்திரம் சரியாக இல்லாவிட்டால் கலைத்து விடுவது, கட்டிய வீடு கலனாகிவிட்டால் இடித்துத் தள்ளுவது, பழம் அழுகினால் குப்பையிலே வீசுவது - இதுதானே முறை. அவள் சாகக் கிடந்தாள். இந்த அற்புதானந்தர் அவளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார். ஆனால் அவளோ! அடேயப்பா உங்களிடம் சொல்வதற்கென்ன. என்னைக் கொல்லத் துணிந்தாள்” என்று கூறிச் சோகித்தார். “ஒருவருக்கும் தீங்கு செய்யாத நடனாவா, உம்மைக் கொல்லத் துணிந்தாள். எப்படி? எதனால்? ஏன்?” என்று வேலையாட்கள் படபடத்துக் கேட்டனர். “ஏன் என்பது எனக்குத் தெரியாது. எதனால் என்பது தெரியும்” என்று கூறிவிட்டு வைத்தியர் மௌனமாக இருந்தார். வேலையாட்கள், எதனால்? எதனால்? என்று கேட்டனர்.

கத்தியாலா?

வைத்தியர் இல்லை என்று தலை அசைத்தார்.